Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் ஜாமீன் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-01 06:12:00 |
சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினாவை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஜன.25-ல் கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதிடி.வி.ஆனந்த் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.என்.கணேஷ் மற்றும் போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆகியோர் ஆஜராகிவாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, கணவன், மனைவியின் ஜாமீன் மனுவுக்கு போலீஸார் தரப்பிலும், பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பிலும்பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.2-க்கு தள்ளிவைத்தார்.
|
ஆலங்குடி முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் காலமானார் | செய்திப்பிரிவு | புதுக்கோட்டை | 2024-02-01 06:11:00 |
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் நேற்று காலமானார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.ராஜசேகரன்(81). இவர், ஆலங்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (2006-2011) போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், அந்தக்கட்சியில் இருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2013-ல்இணைந்தார். அக்கட்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் இரு தினங்களுக்கு முன்புபுதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜசேகரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு குளமங்கலத்தில் இன்று (பிப்.1) நடைபெற உள்ளது.
பாலகிருஷ்ணன் இரங்கல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்.ராஜசேகரன் மறைவுக்கு, கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது.
2013-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், மாவட்ட செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகாலம் பணியாற்றி, கட்சியின் வளர்ச்சிக்கும், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நலன்களுக்காகவும் அரும்பாடுபட்டவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைப்பாளி வர்க்கத்துக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்தஇரங்கலும், ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் வழித்தடத்தில் பனகல் பூங்காவில் 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை பணி தொடங்கியது | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-01 06:10:00 |
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63.246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ),கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4 -வது வழித்தடம் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகிய வழிதடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கு பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில், முக்கியவழித்தடமாக திகழும் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்தவழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன.
இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்கு மொத்தம் 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்து, தற்போது 2 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான `பிளமிங்கோ' கடந்தஆண்டு செப்.1-ம் தேதி பணியைத் தொடங்கியது. 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘கழுகு’ தனது பணியை கடந்த 18-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் தியாகராய நகர் பனகல் பூங்காவில் `பெலிகன்' என்னும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி பூமியில் இருந்து 18 மீட்டர்ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கும்பணி நேற்று தொடங்கியது. பனகல்பூங்காவில் இருந்து கோடம்பாக்கம்வரை இந்தப் பணி நடைபெறும்.
இந்நிலையில், இந்தப்பணியின் தொடக்க நிகழ்ச்சி சென்னை தியாகராயநகர் பனகல் பூங்காவில் நேற்றுநடைபெற்றது. சுரங்கம் தோண்டும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தி.அர்ச்சுனன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் சுரங்கப்பாதை பணிக்காக23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களில், 19 இயந்திரங்கள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
பனகல் பூங்காவில் சுரங்கம்தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நிறைய சவால்கள் உள்ளன. பனகல் பூங்காவில் களிமண் அதிக அளவில் உள்ளது.
சுரங்கம் பாதை அமைக்கும் இடங்களை சுற்றி பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றுக்கு எவ்வித சேதம் இல்லாமல் பாதுகாப்பாக சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்க வேண்டும். இந்த பணி தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்த இயந்திரம் கோடம்பாக்கத்தை அடையும்போது, 4 ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும்.
இதைத்தொடர்ந்து, பவர்ஹவுஸை அடைகிறது. பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம், பவர்ஹவுஸ் வரை 2 கி.மீ. ஆகும். இந்த தொலைவை சுரங்கம் தோண்டும் இந்திரம் இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அடைந்துவிடும்.
இங்கு அடுத்த ஒன்றரை மாதத்தில் `பிகாக்' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியைத் தொடங்க உள்ளது. 2 இயந்திரங்களும் இந்தஆண்டு இறுதிக்குள் கோடம்பாக்கம் பவர்ஹவுரை அடைந்துவிடும்.
கோடம்பாக்கம் ரயில் தண்டவாளங்கள் கீழ் சுரங்கம் தோண்டும் இயந்திரம் செல்லும்போது, தண்டவாள பாராமீட்டரை அளந்துகொண்டு இருப்போம். பாரமீட்டர் அளவில் ஏதாவது மாற்றம் இருந்தால், ரயில் வேகத்தை கட்டுப்படுத்த ரயில்வேக்கு தகவல் கொடுத்து விடுவோம். இந்த பணி தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் பேசி அனுமதி வாங்கி இருக்கிறோம். அவர்கள் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணிகள் நடக்கும்.
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் திருமயிலையில் இரட்டை பாதை குறுக்கே வருகிறது. இங்கு இரட்டை நிலையங்கள் அமைய உள்ளன. இந்நிலையம்2028-ம் ஆண்டு ஜூன் மாதம் தயாராகும். ஆனால், இதில் 4-வது வழித்தடத்தை 2027-ம் ஆண்டு இறுதியில் தயார் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒட்டுமொத்தமாக, பணிகள் 2028-ம் ஆண்டில் முடிந்துவிடும்.
அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 3 மாதத்தில் அடையாறு ஆற்றை கடந்துவிடும். மெட்ரோ ரயில் பணியின்போது, சேதமடைந்த சாலைகளை மேம்படுத்தி கொடுக்கிறோம்.
கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பனகல் பூங்கா வரை சுரங்கப்பாதை பணி உட்பட அனைத்து பணிகளும் வரும் 2026-ம் ஆண்டு ஜூனில் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.
|
800 செவிலியர்களுக்கு அடுத்த வாரம் பணி ஆணை: அமைச்சர் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-01 06:08:00 |
சென்னை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் 2,300 செவிலியர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதில், 800 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், 1,021 மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்னும் 2 நாளில் முடிந்து விடும். நீதிமன்றத்தில் வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது. கலந்தாய்வு நடத்திய பிறகு, சென்னை கிண்டி யில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 1,021 மருத்துவர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகிறது. இப்போது தான் சுற்றுச்சூழல் அனுமதிக்கே சென்றுள்ளது என்றார்.
|
பணி நிரந்தரம், ஓய்வூதியம் கோரி சென்னையில் மக்கள்நலப் பணியாளர்கள் போராட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-01 06:06:00 |
சென்னை: பணி நிரந்தரம், ஒய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள்நலப் பணியாளர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம், பணியின் போது இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் அமைப்பின் தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலமுறை ஊதியம்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் செல்லப்பாண்டியன் கூறும்போது, ‘‘தேர்தல் அறிக்கையில் கூறியபடி காலமுறை ஊதியத்துடன் எங்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும். பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
அதேபோல், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் குடும்ப நிவாரண நிதியும், அவர்களின் வாரிசுகளுக்கு வேலையும் தரவேண்டும். பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு உள்ள சலுகைகள் அனைத்தும் வழங்கி 13,500 மக்கள் நலப் பணியாளர்களையும், அவர்களை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்களையும் காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.
500 பேர் கைது: இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்னும் போராட்டத்தை தொடர்ந்ததால், மாலை 6 மணியளவில் பணியாளர்களை கலைந்து போக காவல் துறையினர் வலியுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை இரவு 7 மணிக்கு போலீஸார் கைது செய்தனர்.
இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் பணியாளர்களை 3 குழுக்களாக பிரித்து புதுப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைத்தனர்.
|
கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி செலவில் 70 குளிர்பதன தனி அறைகள், 50 படுக்கைகளுடன் ஐசியூ: அமைச்சர் திறந்து வைத்தார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-01 06:02:00 |
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரணங்களுடன் 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 70 குளிரூட்டப்பட்ட தனி அறைகள் ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பு அலுவலர் மருத்துவர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை 6 தளங்களுடன் 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை 2023-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல்வர் திறந்து வைத்தார். இம்மருத்துவமனையின் கட்டிடப் பணிகளுக்கு ரூ.380 கோடி செலவு செய்திருந்தாலும், அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களையும் சேர்த்து இதுவரை ரூ.452 கோடி செலவிடப்பட்டுள்ளது.
1000 படுக்கைகளுடன் கூடிய இம்மருத்துவமனையில், சிறுநீரகவியல், இதயவியல், இரைப்பை குடலியல், நரம்பியல், நரம்பு அறுவை சிகிச்சை, புற்றுநோயியல், மயக்க மருந்தியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல் என்று 19 சிறப்பு சிகிச்சைத் துறைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 20 அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள், 4000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன.
மருத்துவமனை தொடங்கிய 6 மாதகாலத்தில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 1,05,198 புறநோயாளிகளும் 20,021 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர். தினமும் சுமார் 800 புறநோயாளிகளும், 200 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 2,649 சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள், 749 எம்ஆர்ஐ பரிசோதனைகள், 821 எண்டோஸ்கோப்பி பரிசோதனைகள், 2,413 டயாலிசிஸ் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
தொடங்கப்பட்ட 6 மாத காலத்திலேயே 792 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட நாட்டின் முதல் மருத்துவமனையாக இந்த மருத்துவமனை திகழ்கிறது. அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மருத்துவமனையில் நிறுவப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத புதிய வசதியாக டபுள் பலூன் எண்டோஸ்கோப்பி, ஆட்டோஎம்ஆர்ஐ போன்ற அதிநவீன கருவிகளும் உள்ளன. ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் அதிநவீன இருதய கேத்லேப் ஆய்வகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த மருத்துவமனையில் தற்போது 70 தனி அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இணையாக இந்த அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ரூ.1200, ரூ.2000, ரூ.3000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி, ஆக்ஸிஜன் மானிட்டர், செவிலியரை அழைக்கும் வசதிகள் இந்த அறைகளில் உள்ளன. இதுவரை 2 அறுவை அரங்குகளில் மட்டுமே 792 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
தற்போது கூடுதலாக 10 அறுவை சிகிச்சை அரங்குகள், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை அறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கூடுதல் சிறப்பாக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு பிரத்யேகமாக 3டி அறுவை சிகிச்சை மைக்ரோஸ்கோப் ஒன்றும் இங்கே பொருத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு சென்னையிலிருந்து மட்டும் நோயாளிகள் வருவதில்லை. கடலூர், விழுப்புரம் என்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
குழந்தைகள் மையங்களில் 2 - 6 வயதினருக்கு உணவூட்டு செலவை உயர்த்தி முதல்வர் உத்தரவு: 11.50 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-01 06:00:00 |
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 - 6 வயது குழந்தைகளுக்கான உணவூட்டு செலவு தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தின்கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2- 6 வயது குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டு செலவின தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2 - 6 வயது குழந்தைகளுக்கு உணவூட்டு செலவினம் ஒரு பயனாளிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தினசரி காய்கறிகளுக்கான செலவு ரூ.1.33, உப்பு மற்றும் தாளித பொருட்களுக்கான செலவு 46 காசு, எரிபொருளுக்கான செலவு 60 காசு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காய்கறிக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு 96 காசு, பயன்படுத்தாத நாட்களில் ரூ.1.10 என்று வழங்கப்பட்ட நிலையில், அது தற்போது ரூ.1.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு, தாளிதப் பொருட்கள், பருப்பு பயன்படுத்தும் நாட்களில் 30 காசு, பயன்படுத்தாத நாட்களில் 45 காசு என்று இருந்த நிலையில், தற்போது 46 காசு என்று உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல, எரிபொருளுக்கு 26 காசு என்று இருந்தது 60 காசு என்று உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பருப்பு பயன்படுத்தும் நாட்களில் ரூ.1.52, பயன்படுத்தாத நாட்களில் ரூ.1.81 என்று வழங்கப்பட்டு வந்தது தற்போது அனைத்து நாட்களிலும் ரூ.2.39 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு உணவூட்டு செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,114 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனால், தமிழகத்தில் குழந்தைகள் மையங்களில் உள்ள சத்துணவு திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கு: மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-01 05:53:00 |
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை மாஸ்டர் நீதிமன்றம் மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் கே.பழனிசாமி ஜன.30 மற்றும் ஜன.31 ஆகிய தேதிகளில் உயர்நீதி மன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பழனி சாமி ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ள ஆட்சேபனைக்குரிய அவதூறு கருத்துகளை நீக்கக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். அதையேற்ற மாஸ்டர் நீதிமன்றம். இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கே மாற்றி உத்தரவிட்டுள்ளது.
|
சட்டப்பேரவை கூட்டம் பிப்.12-ல் தொடக்கம்: பட்ஜெட் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-01 04:57:00 |
சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரியில் தொடங்க இருந்த நிலையில், வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் உள்ளிட்ட காரணங்களால் பேரவையின் முதல் கூட்டம் தள்ளிப்போனது. இதற்கிடையே, கடந்த ஆண்டு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரும் முடித்து வைக்கப்படாமல் இருந்தது. ஆளுநர் - தமிழக அரசு இடையிலான பனிப்போர் காரணமாக, ஆளுநர் உரை இல்லாமலே கூட்டத்தொடரை ஆரம்பிக்கலாமா என்ற பேச்சும் எழுந்தது.
இந்த சூழலில், சமீபத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவதும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிப்ரவரி 7-ம் தேதி அவர் தமிழகம் திரும்புகிறார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டது.
அந்த வகையில், பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 12-ம் தேதி ஆளுநர் உரையும், 13, 14-ம் தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதமும் நடைபெறும் என்று பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழக பட்ஜெட் எப்போது? மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி இறுதியில் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்ததும், தொடர்ந்து தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முனைப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, தமிழக பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 20-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பொது பட்ஜெட் தொடர்பாக தொழில் துறையினர், வணிகர்களுடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கெனவே ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து கேட்கும் விதமாக, விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், முட்டை உற்பத்தியாளர்கள், வேளாண் விளைபொருள் விற்பனையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், சக்கரபாணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்தனர்.
|
குடியுரிமை சட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: முதல்வர் ஸ்டாலின் உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-01 04:35:00 |
சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) 7 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று மத்திய பாஜக இணை அமைச்சர் கூறியுள்ளார். இலங்கை தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழு முதல் காரணமே, நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.
திமுக அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும், தோழமை இயக்கங்களுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தியதுடன், 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. 2021-ல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏவை திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக சொல்கிறேன். தமிழகத்துக்குள் குடியுரிமை திருத்த சட்டம் கால் வைக்க விடமாட்டோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
|
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 4 பேரை இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரி முதல்வருக்கு கடிதம் | எஸ். முஹம்மது ராஃபி | ராமேசுவரம் | 2024-02-01 04:18:00 |
ராமேசுவரம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு அந்நாட்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான 142 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்தது. தொடர்ந்து நவம்பர் மாதம் சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர் சிறையிலிருந்து விடுதலையான சாந்தன், முருகன், புழல் சிறையிலிருந்து விடுதலையான ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இதனால், இவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 4 பேரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறியுள்ளதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் உச்ச நீதிமன்றத்தால் 11.11.2022-ல் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமகன்களான நான்கு பேரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்த சாந்தன், தற்போது சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பால் சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் மீது கரிசனம் கொண்டிருக்கும் தாங்கள், மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப் பட்டிருக்கும் சாந்தன் உட்பட 4 பேரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக: துரைமுருகன் தகவல் | செய்திப்பிரிவு | வேலூர் | 2024-02-01 04:08:00 |
வேலூர்: நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங் கேற்ற நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
மேல்பாடி ஊராட்சியில் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம், ரூ.12.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தரைப்பாலம், ரூ.19.46 கோடியில் நடைபெற்று வரும் பொன்னை அணைக்கட்டு புனரமைப்பு பணிகள், மேல்பாடி ஊராட்சியில் ரூ.42.68 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் கால்நடை மருந்தக கட்டிட பணிகள், பொன்னை அரசு மேல்நிலை பள்ளிகளில் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘முல்லை பெரியாறு விவகாரத்தில் ஒன்றும் பிரச்சினையில்லை. இது தொடர்பாக கேரள அரசுடன் பேச்சு நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது. அதேபோல், மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசு எவ்வளவு ஆய்வு செய்தாலும், படம் வரைந்தாலும் அந்த திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதலும், மத்திய அரசு ஒப்புதல் பெற்றாக வேண்டும். அதைஎல்லாம் மீறி மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவக் குமாரின் தொகுதி என்பதால் இதனை வேகமாக செய்கிறார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகள் குறித்து நீர்வளத்துறை சார்பில் மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பவுள்ளோம். தமிழ்நாட்டில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதே போல், தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்கள் எவ்வளவு வெற்றியடைந்துள்ளது என்பது மக்களுக்குத் தெரியும். அரசியல் என்பதே திருவிளை யாடல்தான். ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறுவது போன்ற திடீர், திடீர் செய்திகள் வரும்.
இவைகள் அனைத்தும் பழையது தான். நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. காங்கிரஸ் மட்டும் பேசிவிட்டு சென்றுள்ளனர். தற்போது, திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இண்டியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை.
கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளனர், யார் செல்கிறார்கள் என்பது பின்னரே தெரியவரும். அரசியலில் திமுகவை எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் கூட்டணிக்கு வரு வார்கள். முந்தைய தேர்தலில் அக்கட்சிகளுக்கு எதிராக பேசியதை தற்போது வெளிப்படுத்துவது தவறான அணுகு முறையாகும்’’ என்றார்.
இந்த ஆய்வின் போது மேல் பாலாறு வடிநில கோட்ட கண் காணிப்பு பொறியாளர் ரமேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மணிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
|
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு | செய்திப்பிரிவு | மதுரை | 2024-02-01 04:04:00 |
மதுரை: பண்டிகைக் கால நெரிசலை சமாளிக்க ஜனவரி மாதத்தில் வியாழக் கிழமைகளில் சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த சேவை பயணிகளின் வசதிக்காக மேலும், 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் ( 06067 ) சென்னை எழும்பூரில் இருந்து பிப்ரவரி 1 முதல் மார்ச் 28 வரை வியாழக் கிழமைகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் ( 06068 ) குறிப்பிடப்பட்ட அதே வியாழக்கிழமைகளில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
சென்னை செல்லும் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து நாகர் கோவில் செல்லும் ரயில் மதுரைக்கு காலை 10.56 மணிக்கு வந்து சேருகிறது. இந்த சிறப்பு வந்தே பாரத் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன் பதிவு தற்போது நடைபெறுகிறது என, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவான மகப்பேறு கால இறப்பு விகிதம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் | ந.முருகவேல் | கடலூர் | 2024-02-01 04:02:00 |
கடலூர்: மகப்பேறு காலத்தில் தாய் - சேய் இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் மிகக் குறைவாக உள்ளது என்று சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விருத்தாசலம் அரசு மருத்துவனையில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட மாநில சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், “தமிழ்நாடு சுகாதாரத் துறை செயல்பாட்டால் மாநிலத்தின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்திய அளவில் 1,000 பேருக்கு 19.5 பேர் என்ற விகிதம் இருக்கும் நிலையில், தமிழகத்தின் இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 13.8 என்ற நிலையில் உள்ளது. இதற்கு காரணம் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் நடைமுறைப் படுத்துவது தான். இத்திட்டம் மிகப்பெரிய பலனை அளித்து வருகிறது.
‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 2.12 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக அரசு செலவிட்ட தொகை ரூ.185.36 கோடியாகும். தேசிய அளவில், மகப்பேறு காலத்தில் ஒரு லட்சம் பேரில் 103 தாய்மார்கள் இறக்கின்றனர் என்ற புள்ளி விவரம் வெளியாகி இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு லட்சம் பேரில் 52 பேர் மட்டுமே இறக்கின்றனர். குழந்தைகள் இறப்பு விகிதத்தை கணக்கிடும் போது அகில இந்திய அளவில் 1,000 குழந்தைகளில் 28 பேர் இறக்கின்றனர். தமிழகத்தில் 1,000 குழந்தைகளில் 13 பேர் மட்டுமே இறக்கும் சூழல் உள்ளது. இதற்கு காரணம் நகர்ப் புற மற்றும் ஊரக பகுதிகளில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் சிறப்பான செயல்பாடுகளே” என்று தெரிவித்தார்.
பகுதி நேரம் என பணியமர்த்தி..: அப்போது அமைச்சரிடம், ‘மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்களுக்கு 4 மணி நேர வேலைக்கு ரூ.4,500 என்ற நிலையில் பணியமர்த்தப்பட்டு, தற்போது 8 மணி நேரம் வேலை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுகிறது. பணிக்கு தொடர்பில்லாத பிரதமர் காப்பீட்டுத் திட்ட அட்டை உறுப்பினர்களை சேர்க்கும் பணியையும் செய்ய வேண்டும் என்றும் நிர்ப்பந்தப்படுத்துகிறது என்று பணியாளர்கள் தரப்பில் கூறுகின்றனர். இந்தப் பணிகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி 11,100 பேரில் 2 ஆயிரம்பேர் வரை அப்பணியில் இருந்து விடுவித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே?’ எனகேட்டபோது, “அதுபோன்று யாரும் பணியில் இருந்து விடுவித்துக் கொள்ளவில்லை” என்றார்.
செவிலியர்களின் சிக்கல்: ‘மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணி நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு, கடந்த 4 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?’ என்று கேட்டதற்கு, “இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
‘செவிலியர்களின் ஆதார் மற்றும் பான்கார்டு இணைப்பு சரிவர இணைக்க முடியாத நிலையில், அவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி கடந்த ஓராண்டாக செலுத்தப் படாமல் இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறதே?’ என கேட்டதற்கு ‘‘ இது தொடர்பாக உரிய ஆய்வு செய்துநடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
|
“30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை தற்போது இல்லை” - பெண்கள் முன்னேற்றம் குறித்து தமிழிசை | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2024-01-31 21:09:00 |
புதுச்சேரி: “30-40 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பெண்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி பல்கலைகழகம், சமூகவியல் துறை சார்பில் ‘பாலினம், சுகாதாரம், மற்றும் நிலையான வளர்ச்சி: தேசிய மற்றும் உலகளாவிய பார்வை’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் பண்பாட்டு மையக் கருத்தரங்க அறையில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை குத்து விளக்கேற்றி கருத்தரங்கினைத் தொடங்கி வைத்தார். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர்(பொறுப்பு) டாக்டர் தரணிக்கரசு மற்றும பேராசிரியர்கள். ஆய்வாளர்கள், மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் பேசியது: “ஒரு சமூக வளர்ச்சிக்கான அடையாளம் அந்த நாட்டில் நிலவும் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சமூகமானது இப்போது சரிசமமாக வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். நான் 14 பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக இருக்கிறேன். துணைவேந்தர்களின் மாநாடு ஒருமுறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நான், ‘பெண்கள் எத்தகைய துறைகளில் அதிகம் படிக்கிறார்கள்’ என்று கேள்வி கேட்டேன். அதற்கு அவர்கள் கலை அல்லது சுலபமான துறைகளிலேயே அதிகம் படிக்கிறார்கள் என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இதைப் போலவே முன்பு பெண்கள் மருத்துவம் படிப்பதாக இருந்தால் மகப்பேறு துறையில் தான் அதிகம் படித்தார்கள். ஆனால் இப்போது இருதயவியல், சிறுநீரகவியல், எலும்பியல் போன்ற பல்வேறு துறைகளில் படிக்கிறார்கள். ஆராய்ச்சிகளிலும் பெண்கள் மிக குறைவாகவே இருந்தார்கள். ஏனென்றால், அதுபோன்று கடுமையான துறைகளில் படிக்க வேண்டுமென்றால் நீங்கள் அதிகமாக நேரம் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. அதற்கு ஒருவரின் குடும்பமும் சமூகமும் ஆதரிப்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது.
அரசியலில்கூட ஒருவர் அதிகமான நேரம் பொதுவாழ்வில் செலவிட வேண்டிய சூழல் இருக்கும். அதில் ஆண்கள் அதிக நேரம் வெளியே இருந்து பணியாற்றும்போது ஒரு வித பார்வையும் ஒரு பெண் அத்தகைய நிலையில் பணியாற்றும்போது வேறொரு பார்வையும் சமூகம் முன்வைக்கிறது. அதன்பிறகு நான் அனைத்து துணைவேந்தர்களையும் பெண்களுக்கு ஆராய்ச்சி துறை சார்ந்த மற்றும் கடினமான துறை சார்ந்த வாய்ப்புகளை அதிகம் வழங்க வேண்டும் என்று கூறினேன். பெண்கள் பெரும்பாலும் உயர் கல்வி படிப்பது திருமணத்திற்காக என்று பதிலளித்தார்கள்.
அமைச்சர் பதவியில்கூட பெண் அமைச்சர்கள் முன்பு பதவியில் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் துறையிலே இருப்பார்கள். ஆனால் இப்போது பிரதமர் மூலம் மத்திய நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் பெண்களாக இருக்கிறார்கள்.
அரசு பெண் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. எனவே கிடைக்கும் வாய்ப்புகளை பெண்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 30-40 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. பெண்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. சமூகம் இயங்கிக்கொண்டு இருக்கும் தற்போதைய சூழலில் இருந்துகொண்டே உங்கள் குடும்பத்தில் கிடைக்கும் உதவிகளை பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்குள் இருக்கும் உறுதியை வைத்து சவால்களை சந்திக்க வேண்டும். நான் பல கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அதிகமான அளவில் பெண்கள் முதலிடங்களை பெறுகிறார்கள். அனைவரும் உங்களது முன்னேற்றத்தினை உங்கள் கடமையாக கருத்தில் கொண்டு, நீங்களும் உங்களோடு நாட்டையும் முன்னேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
|
“பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா?” - அண்ணாமலை சவால் | ந. சரவணன் | திருப்பத்தூர் | 2024-01-31 20:37:00 |
திருப்பத்தூர்: “பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. பிரதமர் மோடி தலைமையில் 75 அமைச்சர்கள் உள்ளனர். இதில், ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா?” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று மேற்கொண்டார். திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலை அருகே வந்த அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பிறகு, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவுக்கு அவர் நடைபயணம் செய்தார். இதையடுத்து, திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே அவர் பொதுக்கூட்டத்தில் பேசியது: “தமிழகத்தில் குடும்ப அரசியல் நடக்கிறது. குடும்ப அரசியலை நாங்கள் அடியோடு வெறுக்கிறோம். குடும்பம், சாதி, ஊழல் மற்றும் அடாவடி அரசியலை அடியோடு அகற்ற வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பின்னால் நாம் அணிவகுத்து நிற்க வேண்டும்.
பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு வந்துள்ளது. 2028-ம் ஆண்டில் 3-வது இடத்துக்கு முன்னேறும். 2047-ம் ஆண்டில் உலகில் முதல் இடத்துக்கு இந்தியா வர பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அது சரித்திர தேர்தல். காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் ஊழல் பெருகியது. தனிப் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகள் பெரிய ஊழலில் ஈடுபட்டனர். பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. பிரதமர் மோடி தலைமையில் 75 அமைச்சர்கள் உள்ளனர். இதில், ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா?
அதுவே, தமிழகத்தில் 35 அமைச்சர்களில் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 8 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராகவே தொடர்கிறார். அடுத்து பொன்முடி. இவர்கள் 2 பேரை தவிர மேலும் 10 பேர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கான தீர்ப்பு விரைவில் வரும். அதன் பிறகு, இலாக்கா உள்ள அமைச்சர்களை காட்டிலும் இலாக்கா இல்லாத அமைச்சர்கள் தான் தமிழகத்தில் அதிகம் இருப்பார்கள்.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 33 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டது. குஜராத் மாநிலத்தில் 26 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டது. தமிழகத்தில் வெறும் 6.60 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. குஜராத், உ.பி போன்ற மாநிலங்களில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தர வேண்டியதில்லை. ஆனால், தமிழகத்தில் முதலவர் குடும்பத்தாரையும், திமுக ஆடிட்டரை சந்திக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் போதுமான வளர்ச்சிபெறவில்லை. எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்க மோடியால் மட்டுமே முடியும். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏகலைவா பள்ளி ஒன்று மட்டுமே உள்ளது. நவோதயா பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வர பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கு மக்கள் பாஜகாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில் பாஜக மாநிலச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
|
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி | கி.மகாராஜன் | மதுரை | 2024-01-31 20:13:00 |
மதுரை: “மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியிலுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், விதிமீறல் கட்டிடங்கள், நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 30.1.1997-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 9 மீட்டருக்கு மேல் கட்டிடங்களின் கட்டிடங்கள் கட்டக்கூடாது. ஆனால் இந்த விதியை மீறி 9 மீட்டருக்கு மேல் ஏராளமான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த விதி மீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வழக்கறிஞர்கள் ஆணையர்கள் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி வழக்கறிஞர்கள் ஆணையர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் உயரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள், “இந்த மனு 2011-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ஆணையர்கள் விதிமீறல் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி 1000-க்கும் மேற்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை விதிமீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உயர் நீதிமன்றம் எத்தனை முறை உத்தரவிட்டும் மாநகராட்சி நிர்வாகமோ, மாநகராட்சி ஆணையர்களோ விதி மீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கறிஞர்கள் ஆணையர்கள் அறிக்கை அடிப்படையில் 13 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? இத்தனை ஆண்டுகளாகியும் விதிமீறல் கட்டிடம் கட்டிய ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லையா? அப்படியென்றால் விதிமீறல் கட்டிடங்களை மாநகராட்சி ஊக்குவிக்கிறதா? இதை யார் தான் கட்டுப்படுத்துவது?
விதிமீறல் கட்டிட பிரச்சினையை கடுமையான பாதிப்பாக கருத வேண்டும். விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு குழப்பம் இருப்பதாக தெரிகிறது. 1997-ல் அரசு பிறப்பித்த அரசாணையை கடைபிடிக்க அரசு நிர்வாகத்துக்கு என்ன சிக்கல் உள்ளது. அரசின் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் மீது ஒருபோதும் கருணை காட்டக் கூடாது.
எனவே, மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்களில் எத்தனை கட்டிடங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது? மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டிடப்பட்டுள்ள விதிமீறல் கட்டிடங்கள், அந்த கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை மதுரை மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப்.7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
|
அங்கன்வாடி மைய மதிய உணவுக்கான செலவினத் தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 17:54:00 |
சென்னை: குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை ரூ.2.39 என உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.41.14 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ.1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் 46 பைசா எனவும், எரிபொருளுக்கான செலவினம் 60 பைசா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பருப்பு பயன்படுத்தும் நாட்களில் காய்கறிகளுக்கு 96 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் காய்கறிகளுக்கு ரூ.1.10 காசும் என வழங்கப்பட்டு வந்த உணவூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் ரூ.1.33 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பருப்பு பயன்படுத்தும் நாட்களில் உப்பு மற்றும் தாளிதப் பொருட்களுக்கு 30 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் உப்பு மற்றும் தாளிதப் பொருட்களுக்கு 45 காசும் என வழங்கப்பட்டு வந்த உணவூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் 46 காசாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
பருப்பு பயன்படுத்தும் நாட்களில் எரிபொருளுக்கு 26 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் எரிபொருளுக்கு 26 காசும் என வழங்கப்பட்டு வந்த உணவூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் 60 காசாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பருப்பு பயன்படுத்தும் நாட்களில் மொத்தமாக ரூ.1.52 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் மொத்தமாக ரூ.1.81 காசும் என வழங்கப்பட்டு வந்த உணவூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் ரூ.2.39 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, உணவூட்டுச் செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.41.14 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இதன் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தீவாக மாறிய கோவளம் மீனவர் காலனியின் அவலம்: 40 நாளாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாத பரிதாபம் | ரெ.ஜாய்சன் | தூத்துக்குடி | 2024-01-31 17:23:00 |
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மழை வெள்ளத்தால் சாலை துண்டிக்கப்பட்டதால் கடற்கரை மீனவ கிராமமான கோவளம் மீனவர் காலனி தனித் தீவு போல் மாறி விட்டது. போயா படகு மூலமே மக்கள் வெளியே வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர், சாலை வசதி இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். குழந்தைகள் 40 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் முடங்கியுள்ளனர்.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை கிராமம் கோவளம் மீனவர் காலனி. 45 குடிசை வீடுகளை கொண்ட இந்த கிராமத்தில் 60 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300 பேர் வசிக்கின்றனர். மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள இந்த கிராமத்தை கடந்த மாதம் 17, 18 தேதிகளில் பெய்த அதி கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு உருக்குலைத்துவிட்டது.
இந்த கிராமத்துக்கு செல்லும் சிறிய சாலை, குடிநீர் குழாய், மின் கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் வெளி உலகில் இருந்து இந்த கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மக்கள் வெளியே வர முடியாத நிலை உருவானது. குடிநீர், மின்சாரம் தடைபட்டது. வலைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இக்கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிராம மக்கள் சிறிய போயா படகுகள் மூலம் தான் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். கடற்கரை மணல் பகுதியில் ஊற்று தோண்டி அதில் வரும் தண்ணீரை தான் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
மழை வெள்ளம் ஏற்பட்டு 40 நாட்ளுக்கு மேலாகியும் அதிகாரிகள் யாரும் இங்கு வந்து பார்க்கவில்லை என இக்கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து கோவளம் மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் உ.உமயராஜ், 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:
மழை வெள்ளத்தால் அனைத்தையும் இழந்துள்ளோம். சாலை, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. போயா படகு மூலம் தான் வெளியே சென்று வருகிறோம். கடற்கரை பகுதியில் ஊற்று தோண்டி அதில் வரும் தண்ணீரை தான் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்துகிறோம். அந்த தண்ணீர் உவர்ப்பாக இருந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லை.
வெள்ளத்தில் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு முன்பு தான் மின்சாரம் வந்தது. சாலை மற்றும் குடிநீர் குழாய் இன்னும் சரி செய்யப்படவில்லை. மீன்பிடித் தொழிலை விட்டால் எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. மீன்பிடி வலைகள் பெருமளவில் சேதமடைந்துவிட்டன.
வீடுகளில் வைத்திருந்த பழைய வலைகளை பயன்படுத்தி தற்போது தொழிலுக்கு சென்று வருகிறோம். சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் எங்கள் கிராமத்தில் இருந்து துறைமுகப் பள்ளியில் படிக்கும் சுமார் 30 குழந்தைகள் கடந்த 40 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கிறோம். அரசு தான் எங்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்றார்.
இந்த கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு, கிராமத்தின் பரிதாப நிலையை வெளி உலகுக்கு கொண்டு வந்த எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் கவுரவ செயலாளர் ஆ.சங்கர், 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:
மழை வெள்ளம் கோவளம் கிராமத்தை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. சாலை, குடிநீர் வசதி இல்லாமல் போயா படகு மூலம் வெளியே வரும் பரிதாப நிலையில் இக்கிராம மக்கள் உள்ளனர். பள்ளிக் குழந்தைகளின் கல்வி உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. தமிழக அரசு வழங்கிய வெள்ள நிவாரணத் தொகை ரூ.6,000-ஐ போயா படகு மூலம் வெளியே வந்து நியாயவிலைக் கடையில் வாங்கியுள்ளனர்.
இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மீனவர்கள் செசைட்டியில் பதிவு செய்துள்ளனர். ஆனால், எந்தவித நிவாரண உதவிகளும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவோ, மனு கொடுக்கவோ தெரியாத படிப்பறிவில்லாத அப்பாவிகளாக இங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.
எங்கள் அமைப்பு மூலம் 4,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அவர்களுக்கு வழங்கினோம். அந்த குடிநீரையும் அவர்கள் போயா படகுகள் மூலம் தான் கரைக்கு வந்து குடங்களில் பிடித்து சென்றனர்.
எனவே, கோவளம் மீனவர் காலனிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மீன்பிடித் தொழிலுக்கான உபகரணங்கள், பள்ளி குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் ஆகியவை உடனடியாக தேவை. இதனை அரசாங்கம் உடனே செய்து கொடுக்க வேண்டும். இந்த கிராமத்தின் நிலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். எனவே, விரைவில் கோவளம் கிராம மக்கள் பாதிப்பில் இருந்து மீள்வார்கள் என நம்புகிறோம் என்றார் அவர்.
|
“மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீர்ப்பு இது...” - மார்க்சிஸ்ட் கருத்து @ பழநி கோயில் வழக்கு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 17:15:00 |
சென்னை: "மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் தன்னை அறியாமல் நீதிமன்றமும் துணை போயிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பழநி முருகன் கோயிலுக்குள் இதர மதத்தினரை அனுமதிக்கக் கூடாது என்று ஓர் அரசியல் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி, அந்த கோயில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து கோயில்கள் அனைத்துக்கும் பொருந்துமாறு ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்தத் தீர்ப்பின்படி அறநிலையத் துறை கோயில் கொடி மரத்துக்கு அருகிலும், இதர முக்கியமான இடங்களிலும் “இந்துக்கள் அல்லாதவர்கள் கொடி மரத்துக்கு அப்பால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என விளம்பர பலகை வைக்க வேண்டும். இந்துக்கள் அல்லாதோரை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது.
இந்துக்கள் அல்லாத யாரும் ஏதாவது ஒரு கோயிலுக்குள் செல்லவிரும்பினால், அவர்கள் இந்து மதத்தின் நடைமுறைகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவதாகவும், குறிப்பிட்ட கடவுளின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் உறுதிமொழி அளித்தால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படலாம். அப்படி அனுமதிக்கப்படும் இந்துக்கள் அல்லாதோர் குறித்த பட்டியலை பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், இந்தத் தீர்ப்பு பழநி செந்தில் ஆண்டவர் கோயிலுக்கு மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத் துறை கோயில்கள் அனைத்துக்கும் பொருந்தும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பு இறை நம்பிக்கையுள்ளவர்களை காயப்படுத்தும் தீர்ப்பாகும். தமிழகத்தில் ஒரே நேரத்தில் எல்லா மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வரும் வழக்கம் பல்வேறு பகுதி மக்களிடமும் நடைமுறையில் உள்ளது. மதம் கடந்து இறை வழிபாடு செய்கிற மக்கள் ஏராளமாக உள்ளனர். அதேசமயம், பல்வேறு சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் பிறப்பின் அடிப்படையிலும் தங்களை ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்று வெளிப்படுத்திக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது.
இந்து மதத்துக்கு உள்ளேயும் சைவம், வைணவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளும், வைணவத்துக்குள்ளும் வடகலை, தென்கலை போன்ற பிரிவுகளும் அதன் காரணமாக முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கிறது. நாளையே ஒருவர் இது சைவ கோயில் வைணவர்கள் வரக் கூடாது என்றோ, இது வைணவ கோயில் எனவே, சைவர்கள் வரக்கூடாது என்றோ நீதிமன்றத்தை நாடலாம். வைணவர் ஒருவர் வடகலைக்கு ஆதரவாகவோ, தென்கலைக்கு ஆதரவாகவோ இதர கலையை பின்பற்றுபவர் குறிப்பிட்ட கோயிலுக்குள் வரக்கூடாது, வர முடியாது என்று நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது.
இதுவெல்லாம் இந்து மதத்தின் பல்வேறு பிரிவினர்களிடையே முரண்பாட்டையும், பகைமையையும் உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்து விடும் வாய்ப்புள்ளது. அதற்கு இந்த தீர்ப்பே தீனிபோடும் விதமாக அமைந்துவிடும். மேலும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் கொடிமரத்துக்கு அப்பால் போக முடியாது என்றும் வேறு சில கோயில்களிலும் அப்படி இருப்பதாகவும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது உண்மைக்கு மாறானதாக உள்ளது. பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பிறகு அதில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
இன்றுவரையிலும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் எல்லா பக்தர்களும் எந்த இடம் வரை செல்ல முடியுமோ அந்த இடம் வரை செல்வதற்கு அனைத்து மதத்தினருக்கும் அனுமதி அளிக்கப்பட்டே வருகிறது. தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டில் வராத பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு மட்டுமே அதுவும் உடை கட்டுப்பாடு மட்டுமே அமலில் உள்ளது. தீர்ப்பில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்த இந்த அம்சம் உண்மைக்கும் மாறாக இருக்கிறது.
இந்து மத கோயில்களில் வரலாற்று காலம் தொட்டு அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் செல்வதற்கு நடைமுறை உள்ளது. இப்போது ஏன் இந்த கட்டுப்பாடு என்ற கேள்விக்கு நியாயமான பதில் இல்லை. பிற மதங்களை சார்ந்த ஆலயங்களில் அனைத்து மதத்தினரும் சென்று வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தக் கட்டுப்பாடு மக்கள் ஒற்றுமையை பெரிதும் பாதிக்கக் கூடியதாக அமைந்து விடும்.
எனவே, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான இந்த தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் தன்னை அறியாமல் நீதிமன்றமும் துணை போயிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமென்றும், அதுவரையிலும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் இந்து சமய அறநிலையத் துறை இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
|
109 ஆண்டுகளாக செயல்படும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை முடக்கப் பார்ப்பதாக குற்றச்சாட்டு | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-01-31 17:05:00 |
மதுரை: ''109 ஆண்டுகளாக செயல்படும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலலை முடக்கப் பார்க்கிறார்கள்'' என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் மருத்துவர்கள் தேர்தலில் வாக்களித்து எனது தலைமையில் 7 உறுப்பினர்களை தேர்வு செய்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அமைப்பு செயல்பட்டு வந்தது. ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கு ஒரு முறையும் தேர்தல் மூலம் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த 109 ஆண்டுகளாக தடைபடாமல் தேர்தல்கள் நடத்தப்பட்டு இந்த அமைப்பு தேர்வு செய்து நிர்வாகம் நடத்தப்பட்டு வந்தது. அதுபோல், கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிந்தபிறகு தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றது.
தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சட்டத்தை தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப திருத்தியப்பின் தேர்தலை நடத்தலாம் எனக்கூறி தேர்தலுக்கு தடை விதித்தது. மேலும், மூன்று மாத காலத்திற்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சட்டம் திருத்தப்பட வேண்டும் எனவும், அதுவரை டாக்டர் செந்தில் தலைமையிலான கவுன்சில் செயல்படலாம் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும், புதிய சட்டதிருத்தத்தை, கவுன்சில் நிர்வாகிகளிடம் ஆலோசித்து கொண்டு வரும்படியும் கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டு அதன் மூலம் எனது தலைமையிலான நிர்வாகத்தினை நீக்கிவிட்டு சுகாதாரத் துறை செயலர் தலைமையில் 6 பேர் கொண்ட 'அ-டாக்' குழு ஒன்றை அமைத்தது. முறையாக தேர்தல் மூலம் வெற்றிப்பெற்று கவுன்சிலை நிர்வகித்து வந்த நிர்வாகிகளை நீதிமன்ற ஆணை இருந்தும் நீக்கிவிட்டு ஜனநாயக விரோத போக்காக அதிகாரிகளை கொண்டு கவுன்சிலை முடக்கப் பார்க்கிறார்கள்.
தமிழக அரசு தன்னிச்சையாக தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் சட்டத்தை புதிதாக நிறைவேற்ற ஒரு வரையறை தயார் செய்துள்ளது. இந்த வரையறை நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ள தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் யாரையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவில்லை.
மேலும், ஜனநாக விரோத போக்காக ஒரு லட்சத்து 80 ஆயிரம் மருத்துவர்கள் தேர்வு செய்த உறுப்பினர்கள் 7 பேராகவும், அரசாங்கம் நியமிக்கும் உறுப்பினர்கள் 10 பேராகவும் இந்த குழுவை மாற்றியமைத்து தன்னிச்சையாக தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் செயல்பட வைக்க புது சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
புது சட்டத்தை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளாகிய எங்களையும் கலந்து ஆலோசித்து ஆணையிட வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காதப் பட்சத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சில போராட்டங்களை அறிவிக்கவும், இவை யாவும் பலன் அளிக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவும் முடிவெடுத்துள்ளோம்'' என்று அவர் தெரிவித்தார். பேட்டியின்போது தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் முன்னாள் செயற்குழு உறுப்பினர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன், அரசு மருத்துவுர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.
|
அரசே மது விற்கும் அவலத்தால் நூற்றுக்கணக்கான கொலைகள் - தமிழக பாஜக பட்டியல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 17:03:00 |
சென்னை: “படுகொலைகள் நடந்திட காரணமான மதுவை, அரசே விற்கும் அவலம்தான் தமிழகத்தின் சாபக்கேடு” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மது அருந்த பணம் தராத தந்தை கொலை; பட்டதாரி இளைஞர் கைது - 24/02/2022.
மது போதையில் தந்தையை கீழே தள்ளிவிட்டு கொன்ற பாசக்கார மகன் கைது - 16/03/2022.
இரண்டு மகள்கள் அடித்து கொலை: குடிகார தந்தையின் வெறிச்செயல் - 20/05/2022.
மது போதையில் அடித்து துன்புறுத்திய தந்தை - டாக்டர் மகள் தற்கொலை - 29/011/2022.
மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தாயை கொன்று புதைத்த மகன் கைது - 09/11/2022.
மது போதைக்கு அடிமையான வாலிபர் கொலை, பாசக்கார தம்பி, தந்தை கைது - 09/11/2022.
மது பழக்கத்தினால் மனைவி பிரிந்ததால், சோற்றில் விஷம் வைத்து தாய், தந்தையை கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை; போதையில் குழந்தையை சுவரில் வீசி கொலை செய்த கொடூர தந்தை - 05/01/2023.
குடிகார மகனை குடும்பமே அடித்து கொன்றது - 08/03/2023.
மதுரையில் மது போதையால் ஆள்மாற்றி கொலை செய்த இருவர் கைது - 26/10/2023.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் குடிபோதை விபத்து, கொலைகளில் 20 பேர் பலி: தீபாவளி வியாபாரம் அமோகம் - 15/11/2023.
வயலில் மது அருந்தியதை தட்டி கேட்ட விவசாயி கொலை - 5/01/2024.
சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் - 11/01/2024.
மது விற்பனையில் தகராறு: கத்தியால் குத்தி ஒருவர் கொலை - 17/01/2024.
மது பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தி கொலை செய்த மகன், தாயின் மீது சந்தேகப்பட்டு கொலை - 19/01/2024.
மது போதையில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளி கர்ப்பிணி கொலை: கணவன் கைது - 28/01/2024.
மது போதையில் இளைஞர் கொலை - நண்பர் கைது 30/01/2024.
கடந்த இரு வருடங்களில் நடைபெற்ற நூற்றுக்கணக்கான கொலைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன். ஆனால், இந்த படுகொலைகளுக்கு காரணமான மதுவை, அரசே விற்கும் அவலம்தான் தமிழகத்தின் சாபக்கேடு. கணவரை இழந்த பல இளம் பெண்கள், பெற்றோரில்லா குழந்தைகள் உருவாகிக் கொண்டேயிருக்கிறார்கள். டாஸ்மாக்கிலிருந்து வாங்கி அருந்தும் மதுவிற்கு பலியாவது பெரும்பாலும் சராசரியாக 30-45 வயது உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலைகளை தடுத்து நிறுத்த முடியாதவர்கள், முயற்சிக்காதவர்கள், நீட் தேர்வுக்கேற்ற முறையான, தரமான கல்வி முறையை அளிக்காத காரணத்தினாலும், மன அழுத்தத்தினாலும் நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டிய முயற்சிகளை செய்து இந்தியா முழுவதும் தமிழக மாணவர்கள் மருத்துவ கல்லூரி பயில்வதற்கு உண்டான வழிமுறைகளை செயல்படுத்தாமல், நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று கூக்குரலிடுவது கண்டிக்கத்தக்கது.
முறைப்படுத்த வேண்டியதை முறைப்படுத்த முயலாமல், முறைப்படுத்தக் கூடாததை முறைப்படுத்திக் கொண்டிருப்பது தான் திராவிட மாடலா? 'செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்' என்ற வள்ளுவரின் வாக்கை நினைவில் கொண்டு செயல்படுவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?'' என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
|
“பெண் ஆய்வாளரை தாக்கிய திமுக நிர்வாகியை கைது செய்யாதது ஏன்?” - அண்ணாமலை கேள்வி | இரா.தினேஷ்குமார் | திருவண்ணாமலை | 2024-01-31 16:50:00 |
திருவண்ணாமலை: “மூன்று முறை முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரனை காவல் துறையினர் கைது செய்யாமல் இருப்பது ஏன்?” என திருவண்ணாமலை எஸ்பிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலையில் என் மண், என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் குடும்ப அரசியல், சாதி, ஊழல் மற்றும் அடாவடி என்ற நாற்காலியின் 4 கால்கள் உள்ளன. இந்த 4 கால்களும் பெயர்த்தெறியபட வேண்டும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்டோர் தாக்கி உள்ளனர். காவல் துறையை நோக்கி கையை உயர்த்தினால் சமுதாயம் முன்னேறாது. இவர்களது முன் ஜாமீன் மனு 3 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு சட்டத்தை மீறி வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்த காவல் துறையினர், பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக நிர்வாகி ஸ்ரீதரனை ஏன்? கைது செய்யவில்லை.
நானும் காவல் துறையை சேர்ந்தவன் என்பதால், பெண் காவல் ஆய்வாளரை தாக்கியதை ஏற்க மனம் மறுக்கிறது. உங்களது ரத்தமாக உள்ள பெண் காவல் ஆய்வாளர் மீது கை வைத்துள்ளதற்கு காவல் துறை என்ன சொல்ல போகிறது. கம்பீரமான சீருடையை அணிந்து எப்படி நடக்க முடிகிறது. ஐபிஎஸ் பதவி என்பது மிகப்பெரிய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். ஆனால், பல்லை பிடுங்கிய நபராக திருவண்ணாமலை எஸ்பி இருக்கிறார்.
ஊழல் அமைச்சரிடம் கைக்கட்டி நிற்கின்றார். இதே நிலை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றிருந்தால், தாக்கிய நபரின் 2 கைகளையும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்திய நாத் எடுத்திருப்பார். காவல் துறையின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு திமுக ஆட்சி நடத்துகிறது.
தமிழகத்தில் 5 முறை ஆட்சி செய்த திமுக, ஐந்து அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டும் திறந்தது. அதேநேரத்தில் 17 தனியார் மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தது. ஆனால், பிரமதர் மோடியின் 9 ஆண்டு பாஜக ஆட்சியில் ஓரே நேரத்தில் தமிழகத்தில் 12 அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதித்தது. தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடையாது என தெரிவித்து விட்டது.
தமிழத்தில் 4 பாஜக எம்எல்ஏக்களும், தங்களது தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை தொடங்க கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசும் அனுமதி வழங்கியது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தடையில்லா சான்று வழங்க மறுக்கிறது. தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளி மற்றும் பிஎம் ஸ்ரீ என்ற மத்திய அரசின் பள்ளிகளை தொடங்க திமுக அரசு அனுமதிக்கவில்லை.
அமைச்சர் எ.வ.வேலு, பன்னாட்டு பள்ளியை நடத்துகிறார். பணக்காரர் வீட்டு பிள்ளைகளுக்கு ஒரு கல்வி, ஏழை வீட்டு பிள்ளைகளுக்கு ஒரு கல்வியா?. நவோதயா பள்ளியை தொடங்க அனுமதி அளித்தால் 100 பள்ளிகள் உடனடியாக திறக்கப்படும். இப்பள்ளிகளில் படிக்க கட்டணம் கிடையாது. அதன் பிறகு மாணவர்களின் சோதனை பரிசோதிக்கலாம். எ.வ.வேலு நடத்தும் பள்ளி மாணவரை விட சிறந்த மாணவரா, நவோதயா பள்ளி மாணவர் திகழ்வார். இல்லையென்றால் அரசியலை விட்டு சென்று விடுகிறேன். இந்த சவாலை ஏற்க தயாரா?.
கோயில் கருவறையில் பிராமணர்களை தவித மற்றவர்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால் சனாதனத்தை எதிர்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 6 மாதத்துக்கு முன்பு கூறினார். அயோத்தியில் பால ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்த போது, இவர் என்ன சங்காராச்சாரியரா, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு என கேள்வி கேட்கின்றார். இதுதான் அரசியல் பித்தலாட்டம். தமிழக அரசியல் களத்தில் பிராமனர்களை வில்லனாக சித்தரித்து காண்பித்துள்ளனர்.
விழா மேடையில் பேசும் அமைச்சர் உதயநிதி, நான் ஒரு கிறிஸ்துவர் என கூறுகின்றார். ஆனால், பாஜகவை மதவாத கட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகின்றார். பொய்யை மட்டும் மூலதனாக வைத்து திமுக ஆட்சி நடத்துகிறது" என்றார். மாவட்டத் பாஜகத் தலைவர் கே.ஆர்.பால சுப்ரமணியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் தி. அறவாழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|
மோசடி புகார்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆலங்குடி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் | கே.சுரேஷ் | புதுக்கோட்டை | 2024-01-31 15:43:00 |
புதுக்கோட்டை: மோசடி உள்ளிட்ட புகார்களால், நல்லாசிரியர் விருது பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஆ.கருப்பையன். இவர் ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், அரசு அலுவலர்களின் கையெழுத்தை போலியாக இட்டு வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.
அதோடு மேலும் சில மோசடி புகார்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தலைமை ஆசிரியர் கருப்பையனை பணியிடை நீக்கம் செய்து அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் இன்று ( ஜன.31 ) உத்தரவிட்டார். தலைமை ஆசிரியர் கருப்பையன் 2010-ல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
2 ஆண்டுகளாக நடக்கும் தூர்வாரும் பணி: மதுராந்தகம் ஏரி பாசன விவசாயிகள் பாதிப்பு | கோ.கார்த்திக் | மதுராந்தகம் | 2024-01-31 15:38:00 |
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியால் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. சுமார் 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் 2,411 ஏக்கர் நீர் பிடிப்பு பரப்பாகவும், 932.49 ச.கி.மீ., நீர்வரத்து பகுதிகளாகவும் உள்ளன. ஏரிக் கரையின் மொத்த நீளம் 3,950 மீட்டராகஉள்ளது.
ஏரியின் முழுக் கொள்ளளவான 24.30 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும். இந்த ஏரியின் மூலம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ளகடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்திக்குப்பம், விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்கலம் உட்பட 36 கிராமங்களில் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஏரியில் வண்டல் மண் படிந்து தூர்ந்துள்ளதால், ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, ரூ.120 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை கடந்த 2021 முதல் பொதுப்பணித்துறையின் பாலாறு கீழ்வடி நிலக்கோட்டம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக, கலங்களை உடைத்து ஏரியிலிருந்த நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், தூர்வாரும் பணிகள் நிறைவடைந்து மீண்டும் நீரை சேமிக்கும் வரை, பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் 2 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, மதுராந்தகம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: ஏரியின் கலங்கள் மற்றும் கரைகளை உடைத்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதால், மழை பெய்தாலும் ஏரியில் தண்ணீரை சேமிக்க வாய்ப்பு இல்லை. இதனால், பாசனத்துக்கு தண்ணீரின்றி 2,853 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மதுராந்தகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 30-க்கும்மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரியில் கடந்த 2 ஆண்டுகளாக நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும், 2 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் உள்ளதால் விளைநிலங்கள் தரிசு நிலமாக மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதனால், ஏரியின் தூர்வாரும் பணிகளால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், குறைந்த அளவிலான தண்ணீரை கொண்டு விவசாயம் செய்யும் வகையில், வேளாண்துறை மூலம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி, தேவையான உபகரணங்களை மானிய விலையில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்வும். இதுதவிர, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஏரியின் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
|
அபாய நிலையில் மின் பெட்டிகள்: அச்சத்தில் பெரம்பூர் - அருந்ததி நகர் மக்கள் | செ.ஆனந்த விநாயகம் | சென்னை | 2024-01-31 15:36:00 |
சென்னை: அபாயகரமான நிலையில் உள்ள மின்பெட்டிகளை சீரமைக்க வேண்டும் என பெரம்பூர், அருந்ததி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடசென்னையின் பெரிய தொகுதி மற்றும் முக்கிய பகுதியாக பெரம்பூர் விளங்குகிறது. தொழில் நகரமாக இருந்து வரும் இப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பெரம்பூருக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புறம் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிருக்கும் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் அருந்ததி நகர் எனப்படும் பகுதி உள்ளது. இப்பகுதியில் போலெரி அம்மன் கோவில் தெரு உட்பட 16 தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் மின்பெட்டிகள் திறந்தும், ஆபத்தான முறையில் மின் கம்பிகள் ஆங்காங்கே செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறுகலான தெருக்கள் இருக்கும் நிலையில், இதுபோன்ற மின்பெட்டிகளை சீரமைக்காவிட்டால் மின்விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அருந்ததி நகர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம், ஃபியூஸ் மாற்றுவதற்கு கூட சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மின்வாரிய அதிகாரிகள் தாமதம் செய்வதால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.பி.பரந்தாமன் கூறியதாவது: திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட அருந்ததி நகரின் 16 தெருக்களிலும் மின் விநியோகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. வீரராகவன் தெரு, தாசர் தெரு, வரதப்பன் தெரு போன்ற இடங்களில் உள்ள மின்பெட்டிகளில் ஏராளமான மின் கம்பிகள் வெளியில் எட்டிப்பார்த்தபடி அபாயகரமாக காட்சியளிக்கின்றன.
இதைத் தவிர மற்ற அனைத்து தெருக்களிலும் மின்பெட்டியில் இருந்து ஏதாவது ஒரு மின்கம்பியாவது அச்சுறுத்தும் வகையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை சீரமைக்குமாறு கோரிக்கை வைத்தால், கேபிள், ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதாக பொறுப்பு அதிகாரி கூறுகிறார். மேலதிகாரிகளிடம் கூறினால் மீண்டும் பொறுப்பு அதிகாரிகளிடம் அறிவுறுத்துவதாகக் கூறுகின்றனர்.
ஆனால், பணிகள் எதுவுமே நடந்தபாடில்லை. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுகிறது. மின்பெட்டியில் ஃபியூஸ் போடுவதற்கு கூட உடனே மின்வாரிய பணியாளர்கள் வருவதில்லை. இதுதொடர்பாக புகாரளிக்க தொலைபேசி அழைப்பையும் எடுப்பதில்லை. தலைமையகத்தில் உள்ள மின்னகத்தையும் உடனடியாக அணுக முடிவதில்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கொசுத் தொல்லையால் அவதியடைகின்றனர்.
அண்மையில் கனமழை வெள்ளத்தின்போது மிக தாமதமாகவே மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது. இதற்கு மின்பெட்டி தாழ்வாக அமைந்திருப்பதே காரணம். எனவே, மின்பெட்டியை உயர்த்தி அமைக்க வேண்டும். கொரட்டூர் பகுதியில் மின்பெட்டிகள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்து நீர் தேங்கினாலும் மின்விநியோகம் பாதிக்கப்படாது.
அதேநேரம், தரமான கேபிள்கள் அமைக்கப்படுவதில்லை. மின் கட்டணம் செலுத்த தாமதமானால் இணைப்பை துண்டிப்பது, அபராதம் விதிப்பது போன்றவற்றில் தீவிரம் காட்டும் வாரியம், கோரிக்கைக்கு தீர்வு காண்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக மின்வாரிய உயரதிகாரிகள் கூறும்போது, "தமிழகம் முழுவதும் பல மாதங்களாக மின்பெட்டியை உயர்த்தி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இப்பகுதியிலும் தாழ்வாக உள்ள மின் பெட்டிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், மின்னகத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கப்படுகிறது. அதற்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. போதிய கேபிள்கள் கையிருப்பில் உள்ளன. இதனைக் கொண்டு தேவையான இடங்களில் கேபிள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டனர்.
|
“தமிழகத்தில் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 15:34:00 |
சென்னை: “தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக. 2021-ல் ஆட்சிக்கு வந்த உடனேயே குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம்", என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் கொல்கத்தாவில் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சிஏஏ விரைவில் அமல்படுத்தப்படும், இந்த சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் செயல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்” என்று கூறியிருந்தார். | முழுமையாக வாசிக்க > குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்தில் அமல்: மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் தகவல்
|
“திமுக அளவுக்கு அதிமுக தரம் தாழாது” - எம்ஜிஆர் குறித்த ஆ.ராசா பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 15:11:00 |
சென்னை: “மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆ.ராசாவின் வாடிக்கை. அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல், பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும். தரம் தாழ்ந்த திமுக அளவுக்கு அதிமுக என்றும் தரம் தாழாது” என்று எம்ஜிஆர் குறித்த திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ,என்றும் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற மறைந்த முதல்வர் எம்ஜிஆர் குறித்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆ.ராசாவின் வாடிக்கை. அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும். தரம் தாழ்ந்த திமுக அளவுக்கு அதிமுக என்றும் தரம் தாழாது .
இந்த திமுக ஆட்சியில், எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் , அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆ.ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.
வரலாறு நெடுக எங்கள் இருபெரும் தலைவர்களை பிம்பச்சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளன. அதேபோல, இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் அவர்களது புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது.வருகின்ற மக்களவைத் தேர்தலில் ஆ.ராசாவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். கல்லை வடித்தால் அது வெறும் சிலை- அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
|
சென்னை, மதுரை ஐஜி-க்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 14:12:00 |
சென்னை: தமிழக காவல்துறை ஐஜி.,க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரை பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென் மண்டல ஐ.ஜி.யாகவும், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கோரி தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்தொடர்ச்சியாக தற்போது ஐஜி.,க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
|
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-01-31 14:10:00 |
சென்னை: நடிகைகளை விமர்சித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த தொகையை செலுத்த கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஷபிக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும்" என்று கேள்வி எழுப்பி, தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்தனர்.
அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா, முடியாதா என்று தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
|
பழநி கோயில் வழிபாடு | மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க: வைகோ | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 13:43:00 |
சென்னை: இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை அல்லாதவர்கள் பழநி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திட தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி, 1947-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது என்று கூறி, பழநியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, “இந்து அல்லாதவர்களை கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது. ‘இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற பதாகையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் “மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும். அந்தப் பதிவேட்டில், இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாத உறுதிமொழி எழுதிக் கொடுத்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கலாம்” என்று உத்தரவிட்ட நீதிபதி, “இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்” எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
இத்தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் விரும்பிய வழிப்பாட்டுத் தலங்களில் வழிபடுவது அவரது நம்பிக்கைக்கு உரியது. நாகூர் தர்காவிலும், வேளாங்கண்ணி மாதா கோவிலிலும் இந்துக்களும் பிற மதத்தினரும் வழிபட்டு வருகின்றனர். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
|
தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது ஸ்பெயினின் ‘ரோக்கா’ நிறுவனம்: 200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 13:02:00 |
சென்னை: ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளனர். அந்நாட்டின், ஆக்சியானா நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்திட ஆர்வம் காட்டியிருக்கிறது. அதேபோல், ரூ.400 கோடி ரூபாய் முதலீட்டில் ரோக்கா நிறுவனம் பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் 29.1.2024 அன்று தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக, நேற்று (30.1.2024) ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார். இதையடுத்து, ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரஃபேல் மாட்டீயோ, மேனுவேல் மாஞ்சோன் வில்டா, ஆகியோர் ஸ்டாலினைச் சந்தித்து பேசினார்கள்.
இச்சந்திப்பின்போது, காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது என்றும், எனவே இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
இத்துறையின் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி தொழில்துறை அமைச்சர் விரிவாக விளக்கினார். இந்த கலந்தாலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் இத்துறைகளில் முதலீடுகள் செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் Mr.Carlos Velazquez, இந்திய இயக்குநர் நிர்மல் குமாரும், முதல்வரை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, ரோக்கா நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில் பெருந்துறையிலும், ராணிப்பேட்டையிலும் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனையை மேலும் உயர்த்திடவும், சர்வதேச ஏற்றுமதிக்காகவும், இதன் விரிவாக்கத்தையும் புதிய தொழில் அலகுகளையும் தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.
தொழில்துறை அமைச்சரும், இத்துறையில் முதலீடு செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தமிழ்நாட்டில் நிலவி வரும் சாதகமான சூழல் பற்றி விளக்கினார். இந்த கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது . அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால் 200 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனை அடுத்து, வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் முதலீட்டு ஆலோசனைகளை மேற்கொள்ளவிருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
“எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை” - டிடிவி தினகரன் | செய்திப்பிரிவு | மதுரை | 2024-01-31 11:47:00 |
மதுரை: எதிர்வரும் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம் பெறும் அல்லது தனித்து போட்டியிடும். ஒருபோதும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்வரும் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம் பெறும் அல்லது தனித்து போட்டியிடும். ஒருபோதும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நிர்வாகிகள் கோரிக்கை வைப்பதால் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து அரசியல் ரீதியாக நானும் ஓபிஎஸ்ஸும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். இது எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி உறுதியான பிறகு அதை நாங்கள் அறிவிக்கிறோம். ஆளுநர் ரவி அவருடைய பதவிக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் அந்த பதவிக்கும் நல்லது. அதை அவர் பின்பற்றுவார் என்று நம்புகிறோம்.
அமமுக எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து பயணிக்க விருப்பம் இல்லை. இதுதான் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பம். அமமுக யாருக்கும் அடிபணிந்து செல்கின்ற இயக்கம் கிடையாது. அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழ்நாட்டில் அமைக்கிற வரை நானும் என்னுடன் பணியாற்றுகிறவர்களும் அதிலிருந்து பின் வாங்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
|
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | திருவண்ணாமலை | 2024-01-31 06:28:00 |
திருவண்ணாமலை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
திருவண்ணாமலையில் நேற்று `என் மண், என் மக்கள்' யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:
தமிழகத்தில் இளைஞர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதேபோல, வேலைக்கு ஏற்ற ஊதியமும் இல்லை. தண்ணீரின்றி விவசாயம் பொய்த்துப்போனது. நீராதாரத்தைப் பெருக்க திமுக அரசு முயற்சிக்கவில்லை. லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் அடாவடியை அகற்றுவதே இந்த யாத்திரையின் நோக்கம்.
தமிழகத்தில் தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லாமல் உள்ளன.தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், அரசுப் பள்ளிகளில் இல்லை. அரசுப் பள்ளிகளுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்துகிறது. அரசுப் பள்ளிகளில் 11 ஆயிரம் வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளன என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உலகத் தரம் வாய்ந்த கல்வியை பிரதமர் மோடி கொடுக்கிறார். இந்தியா முழுவதும் நவோதயா பள்ளிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளிகூட இல்லை. நவோதயா பள்ளி வரவிடாமல் திமுக அரசு தடுக்கிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ஜவ்வாதுமலையில், மத்திய அரசின் ஏகலைவா பள்ளியைத் தொடங்க அனுமதிக்கவில்லை. இதேபோல, பிஎம்சிதிட்டத்தின் கீழ் பள்ளியைத்தொடங்கவும் அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
|
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி மனு: இன்று விசாரணை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 06:25:00 |
சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணி்ப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீ்லாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.
இருவரும் வரும் பிப்.9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
|
புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்: 12 பேருக்கு பாதிப்பு உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 06:23:00 |
சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஆகிய இருவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டத்தை, பொது சுகாதாரத்துறை சமீபத்தில்செயல்படுத்தியுள்ளது.
முதல்கட்டமாக, ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட 15நாட்களில் 12 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பைகட்டுப்படுத்த வீடு, வீடாக பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 15 நாட்களாக பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 12 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
52 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்தால் நோயை குணப்படுத்த முடியும். நோயின் தீவிரத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கலாம்” என்றனர்.
|
சென்னை பதிவு ஆட்டோக்களை சிஎம்டிஏ எல்லை வரை இயக்க அனுமதி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 06:21:00 |
சென்னை: சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களை சிஎம்டிஏ எல்லை வரை இயக்க அனுமதித்து போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒப்பந்த ஊர்திகள் என்ற அடிப்படையில் சென்னை நகர வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவர சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஒப்புதல் அவசியம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பெருநகர எல்லை விரிவாக்கம்: இதற்கிடையே, சென்னை பெருநகரின் எல்லை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், சென்னை பெருநகர எல்லைப் பகுதிகளுக்குச் சென்றுவர தடையில்லை. எனவே, வரும் காலங்களில் சென்னை பெருநகர எல்லைப் பகுதிகளில் பயணிக்கும்படி அனுமதி அளிப்பதாக குறிப்பிட்டு, ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும்.
இதன்மூலம் வீடுகளுக்கோ, தொழில் ரீதியாகவோ சிஎம்டிஏ-வால் வரையறுக்கப்பட்ட சென்னை பெருநகர எல்லைக்குள் ஆட்டோக்களால் தடையின்றி சென்று வர முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை வரவேற்றுள்ள தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (சிஐடியு) செயல்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர், இந்த உத்தரவால், எல்லை தாண்டியதாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
|
காங்கிரஸை விமர்சித்து பேசிய விவகாரம் | அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 06:19:00 |
சென்னை: காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக தான் கண்டிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மாநில திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: அமைச்சர் ராஜகண்ணப்பனின் செயல்பாடுக்கான பதிலை அவரது கட்சி (திமுக) தான் சொல்ல வேண்டும். எங்களது கட்சியில் யாரேனும் இவ்வாறு செய்திருந்தால் நாங்கள் பதில் சொல்லியிருப்போம். இது கட்சியின் விதிகளுக்கு முரண்பாடானது. இப்படி பேசியிருக்க கூடாது என்று அவருடைய கட்சி (திமுக) தான் சொல்ல வேண்டும்.
சென்னையில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா, காங்கிரஸ் கட்சிக்கும் பெற்று தாருங்கள் என்று என்னிடம் நிர்வாகிகள் கேட்கிறார்கள். கூட்டணியில் இது வழக்கமாக பேசப்படுவதுதான். ஒரு தொகுதியில் ஒரே கட்சி தொடர்ந்து நின்றால் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு இருக்காது. இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். ஆட்சி அதிகாரம் மாறி மாறி வருவதில் தவறில்லை என்று நமது அரசியலமைப்பு சொல்கிறது. அதிகாரம் என்பது தொடர்ந்து இருக்கவும் கூடாது. ஒருவரே ஆட்சி செய்வது சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும். எனவே ஆட்சி மாற்றங்கள் தேவை. அதிகாரத்தில் இல்லை என்றுஒருபோதும் காங்கிரஸ் கவலைபட்டது கிடையாது.
பாஜக ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சி. இந்திய எல்லைக்குள் வாழ்கிறவர்கள் அனைவருமே இந்தியர்கள் என மகாத்மா காந்தி கூறியதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சியம்.
சாமி குற்றமாகும்: பிரதமர் மோடியின் ஆட்சி வீழ்ச்சிகரமான ஆட்சியாகும். கோயில் கட்டுவதால் மட்டுமே பாஜக வெற்றிபெறாது. கோயில் கட்டியவர்கள் எவரும் நல்லா இருந்ததாக வரலாறே கிடையாது. தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றால் பதவி போகும் என்கின்றனர். ராஜராஜனுக்கு அப்படிதான் பதவி போனதாக கூறப்படுகிறது. அயோத்தி கோயிலை முழுமையாக கட்டாமல் கும்பாபிஷேகம் செய்தது மிகப்பெரிய சாமி குற்றமாகும்.
அதிமுக பாஜகவை துறந்தது வரவேற்கத்தக்கது. ஆனால் காங்கிரஸ் ஏன் வரவேற்கவில்லை என்றால், அதிமுக பாஜக இடையே ஓர் கள்ள உறவு இருப்பதாக சந்தேகிக்கிறோம். ஒரு பெரிய முடிவை எடுக்கும்போது அதற்கான காரணத்தை மக்களிடம் சொல்ல வேண்டும். அதிமுக இதுவரை சொல்லவில்லை. எனவே அதிமுகவினர் நம்பத் தகுந்தவர்களாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
|
புதிய பென்சன் திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சென்னையில் டிஆர்இயு ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 06:14:00 |
சென்னை: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் (டிஆர்இயு) சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரயில்வே தனியார்மயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிஆர்இயு சார்பில், பெரும் திரள் ஆர்ப்பாட்டம் சென்னை மூர்மார்க்கெட் வளாகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராஜன் கூறியதாவது: பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தில் ஒரு ஊழியர் ஓய்வுபெறும்போது, கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதி அளவு ஓய்வூதியமாக பெறும் நிலை இருந்தது. ஆனால், புதிய பென்சன் திட்டத்தில் இந்த உரிமை இல்லை.
மாறாக, பங்குசந்தையில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாப நஷ்டத்தை வைத்து பென்சன் கொடுக்கப்படும் என்று கூறுகின்றனர். இத்திட்டத்தை முழுமையாக எதிர்க்கிறோம். ஏற்கெனவே, பல மாநிலங்களில் உள்ள அரசுகள் இந்த புதிய பென்சன் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். இதுபோல, தமிழகத்திலும் வரவேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத் தலைவர் இளங்கோவன் பேசும்போது, “புதிய பென்சன் திட்டத்தில் ஓய்வூதியம் பெறும்போது, ரூ.23 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.2,300 தான் பெற முடியும். புதிய பென்சன் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
தனியார்மயம், இந்திய ஏழை எளிய மக்களுக்கு ரயில் பயணத்தை எட்டாமல் செய்துவிடும். பயணச்சீட்டுக்கு கொடுக்கப்படும் மானியங்களை தனியார்மயம் ஒழித்துவிடும். எனவே, தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும்" என்றார்.
டிஆர்இயு தலைவர் சுகுமாறன், செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், பொதுச் செயலாளர் ஹரிலால் உள்பட பலர் பேசினர்.
|
சுயநினைவின்றி சென்னை சாலைகளில் சுற்றித் திரிந்த திருவாரூர் மூதாட்டி மீட்கப்பட்டு மகனிடம் ஒப்படைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 06:12:00 |
சென்னை: சுய நினைவின்றி சென்னையில் சுற்றித் திரிந்த திருவாரூர் மூதாட்டியை மீட்டு அவரது மகனிடம் போலீஸார் ஒப்படைத்தனர். சுய நினைவின்றி சாலையோரம் சுற்றித் திரிபவர்கள், ஆதரவற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், உடல் நலமின்றி தவிப்பவர்களை சென்னை காவல் துறையின் ‘காவல்கரங்கள்’ அமைப்பினர் மீட்டுசிகிச்சை அளித்து, குடும்பத்தினரு டன் சேர்த்து வைத்து வருகின்றனர். மேலும், உரிமை கோரப்படாத உடல்களை தன்னார்வலர்கள் உதவியுடன் நல்லடக்கமும் செய்து வருகின்றனர்.
காப்பகத்தில் பராமரிப்பு: இந்நிலையில், கடந்த 25-ம் தேதிஎண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலை பகுதியில் சுயநினைவின்றி, 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுற்றி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்கரங்கள் அமைப்பினர் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் தங்கவைத்து பராமரித்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் குறித்து தேடலில் இறங்கினர். இந்நிலையில், ‘மூதாட்டியைக் காணவில்லை’ என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது போலீஸாருக்குத் தெரியவந்தது. அதுகுறித்து விசாரித்தபோது, போலீஸாரால் மீட்கப்பட்ட மூதாட்டிதான் அவர் என்பது உறுதியானது.இதையடுத்து, அதில், குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர்திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பதும், அவர் மூதாட்டியின் மகன் என்பதும் தெரியவந்தது.
திருமண விழாவுக்கு வந்தவர்... தனது தாய் கனகவல்லி மற்றும் குடும்பத்தினருடன் சென்னை வடபழனி கோயிலில் தனது மைத்துனரின் திருமண விழாவுக்கு வந்ததாகவும், சென்னை தி.நகரில் உள்ள தனது உறவினரின் வீட்டில் கடந்த 20-ம் தேதி காலை அருகில்இருக்கும் கோயிலுக்கு செல்வதாகக் கூறி சென்ற தனது தாய், திரும்பி வரவில்லை என்றும் போலீஸாரிடம் நாகராஜன் தெரிவித்தார்.
இதையடுத்து, காணாமல்போன அவரது தாயை மீட்டு காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளதாக போலீஸார் அவரிடம்தெரிவித்தனர். இந்நிலையில்,நேற்று முன்தினம் சென்னை வந்த மகன் நாகராஜனிடம், அவரது தாய் கனகவல்லியை போலீஸார் ஒப்படைத்தனர்.
|
கிளாம்பாக்கத்தில் அமைச்சர் காலில் விழுந்து அழுத பெண்கள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 06:10:00 |
சென்னை: கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட்ட தென் மாவட்ட பேருந்துகளில் 80 சதவீதம் கிளாம்பாக்கத்திலிருந்தும், 20 சதவீதம் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் நேற்றுமுதல் (ஜன.30) இயங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 149, 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345ஆகிய எண்களை அணுகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றுஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடசென்னை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இனி மாதவரம் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி தென் மாவட்டங்களுக்கு செல்லலாம். வடசென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பகுதிக்கு வருவது கடினமாக இருப்பதாகக் கூறப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 135 நடை மேடைகள் ஒடுக்கப்பட்டுள்ளன. 77 நடைமேடைகளில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பெருங்களத்தூரில் போக்குவரத்து நெருக்கடி இருந்த பகுதியில்சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று எந்தெந்த இடங்களில் நெருக்கடிகள் உள்ளதென ஆய்வுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக முடிச்சூர் பகுதியில் கட்டிவரும் புதிய பேருந்து நிறுத்தம் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டபோது, சில பெண்கள் திடீரென அமைச்சர் காலில் விழுந்து அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கூறும்போது, ``நாங்கள் சுமார் 200 பேர் பெருங்களத்தூர் பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்தோம். இப்பொழுது பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டும்தான் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நாங்கள் செய்வது அறியாமல் தவிக்கின்றோம்.
எங்களுக்கு இங்கு கடை வழங்க கேட்டபோது, கடை ஒதுக்க மறுத்துவிட்டார்கள். அரசு எங்களுக்கு கடை ஒதுக்க முன் வர வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தனர். அப்போது அமைச்சர், ``உங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்'' என உறுதியளித்தார்.
|
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் சாலை மறியல்: 12 ஆயிரம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 06:02:00 |
சென்னை: பழைய ஒய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் 12 ஆயிரம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைதாகினர்.
பழைய ஒய்வூதியத்தை மீண்டும்அமல்படுத்துதல், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதன்படி ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.அன்பரசு, அ.மாயவன், கு.வெங்கடேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகம் முன்னர் மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை ஒட்டி முன்னெச்சரிக்கையாக டிபிஐ வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை, போலீஸார் கைது செய்து அருகே ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
முன்னதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நியாயமான கோரிக்கைகளைகூட செய்து தராத தமிழக அரசை கண்டித்து தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இனியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை எனில், மக்களவைத் தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவோம்.
போராட்டங்களுக்கு ஆதரவுகோரி அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளோம். அதன்பின் மாவட்ட அளவிலான வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு பிப்ரவரி 10-ம் தேதியும், ஒருநாள் அடை யாள வேலைநிறுத்த போராட்டம் பிப்ரவரி 15-ம் தேதியும் நடத்தப்படும். நிறைவாக பிப்ரவரி26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். இதில் எந்தவிதமான பின்வாங்குதலும் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 12 ஆயிரம் அரசு ஊழிர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது. அவர்களை நிபந்தனையின்றி விடுவிப்பதுடன், அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுதொடர் வேலைநிறுத்த போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
|
வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென்மாவட்ட பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 06:00:00 |
சென்னை: வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோயம்பேட்டில் இருந்து இயங்கிவந்த அரசு போக்குவரத்துக் கழகத்தின் 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 20 சதவீத பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருச்சிக்கு 18 நடைகள், சேலத்துக்கு 17, விருத்தாசலத்துக்கு 6, கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரத்துக்கு 16, கும்பகோணத்துக்கு 14, சிதம்பரத்துக்கு 5, நெய்வேலிக்கு 11, புதுச்சேரி வழியாக கடலூருக்கு 5, திண்டிவனத்துக்கு 10, செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 22, போளூர் வந்தவாசிக்கு 20 நடைகள் என 160 நடைகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து திருப்பதிக்கு 90 நடைகள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எனவே, வடசென்னை மக்கள் கிளாம்பாக்கம் சென்று மாறாமல் இங்கிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியும். இதனை மக்கள் பயன்படுத்த வேண்டும்.
பேருந்து முனையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டதால் அரசு பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை குறையவில்லை.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒப்பிடும்போது நடப்பாண்டு 2.40 லட்சம் பேர் அதிகமாகப் பயணித்துள்ளனர். வேலூர், ஆற்காடு, பெங்களூரு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், ஆந்திராவுக்குச் செல்லும் பேருந்துகள், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 20 சதவீத பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
|
ஜூன் 9-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: விண்ணப்பிக்க பிப். 28-ம் தேதி கடைசி நாளாகும் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 05:57:00 |
சென்னை: கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாளாகும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும்6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இந்த தொகுதியில் புதிதாக வனக்காப்பாளர், வனப்பாதுகாவலர் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை வன சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் அந்தபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில் வனக் காப்பாளர், வனப் பாதுகாவலர் பணிகளில் மட்டும் 1,177 இடங்கள் இந்தஅறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளன.
இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப்பதிவு நேற்று முதல் தொடங்கியது. விருப்பமுள்ள தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் (https://www.tnpsc.gov.in/)வழியாக பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 6-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து எழுத்துத் தேர்வு ஜூன்9-ம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கும்.
தேர்வானது தமிழ் தகுதித்தாள் 100, பொதுஅறிவு தாள் 100 என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தமிழ் தகுதித் தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக தேர்வர்கள் சிலர் கூறியதாவது: குரூப் 4 தொகுதியில் வனத்துறைபணியிடங்கள் சேர்க்கப்பட்டது வரவேற்கத்தக்க முடிவாகும். அதேநேரம் இந்த தேர்வு முடிவுகளை வெளியிட 6 மாத காலமாகும் என்பது அதிகமாகும். எனவே, விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், கடந்த 4 ஆண்டுகளில் (2020 முதல் 2023 வரை) 2022-ம் ஆண்டு மட்டுமே குரூப் 4 அறிவிப்பாணை வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. வனத்துறை, மகளிர் மேம்பாடு, பால்உற்பத்தியாளர் கழகம், தடவியல்என பல்வேறு துறைகளின் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் அடுத்த அறிவிப்பாணையில் பணியிடங்கள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஏமாற்றத்தையே தந்துள்ளது. எனவே பணியிட எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.
எந்த பணிக்கு எத்தனை இடம்? குரூப் 4 பதவிகளில் இடம் பெற்றுள்ள காலிப் பணியிடங்களின் விவரம் வருமாறு: கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்தர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளார்க்- 3, தனிச் செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, பால் பதிவாளர்- 15, வரவேற்பாளர்- 1, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்தஉதவியாளர்- 49, வனக் காப்பாளர், பாதுகாவலர்- 1,177 மற்றும் இளநிலை ஆய்வாளர்- 1. ஆகும்.
|
ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 05:53:00 |
சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யும் வகையில்உற்பத்தியாளர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: :
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்தவதற்குரிய அனைத்துவசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்தளபேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனை தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் ரூ.135.48 கோடி மதிப்பீட்டில்தயாரித்து வழங்க உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 26 பேருந்துகளும், சேலம் அரசுபோக்குவரத்துக் கழகத்துக்கு 16 பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 20 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு38 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 33 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 17 பேருந்துகள் என பகிர்ந்து வழங்கப்படவுள்ளன.
இவ்வாறு 150 புதிய தாழ்தள நகர பேருந்துகள் பொதுமக்களின் போக்குவரத்து சேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இந்த முயற்சிகளின் வாயிலாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் போக்குவரத்து சேவைகள் தமிழகத்தை முதன்மையான நிலைக்கு உயர்த்திடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
மநீம.வுக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை: தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 05:48:00 |
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்களவைத் தேர்தல் பணிக்கான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு வெளிநாடு சென்றதால் முன்னதாக சென்னையில் கட்சித் தலைமையகத்தில் துணைத் தலைவர்கள்மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோருடன் நேற்றுஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மக்களவைத்தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவையும் அவர் அமைத்தார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் நேற்று விடுத்த அறிக்கை: மக்களவைத் தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு பெருவெற்றியை ஈட்டுவதற்காக மக்கள்நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கிய தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், கட்சியின் துணைத் தலைவர்கள்ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, பொதுச்செயலாளர்ஆ.அருணாச்சலம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனது நேரடி மேற்பார்வையில் செயல்படும் குழுவுக்கு மக்களவைத் தேர்தல்தொடர்பான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் பிற குழுக்களை அமைப்பதற்கும் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்குகட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மக்களவைத் தேர்தலில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில்,டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது.
|
மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் | ஆளுநர், அமைச்சர்கள், தலைவர்கள் அஞ்சலி: அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 05:45:00 |
சென்னை: தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 77-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதைமுன்னிட்டு, எழும்பூர் அருங்காட்சி யகத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், கிண்டியில் உள்ளகாந்தி மண்டபத்தில் பள்ளிச் சிறார்களுடன் சேர்ந்து காந்தியடிகளின்உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இளம் கலைஞர்களின் பஜனை நிகழ்ச்சி யிலும் கலந்து கொண்டார்.
மேலும், அவர் தனது எக்ஸ் தளபதிவில், ‘காந்தியடிகளின் சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான, உலகளாவியஎதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும், வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் திகழும்.காந்தியடிகளின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சிமேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்டோர் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மதநல்லிணக்க உறுதிமொழி: மேலும், காந்தியடிகளின் நினைவு நாளை மத நல்லிணக்கநாளாக கடைபிடிக்க முதல்வர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந் தார். அதன்படி, திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திமுக தலைமை அலுவலகமானசென்னை அண்ணா அறிவாலயத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், காந்தியடிகளின் படத்துக்கு கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தி.நகரில்உள்ள அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயலாளர் நாகேந்திரநாத் ஓஜாவும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தம்: சென்னை போக்குவரத்துக் காவல்துறை சார்பில், சென்னைஅண்ணா சாலை, ஈவெரா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் நேற்று காலை11 மணிக்கு வாகன ஓட்டிகள் தங்கள்வாகனங்களை நிறுத்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
|
முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | செய்திப்பிரிவு | புதுடெல்லி | 2024-01-31 05:40:00 |
புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை பிப்.6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
கடந்த 2001-06 அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.
தாமாக முன்வந்து விசாரணை: இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதை எதிர்த்து பா.வளர்மதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு: இந்த வழக்கு நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், இந்த வழக்கில் வேறு சில முன்னேற்றம் உள்ளது. இதேபோன்ற மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் வரும் பிப்.5-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கையும் தள்ளி வைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது வளர்மதி தரப்பில், கீழமை நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட இந்த வழக்கை பல ஆண்டுகள் கழித்து மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதே தவறானது. மேலும் வரும் பிப்.5 முதல் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவுள்ளது. எனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தி, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
பதில் மனு அளிக்க வேண்டும்: அதையேற்க மறுத்த நீதிபதிகள்,இதே கோரிக்கையுடன் தமிழக அமைச்சர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வழக்கும் வேறு அமர்வில் வரும் பிப்.5 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவைப் பொருத்து இந்த வழக்கு வரும் பிப்.6 அன்று விசாரிக்கப்படும். இடைப்பட்ட காலத்தில் இருதரப்பும் பதில் மனுவும், விளக்க மனுக்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
|
நலவாரிய உறுப்பினர்களின் தரவுகள் மாயம்: நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 05:14:00 |
சென்னை: தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் தரவுகள் மாயமானது தொடர்பாக நடவடிக்கை கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், தரவுகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பணப்பயன்கள் நிறுத்தப்படாது என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின்கீழ், கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் 18 அமைப்புசாரா நலவாரியங்களில் 45 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
இந்நிலையில், இந்த நலவாரிய உறுப்பினர்களின் தரவுகள் அனைத்தும், கணினியில் அழிந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு, நேற்று சிஐடியு சார்பில் மாநில பொதுச் செயலாளர்ஜி.சுகுமாறன் தலைமையில், வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நலவாரிய ஆன்லைன் பதிவுகள் காணாமல் போனது குறித்து உடனே விசாரணை நடத்தி, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரிய ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்வதுடன், பணப்பயன்களை விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சர்வர் பிரச்சினை: இதையடுத்து, தொழிலாளர் நலவாரிய பிரிவு அதிகாரிகள், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சர்வர் பிரச்சினை ஏற்பட்டது தொடர்பாகவும், தகவல்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்தும் விளக்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியுபொதுச்செயலாளர் சுகுமாறன் பேசும்போது,‘‘ தகவல்கள் காணாமல்போனது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு விசாரணைக்குழு அமைத்து, அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து தொழிலாளர் துறை அதிகாரிகள் கூறியதாவது:
உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், சர்வரில் போதிய இடத்துக்காக சில மாற்றங்களை செய்தோம். அப்போது, இந்த பிரச்சினை ஏற்பட்டது. கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா நலவாரியங்களின் உறுப்பினர்கள் அனைவரின் தரவுகளும் உள்ளன.
ஆனால், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் கையெழுத்து பதிவுகள் மட்டும் கிடைக்கவில்லை. இவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பணப்பயன்கள் வழங்கும்போது தேவைப்படும் விவரங்களை உறுப்பினர்களிடம் பெற்றுக் கொள்வோம். உறுப்பினர்கள் புதுப்பிக்கும்போது அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படும்’’ என்றனர்.
|
கீழ்வெண்மணி நினைவுச் சின்னம் குறித்த ஆளுநரின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 05:12:00 |
சென்னை: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கை:
தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பற்றி கொஞ்சம்கூட அறியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். நினைவு சின்னத்தை கேலிக்குரிய அவமானம் என கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பும் ஆர்எஸ்எஸ்-ஐ பதவி சுகத்துக்காக ஆராதிக்கும் ரவிகளுக்கு, ஆதிக்கங்களுக்கு எதிராக சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான தியாகத்துக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டகம்யூனிஸ்ட்களையும், அத்தோடுதுணை நிற்கும் உழைப்பாளி மக்களையும் புரிந்து கொள்வதற்கான மனமும், திறமும் கிடையாது. உண்மையில் ஆர்.என்.ரவி போன்ற ஒருவர் அந்த பூமியில் கால் வைத்ததுதான் அந்த மகத்தான தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். அவரது செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஏதோ பிரதமர் வீடு கட்டும் திட்டம் சர்வரோக நிவாரணி போலவும், இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட குடிசைகளே இல்லாமல் மாற்றிவிட்டது போலவும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான சாம்பியன் செங்கொடி இயக்கம்தான். பல்வேறு தியாக வடுக்களை கொண்ட இயக்கம் செங்கொடி இயக்கம் என்பதை ஆளுநர் ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர் தன்னால் புரிந்து கொள்ள முடியாத பிரச்சினைகளை பற்றி பேசாமல் மவுனம் காப்பதே நல்லது.
|
‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று தொடக்கம் - கிராமத்தில் ஆட்சியர்கள், அதிகாரிகள் தங்கி குறைகளை தீர்ப்பார்கள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 05:09:00 |
சென்னை: அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதியதிட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதியதிட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டுநவம்பர் 23-ம் தேதி அறிவித்தார். இத்திட்டம் ஜனவரி 31-ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், மாதம்தோறும் 4-வது புதன்கிழமை மாவட்டஆட்சியர் தலைமையில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறும். முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், ஆட்சியரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும்மாவட்ட அளவிலான இதர உயர் அதிகாரிகள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணிவரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி,பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகளின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். ஆய்வின்போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், மக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக ஆட்சியர்கள் உரிய தீர்வு காண்பார்கள். அன்றைய தினம், மக்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற ஏதுவாக நடத்தப்படும் இந்த முகாமை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல, பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை துறை அலுவலர்கள் கனிவோடு பரிசீலித்து, தாமதம் இன்றி அவற்றை நிறைவேற்ற வழிவகை காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று காலை முதல் மாலைவரை ஆலோசனை நடத்தியதுடன், பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
|
குற்ற வழக்கில் 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக நீடிக்கிறார்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-31 04:57:00 |
சென்னை: குற்ற வழக்கில் கடந்த 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எந்தஅடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன் மனு குறித்து அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்து தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
‘இந்த வழக்கில் ஜாமீன் கோருவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறவில்லை’ என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியிருப்பது தவறு. ஆவணங்கள் திருத்தப்பட்டபோதே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறிவிட்டன. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.
நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம்: வழக்கின் புலன்விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அனைத்து ஆவணங்களும் அமலாக்கத் துறையிடம்தான் உள்ளன. வழக்கில் தேடப்பட்டு வரும் அசோக் குமார்தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க முடியாது. இதை பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்: கடைநிலை ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே, உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால், குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 230 நாட்களுக்கும் மேலாகசிறையில் இருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் மக்களுக்கு தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்என்பதை மறந்துவிட கூடாது. கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ளும் நீதிபதி, பதவியில் நீடிக்க முடியுமா. அதுபோலத்தான் இதுவும்.
வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம்: உச்ச நீதிமன்றத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி, ‘‘விருப்பம் உள்ளவர்கள் அவர் முன்பு ஆஜராகலாம்’’ என்றார். தீர்மானம் கொண்டு வரப்பட்ட நீதிபதியும் தொடர்ந்து பதவியில் நீடித்தார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்துவிட்டது. அமைச்சரை நீக்கும் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ்: இந்த வழக்கில் விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
|
இண்டியா கூட்டணியில் கடைசியில் திமுக மட்டுமே இருக்கும்: டிடிவி.தினகரன் கருத்து | செய்திப்பிரிவு | புதுக்கோட்டை | 2024-01-31 04:10:00 |
புதுக்கோட்டை: இண்டியா கூட்டணியில் கடைசியில் திமுக மட்டுமே இருக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஊழல், முறைகேடுகளுக்கு பெயரெடுத்த ஆட்சியை பழனிசாமி நடத்தியதால் தான் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழக ஆளுநரின் புண்ணியத்தால் அவர்கள் சிறை செல்லாமல் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியின் மீது இருந்த அதிருப்தி, கோபத்தில் தான், ஆட்சி அதிகாரத்தை மக்கள் திமுகவுக்கு கொடுத்தார்கள்.
ஆனால், அவர்களை விட திமுகவினர் மோசமாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆளும் திமுகவுக்கும், ஆண்ட அதிமுகவுக்கும் மாற்று சக்தியாக அமமுக இருக்கும் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். இண்டியா கூட்டணி என்பது தேர்தல் முரண்பாடு உள்ள கூட்டணி. மக்களவைத் தேர்தலுக்கு முன்பே அது உடைந்து விடும் என்று அனைவருக்கும் தெரிந்ததே. கடைசியில் அந்த கூட்டணியில் திமுக மட்டுமே இருக்கும். ஆளுநரின் செயல்பாடுகள் ஆளுநர் பதவிக்கே இழுக்காக உள்ளது.
அதை தவிர்த்து ஆளுநர், அவரது பதவிக்கு ஏற்றார்போல செயல்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை. ஆனால், என்னை பொறுத்தவரை இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்துவதால், பரிசீலிக்கிறேன் என்று கூறியுள்ளேன். இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
|
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு தடுப்பு மாத்திரை கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | செய்திப்பிரிவு | விருத்தாசலம் | 2024-01-31 04:08:00 |
விருத்தாசலம்: தமிழ்நாட்டில் உள்ள 10,999 துணைமற்றும் ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் மாரடைப்பு தடுப்பு மற்றும் பாம்புக் கடிக்கான மாத்திரைகள் கிடைக்கும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 29 துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.4.68 கோடி செலவில் கட்டப்பட்ட 29 கூடுதல் கட்டிடங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன் னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் நேற்று மங்க ளூரில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் 8,713 துணை சுகாதார நிலையங்களும், 2,286 ஆரம்பசுகாதார நிலையங்களும் உள்ளன. இந்த ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு 1,500 சுகாதார நிலையங்கள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கிவந்த நிலையில், அவை படிப்படியாக சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் நிலையை உருவாக்கி வருகிறோம். அந்த வகையில் தற் போது கடலூர் மாவட்டத்தில் ரூ.4.68கோடி செலவில் 29 துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக் கான கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதவிர ஓரங்கூரில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி விரைவில் தொடங்க உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல் பாடுகளும் மேம்படுத்தப்பட் டுள்ளது.
தற்போது கரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் சிலர் மாரடைப் பால் உயிரிழப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து அத்தகைய மாரடைப்பை தடுக்கும் நடவடிக்கையிலும் தற் போதைய அரசு முயற்சி மேற் கொண்டு, 14 மாத்திரைகள் அடங்கிய மாரடைப்பு தடுப்பு மாத் திரைகளை மருத்துவமனைகளில் இருப்பு வைத்துள்ளது. முதற்கட்ட மாக மாவட்ட மருத்துவமனைகளில் மட்டும் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. இந்த மருந்துகள் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை அறிய இன்று ( நேற்று ) பாலக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று திடீர் ஆய்வு செய்த போது, மாரடைப்பு அறிகுறி தென்பட்ட 6 பேர் அந்த மாத்திரையை வாங்கி பயனடைந்துள்ளனர்.
அதேபோல் மங்களூர் ஆரம்பசுகாதார நிலையத்திலும் 4 பேர்அந்த மாத்திரையை வாங்கி பயனடைந்துள்ளனர். இது தவிர ஊரகப் பகுதிகளில் விளை நிலங்களை ஒட்டி வாழும் விவசாயிகள் அவ்வப்போது பாம்புக் கடியில் பாதிக்கப்படுவதை அறிந்து அதற்கான மாத்திரைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திட்டக்குடி வட்டார மருத்துவ மனையில் ஏற்கெனவே இரு ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் பயன்பாட்டில் உள்ள நிலையில் கூடுத லாக 3 இயந்திரங்களும், சிடி ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் எக்ஸ் ரே இயந்திரம் பொருத்தப்படவுள்ளது” என்றார். அப்போது மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஹீரியம் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
|
உரிமைத் தொகை வழங்குவதில் மகளிரை திமுக அரசு ஏமாற்றி விட்டது: திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | ஒட்டன்சத்திரம் | 2024-01-31 04:06:00 |
ஒட்டன்சத்திரம்: உரிமைத் தொகை வழங்குவதில் மகளிரை திமுக அரசு ஏமாற்றி விட்டது என திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் பால சுப்பிரமணி தலைமையில் நடந்தது. மாவட்டப் பொருளாளர் பழனிவேல், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் கருப்பு சாமி, மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: எம்ஜிஆர் தனது கடின உழைப்பால் 3 முறை தமிழகத்தின் முதல்வராகி சிறந்த ஆட்சியை நடத்தியவர். திமுக 525 பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. மகளிர் உரிமைத் தொகை பெரும்பாலான பெண்களுக்கு கொடுக்கவே இல்லை. மகளிரை திமுக அரசு ஏமாற்றிவிட்டது, என்றார்.
|
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் | செய்திப்பிரிவு | மதுரை | 2024-01-31 04:04:00 |
மதுரை: மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் அக்கட்சியினரிடம் பேசினார்.
மதுரையில் பாஜக சார்பில் மோடி 3.0 நிகழ்வு நடைபெற்றது. இதில் ராம.சீனிவாசன் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும். மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார். விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. சிவகாசி ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லவும், சாத்தூரில் தீப்பெட்டி தொழிலாளர் வாழ்வாதாரத்தை காத்து, மீண்டும் அந்த தொழிலை மீட்டு கொடுத்துள்ளோம்.
பட்டாசு தொழிலுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட நேரத்தில், உச்ச நீதிமன்றம் வரை சென்று தடையை நீக்கினோம். வீரன் அழகு முத்துகோன் தபால் தலை வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கியது பாஜக விருதுநகரில் ரூ.2000 கோடியில் ஜவுளி பூங்கா கொண்டு வரப்பட்டுள்ளது. தேவேந்திரர் அரசாணை பெற்று தந்துள்ளோம். தமிழகத்துக்கு பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்கள் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் பாஜகவினர் எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை மாவட்டத் தலைவர்கள் மகா. சுசீந்திரன், ராஜசிம்மன், சசிக் குமார், ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் நாகராஜன், சமூக ஊடகப் பிரிவு மாநில துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத், மாநிலச் செயலாளர் விஷ்ணு பிரசாத், மதுரை கிழக்கு மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் செல்வ மாணிக்கம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
|
பண்டிகை, முகூர்த்தம் இல்லாததால் ஓசூர் மலர் சந்தையில் பூக்கள் விலை சரிவு: விவசாயிகள் வேதனை | கி.ஜெயகாந்தன் | ஓசூர் | 2024-01-31 04:02:00 |
ஓசூர்: முகூர்த்தம் மற்றும் பண்டிகை இல்லாத நிலையில் மகசூல் அதிகரிப்பால், ஓசூர் மலர் சந்தையில் பூக்கள் விலையும், விற்பனையும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஓசூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்தி, பட்டன் ரோஜா, செண்டு மல்லி உள்ளிட்ட மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மேலும், பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் விற்பனையை மையமாக கொண்டும் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் மலர்கள் ஓசூர் மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு விற்பனைக்குச் செல்லும்.
இதனால், ஓசூர் மலர் சந்தையில் வியாபாரம் பரபரப்பாக இருக்கும். தற்போது, பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் வருகை குறைந்து மலர் சந்தையில் வழக்கமான பரபரப்பின்றி நேற்று வெறிச் சோடி காணப்பட்டது. மேலும், பூக்கள் விற்பனையும், விலையும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சரிந்த பூக்களின் விலை: ஓசூர் மலர் சந்தையில் பொங்கல் பண்டிகையின் போது ஒரு கிலோ சாமந்தி ரூ.180-க்கு விற்பனையானது நேற்று ரூ.30 முதல் 50-க்கும் விற்பனையானது. இதேபோல மற்ற மலர்களின் விலையும் குறைந்துள்ளது. மற்ற பூக்களின் விலை ( அடைப்பு குறியில் பழைய விலை ) விவரம்: பட்டன் ரோஜா ரூ.20 ( ரூ140 ), சம்பங்கி ரூ.20 ( ரூ.140 ), செண்டுமல்லி ரூ.20 ( ரூ.60 ), குண்டு மல்லி ரூ.800-க்கும் ( ரூ.1,700 ) விற்பனையானது.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையின் போது பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால், கடந்தாண்டு பொங்கலை விடக் குறைவான விலைக் குத்தான் பூக்கள் விற்பனையானது. ஓசூர் மலர் சந்தைக்குச் தினசரி 200 டன் வரை மலர்கள் வந்த நிலையில், தற்போது, மகசூல் அதிகரிப்பால் 400 டன் வரை விற்பனைக்கு வருகிறது. முகூர்த்தம் மற்றும் பண்டிகை இல்லாததால், கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. மேலும், விலையும் குறைந்துள்ளது. இதனால், வருவாய் இழப்பைச் சமாளிக்க கிடைத்த விலைக்கு உள்ளூர் சில்லறை வியாபாரிகளிடம் பூக்களை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்: கோவை, திருப்பூர், உதகையில் ஏராளமானோர் கைது | செய்திப்பிரிவு | உதகை | 2024-01-31 04:00:00 |
கோவை / திருப்பூர் / உதகை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், உதகையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
‘ஜாக்டோ’, ‘ஜியோ’ ஊழியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் சாலமன் ராஜ், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ராதா கிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் கலைவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடை நிலை, முதுகலை, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். முடக்கப்பட்ட பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. சாலை மறியலில் பங்கேற்ற நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜெய சீலன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பரமேஸ்வரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் அண்ணாதுரை, சலீம், முருகேசன், ஜெயக்குமார், சுனில் குமார், முத்துக்குமார், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 82 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
|
மதுரை கலைஞர் நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம் - இனி வீட்டிற்கு புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம்! | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-01-30 22:00:00 |
மதுரை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
நத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.215 கோடியில் மிக பிரம்மாண்டமாக இந்த நூலகம் 6 தளங்களுடன் நான்கரை லட்சம் புத்தங்கங்களுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது. நவீன கட்டுமான தொழில்நுட்பத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் தானியங்கி டிஜிட்டல் நூலகமாக இந்த நூலகம் செயல்பட தொடங்கி இருக்கிறது.
அரிய நூல்கள் முதல் அண்மைக் கால எழுத்தாளர்கள் வரை எழுதிய நூல்கள் இங்கு உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆர்வமாக நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு உள்ளன. ஆனால் போதுமான நூலகர்கள் இல்லாததால் தற்போதுவரை கலைஞர் நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை.
அதனால், வாசகர்கள், நூலகத்தில் இருந்த புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நூலகத்திலேயே பல மணி நேரம் அமர்ந்து படிக்க முடியாத சூழல் இருந்ததால், வாசகர்கள் விரும்பிய புத்தகங்களை நுனிப்புல் மேயும் நிலையே ஏற்பட்டது. விரைவில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க நூலக நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கலைஞர் நூலகத்தில் இருந்து புத்தகங்களை வீட்டுக்கு கொண்டு சென்று படிப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை தற்போது தொடங்கி உள்ளது. தனி நபருக்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.250 மற்றும் ஆண்டு சந்தா ரூ.100 சேர்த்து ரூ.350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் உறுப்பினராக சேர்வோர் வீட்டுக்கு ஒரே நேரத்தில் 4 புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம். குடும்ப உறுப்பினர்களாக நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு பெற்றோர், குழந்தைகள் 2 பேருக்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.500 மற்றும் ஆண்டு சந்தாவாக ரூ.200 சேர்த்து மொத்தம் ரூ.700 செலுத்த வேண்டும். இவர்கள் ஒரே நேரத்தில் 5 புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம்.
மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேல்) உறுப்பினராக சேர விரும்புவோர் உறுப்பினர் கட்டணம் ரூ.100 மற்றும் ஆண்டு சந்தா ரூ.50 சேர்த்து ரூ.150 கட்டினால் போதும். இவர்கள் ஒரே நேரத்தில் 4 புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம். மாணவர்களுக்கு உறுப்பினர் கட்டணம் ரூ.150 மற்றும் ஆண்டு சந்தா ரூ.75 சேர்த்து ரூ.225 செலுத்தினால் ஒரே நேரத்தில் 5 புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.
உறுப்பினராக சேர விரும்புவோர் கலைஞர் நினைவு நூலக இணையதளத்தில் (https://www.kalaignarcentenarylibrary.org) விண்ணப்பங்களை நிரம்பி, 2 புகைப்படம், அரசு அங்கீகாரம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கலைஞர் நூலக நிர்வாகம், விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியுள்ளவர்களை கலைஞர் நூலக உறுப்பினராக சேர்க்க அங்கீகாரம் வழங்கும்.
|
கவனிப்பாரில்லா நிலையில் வைகை ஆறு - சோழவந்தானில் தெளிந்த நீரோடை; மதுரையில் கழிவு நீரோடை | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-01-30 21:51:00 |
மதுரை: தமிழகத்தில் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடக்கும் ஒரே நகரமாக மதுரை திகழ்கிறது. அதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மதுரை நகரத்தில் கடந்த காலங்களில் நீர்நிலைகள் நிரம்பி ஓடி, விவசாயம் செழித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மக்கள் கொண்டாடும் விழாக்களில் மீனாட்சியம்மன் கோயிலும், அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலும் இணைந்து வைகை ஆற்றில் கொண்டாடும் சித்திரைத் திருவிழா, புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று வைகை ஆற்றில் நீராடி செல்வதை நேர்த்திக் கடனாக கொண்டுள்ளனர். தல்லாக்குளம், ஆத்திக்குளம், கரிசல் குளம், மாடக்குளம், பீபீ குளம் என தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நீர் நிலைகளின் பெயருகளையே வைத்து நீருக்கு மரியாதையை செய்துள்ளார்கள் இந்த நகரவாசிகள்.
இப்படி பல சிறப்புகளை பெற்ற மதுரை நகரில் தற்போது மக்கள், மதுரையின் நீர்நிலைகளை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. வைகையில் வெள்ளம் வந்தபோது சிவனே, வந்திக் கிழவிக்கு உதவியதாக திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்ற பிட்டுக்கு மண் சுமந்த கதை மூலம் அறிய முடிகிறது. ஆனால், சோழவந்தான் வரையுள்ள வைகை ஆறு, மக்கள் நீராடும் அளவிற்கு தெள்ளத்தெளிவாக தண்ணீர் ஓடுகிறது. மதுரை நகருக்கு உள்ளேயுள்ள வைகை ஆறு மக்கள் கால் வைக்க சங்கப்படும் அளவிற்கு தூர்நாற்றம் வீசும் கழிவு நீரோடையாக மாறியுள்ளது.
ஆகாய தாமரைச்செடிகள், கருவேலம் மரங்கள், ஆக்கிரமிப்புகள் என வைகை ஆறு அழிந்து கொண்டிருந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல் பாலங்கள், சாலைகள் அமைப்பதற்கும், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் போன்ற தொழில் வளர்ச்சிகளை பெருக்குவதற்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிச் செல்லும் நிலை மாறி கொசுக்களை உற்பத்தி செய்யுமிடமாகவும், மனிதர்களின் கழிவுகளை, மருத்துவக் கழிவுகளையும் கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது. இறைச்சிக் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் வைகை துர்நாற்றமுடன் நோய் பரப்பும் இடமாக மாறிவிட்டது.
நகர்பகுதியில் அரசும், தனியாரும் கட்டிடங்கள் கட்டுவதற்கு போட்டிப்போட்டு மணல் அள்ளிய இடங்கள் இன்று அபாயகரமான பள்ளப்பகுதிகளாக உள்ளன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றின் கரைகளை சுருங்கி சாலை அமைத்து, நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டன. நகர்பகுதியில் பெய்யும் மழையும், வைகை ஆற்றில் வராமல் ஆற்றின் இரு கரைகளிலம் காம்பவுண்ட் சுவரும் கட்டிவிட்டனர். அதனால், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் மதுரை ஆற்றில் நீரோட்டம் குறைந்து காணப்படுகிறது. அதனால், வைகை ஆற்றில் இருந்து, மதுரையின் 28 கண்மாய்களுக்கு சென்ற தண்ணீர் செல்வவும் குறைந்து தற்போது அந்த நீர்நிலைகள் கழிநீர் தேங்குமிடமாகவும், வறட்சிக்கும் இலக்காகிவிட்டதாக நேற்று வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘‘வைகை ஆறு மட்டுமில்லாது, அதன் கிளை நதிகளும் ஆக்கிரமிப்புகுள்ளாகி, ஆற்றிற்கு நீர் வரத்து குறைந்தது. வைகை ஆற்றின் பிரதான கிளை நதியான கிருதுமால் நதி தற்போது கிருதுமால் கால்வாயாக மாறிவிட்டது. தேனி மாவட்டத்தில் தொடங்கும் வைகை ஆறு, சங்கிலித் தொடராக அதன் வழித்தடங்களில் உள்ள கண்மாய்களை நிரப்பி கடைசியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்களை நிரப்புகிறது. கடலுக்கு வைகை ஆறு நீர் செல்வது இல்லை. அப்படி முழுமையாக பயன்படும் வைகை நீர் தற்போது கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் எழுப்பியும், வழித்தடங்கள் பல இடங்களில் சாலைகள் போட்டு ஆக்கிரமிப்பு செய்ததால் தற்போது வைகை ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. இந்த கண்மாய்களும் மழை பொழிந்து நிரம்பினால் வேறு தடங்களில் நீர் செல்ல வாய்ப்பில்லை. அதனால், வைகை ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்களின் ஆக்கிரமிப்பை அகற்றில் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும்’’ என்றார்.
|
“ஒரே நாடு, ஒரே தேர்தலால் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே சாதகம்” - அன்புமணி ராமதாஸ் கருத்து | எஸ். நீலவண்ணன் | விழுப்புரம் | 2024-01-30 21:23:00 |
விழுப்புரம்: "ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது, "சென்னையில் பொதுவெளியில் பசுமை பொது பூங்கா வேண்டும். இப்போதுள்ள செம்மொழி பூங்கா குறைந்த பரப்பளவு கொண்டது. தொல்காப்பியர் பூங்காவை முழுமையாக பயன்படுத்த முடியாது. கோயம்பேடு காய்கறி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது. கோயம்பேடு மாநகர பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்ற உள்ளதாக செய்திகள் வருகிறது. வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் மிகப்பெரிய அளவில் பொது பூங்கா உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் வைக்ககூடாது. பூங்கா மட்டுமே வரவேண்டும்.
வேறு ஏதாவது அறிவித்தால் கடுமையான போராட்டம் நடத்துவோம். வேளாண் பட்டதாரிகளுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்கப்படவில்லை என்பது உண்மைதான். வேலைவாய்ப்புகளை உருவாக்க நிறைய வாய்ப்பு உள்ளது. எங்களின் நிழல் நிதி அறிக்கையை படித்தாலே செயல்படுத்தலாம். என்.எல்.சி தமிழகத்திற்கு தேவையே இல்லை. அதனை நிரந்தரமாக மூட வேண்டும். மின் தேவையை விட உற்பத்தி 2 மடங்கு உள்ளது. அப்புறம் ஏன் நெய்வேலியில் மின் உற்பத்தி செய்யவேண்டும். சிப்காட்டை விலை நிலங்களில் அமைக்காமல் தரிசு நிலங்களில் அமைக்கவேண்டும்.
மக்களவை தேர்தல் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது குறித்து என் கருத்து என்னவென்றால் 1952, 57, 62, 67 வரை முழுமையாக ஆட்சிகள் நடைபெற்றது. அதன்பின் பாதியில் 356 பிரிவை பயன்படுத்தி ஆட்சி கலைக்கப்பட்டது. எங்கள் கேள்விகள், அச்சங்கள் என்னவென்றால், பெரும்பான்மை இல்லாத நிலையில் மத்திய அரசு ஒரே ஆண்டில் டிஸ்மிஸ் ஆனால் அடுத்த 4 ஆண்டுகள் என்ன செய்வது?. 4 ஆண்டுகள் கழித்து தேர்தல் வருமா? அல்லது அப்போதே தேர்தல் வருமா?. மத்திய அரசு டிஸ்மிஸ் ஆனது போல மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா?. மாநில அரசு கலைக்கப்பட்டால் மீண்டும் தேர்தல் வந்தால் இடைப்பட்ட காலகட்டத்திற்கு மட்டும்தான் தேர்வு செய்யப்பட்ட அரசு பதவி வகிக்குமா?. இது போன்ற பல சந்தேகங்கள் உள்ளது.
அதே நேரம் மத்திய அரசுக்கு எங்களின் யோசனைகளை சொல்லியுள்ளோம். உலகின் 80 நாடுகளில் முன்மொழிவு பிரதிநிதித்துவம் (Proportional representation) உள்ளது. அதில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். கட்சிகளுக்குதான் வாக்களிப்பார்கள். இதனால் கட்சி தாவமுடியாது. எம்.எல்.ஏக்களை கட்சிதான் முடிவு செய்யும். அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும். இந்த யோசனையை பல ஆண்டுகளுக்கு முன்பே பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதனை பாமக மட்டுமே சொல்லிவருகிறது. ஒரே நேரத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தல் வைத்தால் மத்திய பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மாநில பிரச்சினைகள் பின் தள்ளப்படும்.
இதனால் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். மத்தியில் தேர்தல் வைத்தால் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மாநிலங்களுக்கு தேர்தல் வைக்கவேண்டும். இப்படி வைத்தால் தொடர்ந்து இரண்டரை ஆண்டுக்குகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும். மேகதாது அணைக்கட்டு பணியை கர்நாடக அரசு தீவிரபடுத்தி இருப்பது உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. இது நடக்கபோவது இல்லை. தேர்தலுக்காக இப்படி நடத்துகிறார்கள். தமிழ்நாடு அனுமதி இல்லாமல் காவிரி படுகையில் எவ்வித கட்டுமானப்பணிகளையும் செய்யமுடியாது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கௌரவத்தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
|
கீழடியில் பத்தாம் கட்ட ஆய்வு விரைவில் தொடங்கும்: உயர் நீதிமன்றத்தில் அரசு பிளீடர் தகவல் | கி.மகாராஜன் | மதுரை | 2024-01-30 20:59:00 |
மதுரை: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணிகளை விரைவில் தொடங்க அரசு நடவடக்கை எடுத்து வருகிறது என உயர் நீதிமன்றத்தில் அரசு பிளீடர் தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி, உயர் நீதிமன்ற கிளையில் 2016-ல் தாக்கல் செய்த மனு: வைகை ஆற்றங்கரை நாகரிகம் குறித்து கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் சங்ககால நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து மத்திய அரசிடம் அனுமதி பெற்று கீழடியில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இங்கு அகழாய்வு பணியை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.
கீழடியில் நடைபெற்ற 2ம்-கட்ட அகழாய்வில் 2200 ஆண்டு பழமையான 5000-த்துக்கும் அதிகமான பழங்கால பொருட்கள் எடுக்கப்பட்டன. இங்கு நன்கு கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் இயங்கி வந்ததற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கீழடியில் 3-ம் கட்ட ஆய்வுப்பணியை தொடங்கும் நிலையில் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஜோத்பூரில் தொல்லியல் பொருட்கள் பாதுகாவலரான ஸ்ரீராமன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், 15 ஆண்டுகளாக தொல்லியல் பொருட்களை பாதுகாக்கும் பணியை மட்டுமே செய்து வந்துள்ளார். இவருக்கு அகழாய்வு பணியில் போதிய அனுபவம் இல்லை. அகழாய்வு பணியில் முக்கியமான பணி பழங்கால பொருட்களின் உண்மையான காலத்தை கண்டறிவது (ரிப்போர்ட் ரைட்டிங்) ஆகும். இதில் தற்போதைய கண்காணிப்பாளருக்கு அனுபவம் கிடையாது. அகழாய்வு பணியில் சிறப்பாக செயல்பட்ட கண்காணிப்பாளர் இடமாறுதல் செய்யப்பட்டிருப்பது வரலாற்றை மறைக்கும் முயற்சி என கருதப்படுகிறது. எனவே அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வு பணியை தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கனிமொழி மதி வாதிடுகையில், கீழடியில் சிறிய அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தவில்லை. மேலும் முதல் 3-ம் கட்ட சோதனையின் போது கிடைக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அருங்காட்சியகத்தில் வைக்கவில்லை. தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு குறித்த 1 முதல் 3 கட்ட அறிக்கையை ஒன்றிய தொல்லியல் துறை வெளியிடப்படவில்லை என்றார்.
அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், கீழடியில் 9 கட்ட அகழாய்வு நிறைவடைந்து, 10-ம் கட்ட அகழாய்வு பணியை விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அகழாய்வு பணிகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. அகழாய்வில் கிடைத்த பொருட்களின் வரலாற்று தொடர்பான விவரங்களை மத்திய அரசு தான் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மத்திய தொல்லியல் துறை வழக்கறிஞர் வாதிடுகையில், தற்போது கீழடி அகழாய்வு பணிகளை முழுக்க முழுக்க மாநில அரசே மேற்கொண்டு வருகிறது. முதல் 3 கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கீழடி அகழாய்வு பணிகள் மேற்கொள்வது குறித்தும், மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு பணிகள், அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
|
‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு | கி.மகாராஜன் | மதுரை | 2024-01-30 20:40:00 |
மதுரை: ‘கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில் நுழைவாயில், கொடிமரம் மற்றும் முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும்’ என பழநி முருகன் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழநி மலைக்கோயில் பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘பழநி மலைக் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு பழநி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவர் பர்தா அணிந்தவர்களை அழைத்து வந்து விஞ்ச் வழியாக மலைக்கு செல்ல டிக்கெட் வாங்க வந்தார். பர்தா அணிந்திருந்ததை பார்த்து, அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதால் கோயில் ஊழியர் டிக்கெட் வழங்க மறுத்தார். அவருடன் சாகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்தப் பலகை சில மணி நேரத்தில் அகற்றப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சில இளைஞர்கள் மாமிச உணவு சாப்பிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இந்து கோயிலில் தொழுகை நடத்திய இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்து கோயில்கள் வழிபாட்டுக்குரிய இடமாகும். இந்துக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மசூதி அருகே தொழுகை நடைபெறும் நேரமாக இருந்தாலும், இல்விட்டாலும் பேண்ட், வாத்தியம் இசைப்பதில்லை. இந்த முறை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். எனவே பழநி கோயில் மற்றும் உப கோயில்களில் இந்து அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, பழநி கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக்கூடாது என மீண்டும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் வாதிடுகையில், “பெரும்பாலான அறநிலையத் துறை கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகைகள் இருக்கின்றன. ஆனால், சிலர் ஊடக வெளிச்சம் பெறும் நோக்கத்திலும், கோயில் வளாகத்திற்குள் நுழைந்து பிரச்சினை செய்கின்றனர்.
பழநி கோயிலுக்கு பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். பழநி கோயில் சுற்றுலா தலம் அல்ல. இந்துக்களின் புனித இடமாகும். இங்கு இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்றனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், “முருகனை இந்துக்கள் மட்டும் வழிபடுவதில்லை. முருகன் மீது நம்பிக்கை வைத்து பிற மதத்தினரை பின்பற்றுபவர்களும் கோயிலுக்கு வருகின்றனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28-ல் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாப்பது மதச்சார்பற்ற அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் கடமை. கோயில் நுழைவு அனுமதி சட்டத்தில், கோயில் என்றால் கருவறை எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அங்குதான் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. விஞ்ச் நிலையம், ரோப் கார் நிலையங்கள் கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ளன. இங்கு அறிவிப்பு பலகை வைப்பதால் எந்த பலனும் ஏற்படாது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் தமிழகத்தில் எந்தக் கோயில்களுக்கும் சென்று அந்தந்த கோயில்களின் மரபுகளை பின்பற்றி தரிசனம் செய்யலாம். கொடிமரம் வரை கோயில் வளாகத்தில் யாரும் நுழைவதை தடுக்க முடியாது.
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் செல்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலில் ரூ.50 கட்டணம் செலுத்தி வெளிநாட்டினர் செல்கின்றனர். அவர்கள் கொடி மரம் வரை அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை பிற கோயில்களிலும் உள்ளது. கோயிலில் முக்கியத்துவம் அறியும் வகையில் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் உட்பட அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என்றார்.
இதேபோல், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சார்பில், இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: ‘கோயில் நுழைவு அனுமதி சட்டம், அறநிலையத் துறை சட்டத்தில் இந்து கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதியில்லை என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் பட்டியலில் துணை கோயில்கள், மண்டபங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு செல்ல இந்துக்கள் மட்டுமே உரிமைப்பட்டவர்கள். கோயில் நுழைவு அனுமதிச் சட்டம், இந்துக்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும், இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்பது. இதனால் கோயில் நுழைவு அனுமதிச் சட்டம் மற்றும் அறநிலையத் துறை சட்டத்தை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
இந்து கடவுள்கள், இந்து மதம், விழாக்களில் சம்பந்தப்படாதவர்களை இந்துக்களின் வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கக் கூடாது. கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள், மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15-ஐ மீறுவதாகது. மாறாக இந்தக் கட்டுப்பாடுகள் பல்வேறு மதங்களுக்கு இடையிலான மதநல்லிணக்கத்தையும், சமூகத்தில் அமைதியையும் நிலை நாட்டும்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13, 15 குறிப்பாக 15(1)-ல் கூறப்பட்டுள்ள மற்ற மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் கோயில் சேர்க்கப்படவில்லை. கோயில் சேர்க்கப்படாத நிலையில் கோயில்களை சுற்றுலா தலமாக கருத முடியாது. இந்து கடவுள், இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து வருபவர்களை கோயிலுக்கு அனுமதிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை வைத்துள்ள பிற மதத்தினரை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? இந்து அல்லாதவர்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படும் அதிகாரிகள், இந்துக்களின் நம்பிக்கை குறித்து கவலைப்படுவதில்லை. இந்து மதம், இந்து கோயில்களின் பழக்க, வழக்கம், பாரம்பரியத்தை பாதுகாக்கவே அறநிலையத் துறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்துக்களின் மத உணர்வுகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28 வரை ஒவ்வொரும் தங்களின் மதத்தை பின்பற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிறர் மத நம்பிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. பாரத தேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பிற மதத்தினர் இடையிலான மதநல்லிணக்கம் எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. தஞ்சை கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சம்பவங்கள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் தலையிடுவதாகும். இந்துக்கள் தங்களின் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும் உரிமை உண்டு. இந்து கோயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், அறநிலையத் துறை அதிகாரிகள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் தவறிவிட்டனர்.
பழநி மலைப்பகுதி முழுவதும் இந்துக்களின் புனித இடமாகும். இந்துக்கள் அல்லாதவர்களை மலையேற அனுமதித்து மலையேறிய பிறகு அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என தெரியவந்து தடுக்கப்பட்டால் அவர்கள் விரக்தி அடைவர். ஏன் முன்கூட்டியே சொல்வதில்லையா என கேள்வி எழுப்புவர். இதுபோன்ற நிலைய தவிர்க்க ரோப் கார் நிலையம், விஞ்ச் நிலையம் என அனைத்து இடங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு புலகை வைக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அமல்படுத்த வேண்டும்.
எனவே, இந்துக்கள் அல்லாதவர்கள் கொடிமரத்துக்கு அப்பால் அனுமதிக்கமாட்டார்கள் என கோயில் நுழைவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், இந்துக்கள் அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. இந்துக்கள் அல்லாதவர்கள் யாராவது கோயிலுக்கு வந்தால் அவர்களிடம் இந்து கடவுள் மீதும், இந்து மதம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கோயில் மரபுகளை பின்பற்றுவதாக உறுதிமொழி கடிதம் பெற வேண்டும். அதன் பிறகு அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உறுதியளித்து கோயிலுக்கு செல்லும் இந்து அல்லாதவர்கள் குறித்து கோயில்களில் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் ஆகம விதிகள், பழக்க, வழக்கங்களை தீவிரமாக பின்பற்ற வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
|
மதுரை எய்ம்ஸ்க்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்: மக்களவை தேர்தலால் வேகமெடுக்கும் கட்டுமானப் பணி? | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-01-30 19:36:00 |
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இன்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஜனவரி 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார். மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக கூறிய அவர், 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கவிட்ட நிலையில் தற்போது வரை கட்டுமானப் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக, திமுக கட்சிகள், எய்ம்ஸ் விவகாரத்தை அரசியல் செய்யும்நிலையில், கட்டுமானப்பணியை தொடங்குவதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
அதனால், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இரண்டேகால் வருடங்கள் கழித்துதான், ஒருவழியாக கடன் ஒப்பந்தம் மார்ச் 2021ல் செய்யப்பட்டது. கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 எம்பிக்கள் வைத்துள்ள திமுக கூட்டணி கட்சிகளும், மதுரை எய்ம்ஸ்க்காக மிகப்பெரிய பேராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மதுரை எம்.பி. சு.வெங்கடசேன் மட்டுமே அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி இன்று எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 221 ஏக்கரில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர்கள் கல்லூரி, பணியாளர்கள் குடியிருப்பு, மாணவ மாணவியருக்கான விடுதிகள் அமைக்கப்படுவதற்கு எய்ம்ஸ் நிர்வாகம் இந்த அனுமதியை கோரியுள்ளது. மக்களவைத் தேர்தல் தற்பாது தீவிரமெடுக்கும்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடைய மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மத்திய பாஜக அரசு தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துமனை கட்டுமானப் பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கும் மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவக் கல்லூரி மாணவர்களை, மதுரை தோப்பூர் அல்லது திருமங்கலம் பகுதியில் உள்ள வாடகை கட்டிடங்களுக்கு மாற்றுவதற்கு எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் மதுரையில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடுத்தக்கட்டமாக டெண்டர் விடப்பட்டுள்ள எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி இப்பணிகளை விரைவுப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காகவே கட்டுமானப் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தற்போது எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது தெரிய வந்துள்ளது.
|
அரசு பேருந்துகளில் காட்சி பொருளான முதலுதவி சிகிச்சை பெட்டி | இரா.தினேஷ்குமார் | திருவண்ணாமலை | 2024-01-30 18:30:00 |
திருவண்ணாமலை: தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முதலுதவி சிகிச்சை பெட்டி என்பது காட்சி பொருளாக உள்ளது. தமிழகத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 இடங்களை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன. இதில், தினசரி 5 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போக்கு வரத்து விதியில் கூறப்பட்டுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் “முதலுதவி பெட்டி” இடம் பெற்றிருக்க வேண்டும். அப்பெட்டியில் சுமார் ரூ.200 மதிப்பிலான டிஞ்சர், பிளாஸ்டர், பொட்டாசியம் பெர்மாங்கனேட், பஞ்சு உள்ளிட்ட முதலுதவி பொருட்கள் இருக்க வேண்டும்.
பயணிகளுக்கு காயம் ஏற்பட்டால், இப்பொருட்களை பயன்படுத்தி முதலுதவி அளிக்கலாம். பேருந்தில் பயணிக்கும்போது அசம்பாவித நிகழ்வு ஏற்பட்டால், பேருந்தில் இருந்து உடனடியாக வெளியேற அவசர வழி கதவு இருக்க வேண்டும்.
மேலும், ஓட்டுநரின் இருக்கை அருகே அவசர வழி கண்ணாடியை உடைக்க சுத்தி இருக்க வேண்டும். இதில், மிக முக்கியமாக தீ தடுப்பான் கருவி இருப்பது அவசியமாகும்.
ஆனால், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முதலுதவி பெட்டி என்பது காட்சி பொருளாக உள்ளன. இப்பெட்டி, மருந்துகள் இல்லாமல் காலியாக கிடக்கிறது. ஒரு சில பேருந்து களில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் துணிகளை வைக்க பயன்படுத்தப்படுகிறது. தீ தடுப்பான் கருவி இல்லை.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை பாதுகாப்பதில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலட்சியம் தொடர்கிறது. பழைய பேருந்துகளின் நிலை படுமோசமாக உள்ளது. தகரங்கள் பெயர்ந்து பயணிகளை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. பயணிகள் வேறு வழியின்றி பயணிக்கின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறும்போது, “தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முதலுதவி பெட்டி, தீ தடுப்பான் கருவி போன்றவை கிடையாது. இவைகள் அனைத்தும் இருக்க வேண்டும். இதனை, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளும் கண்டு கொள்வது கிடையாது.
பயணத்தில் ஏதாவது அசம்பாவித நேரிட்டால், முதலுதவி அளிக்க முடியவில்லை. ரத்தம் சொட்ட, சொட்ட பயணம் செய்ய வேண்டும். பயணிகள் நலனில் அக்கறை கொண்டு, அரசு பேருந்துகளில் முதலுதவி பெட்டியில் மருந்துகளை தயார் நிலையில் வைத்திக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் முன் வர வேண்டும். இதே நிலைதான் தனியார் பேருந்துகளிலும் உள்ளன. இதனையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றனர்.
தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முதலுதவி பெட்டி என்பது காட்சி பொருளாக உள்ளன. இப்பெட்டி, மருந்துகள் இல்லாமல் காலியாக கிடக்கிறது. ஒரு சில பேருந்துகளில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் துணிகளை வைக்க பயன்படுத்தப்படுகிறது. தீ தடுப்பான் கருவி இல்லை. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை பாதுகாப்பதில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலட்சியம் தொடர்கிறது.
|
தமிழகத்தில் ஜன.31 முதல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் - முகாம் நடப்பது எப்படி? | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 17:55:00 |
சென்னை: அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்தி, முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில்,உங்கள் தொகுதியில் முதலமைச்சர்;இல்லம் தேடி கல்வி திட்டம்;மக்களைத் தேடி மருத்துவம்;நான் முதல்வன்;இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48;புதுமைப் பெண்;முதலமைச்சரின் காலை உணவு;கலைஞர் மகளிர் உரிமைத் தொகை;கள ஆய்வில் முதலமைச்சர்; மற்றும்மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மக்களுக்காகத் தீட்டப்பட்டு, அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலைநிமிரச் செய்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும், நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் நாளை (ஜன.31) புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சித் தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 மணி முதல், மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் அன்றையதினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை அலுவலர்கள் பொது மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ஆயிரக்கணக்கான ஏரிகள் மீட்பு, 50 லட்சம் பேருக்கு வேலை... - பாமக வேளாண் நிழல் பட்ஜெட் 110 அம்சங்கள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 17:39:00 |
சென்னை: ஏரிகள் மீட்பு; தொழிற்பேட்டைகளுக்கு நிலம் கையகப்படுத்த தடை; என்எல்சி விரிவாக்கத்திற்கு தடை; நெல்கொள்முதல் 80 விழுக்காடாக உயர்வு; கொள்முதல் நிலையங்களில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேமிக்க வசதி என்பன உள்ளிட்ட 110 முக்கிய அம்சங்கள் அடங்கிய பாமக 2024-25 வேளாண் நிழல் பட்ஜெட் இன்று வெளியிடப்பட்டது.
இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2024-2025ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் இன்று திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் வெளியிட்டார். இதில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி, எம்.பி., கவுரவத் தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, பா.ம.க. அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் பேராசிரியர் தீரன், தமிழ்நாடு உழவர் பேரியக்கத் தலைவர் கோ. ஆலயமணி, செயலாளர் இல. வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாமக 2024-25 நிழல் வேளாண் நிதிநிலையில் இடம்பெற்றுள்ள 110 முக்கிய அம்சங்கள்:
1. 2024-25ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினேழாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.80,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.60,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.
2. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
3. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.20,000 கோடி செலவிடப்படும்.
4. பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.27,500 கோடி செலவிடப்படும்.
நீர்ப்பாசனத் திட்ட சிறப்பாண்டு & பாசன திட்டங்களை செயல்படுத்த தனி ஆணையம்
5. தமிழ்நாட்டில் பாசனப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் நீர்ப்பாசனத் திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்துவதற்காக 2024-25ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் திட்ட சிறப்பாண்டாக அறிவிக்கப்படுகிறது.
6. நீர்ப்பாசனத் திட்டங்களை புத்தெழுச்சியுடன் செயல்படுத்த தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
7. நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களும் 10 ஆண்டுகளில் முடிக்கப்படும்.
சாகுபடி பரப்பு 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்
8. தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்.
9. தமிழ்நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளில் 15,000 ஏரிகள் காணாமல் போய்விட்டன. 27,000 ஏரிகளின் கொள்ளளவு ஆக்கிரமிப்பால் குறைந்துவிட்டது. காணாமல்போன ஏரிகளில் சாத்தியமானவற்றை மீட்டெடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும் ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.
வேளாண் திட்டங்களுக்கு நிதித் திரட்ட சிறப்பு வரி
10. வேளாண் பாசனத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பெட்ரோலியப் பொருட்களின் மதிப்புக் கூட்டுவரி மீது 10%, முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மீது 20%, மோட்டார் வாகன வரிகள் மீது 30% சிறப்புத் தீர்வை வசூலிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நிதி திரட்டப்படும்.
11. தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,600இல் இருந்து 4,000ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்படும்.
12. ஒவ்வொரு நெல்கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5,000 மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும்.
வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாடு
13. வேளாண்மை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆகியவற்றில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க முதலீடு திரட்டும் நோக்குடன், வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாடு 06.04.2025ஆம் தேதி தஞ்சாவூரில் நடத்தப்படும்.
14. வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி திரட்டப்படும்.
250 வேளாண் புத்தொழில் நிறுவனங்கள்
15. வேளாண் தொழிலில் இலாபத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன், வேளாண் உற்பத்தியைப் பெருக்குதல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப் படுத்துதல் ஆகிய 3 துறை சார்ந்த 250 வேளாண் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்கப்படும்.
16. சிறப்பாக செயல்படும் வேளாண் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம்.
17. மிகச் சிறப்பாக செயல்படும் 250 புத்தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் அரசின் சார்பில் ரூ.1 கோடி வரை முதலீடு.
18. மாநில வேளாண் கொள்கை உருவாக்கி வெளியிடப்படும்.
மாவட்டத் தலைநகரங்களில் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சிகள்
19. வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சந்தை வாய்ப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து உழவர்களுக்கு விளக்கும் வகையில், ஆண்டுதோறும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சிகள் 3 நாட்களுக்கு நடத்தப்படும்.
20. காவிரி & தருமபுரி உபரிநீர்த் திட்டம், அரியலூர்: சோழர் பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கு வரும் ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்படும்.
21. தாமிரபரணி & நம்பியாறு இணைப்புத் திட்டம், அத்திக்கடவு & அவிநாசித் திட்டம், கொள்ளிடம் தடுப்பணைத் திட்டம் ஆகிய முப்பெரும் திட்டங்களுக்கு ஜூலையில் திறப்புவிழா நடத்தப்படும்.
22. மதுராந்தகம் ஏரியை ரூ.120 கோடியில் தூர்வாரி சீரமைக்கும் திட்டம் ஜூலையில் நிறைவடையும்.
72 இலட்சம் டன் நெல் கொள்முதல் மற்றும் ரூ.3,600 கோடி ஊக்கத்தொகை
23. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் சுமார் 33% மட்டுமே தற்போது அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை படிப்படியாக 80 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
24. 2023-24இல் நெல்கொள்முதல் 40 லட்சம் டன்னுக்கும் கீழ் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், 2024-25ஆம் ஆண்டில் 72 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.
25. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,800 விலை வழங்கப்படும்.
26. 2024-25 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.5,000ஆக நிர்ணயிக்கப்படும்.
27. அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்கும்.
28. நியாய விலைக்கடைகளில் நாட்டு சர்க்கரை வழங்கப்படும். ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படும்.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் திரும்பப் பெறப்படும்
29. தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டமசோதா திரும்பப்பெறப்படும்.
30. திருவள்ளூர் வட்டத்தில் 1,703 ஏக்கர் பரப்பில் அறிவு நகரம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும்.
31. கிழக்குக் கடற்கரை சாலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்கப்படும்.
32. கோவளம் பகுதியில் செயல்படுத்தப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் ரத்து செய்யப்படும்.
காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் 9 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
33. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும். இதற்கான சட்டத்திருத்தம் நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.
34. என்.எல்.சி. 3ஆவது சுரங்கம் திட்டம், முதல் இரு சுரங்கங்களை விரிவாக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும். இதற்காக 25,000 ஏக்கர் நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது.
35. 66,000 ஏக்கர் பரப்பளவில் வீராணம் & பாளையங்கோட்டை சுரங்கத் திட்டம், சேத்தியாத்தோப்பு சுரங்கத் திட்டம் ஆகியவற்றுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும்.
36. அரியலூர் மாவட்டத்தில் புதிய சிமெண்ட் ஆலைகள் அமைக்க தடை விதிக்கப்படும்.
37. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அனைத்து வகை தொழில் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும்.
38. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. இதன் மூலம் தமிழ்நாடு ஹைட்ரோ கார்பன் திட்டம் இல்லாத மாநிலமாக திகழும்.
சிப்காட் தொழில்பேட்டைகளுக்கு நிலங்களை கையகப்படுத்த தடை
39. செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும். அரசு நிலங்களில் இந்த விரிவாக்கம் செய்யப்படும்.
40. சிப்காட் உள்ளிட்ட எந்த தொழில் திட்டத்திற்கும் வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாது.
உழவர் மூலதன மானியம்: பயனாளிகள் எண்ணிக்கை 60 லட்சமாக்கப்படும்
41. மத்திய அரசால் வழங்கப்படும் உழவர் மூலதன மானிய திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 37.81 லட்சமாக குறைந்துவிட்டது. இதை 60 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
42. தமிழ்நாட்டில் சிறு/குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000 மூலதன மானியம் வழங்கப்படும். மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு ரூ.16,000, இரு ஏக்கருக்கு ரூ.26,000, 3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்போருக்கு ரூ.36,000 என்ற அளவில் மானியம் கிடைக்கும்.
43. காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
44. அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
சிறுதானிய விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள்
45. உழவர்கள் தங்களின் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவதற்கான தொழில் நுட்பம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
46. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தித் தரப்படும்.
47. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறுதானிய உணவகங்கள் அமைக்கப்படும். அவற்றில் சிறுதானிய உணவுப் பொருட்களுடன் சிறுதானியங்களும் விற்கப்படும்.
50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
48. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
49. கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்த ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்குவார்கள். இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
50. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக, தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
51. கிராமப்புற சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், வான்கோழிகள், மீன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். பட்டதாரி இளைஞர் குழுக்கள் மூலம் முக்கிய நகரங்களிலும், சாலையோரங்களிலும் நவீன உணவகங்கள் அமைக்கப்பட்டு, சுயஉதவிக் குழுக்கள் வளர்க்கும் ஆடுகள், கோழிகள், மீன்கள் ஆகியவை சுவையாக சமைத்து வழங்கப்படும். இதனால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வறட்சி பாதிப்பு & ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு
52. தமிழ்நாட்டில் வறட்சியால் முழுமையாக பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000, ஓரளவு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
53. தமிழ்நாடு முழுவதும் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால், சம்பா சாகுபடி செய்யாத உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 வீதம் அதிகபட்சமாக ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்.
54. இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிரந்தர தீர்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
55. இத்திட்டத்தின்படி, கரும்புக்கு ரூ.1.2 லட்சம், நிலக்கடலைக்கு ரூ.33,000, பிற பணப் பயிர்களுக்கு ரூ.1.25 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
56. இயற்கை சீற்றத்தால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை முழுமையாக ஈடுகட்ட பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசே நேரடியாக செயல்படுத்தும்.
57. பயிர்க்காப்பீட்டுக்கான பிரீமியத்தில் 2% மட்டும் உழவர்கள் செலுத்தினால் போதுமானது. மீதத் தொகையை மத்திய அரசும், மாநில அரசும் சரிபாதியாக பகிர்ந்து செலுத்தும்.
தோட்டக்கலை பரப்பை அதிகரிக்க சிறப்புத் திட்டம்
58. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக காய்கறி பயிரிடப்படும் பரப்பில் 3.36%, பழங்கள் பயிரிடப்படும் பரப்பில் 4.59% மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பரப்பை 50% அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் உழவர்களின் வருமானம் உயரும்.
59. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண்மை தவிர்த்த பிற தொழில் திட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும்.
ரூ.10,000 கோடியில் நொய்யல் ஆறு மீட்புத் திட்டம்
60. கொங்கு மண்டலத்தை வளம் கொழிக்கச் செய்த நொய்யல் ஆற்றை மாசு மற்றும் கழிவுகள் கலப்பதில் இருந்து மீட்டெடுப்பதற்காக ரூ.10,000 கோடியில் நொய்யல் ஆறு மீட்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
61. நொய்யல் ஆறு மீட்புத் திட்டம் மொத்தம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும். 2024-25ல் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம்
62. கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் என்றாலும் கூட, அத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்றுதான். இத்திட்டம் குறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த 4 முறை நடத்தப்பட்ட கலந்தாய்வுகள் வெற்றிபெறவில்லை.
63. கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். இதற்காக தமிழக அமைச்சர்கள் குழு தில்லி சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தும்.
காவிரி & குண்டாறு இணைப்பு: வழக்கை மீறி பணிகள் தொடரும்
64. கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறட்சியைப் போக்குவதற்கான காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
65. இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் காவிரி & குண்டாறு இணைப்புப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
மணல் குவாரிகள் மூடப்படும்
66. தமிழ்நாட்டில் 25 இடங்களில் மணல் குவாரிகளும், 40க்கும் மேற்பட்ட இடங்களில் மாட்டு வண்டி மணற்குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. உழவுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மணல் குவாரிகள் அனைத்தும் வரும் ஜூலை மாதத்திற்குள் மூடப்படும்.
67. மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமும் எம்&சாண்ட் ஆலைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் தமிழ்நாட்டில் கட்டுமானத் தேவைகளுக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
பனை மரங்கள் மூலம் ஏக்கருக்கு ரூ.16 இலட்சம் வருவாய் & சிறப்புத் திட்டம்
68. தமிழ்நாட்டில் தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அழித்துவிட்டு, பனை மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை தமிழக அரசே அதன் சொந்த செலவில் அகற்றித்தரும். காலி நிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
69. ஒரு ஏக்கர் நிலத்தில் 400 பனை மரக்கன்றுகளை நட்டு, அது வளர்ந்த பின் ஒரு மரத்திற்கு ரூ.4,000 வீதம் ஒரு ஏக்கருக்கு இன்றைய மதிப்பில் ரூ.16 இலட்சம் வரை வருவாய் ஈட்டமுடியும்.
கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.5,000 கோடி மறுமுதலீடு
70. வேளாண் சார்ந்த கடன்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றை வழங்குவதற்கு வசதியாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5,000 கோடி மறுமுதலீடு வழங்கப்படும்.
71. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி கிடையாது. மாறாக, 10% மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் பெறும் விவசாயி, ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.
72. 2024&25ஆம் ஆண்டில் ரூ.16,000 கோடி அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கும்.
தோட்டக்கலை பல்கலைக் கழகம்
73. சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் புதிய தோட்டக்கலை பல்கலைக் கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.
74. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்புப் பண்ணையில் புதிய பட்டுப்புழு வளர்ப்புக் கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.
75. தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் விளையும் மானாவாரி தக்காளி மற்றும் வாழை ரகங்களை மேம்படுத்தி புதிய ரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவற்றால் ஈடுபட மேச்சேரியில் மானாவாரி பயிர்களுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
வேளாண் கல்வி மற்றும் 3 புதிய பல்கலைக் கழகங்கள்
76. தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.
திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி
77. நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளுடன் இணைந்து, அப்பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உழவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவும்.
78. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எண்ணெய்வித்து ஆராய்ச்சி மையத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும். இது வடமாவட்டங்களில் அமைக்கப்படும் 2வது வேளாண் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கும்.
79. தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.
வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம்
80. விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.
81. வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தில் மாநில நிதித்துறை, வேளாண்துறை, உணவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஊழவர் சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.
82. பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு இலாபம் சேர்த்து, கொள்முதல் விலையை விளைபொருள் விலைநிர்ணய ஆணையம் தீர்மானிக்கும்.
வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம்
83. தமிழ்நாட்டில் உள்ள உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவுதானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
84. இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
85. வேளாண் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன், ஆண்டுக்கு 6% வேளாண் வளர்ச்சியை எட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குழு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.
86. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150ஆக உயர்த்தப்படும். வேளாண் பணிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.
87. வேளாண் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் சிறிய பங்கு வழங்கப்படும். மீதமுள்ள ஊதியத்தை அரசு வழங்கும்.
ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம்
88. தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.20,000 கோடி மதிப்பில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பாசனப் பரப்பை 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கும் நோக்குடன் கீழ்க்கண்ட பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
89. பாலாறு பாசனத் திட்டம்: பாலாற்றில் வீணாகும் நீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, பாலூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அடுத்தகட்டமாக காஞ்சிபுரம் வட்டம் பெரும்பாக்கம்; உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல்; செங்கல்பட்டு வட்டம் ஆலப்பாக்கம்; மதுராந்தகம் வட்டம் எல்.என்.புரம் என, நான்கு இடங்களில் தடுப்பணை கட்டப்படும். இத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.
90. தாமிரபரணி & நம்பியாறு இணைப்புத் திட்டம்: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறு நதிகளை இணைப்பதன் மூலம், வீணாகும் தண்ணீரை தேக்கி ராதாபுரம், நாங்கு நேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு சென்று பாசனத்திற்காக பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
91. தென்பெண்ணை & துரிஞ்சலாறு இணைப்பு: நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாக திகழ்வது துரிஞ்சலாறு ஆகும். துரிஞ்சலாறு ஒரு காட்டாறு என்பதால் மழைக்காலத்தில் மட்டும் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். இது நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதல்ல. நந்தன் கால்வாய் திட்டம் முழுமையான பயனளிக்க வேண்டுமானால், தென்பெண்ணையாற்றுடன் நந்தன் கால்வாயை இணைப்பது தான் சிறந்த வழியாகும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
2 புதிய அமைச்சகங்கள்
92. வேளாண் துறை 3ஆகப் பிரிக்கப்பட்டு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை ஆகிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
93. வேளாண்மை சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் முதலமைச்சர் தலைமையில் வேளாண் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்படும். இதில் வேளாண்மை சார்ந்த 7 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள்.
94. வட்டம் மற்றும் மாவட்ட அளவில் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அந்த கூட்டமைப்பின் தலைமைக் குழு அன்றாடம் அந்த வட்டத்தில் அறுவடையாகும் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும். அந்த கூட்டமைப்பு மூலமாகவே விற்பனைகள் செயல்படுத்தப்படும்.
95. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும். நகரங்களில் இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பதற்கு தனி அங்காடிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.
இலவச பேருந்து வசதி
96. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும்.
97. உழவர்கள் தாங்கள் விளைவித்தப் பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக, இரவு 8 மணிக்குப் பிறகு அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.
98. தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
99. நாட்டுக் கோழிகள், ஆடுகள், வான் கோழிகள் போன்றவை கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் மூலம் வளர்க்கப்பட்டு பட்டதாரி இளைஞர் குழுக்கள் மற்றும் கூட்டுறவுத் துறை பங்களிப்புடன் முக்கிய நகரங்கள், சாலையோர உணவகங்கள் அமைக்கப்பட்டு கிராமங்களில் ஒரே இடத்தில் அனைத்தும் சமைக்கப்பட்டு கூட்டுறவு முறை உணவகங்களுக்கு ஒரே ருசியில் வழங்கப்படும்.
நவீன மாட்டுப்பண்ணை
100. சாலையோரங்களில் கூட்டுறவு உணவகங்கள் மூலம் தரமான உணவு, மலிவான விலையில் வழங்கப்படுவதால், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோர் தரமற்ற, சுகாதாரமற்ற, சுவையற்ற உணவுகளை அதிக விலைகொடுத்து உண்ணும் அவலநிலை மாறும்.
101. புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்புச் சத்து குறைந்த இறைச்சியான முயல் கறியை பிரபலப்படுத்தி, அதிக கொழுப்புச் சத்து மிகுந்த ஆடு, மாடு இறைச்சியின் பயன்பாடு குறைக்கப்படும்
102. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவீன மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கப்படும். உழவர்கள் தாங்கள் விரும்பும் மாடுகள் எண்ணிக்கையில் வாங்கி மாட்டுப் பண்ணைகளில் ஒப்படைத்து விட்டால், அவர்களே 1000 மாடுகளை நவீன தொழில்நுட்பத்துடன் வளர்த்து அதில் கிடைக்கும் பாலினை உள்நாட்டுத் தேவைக்கு போக மீதமுள்ளதை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் அதிக வருவாய் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
103. உழவர்களின் நிலங்களில் அவர்களின் நில அளவுக்கு ஏற்றாற்போல் தனியார் பங்களிப்பு மற்றும் அரசு மானியத்துடன் குட்டைகள் தோண்டப்பட்டு, மீன் வளர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
லாபம் தரும் தொழிலாக வேளாண்மை
104. தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
105. வருவாய் வாய்ப்புகளை விரிவாக்க வேளாண்மையை மறுவரையறை செய்தல்: விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, கடலோரப்பயிர் வளர்ப்பு, பால்பொருள் உற்பத்தி, கோழி வளர்ப்பு ஆகியவற்றை செய்தல், தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல், மதிப்பு கூட்டு பணிகளை செய்தல் ஆகியவற்றின் மூலம் வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல்.
106. வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல்: நவீன தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல், அறிவியல் அடிப்படையிலான பண்ணை மேலாண்மை ஆகியவற்றின் மூலம் அதிக விளைச்சல், சிறந்த தரம், தகுதியான விலை ஆகியவற்றுக்கு வழிகோலும் வகையில், வேளாண்மையை ஒரு தொழில்வடிவமாக்குவதே இந்த கொள்கையின் நோக்கம் ஆகும்.
107. தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரு நிறுவனங்கள் நிலம் குவிப்பதைத் தடுப்பது, நிலங்களை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள், சீரமைக்கப்பட வேண்டிய பகுதிகள், நிலைத்த ஆற்றல் வேளாண்மை செயல்பாட்டுக்கான பகுதிகள், தொழில்துறை பயன்பாடு மற்றும் வேளாண்மை சாராத பயன்பாட்டுக்கான பகுதிகள் என பிரித்தல், இவற்றில் கடைசி பகுதி தவிர மீதமுள்ள அனைத்துப் பகுதிகளையும் விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.
உணவு தன்னிறைவு
108. உணவு தன்னிறைவு: உபரி விளைச்சலை இழப்பாக மாறாமல் தடுத்தல், விலை மாற்றங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு தானியத்தின் விலைகள் நியாயமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவையே உணவு தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான உத்திகளாக இருக்கும்.
109. ஊரக பொருளாதார மறுமலர்ச்சிக்கான மும்முனைத் திட்டம்: சிறப்பு வேளாண்&பொருளாதார மண்டலங்களை அமைத்தல், கைவினைஞர்களின் தொழிற்பட்டறைத் தொகுப்புகளை அமைத்தல், ஊரகத் தகவல் தொடர்பு முன்முயற்சிகள் ஆகியவையே வளர்ச்சிக்கான மும்முனை திட்டங்கள்.
110. வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 80 தலைப்புகளில் 262 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் மூன்றாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும்; நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பாம.கவின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.
|
‘230 நாட்களாக சிறையில் இருந்தபடியே அமைச்சராக செந்தில் பாலாஜி...’ - ஐகோர்ட் கேள்வியும் அரசு தரப்பு பதிலும் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-01-30 17:00:00 |
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா? என்பதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாக கருதுவதாக மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "வழக்கின் புலன் விசாரணை முடிந்துவிட்டது. ஆவணங்கள் அமலாக்கத் துறை வசம் உள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் எனக்கூறி ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது" என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் 230 நாட்களுக்கு மேல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு, அவர் அமைச்சராக நீடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது கண்டன தீர்மானம் வந்தபோது, அப்போதைய தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் அவர் முன் ஆஜராகலாம் என தலைமை நீதிபதி கூறினார். தொடர்ந்து நீதிபதியாகவும் நீடித்தார். மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது" என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
|
யுஜிசி நியமனங்களில் போதிய ஆட்கள் இல்லையெனில் இடஒதுக்கீடு ரத்தா? - வைகோ கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 16:27:00 |
சென்னை: யுஜிசி நியமனங்களின்போது எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவுகளில் தகுதியான ஆட்கள் அல்லது போதுமான ஆட்கள் இல்லையெனில் பொதுப்பிரிவுக்கு மாற்றிட இடஒதுக்கீட்டை ரத்து செய்யலாம் என்று சமூக நீதிக் கோட்பாட்டை நீர்த்துப் போகும் வகையில் புதிய வரைவு பரிந்துரை செய்துள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்புவது குறித்த வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு (UGC-University Grants Commission) வெளியிட்டிருக்கிறது. அதில், உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் குரூப் ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளின் பணியிடங்களை இட ஒதுக்கீடு முறையில் நிரப்புவதற்கு பொதுவான தடை இருப்பதாகவும், இந்தக் காலிப் பணியிடங்களை பொதுநலன் கருதி தொடர அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பும் போது, அந்தப் பணியிடத்தை நிரப்ப போதுமான விண்ணப்பங்களோ, தகுதியான ஆட்களோ கிடைக்காத பட்சத்தில், அந்தப் பணியிடத்திற்கான இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ரத்து செய்யலாம் என சமூகநீதிக் கோட்பாட்டையே நீர்த்துப் போகும் வகையில் பரிந்துரைத்து இருக்கிறது. அதாவது, ''ஓ.பி.சி., எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கிய இடங்களை நிரப்ப போதுமான ஆட்கள் கிடைக்கவில்லையெனில், அந்த இடங்களை பொதுப்பிரிவுக்கு மாற்றி அதில் தகுதியானவர்களை கொண்டு நிரப்பலாம்!'' என தெரிவித்திருப்பதுதான் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
யூ.ஜி.சியின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது. இன்று, ஒன்றிய அரசின் 45 பல்கலைக்கழகங்களில் தோராயமாக 7,000 பேராசிரியர் பணியிடங்களில், 3,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 7.1 விழுக்காடு தலித், 1.6 விழுக்காடு பழங்குடியினர் மற்றும் 4.5 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசிய பாஜக-ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன.
இதனால் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இட ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வரும் சதிகளை முறியடிக்க அரசியல் கட்சிகளும், சமூக நீதி இயக்கங்களும் போராடுவோம் என்று அறிவித்த உடன் ஒன்றிய பாஜக அரசு பின்வாங்கி இருக்கிறது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகமும், யுஜிசியும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட மாட்டாது என்று மழுப்பலான அறிக்கையை வெளியிட்டுள்ளன.
ஏற்கெனவே, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி, சமூக நீதிக் கோட்பாட்டையே சிதைக்கின்ற வகையில் அதைச் செயல்படுத்தி இருக்கிறது பாஜக அரசு. அதன் நீட்சியாகவே யுஜிசி மூலம் ஆழம் பார்ப்பதற்கு இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு, நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பின் வாங்கி இருக்கிறது. இதன் மூலம் பாஜக அரசின் நாடகம் அம்பலம் ஆகிவிட்டது. சமூக நீதியைச் சாய்க்கத் தொடர்ந்து முனைந்து வரும் பாஜக அரசை வீழ்த்தினால்தான் போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
|
திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்க நிதி முறைகேடு புகாரில் 8 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-01-30 15:46:00 |
சென்னை: திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்க முறைகேடு புகார் தொடர்பாக 2016-ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக திநகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி, கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸார் விசாரணையை முடிக்கவில்லை எனக்கூறி ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, காவல்துறை வழக்கறிஞர் டிசம்பர் 12-ம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான சிசிடிவி காட்சிளை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த இளவரசு தரப்பு வழக்கறிஞர், "டிசம்பர் 13-ம் தேதிதான்அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததார். டிசம்பர் 12-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் படப்பிடிப்பில் இருந்தார். காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள சிசிடிவி காட்சிகள் போலியானவை" எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார்? என்பதற்கான மொபைல் லொகேஷன் விவரங்களையும், சிடிஆர் என்று சொல்லக்கூடிய மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதன்படி, காவல்துறை சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை ஆய்வு செய்த நீதிமன்றம், இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரானதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம். டிச.12-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதை கூறி மன்னிப்பு கோரினால், அதனை ஏற்க தயார். இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இளவரசு தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு தொடர்பாக, 2016-ம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை ஏற்க முடியாது. அனைத்து வழக்குகளிலும் காவல்துறை மெத்தனமாகவே நடந்த கொள்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் செயல் கண்டனத்துக்குரியது. சங்க நிதியை முறைகேடு செய்ததாக தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, சாதாரண மனிதர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதுபோன்ற பல வழக்குகளில் காவல்துறை தாமதமாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்கிறது. எனவே, சங்க முறைகேடு தொடர்பாக 2016-ல் கொடுக்கப்பட்ட புகார் மீது 8 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் பிப்ரவரி 5-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
|
வானிலை முன்னறிவிப்பு | தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 15:35:00 |
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 30.01.2024 தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 30.01.2024 தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.
31.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 01.02.2024 மற்றும் 02.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 03.02.2024 முதல் 05.02.2024 வரை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: 30.01.2024 மற்றும் 31.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
|
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சாட்சியம் அளிக்க ஆஜராகாத இபிஎஸ் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-01-30 14:41:00 |
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எட்பபாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால் இன்று இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படவில்லை. அத்துடன் பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துக்களை நீக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவர் இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை.
|
“தமிழகத்தில் தொழில் தொடங்க திறன்மிக்க மனிதவளம், உயர் சலுகைகள் அளிக்கிறோம்” - ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் உறுதி | செய்திப்பிரிவு | மேட்ரிட் | 2024-01-30 13:49:00 |
மேட்ரிட்: தமிழகத்தில் தொழில் தொடங்குங்கள். அதற்கேற்ற சூழலையும், திறன்மிக்க மனிதவளம், உயர் சலுகைகளை அளிக்கிறோம் என்று ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரபூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது என்று ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல் ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்துக்கு மேலும் பல புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அரசுமுறை பயணமாக சென்னையில் இருந்து கடந்த 27-ம் தேதி இரவு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், 28-ம் தேதி மாலை ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் சென்றார். நேற்று (29.01.24) அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் குறித்து எடுத்துரைத்தார்.
மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஸ்பெயின் நாட்டின் தலைநகரான 'மேட்ரிட்' நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல்முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிக முக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன்.
எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.
கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின். ஸ்பெயினை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. அழகான நிலப்பரப்பும், துடிப்பான கலாச்சாரமும் இணையப் பெற்று, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் நாடு விளங்குகிறது.
பழம்பெரும் வரலாறும் பாரம்பரியமும் பெற்ற இந்த நாடு போன்றே, வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வந்து உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.
ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருக்கிறது. காளை அடக்குதல் விளையாட்டு, ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது. எங்கள் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரத்தின் சின்னமாக, உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே தனியாக ஒரு ஸ்டேடியம் கட்டி இருக்கிறோம். வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் வரும்போது அதனைப் பார்க்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. எட்டு 'ஃபார்ச்சூன் 500' நிறுவனங்கள் மற்றும் 20 'ஃபார்ச்சூன் 2000' நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6-ஆவது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.
கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கிடீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்தப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன். தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். கடந்த ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன.
மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். 30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.
மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன.
130க்கும் மேற்பட்ட “ஃபார்ச்சூன் 500” நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது.
இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.
|
“மகாத்மா காந்தியின் அகிம்சை, எளிமை, சத்தியம் ஆகியன பாரதத்தின் ஆன்மா” - தமிழக ஆளுநர் புகழஞ்சலி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 12:55:00 |
சென்னை: மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று (ஜன.30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில், "மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். அவருடைய அகிம்சை, எளிமை, சத்தியம் ஆகியன பாரதத்தின் ஆன்மா” என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.30), சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதையடுத்து ஆளுநர் ரவி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
|
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் காலி இடத்தை லூலூ மால் அமைக்க தரப்போவதாக வதந்தி: அரசு விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 07:08:00 |
சென்னை: சர்வதேச வணிக நிறுவனமான லூலூ மால் அமைக்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் காலி இடத்தை தரப்போவதாக தகவல் பரவியது. இதை மறுத்து தமிழக அரசு வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லூலூ மால் அமைக்க தமிழக அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். இதை உண்மை என நம்பி அரசியல் கட்சியினர் சிலரும், தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக வீட்டுவசதித் துறை செயலர் சி.சமயமூர்த்தி அளித்த விளக்கத்தில் இந்த தகவல் முற்றிலும் தவறானது. சித்தரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். எனவே ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச்செயலாகும். இவ்வாறு அரசுக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி அறிக்கை
இதனிடையே பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலம், அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட உள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியாருக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பு 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தை பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13,200 கோடி. அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ள ரூ.3,500 கோடியைவிட இது 4 மடங்கு அதிகம். இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களின் நிலத்தை தனியாரிடம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது. மாறாக, அந்த நிலத்தை பூங்காவாக மாற்ற வேண்டும்.
சென்னை பெருநகரில் அவ்வளவு பெரிய பூங்காக்கள் இல்லை. பெரிய பூங்காவான செம்மொழி பூங்கா வெறும் 20 ஏக்கரிலும், அண்ணா நகர் கோபுர பூங்கா 15 ஏக்கரிலும் மட்டுமே அமைந்துள்ளன. அடையாறு தொல்காப்பிய பூங்கா 358 ஏக்கரில் இருந்தாலும் அது மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கானது அல்ல. பனகல் பூங்கா, நேரு பூங்கா, திரு.வி.க. பூங்கா, மே தின பூங்கா போன்ற பல பூங்காக்கள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.
அதனால், சென்னையின் பசுமை போர்வை பரப்பு பெருமளவில் குறைந்துவிட்ட நிலையில், அதை ஈடுகட்ட புதிய பூங்காக்களை உருவாக்குவது அவசியம். அதற்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மிகச்சிறந்த தேர்வாகும். உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கான உடற்பயிற்சி செய்யும் இடங்களாகவும், உயிர்வாழ தேவையான ஆக்சிஜனை வழங்கும் ஆலைகளாகவும் திகழ்கின்றன.
சென்னை போன்ற பெருநகரங்களில் நச்சு வாயுக்களை உள்ளிழுத்து, ஆக்சிஜனை வழங்க அதிக பூங்காக்கள் உருவாக்க வேண்டியது கட்டாயம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
அமைச்சர் விளக்கம்: அன்புமணி புகார் குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயம்பேடு பேருந்து நிலையத்தை எந்த பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்றே முடிவெடுக்காத நிலையில், துபாயில் உள்ள ஒரு ஷேக்கை பிடித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. அந்த இடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு எந்த வகையில் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வு செய்ய தனியார் கலந்தாலோசகரிடம் பணி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் அறிக்கை அளித்த பிறகு, மக்களின் கருத்துகளை கேட்டு, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மக்களின் பயன்பாட்டுக்கு எது உகந்தது என முதல்வர் முடிவெடுப்பார். கட்டுக்கதைகளை ஒரு கட்சியை நிர்வகிக்கும் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
|
பிப். 3, 4 தேதிகளில் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தை: அடுத்த வாரத்துக்குள் இறுதி செய்து பட்டியலை வெளியிட திட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 06:41:00 |
சென்னை: அடுத்த வாரத்துக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பிப். 3, 4 தேதிகளில் மதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகள் முதல் கட்ட பேச்சுவார்த்தையை கடந்த ஜன.28-ம் தேதி முடித்துவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக வரும் பிப்.9-ம் தேதி பேச திட்டமிட்டிருந்தன.
இந்நிலையில், நாளை ஜன.31-ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. மறுநாள் பிப்.1-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இக்கூட்டத்தொடரில், திமுக தொகுதி பங்கீட்டுக்குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டியுள்ளதால், வரும் பிப்.2-ம் தேதி வரை பேச்சுவார்த்தைக்கு யாரும் அழைக்கப்படவில்லை. பிப்.3-ம் தேதிக்குப்பின் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பிப்.3-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியார் கொண்ட குழு திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுகிறது. மறுநாள் பிப்.4-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடனும், அன்று மாலை மதிமுகவுடனும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச திமுக திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, இந்தமுறையும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிகவுக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் இம்முறை திமுகவில் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு வரும் பிப்.7-ம் தேதி சென்னை திரும்புகிறார். தொடர்ந்து பிப்.9-ம் தேதி அடுத்தகட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேசுகிறது. அன்றே அனைத்து தொகுதி பேச்சுவார்த்தையையும் முடித்துக் கொண்டு, தொகுதி பட்டியலை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாமகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. பாமகவின் விருப்பத்தை அறிந்து அதன்பேரில் பேசவும் திமுக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
|
தென் மாவட்ட பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து புறப்படும்; கோயம்பேட்டில் இருந்து இயங்காது: அமைச்சர் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 06:29:00 |
சென்னை: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ கடந்த டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
புதிய முனையம் திறந்ததில் இருந்தே, ‘இங்கு இணைப்பு பேருந்து வசதி இல்லை. வடசென்னைக்கு செல்ல வேண்டுமானால் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது’ என்று பயணிகள் புகார் கூறிவருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வரும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் ஜனவரி 30-ம் தேதி (இன்று) முதல் கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். அதன்பிறகு, பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்.
திண்டிவனம் வழியாக திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர், புதுச்சேரி செல்லும் பேருந்துகள், செஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், வந்தவாசி வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் புறப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது.
மேற்கண்ட வகையில் பேருந்து இயக்கம் மாற்றப்படுவதால், பயணிகள் வசதிக்காக, விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும்போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து கிளாம்பாக்கம் வந்தடையும். பின்னர், கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
மாநகரப் பேருந்தில் நவீன கையடக்க மின்னணு டிக்கெட் கருவி: சோதனை முயற்சி தொடக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 06:25:00 |
சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்தில் அதிநவீன கையடக்க மின்னணு டிக்கெட் கருவி 2 மாதங்களில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பணிமனைகளில் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். இவர்களுக்கு பயணச் சீட்டு வழங்கும் வகையில், மின்னணு பயணச்சீட்டு கருவிகள் 16 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமல்படுத்தப்பட்டன.
இதன் பின்னர், 2011-ம் ஆண்டில் அதி நவீன பயணச்சீட்டு கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்க அரசு திட்டமிட்டது. இத்திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, சுமார் 30 ஆயிரம் கருவிகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்டன.
எனினும், புதிதாக வாங்கப்பட்ட கருவிகளில் பயணச்சீட்டு கொடுக்கும் நேரம் 4 நொடிகள் கூடுதலாவது, 8 மணி நேரம் மட்டுமே பேட்டரி நீடிப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இவை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, சரி செய்யப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக கருவிகள் அனைத்தும் திருப்பி வாங்கப்பட்டு, வழக்கமான பயணச்சீட்டு நடைமுறையே தற்போது பெரும்பாலான பேருந்துகளில் அமலில் உள்ளது.
இந்நிலையில் மீண்டும் கருவிமூலம் பயணச்சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதையொட்டி, என்சிஎம்சி எனப்படும் தேசிய பொது போக்குவரத்து அட்டையை பிரபலப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு 38 ஆயிரம் கருவிகள் வரை வழங்க தயாராக உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, குரோம்பேட்டை, தாம்பரம், உள்ளிட்ட பணிமனைகளில் சோதனை அடிப்படையில் பயணச்சீட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் யுபிஐ, என்சிஎம்சி, கிரெடிட்கார்டு உள்ளிட்ட வகைகளில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி இடம் பெற்றுள்ளது. படிப்படியாக பிற பணிமனைகள், போக்குவரத்து கழகங்களுக்கு கருவிகளை வழங்கி திட்டத்தை விரிவுபடுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், என்சிஎம்சி அட்டை மூலம் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்கான திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணிகளும் வேகமெடுக்கும் என தெரிகிறது.
|
மெட்ரோ வாகன நிறுத்தத்தில் காலி இடங்கள் நிலவரம்: செல்போன் செயலி மூலம் பார்க்கும் வசதி தொடக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 06:20:00 |
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களில் காலி இடங்களின் நிலவரத்தை தெரிந்துகொள்ளும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது சி.எம்.ஆர்.எல்.செயலியில் அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்து வருகின்றனர். பயணிகள் தங்கள் வீடுகளிலிருந்து இருசக்கர வாகனங்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
இதற்கேற்ப 41 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், 28 மெட்ரோரயில் நிலையங்களில் கார்களைநிறுத்தும் வசதியும் உள்ளது. மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாகன நிறுத்த பகுதிகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகன நிறுத்தம் ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், பயணிகளின் ஏமாற்றத்தைப் போக்க, வாகனம் நிறுத்தும் பகுதிகளில் காலிஇடங்களின் நிலவரத்தை தெரிந்துகொள்ளும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சி.எம்.ஆர்.எல். செயலியில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல், விமான நிலையம் உட்படபல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்கள் காலையிலேயே நிரம்பி விடுகின்றன. இதனால், பயணிகள் வாகன நிறுத்தும் இடத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் பகுதிகளில் காலியாகவுள்ள இடங்கள், வாகனங்களை வகை வாரியாக, பயணிகள் அறிந்து கொள்ளும் வசதி சி.எம்.ஆர்.எல். செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்துக் கொண்டால், பயணிகள் வீண் அலைச்சலைத் தவிர்க்க முடியும்.
ஆனாலும், கூடுதல் வாகனங்களை நிறுத்த வசதியாக, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகே காலியாக உள்ள இடங்களைத் தேடும் முயற்சியும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்பு: உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் புறக்கணிப்பு | செய்திப்பிரிவு | காரைக்குடி | 2024-01-30 06:16:00 |
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, பட்டங்களை வழங்கினார். இவ்விழாவை உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் புறக் கணித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் துணைவேந்தர் க.ரவி வரவேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் வீ.காமகோடி பேசும்போது, ‘‘கிராமப்புற இளைஞர்களின் அறிவாற்றலைப் பயன்படுத்தினால் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண வழிஏற்படும். செயற்கை நுண்ணறிவு,தரவு அறிவியல் துறை முக்கியத்துவம் பெற்றுவருகிறது. வரும்கல்வியாண்டில் (2024-25) இருந்துசென்னை ஐஐடியில், மாணவர்கள் சேர்க்கையில் விளையாட்டுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கப் படும்’’ என்றார்.
இவ்விழாவில் 40,414 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் முனைவர் பட்டம் பெற்ற 164 பேர், தங்கப் பதக்கம் மற்றும் தரவரிசையில் இடம்பெற்ற 184 பேர் என 348 பேருக்கு ஆளுநர் நேரடியாகப் பட்டங்களை வழங்கினார்.
பின்னர், பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மார்பளவுச் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
உயர் கல்வி அமைச்சர் புறக்கணிப்பு: அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
அதேநேரம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தன்னவாசல் வருகை ரத்து: இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு ஆளுநர் வருகை ரத்து செய்யப்பட்டது.
காரைக்குடி அழகப்பா பல்கலை.பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, திருச்சி செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தைப் பார்வையிட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டியாவயல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகைய சூழலில், சித்தன்னவாசலுக்கு ஆளுநர் வருவதாகஇருந்த நிகழ்வு, நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாலை 5 மணிக்கு திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல ஆளுநர் திட்டமிட்டிருந்ததாகவும், காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு புறப்பட காலதாமதம் ஆனதால், சித்தன்னவாசல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
|
மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு: உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 06:12:00 |
சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். அவரது உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்கந்தன் சாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆயிரம் விளக்கு, ஜெய்பாளையம், 3-வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30). சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்துவந்தார். அவரது உறவினர் ஒருவர் செம்மஞ்சேரியில் காலமானார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கொட்டிவாக்கம் - ஓ.எம்.ஆர். சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, கந்தன்சாவடிபகுதியில் மெட்ரோ பணிக்காக இரும்புக் கம்பிகளை நிரப்பி சாலையோரம் நின்றிருந்த லாரியின்பின் பகுதியில் விக்னேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கரவாகனம் மோதியுள்ளது. இதில், பலத்த காயம்அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடன் பயணித்த அவரது இரு நண்பர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவல் அறிந்துதரமணி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம்விரைந்தனர்.இதற்கிடையே, இறப்பு செய்தியை அறிந்து விக்னேஷின் உறவினர்கள், ``லாரி ஓட்டுநர் கவனக்குறைவாக சாலையோரம் லாரியை நிறுத்தி இருந்ததும், அந்த நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாத காரணத்தாலும்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகிகள் சம்பவ இடம் வர வேண்டும்'' எனக்கூறிவிக்னேஷ் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பரங்கிலை காவல் துணை ஆணையர் சுதாகர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து, விக்னேஷ் உடல் நேற்று காலை1.45 மணியளவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
|
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி: மாநகராட்சி ஆணையர் தொடங்கிவைத்தார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 06:10:00 |
சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் மக்களவை தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறஉள்ளது. இத்தேர்தல்களின்போது, வேட்புமனு தாக்கல், வேட்புமனுக்கள் பரிசீலனை, சின்னங்கள் ஒதுக்கீடு, தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது, விதிமீறல்கள் குறித்து புகார் அளிப்பது, தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள். பொதுத்தேர்தல்களின்போது இவர்கள் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
அதனால் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், பெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மக்களவை தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான 5 நாட்கள் நடைபெறும் சான்றிதழ் பயிற்சிவகுப்பு ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்தார். இப்பயிற்சியின் நிறைவில், பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆர்.லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சி.சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
|
2-வது சிறந்த அலங்கார ஊர்தியாக தேர்வான காவலர் ஊர்தி: காவல் துறை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 06:06:00 |
சென்னை: பொதுமக்களுக்கான காவல் துறையின் திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் போலீஸார் எடுத்துரைத்தனர். குடியரசு தின விழாவின்போது அரசுத் துறைகளின் நலத்திட்டங்கள், சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில், தமிழ்நாடு காவல்அலங்கார ஊர்தி, சிறந்த அலங்கார ஊர்திக்கான 2-ம் பரிசை பெற்றது. இந்த அலங்கார ஊர்தி, சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதை நேற்று 250 மாணவ, மாணவிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் ஜி.தர்மராஜன், திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர், தமிழ்நாடு காவல் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருந்த, ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு, பருந்து செயலி (குற்றவாளிகளின் விவரங்களை அறியும் செயலி), நிவாரணம் செயலி (பொதுமக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் செயலி), மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள `பந்தம்' திட்டம், எப்ஆர்எஸ் செயலி (முகத்தைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் செயலி), வீரா வாகனம் (சாலை விபத்து மீட்பு மற்றும் விடுவிப்பு வாகனம்) மற்றும் தமிழ்நாடு காவல் துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்ட 50-வது ஆண்டு ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்.
காவல் அருங்காட்சியகம்: பின்னர் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, காவல் துறையின் ஆயுதங்கள், சீருடை, பணிகள், சிறப்புகள், சாதனைகள், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
|
நாட்டை நேசிப்பவர்களை சங்கி என்று சொல்வது பெருமைதான்: வானதி சீனிவாசன் கருத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 06:05:00 |
சென்னை: தமிழக பாஜக சார்பில் தென் சென்னைமக்களவை தொகுதிக்கான பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. அந்த வகையில், வேளச்சேரி நெடுஞ்சாலை ரயில் நிலையம் எதிரே உள்ள தேர்தல் அலுவலகத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர்கரு.நாகராஜன உள்பட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அப்போது செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது:
தேர்தல் பணிகளை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், வருகிற மக்களவை தேர்தலில் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு, இந்த தேர்தல் அலுவலகம் மிக முக்கிய பங்குவகிக்கும். நாடு முழுவதும் 1 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் கட்சியின் கொள்கைகள், அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்காக மிகப்பெரிய தொடர்பு இயக்கம் அடுத்தமாதம் தொடங்க இருக்கிறது.
தமிழகத்திலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பிரதமரின் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறுவார்கள். இதனைத் தொடர்ந்து, ‘கிராமத்துக்கு செல்வோம்’ என்ற அடுத்த தொடர்பு இயக்கத்தையும் கட்சி அறிவித்திருக்கிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிராமங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அங்கு மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை வரும் பிப்ரவரி மாதம் தொடங்குகிறோம்.
இண்டியா கூட்டணிக்கு புள்ளி வைத்த, நிதிஷ்குமார், தேசிய ஜனநாயககூட்டணிக்கு வந்திருக்கிறார். கடந்த10 நாட்களில் இண்டியா கூட்டணியில்இருக்கும் தலைவர்கள் எல்லாம், எப்படி பிரிந்து சென்றிருக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இண்டியா கூட்டணி என்பது அவர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்டது என்றும், இந்த கூட்டணி நிலைக்காது என்றும் ஆரம்பம் முதல் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
மக்களின் நலனை சிந்திக்காத கூட்டணி இப்போது சிதறிக்கொண்டிருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒவ்வொரு நாளும் புதிய உறவுகளை, புதிய கட்சிகளை சேர்த்துக் கொண்டிருக்கிறது. வரும் தேர்தலுக்குள் இண்டியா கூட்டணியில் உள்ள பல தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது.
பாஜகவின் கொள்கைக்கு எதிராகநிற்கக்கூடியவர்களும், எதிர் கருத்துஉடையவர்களும், கேலி செய்வதற்கும், இழிவுபடுத்துவதற்கும் `சங்கி' என்றவார்த்தையை பயன்படுத்த தொடங்கிஇருக்கிறார்கள். வெகு நாட்களாகவேஇதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.ஒருசிலர் சங்கியாக இருப்பதற்கு பெருமைப்படுவதாக சொல்கிறார்கள்.
அதனால், சங்கி என்ற வார்த்தைக்கு விளக்கம் எங்களால் கொடுக்க முடியாது. எங்களை பொருத்தவரை, இந்தநாட்டை நேசிக்கின்ற, நாட்டின் நலன்களை சமரசம் செய்து கொள்ளாத யாராகஇருந்தாலும், அவர்களை இந்திய நாட்டின் குடிமக்கள் சங்கி என்று சொல்வதை பெருமையாக கருதுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
|
தைப்பூசம், குடியரசு தினம் தொடர் விடுமுறை; சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பினர்: வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 06:00:00 |
செங்கல்பட்டு, சென்னை: குடியரசு தினம், தைப்பூசம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று காலை சென்னைக்கு திரும்பியதால், வண்டலூர் உட்பட பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தைப்பூசம் (ஜன.25), குடியரசு தினம்(ஜன.26) சனி, ஞாயிற்றுக்கிழமை என4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இதையொட்டி, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 2 நாட்களாக500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், தொடர் விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் மாலை முதல் சென்னையை நோக்கி மக்கள்வரத் தொடங்கினார். நேற்று திங்கள்கிழமை வேலைநாள் என்பதால், மீண்டும் சென்னை திரும்புபவர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல பேருந்துகள் இயக்கப்பட்டன.
சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசை: மேலும், சென்னை நோக்கி ஏராளமானோர் தங்களது சொந்த வாகனங்களில் புறப்பட்டு வந்ததால், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆத்தூர், பரனூர்சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதேபோல, நேற்று காலை அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் ஏராளமானோர் சென்னை நோக்கி வந்ததால் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், வண்டலூர் உயிரியல் பூங்காஆகிய இடங்களில் கடும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது. அதிகாலை முதல் காலை 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது.
தனியார் பேருந்துகள் அனைத்து கிளாம்பாக்கத்துக்கு மட்டும் இயக்கப்பட்டதால், வண்டலூர் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் அதிகாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீஸார் போக்குவரத்தை நெறிப்படுத்தினர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான ஆட்டோக்கள், கார்கள், மாநகரப் பேருந்துகளும் அதிக அளவில் இயங்கியதால் நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மக்கள் ஜி.எஸ்.டி. சாலையில் இறங்கி அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று மின்சார ரயில்களில் பயணம் செய்தனர். குறிப்பாக, வெளியூரில் இருந்து வந்த மக்களில் சிலர் பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மின்சார ரயில்களில் ஏறி பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.
இருப்பினும், பெரும்பாலான மக்கள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து மாநகர இணைப்பு பேருந்துகளில் பயணம் செய்தனர்.
ரயில் நிலையங்களில் பரபரப்பு: தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் ரயில்களில் நேற்று சென்னை திரும்பியதால், தாம்பரம், சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்கள் நேற்று அதிகாலை முதலே பரபரப்பாக காணப்பட்டன.
ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பயணிகளை சவாரிக்காக அழைத்து செல்ல ஆட்டோக்கள், கார்கள் ரயில் நிலையங்களை ஒட்டிய சாலைகளில் நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலை போலீஸார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணிக்கு பிறகு, ரயில் நிலையங்களில் பரபரப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
|
கல்லூரி கல்வி இயக்குநராக கார்மேகம் பொறுப்பேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 05:55:00 |
சென்னை: தமிழக அரசின் உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது. இதுதவிர, தனியார் கலை,அறிவியல் கல்லூரிகளும் இந்த இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலேயே வருகின்றன. கல்லூரிக் கல்வி இயக்குநராக ஈஸ்வரமூர்த்தி கடந்த 2022-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவர் ஓய்வுபெற்ற நிலையில், திருவாரூர் திருவிக அரசு கல்லூரியின் முதல்வர் ஜி.கீதா, கூடுதல் பொறுப்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவியை கவனித்து வந்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.கார்மேகத்தை, கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் கல்லூரிக் கல்வி இயக்குநராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, பள்ளிக்கல்வி இயக்குநர் பதவிக்கு பதில் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு அதற்கு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். இதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த நிலையில், சமீபத்தில் ஆணையர் பதவி நீக்கப்பட்டு, மீண்டும் இயக்குநர் பதவிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
தமிழக அரசு இந்துக்களின் விரோதி போன்ற மாயத்தோற்றத்தை சித்தரிக்க முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி சார்பில் பதில் மனு | செய்திப்பிரிவு | புதுடெல்லி | 2024-01-30 05:49:00 |
புதுடெல்லி: ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான நேரலையை ஒளிபரப்பக் கூடாது என வாய்மொழியாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் மூலமாக தமிழக அரசு இந்துக்களின் விரோதி என்பது போன்ற மாயத்தோற்றத்தை சித்தரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் கடந்த ஜன. 22-ம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் பிரதிஷ்டை தொடர்பான நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்ய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு வாய்மொழியாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த வினோஜ் பன்னீர்செல்வம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த 22-ம் தேதிநீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் தாமா சேஷாத்ரி நாயுடு, பி.வள்ளியப்பன் மற்றும் வழக்கறிஞர் ஜி.பாலாஜி ஆகியோர், நாட்டின் முக்கிய நிகழ்வான ராமர் கோயில் பிரதிஷ்டை விழா தொடர்பான நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக முதல்வர் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, அதுபோல எந்தவொரு வாய்மொழி உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை என தெரிவித்திருந்தார். அதையடுத்து நீதிபதிகள், ராமர் கோயில் விழா தொடர்பான நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யவோ, அதுதொடர்பாக பூஜைகள், பஜனைகள் மேற்கொள்ளவோ தமிழகத்தில் யாரும்முறைப்படி அனுமதி கோரினால்அதிகாரிகள் அதை சட்டத்துக்குட்பட்டும், முன்மாதிரி தீர்ப்புகளை மனதில் கொண்டும் பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும் எனஉத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சார்பில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: அயோத்தி கோயில் விழா நேரடி ஒளிபரப்புக்கு வாய்மொழியாக தடை விதித்து இருப்பதாக கூறிதொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் மூலமாக, தமிழக அரசு இந்துக்களின் விரோதி என்பது போன்ற மாயத்தோற்றத்தை சித்தரிக்க மனுதாரர் முயற்சி செய்துள்ளார். வாய்மொழி உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. அடிப்படை ஆதாரமற்றது.
மனுதாரர் கற்பனையாக இப்படியொரு குற்றச்சாட்டை சுமத்தி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. ராமர் கோயில் விழா தொடர்பான நேரலை, பஜனைகள், பூஜைகள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்கள், மண்டபங்கள் என மொத்தம் 252 இடங்களில் எந்த தடையோ, போலீஸாரின் குறுக்கீடோ இல்லாமல் அமைதியாக நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக 288 விண்ணப்பங்கள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் மனுவில் தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.
|
குன்றத்தூர் நகராட்சி ஆணையரின் வங்கி லாக்கரில் ரூ.33 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை | செய்திப்பிரிவு | காஞ்சிபுரம் | 2024-01-30 05:45:00 |
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்து வந்தவர் குமாரி. இவர் கடந்த 11-ம் தேதி சென்னை பெருங்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் முனுசாமி என்பவரிடம் அவரது நிலத்தை வரைமுறைப்படுத்த ரூ.24 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது அவர் கூறிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் குமாரியை கைது செய்தனர்.
அவர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 3 லாக்கர் சாவிகளை பறிமுதல் செய்தனர். இவை செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி ஜெயஸ்ரீயிடம் அனுமதி பெற்று வங்கி லாக்கரில் சோதனை நடத்தினர். அப்போது ஆணையர் குமாரி, அவரது கணவர் யுகமன்னன் ஆகியோர் கூட்டாக கணக்கு வைத்திருந்த வங்கி லாக்கர்களில் சோதனை நடத்தினர்.
அப்போது சேலையூரில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் இருந்து ரூ.8 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மற்றொரு தனியார் வங்கி லாக்கரில் இருந்து ரூ.20 லட்சமும், அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் லாக்கரில் இருந்து ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.33 லட்சத்தை கைப்பற்றினர்.
மேலும் இந்த லாக்கரில் இருந்து 17 பவுன் நகைகளும் கைப்பற்றப்பட்டன. ரூ.33 லட்சம் கணக்கில் வராத பணம் என்றும், நகை தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.
|
தமிழகத்தில் 750 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 8 சமையலறை வரை பணிமுடிப்பு சான்றிதழ் தேவையில்லை: அமைச்சர் முத்துசாமி தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 05:37:00 |
சென்னை: தமிழகத்தில் தற்போது 750 சதுரமீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 3 சமையலறை வரை பணிமுடிப்பு சான்றிதழ் தேவையில்லை எனும் நடைமுறையை மாற்றி 8 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடய்) தமிழக பிரிவின் சார்பில்,‘ ஸ்டேட்கான்’ எனப்படும் 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, சென்னையில் நேற்று தொடங்கியது. இதனை வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் பி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கிரெடய் தமிழ்நாடு மற்றும் நைட் பிராங்க் இணைந்து தமிழகத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் எதிர்கால திறன் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
கருத்தரங்கில் கிரெடாய் தமிழகத் தலைவர் ஆர்.இளங்கோ, கிரெடாய் தேசிய துணைத் தலைவர் தர் ஆகியோர் கட்டிட அனுமதி, நிலமாற்றம், மறுவரையறை உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, "திட்ட அனுமதிக்கு ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் கொண்டு வருவது குறித்து சிஎம்டிஏ ஆய்வு செய்யும். விண்ணப்பத்துடன் உரிய காலத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வரும் காலங்களில் அனுமதியை இரட்டிப்பாக்கும் முயற்சியை எடுப்போம்’’ என்றார்.
இதையடுத்து, அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது: கட்டுமானத் துறையினரின் 100-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளில் 43 கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, அதில் தற்போது 25 கோரிக்கைகள் மீதுஉத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு சட்டத்திருத்தங்கள் தேவைப்படுவதால் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஒற்றைச்சாளர அனுமதி திட்டம்: ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் தொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியளிக்கும் கட்டிடத்துக்கான உயரத்தை 12-ல் இருந்து 14 மீட்டராக்கும் கோரிக்கை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வர இருக்கிறது. தளப்பரப்பு குறியீடு என்பது 2.25 மற்றும் 3.25 ஆகியவற்றுக்கு இடையில் ஒரு அளவை கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்யப்படும். சுயசான்று அளிக்கும் திட்டத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால், இப்போது எத்தனை அனுமதி பெறப்பட்டது. அதில் விதிமீறல் இல்லாதது எவ்வளவு என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டியுள்ளது. விதிமீறல் குறைந்தால் அந்த திட்டத்துக்கு மாறலாம். பொறியாளர்கள், ஆர்க்கிடெக்ட் நிபுணர்கள் பொறுப்பேற்று, அரசுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் அந்த திட்டத்துக்கு செல்லலாம்.
பணிமுடிப்பு சான்றிதழை பொறுத்தவரை 750 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 3 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை எனும் நடைமுறை தற்போது உள்ளது. இனி 8 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்பதற்கான அனுமதி விரைவில் வெளியாக உள்ளது. மாஸ்டர் பிளானை பொறுத்தவரை 8 தயாரிக்கப்பட்டுள்ளது. வனம் சார்ந்த ‘ஹாக்கா’ பகுதி என்பது சில மாவட்டங்களில் பிரச்சினை உள்ளது. இதில் தற்போது, கிராமம் என்று எடுப்பதை விடுத்து, குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு மட்டும் விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடையின்மை சான்றிதழ்கள் எண்ணிக்கையை குறைத்து ஆன்லைனில் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை: காவல் 17-வது முறையாக நீட்டிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 05:08:00 |
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னைபுழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிஆனந்த் வெங்கடேஷ் முன்பு அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததால், காவல் நீட்டிப்புக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.17-வது முறையாக அவரது நீதிமன்ற காவலை 31-ம் தேதி (நாளை) வரைநீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அமலாக்கத் துறை பதில் மனு: இதற்கிடையே, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி குற்றச்சாட்டு பதிவுக்காக தேதி குறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இதுதொடர்பாக ஏற்கெனவே பதிவு செய்த 3 பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தரப்பு வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத் துறை பதில் அளிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு அரசுவழக்கறிஞர் என்.ரமேஷ் நேற்று ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். ‘வழக்கு விசாரணையை முடக்கும் வகையிலும்,குற்றச்சாட்டு பதிவு மற்றும் சாட்சிகள் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படை காரணமும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அதில் கோரப்பட்டுள்ளது.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி அல்லி, வழக்கு விசாரணையை ஜனவரி 31-ம்தேதிக்கு (நாளை) தள்ளிவைத்துள்ளார்.
|
100 கிராமங்களில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க ஆய்வு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-30 05:05:00 |
சென்னை: தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அதிகளவு தயாரிக்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசும் சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 100 கிராமங்களில் சூரியசக்தி மின்சாரம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒரு கிலோ வாட் சூரியசக்தி மின்நிலையத்தில் இருந்து 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிராமத்தில் சராசரியாக 250 வீடுகளுக்கும் குறைவாகவே உள்ளது. எனவே, கிராமங்களில் 250 மற்றும் 500 கிலோ வோல்ட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்பட்டு, அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அந்தக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
இதன்படி, எந்தெந்த கிராமங்களில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 100 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்வாரியமும், எரிசக்தி மேம்பாட்டு முகமையும் (டெடா) இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
பழனிபாபா குறித்து அவதூறு பதிவு: பாஜக பிரமுகர் கைது | செய்திப்பிரிவு | திருச்சி | 2024-01-30 04:16:00 |
திருச்சி: சமூக செயற்பாட்டாளரான பழனி பாபா, நினைவு தினம் நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், பழனிபாபா குறித்து சமூக வலைதளங்களில் பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப்பிரிவின் மாநிலச் செயலரான புகழ் என்ற புகழேந்திரன் ( 44 ) அவதூறாக பதிவிட்டுள்ளார். இது குறித்து, உறையூர் கிராம நிர்வாக அலுவலர் வடிவேலு, புகழேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், புகழேந்திரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதற்கிடையே புகழேந்திரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் உறையூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் பி.நாகேந்திரன் முன்னிலை வகித்தார். தேசிய பொதுக் குழு உறுப்பினர் புரட்சிக்கவிதாசன் கண்டன உரையாற்றினார். இதில், பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
|
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் | செய்திப்பிரிவு | விழுப்புரம் | 2024-01-30 04:14:00 |
விழுப்புரம்: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் என்று தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( விழுப்புரம் கோட்டம் ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ( விழுப்புரம் கோட்டம் ) போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளர் அர்ஜூனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் ( ஜன.30 ) கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பறநகர் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும்.
இதன் அடிப்படையில் விழுப்புரம் மண்டலத்தில் இருந்து சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி மற்றும் திண்டிவனம் ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வழியாக இனி தாம்பரம் வரை இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் செல்லும் பிற பேருந்து மாதவரம் புறநகர் பேருந்து முனையம் வரை இயக்கப்படும். இப்பேருந்துகள் மதுரவாயல் சுங்கச்சாவடி, அம்பத்தூர் எஸ்டேட் வழியாக மாதவரத்துக்கு இயக்கப்படும்.
மேலும் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. இப்பேருந்து இயக்க மாற்று ஏற்பாட்டின்படி பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், புதுச்சேரி, கடலூரில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியே சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் பழைய முறைப்படி திருவான்மியூர், மத்தியகைலாஸ், அசோக்நகர் வழியே கோயம் பேட்டைச் சென்றடையும். இந்த புதிய மாற்றத்தால் புதுச்சேரி வழியாக கிழக்கு கடற்கரைச்சாலை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளின் எண் ணிக்கை குறைந்துள்ளது.
|
பிரதமருடன் காணொலியில் கலந்துரையாடிய புதுச்சேரி மாணவி: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டனர் | செய்திப்பிரிவு | புதுச்சேரி | 2024-01-30 04:12:00 |
புதுச்சேரி: மாணவி, மாணவிகளுடன் பிரதமர்கலந்துரையாடல் புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பானது. இதை பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து ஆளுநர், முதல்வர் பார்வையிட்டனர்.
புதுவை பள்ளிக் கல்வித் துறையின் சமக்ர சிக்ஷா சார்பில், கம்பன் கலையரங்கில் டெல்லியில் பிரதமர் மோடி பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா ( தேர்வு பற்றிய விவாதம் ) என்ற நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பானது. இந்நிகழ்வின் தொடக்கத்தில், கல்வித் துறை செயலர் ஆசிஷ் மாதவ் ராவ் ரோரே வரவேற்றார். நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பேரவை துணைத் தலைவர் ராஜவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் புதுச்சேரி சேதராப்பட்டு அரசு பள்ளியில், மேல்நிலை கல்வி படிக்கும் மாணவி தீப ஸ்ரீ பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி என்று அவர் குறிப்பிட்டதும், அவருக்கு பிரதமர் மோடி வணக்கம் என தமிழில் குறிப்பிட்டு பதில் அளித்தார். இந்நிகழ்வு 3 மணி நேரம் தாண்டியும் நடந்தது. பிரதமர் ஹிந்தியில் உரையாடியதை புதுச்சேரி கல்வித்துறையினர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது, ஒருகட்டத்தில் முதல்வர் ரங்கசாமிக்கு அசதியில் கண் சுழற்ற ஆரம்பிக்க அருகேயிருந்த ஆளுநரும், அமைச்சரும் அவருக்கு தேநீர் வரவழைத்து தந்தனர். பள்ளி குழந்தைகள் தரப்பில் கூறுகையில், 3 மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்வு நடந்தபோது, டெல்லி நேரலையும், புதுச்சேரியில் ஆங்கில மொழி பெயர்ப்பும் ஒரே சப்த அளவில் இருந்ததால் சரியாக புரிய முடியவில்லை. தமிழில் மொழி பெயர்த் திருந்தால் பிரதமர் கூறியதை நன்கு உணர்ந்திருக்க முடியும் என்று குறிப்பிட்டனர். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி நன்றி கூறினார். மாநில திட்ட இயக்குநர் தினகர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
|
தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை: டி.டி.வி.தினகரன் தகவல் | செய்திப்பிரிவு | காரைக்குடி | 2024-01-30 04:10:00 |
காரைக்குடி: தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
காரைக்குடியில் அமமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்பு டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி குறித்து சில கட்சிக ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். பிரதமரை தேர்ந் தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம் பெறும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பின்னர், அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்காததும் தமிழக மக்கள்தான்.
இதை பற்றி கட்சி தலைவராக கருத்து சொல்வது நாகரிகமாக இருக்காது. முதல்வர் வெளிநாடு செல்வதில் கருத்து வேறுபாடு கிடையாது. தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம். தேர்தல் நேரத்தில் எங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க செல்ல வேண்டும் என்பதால், தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை. அதே நேரம் நிர்வாகிகள், தொண்டர்கள் என்னை போட்டியிடச் சொல் கின்றனர். இதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
தன்னை முதல்வர் ஆக்கியவர், ஆட்சி சரியாக நடக்க உதவிய ஓபிஎஸ், ஆட்சியை காப்பாற்றிய மத்திய அரசு ஆகிய அனைவருக்கும் துரோகம் செய் தவர் பழனிசாமி. அவருக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பர். ‘இண்டியா’ கூட்டணி சுக்கு நூறாக உடைந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் அந்த கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டுமே இருப்பார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி மற்றும் நிர் வாகிகள் உடனிருந்தனர்.
|
தேசிய கட்சிகளுடன் கூட்டணியால் பலன் இல்லை: நத்தம் விஸ்வநாதன் கருத்து | செய்திப்பிரிவு | பழநி | 2024-01-30 04:08:00 |
பழநி: தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் பலன் இல்லை, என முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன் தெரிவித்தார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், பழநியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடந்தது. மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட அவைத் தலைவர் குப்புசாமி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் குமாரசாமி, முன்னாள் எம்எல்ஏ வேணு கோபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விஸ்வநாதன் பேசியதாவது: மக்கள் விரோதமாக யார் ஆட்சி செய்தாலும் அவர்களுக்கு எதிராக அதிமுக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்கிறது. அந்த வகையில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால், நாங்கள் பாஜகவை எதிர்க்கவில்லை என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். சிறுபான்மை மக்கள் அதிமுகவை ஆதரிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதே இதற்கு காரணம்.
தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் பலன் இல்லை. நாங்கள் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கப் போவதில்லை. மக்கள் பிரச்சினையை சுட்டிக் காட்டி, அதற்கு தீர்வு கேட்டுத்தான் சந்திப்போம். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் திமுகவினர் தங்களது சொத்துகளை பாதுகாக்க போராடுவார்கள். ஆனால், தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுகிற இயக்கம்தான் அதிமுக. தற்போதைய நிலையில் திமுக மீண்டும் வரவே கூடாது என மக்கள் முடிவு எடுத்துவிட்டனர் என்றார்.
பின்னர், அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பேசுகையில், மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது, திமுக உள்ளிட்ட அனைத்துகுப்பையையும் நீக்கி தமிழகத்தை சுத்தப்படுத்துவோம். சேலத்தில் நடந்த திமுக மாநாட்டை கின்னஸோடு ஒப்பிடுகின்றனர். அது கின்னஸ் மாநாடு அல்ல சர்க்கஸ் மாநாடு. அதில் தங்களது குடும்பத்தினரை மாறி மாறி வாழ்த்தியதுதான் மிச்சம் என்றார்.
|
10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி: கூட்டம் அலைமோதியதால் கடையை மூடிய போலீஸார் @ ஆத்தூர் | செய்திப்பிரிவு | சேலம் | 2024-01-30 04:06:00 |
சேலம்: ஆத்தூரில் 10 ரூபாய் நாணயத் துக்கு பிரியாணி வழங்குவதாக அறிவித்த விளம்பரத்தை பார்த்து ஏராளமான மக்கள் திரண்டதால், போலீஸார் கடையை இழுத்து மூடிய சம்பவம் நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து சாலை பகுதியைச் சேர்ந்தவர் மணி ( 34 ). இவர் அங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் பிரியாணி கடை திறந்துள்ளார். திறப்பு விழா சிறப்பு விற்பனையாக 10 ரூபாய் நாணயம் வழங்கினால், பிரியாணி வழங்குவதாக துண்டு பிரசுரம் மூலம் விளம்பரம் செய்தார். நேற்று காலை கடை திறந்த நிலையில் 10 ரூபாய் நாணயத்துடன் கடை முன்பு கூட்டம் அலைமோதியது. பலரும் போட்டி போட்டுக் கொண்டு 10 ரூபாய் நாணயம் கொடுத்து சிக்கன் பிரியாணி வாங்கிச் சென்றனர். 10 ரூபாய் நாணயத்துடன் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால், போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் டவுன் போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடையை இழுத்து மூட உரிமையாளருக்கு அறிவுறுத்தினர். கடை திறந்த சில மணி நேரத்தில் மக்களின் கூட்டத்தால், கடையை உரிமையாளர் இழுத்து மூடினார். பிரியாணி தீர்ந்து விட்டதாக தகவல் பலகையில் அறிவிப்பு வைக்கப்பட்ட நிலையில், பலரும் 10 ரூபாய் நாணயத்துடன் வந்து பிரியாணி வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
|
ஈரோட்டில் நள்ளிரவில் விபத்து: சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு | செய்திப்பிரிவு | ஈரோடு | 2024-01-30 04:04:00 |
ஈரோடு: ஈரோட்டில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவி ஒருவர் உயிரிழந்தார். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு, 50 மாணவ, மாணவியர் மற்றும் 3 ஆசிரியர்களுடன், சுற்றுலாப் பேருந்து கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டது. பேருந்தினை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி ஓட்டியுள்ளார்.
கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேருந்து, 500 மீட்டர் தொலைவு சென்ற நிலையில், ஈரோடு - பெருந்துறை சாலையின் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் பயணித்தோர் மற்றும் வாகனங்களில் வந்தவர்கள் மாணவ, மாணவியரை மீட்டனர். ஈரோடு தாலுகா போலீஸார் அங்கு வந்து, மாணவ, மாணவியரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து, கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் காயமடைந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் சுவேதா ( 21 ), பேருந்து கவிழ்ந்தபோது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
|
குட்டி இறந்தது தெரியாமல் சுமந்து திரியும் தாய் குரங்கு | செய்திப்பிரிவு | மஞ்சூர் | 2024-01-30 04:02:00 |
மஞ்சூர்: மஞ்சூர் அருகே தூனேரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்குகள் கூட்டம், குடியிருப்பின் அருகே உலா வந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த குரங்கு குட்டி ஒன்று இறந்துள்ளது. மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், தனது குட்டி இறந்தது கூட தெரியாமல், அரவணைத்தபடி அங்கும், இங்குமாக தாய் குரங்கு தூக்கி செல்கிறது. இதை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக குட்டி குரங்கின் உடலை தூக்கிச் செல்லும் தாய் குரங்கின் பாச போராட்டம், அப்பகுதியில் இருப்பவர்களை சோகமடைய செய்துள்ளது.
|
உதகையில் மைனஸ் 2 டிகிரி வெப்பநிலை: கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | செய்திப்பிரிவு | உதகை | 2024-01-30 04:00:00 |
உதகை: உதகையில் மீண்டும் பனிப்பொழிவு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று காலை மைனஸ் 2 டிகிரி செல்சியஸாக வெப்ப நிலை குறைந்துள்ளது. கடும் குளிரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத ஆரம்பத்தில் பனிப்பொழிவு தொடங்கும். ஆரம்பத்தில் நீர் பனிப்பொழிவாகவும், அதன் பின்னர் உறை பனிப்பொழிவு தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். உறைபனி சமயத்தில் புல் மைதானங்கள், தேயிலை தோட்டங்களில் உறைபனி கொட்டும். புல்வெளிகளில் கொட்டிக் கிடக்கும் பனியைப் பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விரித்தது போல் காணப்படும். இதன் காரணமாக தேயிலைச் செடிகள், வனங்களில் செடி கொடிகள், புற்கள் கருகி காய்ந்து விடும்.
இந்நிலையில் நவம்பர் இறுதி வாரத்தில் பனிப்பொழிவு தொடங்கியது. அதன்பின் டிசம்பரில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயல் போன்றவற்றால் உறை பனிப்பொழிவு தள்ளிப் போய், இம்மாத தொடக்கம் முதல் கடுமையான உறைபனிப் பொழிவு இருந்து வருகிறது. இதனால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உதகை தாவரவியல் பூங்காவில் நேற்று காலை தட்ப வெப்ப நிலை 0.8 டிகிரி செல்சியஸாக பதிவானது. தலை குந்தா, சோலூர், அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி வரை குறைந்தது.
கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை மற்றும் வனங்களில் செடி, கொடிகள் கருகத் தொடங்கியுள்ளன. உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் நேற்று கடும் உறைபனிப் பொழிவு ஏற்பட்டது. தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, தலை குந்தா, எமரால்டில் குறைந்த பட்ச வெட்ப நிலை மைனஸ் 2 ஆக பதிவாகியுள்ளது. உதகையில் அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் உறைபனி படர்ந்து இருந்தது. பூந்தொட்டிகளில் உறைபனி வெண்மை நிறத்தில் காணப்பட்டது.
உதகை ரயில் நிலையம், குதிரை பந்தய மைதானம், காந்தல் முக்கோணம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைபனி தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதிகாலையில் பச்சை புல்வெளிகளே தெரியாத வகையில் உறைபனி படர்ந்து இருந்தது. காலையில் வெயில் வந்த பின்னர், செடிகள், புல்வெளிகளில் இருந்து உறைபனி உருகி விடுகிறது. உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடுங்குளிரை போக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். மேலும் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது.
புல்வெளிகள் மீது வெண்மையை போர்த்தியது போல் பனித்துளிகள் உறைந்து இருந்தன. புல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் உறைபனி கொட்டி கிடந்தது. மேலும் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மீது உறைபனி படர்ந்து இருந்தது. வாகனங்கள் மீது பனி படர்ந்து இருப்பதை கண்டு குழந்தைகள் ஆச்சரியமடைந்து, உறைபனியை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்த நிலையில், வந்திருந்தவர்களும் தங்களது அறைகளிலேயே முடங்கினர்.
|