Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
ராமலிங்க வள்ளலார் தற்போது இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீட்டை மனதார பாராட்டி இருப்பார்: பிரதமர் மோடி பெருமிதம் | செய்திப்பிரிவு | கடலூர் | 2023-10-06 05:22:00 |
சென்னை/கடலூர்: ராமலிங்க வள்ளலார் தற்போது இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீட்டை மனதாரப் பாராட்டிஇருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில், வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வள்ளலார் சிலையை திறந்துவைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அணையா தீபத்தை ஏற்றினார்.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பேசியதாவது:
உயர் மதிப்பைப் பெற்ற வள்ளலாரின் ஆன்மிக கருத்துகள், இப்போதும் உலக மக்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. சகமனிதர்கள் மீது அன்பு செலுத்துவது, பசியைப் போக்குவதே வள்ளலாரின் முக்கியப் பணியாக இருந்தது.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கருத்தே, நமது கொள்கையாகும்.
நவீன கல்வித் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்த வள்ளலார், தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற வேண்டுமென விரும்பினார். இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் பெரிய அளவில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய சிந்தனை, வளர்ச்சி, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை, சிறந்த மாற்றங்களை உருவாக்கும்.
சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென வலியுறுத்திய வள்ளலார் தற்போது இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை மனதாரப் பாராட்டியிருப்பார். இவ்வாறு பிரதமர் பேசினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, “வள்ளலாரின் கருத்துகள், பாரதத்தின் கருத்தை, அடையாளத்தை வலுப்படுத்துவதாக உள்ளன. ஐரோப்பிய நாடுகள் சொல்வதுபோல, பாரத நாடுஅரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்ட நாடு அல்ல. இதையெல்லாம் விட பெரியது. அதேநேரத்தில், இந்தியா என்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் அம்பேத்கர் இந்தியாஎன்பதற்குப் பதிலாக பாரதம்என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசும்போது, “80 கோடி பேருக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்கும் சனாதனத்தை, யாராலும் ஒழிக்க முடியாது” என்றார்.
விழாவில், ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, உமன்ஸ் லீக் அறக்கட்டளை நிறுவனர் திவ்யா ஸ்வப்னா ராஜ், காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் , வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாக் குழுத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வள்ளலார் முப்பெரும் விழா: வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200-வது ஆண்டு, தர்மசாலை தொடங்கிய 156-வது ஆண்டு, ஜோதி தரிசனம் காட்டிய 152-வதுஆண்டு ஆகிய முப்பெரும் விழாவின் நிறைவு விழா கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, குழந்தைகளால் ஜோதி ஏற்றப்பட்டு, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. தர்ம சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற அருள்நெறி பரப்புரை பேரணி நடைபெற்றது.
|
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றம் 4,000 கனஅடியாக குறைப்பு | செய்திப்பிரிவு | தருமபுரி | 2023-10-06 05:14:00 |
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான தண்ணீர்திறப்பு விநாடிக்கு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்இருப்பைப் பொறுத்து, காவிரிடெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்ததால், கடந்த ஜூன் 12-ம் தேதி முதல்வர்ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவைத்தார்.
பாசனத்தின் தேவைக்கேற்பதண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது. கடந்த ஆகஸ்ட் 27-ம்தேதி வரை விநாடிக்கு 8 ஆயிரம்கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. செப்டம்பர் 6-ம் தேதி விநாடிக்கு 6,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
தற்போது, மேட்டூர் அணைக்குநீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளதால், நீர்மட்டமும், நீர்இருப்பும் மிகக் குறைவாக உள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 1,514 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில் நேற்று காலை 1,004 கனஅடியாக சரிந்தது. நேற்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 6,500 கனஅடியில் இருந்து, 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 33.58 அடியாகவும், நீர் இருப்பு 9.02 டிஎம்சியாகவும் இருந்தது.
ஒகேனக்கல்லில் 3,000 கனஅடி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 1-ம்தேதி விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து பதிவானது. ஆனால், 2-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்திருந்தது.
அன்று முதல் 4-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களாக விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாகவே நீர்வரத்து பதிவாகி வந்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.
|
சவீதா மருத்துவ கல்லூரி தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி சோதனை | செய்திப்பிரிவு | திருவள்ளூர் | 2023-10-06 05:09:00 |
ஈரோடு/திருவள்ளூர்: சவீதா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய சுமார் 40 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் செயல்படும் சவீதா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் பல்நோக்கு மருத்துவமனையின் நிறுவனர் வீரய்யன். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை பூர்வீகமாகக் கொண்ட இவரின் வீடு, ஈரோடு சம்பத் நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் கீழ் தளத்தில் எம்.எம்.இந்தியா மெடிக்கல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து நேற்று இந்த வீட்டுக்கு வந்த வருமான வரி அதிகாரிகள் 6 பேர், சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த காவலாளியின் குடும்பத்தினர், ‘வீட்டின் உரிமையாளர் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறிவிட்டதாகவும், இங்கு வருவதில்லை’ என்றும் தெரிவித்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் மற்றும் வீட்டில் மாலை வரை வருமானவரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று, தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி, பூந்தமல்லி வேலப்பன்சாவடியில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த கல்வி நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு புகார் வந்ததால், சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த குழுமத்துக்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் அந்த தகவலை வருமான வரித்துறையினர் உறுதி செய்யவில்லை.
இதேபோன்று, திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே உள்ள வேலப்பன்சாவடியில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியிலும் நேற்று வருமான வரி சோதனை நடந்தது. 50-க்கும் மேற்பட்டோர் அடங்கிய அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மாலை 6 மணியை தாண்டியும் சோதனை நீடித்தது. இக்கல்லூரியில் பராமரிப்பு பொறியாளராக பணிபுரியும் பிரவீன் குமார் மற்றும் கணக்காளராக பணிபுரியும் கார்த்திக் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
|
தமிழகத்தில் அக். 11 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-06 05:08:00 |
சென்னை: தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் (அக். 6, 7) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 8, 9-ம் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, 10, 11-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
|
`அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்’ - பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுரை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-06 05:00:00 |
சென்னை:அதிமுகவை பற்றி இனி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் எச்.ராஜா, மைத்ரேயன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில அணி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உடல் நலம் சரியில்லாததால் முககவசம் அணிந்தவாறு வந்த அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, மாற்றுத்திறனாளி தொண்டருக்கு இலவச 3 சக்கர மிதிவண்டியை அண்ணாமலை வழங்கினார். இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும், தமிழகத்தில் பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும், கட்சி எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வழங்கினார்.
கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, ‘கூட்டணி பற்றி எந்த கவலையும் எனக்கு இல்லை. நீங்களும் கவலை பட வேண்டாம். கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? 3-வது முறையாக மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பதற்காக செயலாற்றுங்கள். மோடி தலைமை வேண்டாம் என்பவர்கள் வெளியேறுகிறார்கள். மோடி வேண்டும் என்பவர்கள் கட்சியில் இணைகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு பூத்தையும் வலிமையானதாக மாற்ற வேண்டும்.
அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. மத்திய அரசு திட்டத்தால் பயனடைந்தவர்களை தொடர்பு கொண்டு, அவர்களை கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2024 தேர்தலில் தமிழகத்தில் இருந்து தே.ஜ. கூட்டணி அதிகளவிலான உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கும். பாஜகவை வளர்ப்பதே எங்கள் நோக்கம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும். அதில், தமிழகத்தின் 39 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.
`அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்’
கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, எந்த இடத்திலும் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை. அதேநேரத்தில் அதிமுகவை பற்றி இனி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் அண்ணாமலை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனவரி 2-வது வாரத்தில் சென்னையில் நடைபெறும் நடைபயண நிறைவு நாளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அதில் 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
|
சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து போராடிய இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-06 04:55:00 |
சென்னை: ஊதிய முரண்பாட்டை சரிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து, பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகநல கூடங்களில் அடைத்தனர். அங்கும் போராட்டத்தை தொடர்ந்ததால் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். விடுவித்தாலும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுடன் கல்வித் துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், உடன்பாடு ஏற்படவில்லை. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலிலும், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஆசிரியர் சங்கங்களின் சில கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, ‘இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 3 பேர்குழு அமைக்கப்படும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.2,500 உயர்த்தப்படும்’ என்பது உட்பட 5 அறிவிப்புகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.
அரசின் நிதிநிலை கருதி, போராட்டத்தை முடித்துக் கொண்டுஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்கமறுத்து போராட்டத்தை தொடர்வதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, அன்று இரவேஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு, டிபிஐ வளாகம்முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸார் நேற்று அதிகாலை5 மணி அளவில் எச்சரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வலியுறுத்தியும் கலைந்து செல்லாததால், ஆசிரியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனத்தில் ஏற்றினர்.
அவர்களை ஷெனாய் நகர், ஆயிரம்விளக்கு, புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர் என வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று, சமூகநல கூடங்களில் அடைத்தனர். அப்போது மயக்கமடைந்த சில ஆசிரியர்கள்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளுடன் இருப்பவர்கள் மட்டும் ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
சமூகநல கூடங்களில் இருந்தவாறே தங்களது போராட்டத்தை தொடர்வதாக ஆசிரியர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். இங்கிருந்து விடுவிக்கப்பட்டாலும், மீண்டும் ஒன்றுதிரண்டு தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இதுபற்றி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘சம வேலைக்கு சமஊதியம் என்ற எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இதில் வெற்றி பெறாமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்’’ என்றார்.
இதற்கிடையே, காவல் துறையின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
3 சங்கங்கள் தற்காலிக வாபஸ்: சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக நேற்று தெரிவித்தனர்.
முன்னதாக, சென்னையில் சமூகநல கூடங்களில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
|
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீடு, மது ஆலை, நட்சத்திர ஓட்டல், மருத்துவ கல்லூரி உட்பட 50 இடங்களில் வருமான வரி சோதனை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-06 04:47:00 |
சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் அவர் தொடர்புடைய நட்சத்திர ஓட்டல், மதுபான ஆலைகள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் தொகுதி திமுகஎம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனம், மருத்துவமனை உட்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இவர் மற்றும் குடும்பத்தினர் மீது புகார்எழுந்ததால், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை டத்தினர். வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், ரூ.89.19 கோடி மதிப்பிலான அவரது சொத்துகளை அமலாக்கத் துறை அப்போது முடக்கியது.
இந்த சூழலில், ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவுக்கும் புகார்கள் சென்றுள்ளன.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு கஸ்தூரிபா நகர் முதலாவது பிரதான சாலை ஆகிய இடங்களில் அவரது வீடுகள், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரேலா மருத்துவமனை, தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள ஆழ்வார் ஆய்வு மையம் அலுவலகம், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டல், வேளச்சேரியில் உள்ள ஆர்க்கிட் அடுக்குமாடி குடியிருப்பு, கிண்டி கலைமகள் நகர் பாளையக்காரன் தெருவில் உள்ள நியூடெல்டா நிறுவன அலுவலகம், அடையாறு எல்.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா நகரில் உள்ள பரணி பில்டர்ஸ் மற்றும் சிகரம் ஐஏஎஸ் அகாடமி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் தீவிர சோதனை நடத்தினர். பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை உடன் அழைத்துச் சென்றனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அகரம் கிராமத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி மற்றும் நிர்வாக அலுவலகத்தில், சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து சென்ற 12 வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 2 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை, அதேபோல, காலை 6 மணிக்குபணிக்கு வந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் என500-க்கும் மேற்பட்டோரும் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை. நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர்,அடையாள அட்டையை பரிசோதித்து, செவிலியர்களையும், மருத்துவ மாணவர்களையும் அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர்.
புதுச்சேரி அண்ணா நகரில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஒரு வீட்டிலும் சோதனை நடந்து, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் மற்றும் இளையனூர்வேலூரில் உள்ள மதுபான ஆலைகள், இந்த நிறுவனங்களுக்கு பணியாளர்களை அனுப்பி வைக்கும் குப்பன் என்பவரது வீடு உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல, சென்னையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் வீடு, வண்டலூரில் உள்ள தாகூர் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, கொளப்பாக்கத்தில் உள்ள பாலாஜி பாலிடெக்னிக், மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதி என மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சோதனை இன்னும் முடியவில்லை. முடிந்த பிறகு, முழு விவரங்களும் வெளியிடப்படும்’’ என்றனர்.
பழிவாங்கும் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சுதந்திரமாக செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு எப்படி அரசியல் நோக்கத்துடன் இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கு இவையே தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டுகள்.
இத்தகைய திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அமலாக்கத் துறை வெளிப்படைத் தன்மையோடும், நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதை பாஜக வசதியாக மறந்துவிடுகிறது. சட்டத்தையும், மக்களாட்சியையும் துச்சமாக மதித்து செயல்படுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக அஞ்சி நடுங்குவது நன்கு தெரிகிறது. பழிவாங்கும் நடவடிக்கையை விடுத்து உண்மையான பிரச்சினைகளை தீர்க்க அவர்கள் கவனம் செலுத்துவது நல்லது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
|
ஆலங்காயம் அரசு தொடக்க பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல்? | செய்திப்பிரிவு | ஆலங்காயம் | 2023-10-06 04:14:00 |
ஆலங்காயம்: ஆலங்காயம் அருகே அரசுப் பள்ளியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி தலைமை ஆசிரியரை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 125-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள காலி இடங்களில் விலை உயர்ந்த தேக்கு, சவுக்கு, வேப்ப மரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த பொதுமக்கள் பள்ளிக்கு சென்று பார்த்தபோது, அங்கு மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டு மரக்கிளைகள் சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, பள்ளி தலைமை ஆசிரியர் துரையின் அறைக்கு சென்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, அவரிடம் முறையான பதில் இல்லை எனக்கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள், பள்ளி தலைமை ஆசிரியர் துரையை சிறைபிடித்து அவரது அறை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் சித்ரா மற்றும் ஆலங்காயம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஆலங்காயம் காவல் நிலையம் மற்றும் வட்டார கல்வி அலுவலர் சித்ராவிடம், அப்பகுதி மக்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், ‘‘கடந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை பள்ளி தலைமை ஆசிரியர் துரை என்பவர் யாரிடமும் அனுமதி பெறாமல் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரங்களை வெட்டி பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரின் துணையோடு கடத்தியுள்ளார். எனவே, இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.
மனுவை பெற்ற வட்டார கல்வி அலுவலர் சித்ரா, இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்படும் என்றார். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட விவகாரத்தில் ஆலங்காயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த நீர்தேங்கும் இடங்களில் கம்பூசியா மீன் வளர்க்க திட்டம் @ புதுச்சேரி | செய்திப்பிரிவு | புதுச்சேரி | 2023-10-06 04:10:00 |
புதுச்சேரி: புதுவையில் டெங்கு கொசுக்களைகட்டுப்படுத்த, நீர் தேங்குமிடங்களில் கம்பூசியா மீன் வளர்க்கும் திட்டத்தை மீன்வளத்துறையுடன் இணைந்து சுகாதாரத்துறை செயல்படுத்த உள்ளது.
புதுவை மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையில் 1,421 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 71 பேர் தீவிர டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களில் 2 பேர் மட்டும் உயிரிழந்தனர். கடந்த ஜனவரியில் 294 பேருக்கு பாதிப்பிருந்த நிலையில், செப்டம்பரிலும் 269 பேருக்கு பாதிப்பிருந்தது.
அக்டோபரில் 21 பேருக்குமட்டுமே டெங்கு பாதிப்பு இருந்தது. புதுவை மாநில அளவில் நேற்று முன்தினம் மட்டும் புதுவை பிராந்தியத்தில் 39 பேரும், காரைக்காலில் 6 பேரும் என 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 32 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைபெறுகின்றனர். கடந்த ஆண்டு டெங்குவால் 1,673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிக்குன் குனியாவை பொறுத்த வரையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 150 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். நடப்பாண்டில் சிக்குன் குனியா குறைந்துள்ளது.
டெங்குவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டதற்கு, “டெங்குவை பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரிலேயே முட்டையிட்டு பெருகுகின்றன. ஆகவே, பொதுமக்கள் தண்ணீரை தேங்கவிடாமல்இருப்பது அவசியம்.மருந்து தெளிப்பதால் கொசுக்கள் மயக்கமடையும்.
ஆகவே, கொசு உற்பத்தியை தடுப்பதே டெங்கு பாதிப்பை குறைக்கும் வழியாகும். அதற்காக கொசு லார்வாவை உண்டு வாழும் கம்பூசியா வகை மீன்களை வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதுவை மீன் வளத்துறையுடன் இணைந்து கம்பூசியா வகை மீன்களை வளர்க்க உள்ளோம். கம்பூசியா வகை மீன்கள் நல்ல தண்ணீர் உள்ள கிணறுகள் உள்ளிட்டவற்றில் விடப்பட்டு கொசுக்களது லார்வாக்கள் அழிக்கப்படவுள்ளன” என்றார்.
கம்பூசியா மீன்கள் தொடர்பாக பூச்சியியல் துறை தரப்பில் விசாரித்தபோது, “டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு காரணகர்த்தாவான கொசுக்களின் லார்வாக்களை சாப்பிடும் தன்மை கொண்டவை கம்பூசியா மீன்கள். 5 செ.மீ. நீளம் வரை மட்டுமே வளரும்.டெங்கு கொசுக்களை இயற்கை வழியில் இந்த மீன்கள் அழித்துவிடும்.
இந்த வகை மீன்களை மேட்டூர் அணைப் பகுதியில் வளர்த்தெடுக்கிறார்கள். அங்கிருந்து வாங்கி தரலாம். அலங்கார தொட்டிகள், அலங்கார நீரூற்றுகள், நன்னீர் குடுவைகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புகள் அதிகம். எனவே அவற்றில் விட இந்த வகை மீன்களை தரலாம். குளோரினேஷன் செய்யப்படும் நீரில் இந்த மீன்கள் வாழாது.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் வாழாது.
கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இவற்றை விட்டால் கொசுப் புழுக்கள் உருவாகாமல் தடுக்க முடியும். நன்னீர் தேக்கி வைக்கப்படும் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வகை மீன்களை கொண்டு சென்று வளர்த்து கொசுக்களை இயற்கையாகவே கட்டுப்படுத்தலாம்” என்று குறிப்பிட்டனர்.
|
கையகப்படுத்திய நிலத்தில் வேலி அமைக்க வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தம் | செய்திப்பிரிவு | கடலூர் | 2023-10-06 04:08:00 |
கடலூர்: என்எல்சி இந்தியா நிர்வாகத்தால் கையகப்படுத்திய நிலத்தில் வேலிஅமைக்கச் சென்ற அந்நிறுவன அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.
இதனால் சேத்தியாத்தோப்பு அருகே மும்முடிச் சோழகன் கிராமத்தில் பதற்றம் நிலவியது. என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கப் பணிக்காகசேத்தியாதோப்பு பகுதி சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராம விளைநிலங்களை, அதற்கான இழப்பீடுகளை வழங்கி கையகப்படுத்தி யுள்ளது. ஆனாலும், அந்த நிலங்களை என்எல்சி நிர்வாகம் தனது பயன்பாட்டுக்கு எடுக்காமல் இருந்து வந்தது.
இதனால் இழப்பீடு பெற்ற விவசாயிகள், தங்களுக்கான நிலங்களில் பயிர் செய்து வந்தனர். மேலும், தங்களுக்கு வழங்கியுள்ள இழப்பீட்டுத் தொகை மிகக்குறைவானது என்று கூறி போராட் டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே கடந்த ஜூலை மாதம், சேத்தியாதோப்பு பகுதியில் என்எல்சி நிர்வாகம் தான் ஏற்கெனவே கையகப்படுத்தியிருந்த நிலத்தில் தனது சுரங்கத் தேவைக்காக வாய்க்காலை வெட்டியது.
பயிர் செய்த விளைநிலத்தை, இப்படி செய்வது தவறு என விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இப்பகுதி விளை நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு என்எல்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், சேத்தியாத் தோப்பு அருகே உள்ள மும்முடிச் சோழகன் கிராமத்தில் என்எல்சி நிறுவனம், தனது நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் வேலி அமைக்க அந்த நிலத்தை நேற்று சமன் செய்தது.
இதற்காக அங்கு அதிகாரிகள் குவிய, பொக்லைன் மூலம் பணிகள் தொடங்கின. இதை அறிந்த மும்முடிச் சோழகன் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து, அதனை தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவலறிந்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், கிராமத்தினர் கலைந்து செல்லவில்லை. இதைத் தொடர்ந்து நிலத்தை சமன்படுத்தும் பணிகளை என்எல்சி அதிகாரிகள் நிறுத்தினர். பின்னர் வேறு ஒரு பகுதியில் சமன் செய்யும் பணியில் என்எல்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அங்கும் கிராம மக்கள் சென்று, அதை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு தரவில்லை. முதலில் தரப்பட்டது சொற்ப தொகையே. அதைத் தொடர்ந்தே சிறிய அளவில் இரண்டாவது இழப்பீட்டு தொகை தரப்பட்டுள்ளது. சுரங்கத் தேவைக்காக அவர்கள் பெரும் விளை நிலத்தின் விலையை ஒப்பிடும் போது இது குறைவானது.
இது தவிர விளை நிலத்தை விட்டுக் கொடுக்கும் எங்களுக்கு, வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை தர வேண்டும்” என்று தெரிவித்தனர். போலீஸார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கிராமத்தினர் கலைந்து செல்லவில்லை.
|
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அக்.9ல் தர்ணா: மருத்துவர்கள் சங்கம் முடிவு | ஒய். ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2023-10-05 21:53:00 |
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து மருத்துவர்களையும் பணியாளர்களையும் பணி செய்ய விடாமல் தடுத்த மாநகராட்சி நகர்நல அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி அனைத்து விதமான ஆய்வுக் கூட்டங்களை புறக்கணிக்கவும், 9ம் தேதி அரசு மருத்துவக்கல்லூரிகளில் தர்ணா போராட்டம் நடத்தவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தமிழ்நாடு அரசு மருத்தவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. மாநில செயலாளர் டாக்டர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டர். இந்த கூட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத் நடந்து கொண்ட விதம் குறித்தும், மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்களுக்கும், மதுரை அரசு ராஜாஜி மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் இடையே நீடிக்கும் சமீப காலமாக பிரச்சனைகள் பற்றியும், அதனை தொடர்ந்து நடந்து வரும் மருத்துவர்கள் போராட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மருத்துவர் சங்க நிர்வாகிகள் பேசிய பிறகு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மப்பேறு பிரிவில் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை பணிபுரிய விடாமல் தடுத்து, தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வண்ணம் நடந்து கொண்டு மதுரை மாநகராட்சி சுகாதார நகர் நல அலுவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
* மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவளித்து மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டங்களை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும்.
* வெள்ளிக்கிழமை (6ம் தேதி) முதல் தமிழக மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அனைத்து மகப்பேறு மருத்துவர்களும் தாய்சேய் தொடர்பான அனைத்து வாட்ஸ் அப் குழுக்களில் இருந்தும் வெளியேற முடிவு செய்வது.
* வெள்ளிக்கிழமை (6ம் தேதி) முதல் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் அனைத்து கர்ப்பிணிகள் இறப்பு தணிக்கை(Maternal Death Audit) ஆய்வு கூட்டங்களில் மருத்துவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது.
* அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் அனைத்து விதமான ஆய்வுக் கூட்டங்களையும் புறக்கணிப்பது.
* வரும் 9ம் தேதி திங்கள்கிழமை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தர்ணா போராட்டம் நடத்துவது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் டாக்டர் செந்தில் கூறுகையில், ‘‘அனைத்துப் போராட்டங்களுக்கு பிறகும் சுமூகமான உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்தக் கட்டமாக போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். 9ம் தேதி திங்கள்கிழமை மாலை மாநில செயற்குழு கூட்டத்தை இதுபோல் கூட்டி முடிவெடுக்கப்படும்’’ என்றார்.
|
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு | கி.மகாராஜன் | மதுரை | 2023-10-05 20:44:00 |
மதுரை: பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த லட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) திட்ட பயனாளியாக 2018-ல் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், திட்டத்தின் கீழ் எனக்கு வர வேண்டிய பணம் எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. பின்னர், என் பெயரிலுள்ள மற்றொரு பெண்ணை பயனாளியாக சேர்த்து அதிகார முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. எனவே, எனக்கு வர வேண்டிய பணத்தை வழங்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் புதிதாக விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கான திட்டமாகும். இத்திட்டத்தில் முறைகேடு செய்வதை ஏற்க முடியாது. பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். திட்டத்தின் பலன்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மனுதாரரின் புகார் தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு 12 வாரத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
|
'திமுக ஃபைல்ஸ்' கருத்தில் தவறு இல்லை: நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை விளக்கம் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-05 20:20:00 |
சென்னை: திமுக ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14 அன்று ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக பொருளாளரும், திமுக எம்.பி-யுமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருந்தார்.
ரூ.100 கோடி இழப்பீடு: அதையடுத்து டி.ஆர்.பாலு சார்பில் ரூ.100 கோடி இழப்பீடு கோரி அண்ணாமலைக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. டி.ஆர்.பாலு சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தாக்கல் செய்திருந்த மனுவில், ''கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் மத்திய அமைச்சர், எம்.பி என பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக அண்ணாமலை எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளார். ரூ.10 ஆயிரத்து 841 கோடி மதிப்புள்ள 21 நிறுவனங்கள் தமக்கு சொந்தமானவை என அண்ணாமலை கூறியிருப்பது தவறானது, அவதூறானது. எனவே தனது நற்பெயருக்கு களங்கம் விளைவி்க்கும் வகையில் செயல்பட்ட அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டது.
இந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், அண்ணாமலை இரண்டாவது முறையாக ஆஜராகி இருந்த நிலையில், அவரிடம் டி.ஆர்.பாலுவின் வழக்கு குறித்து நீதிபதி அனிதா ஆனந்த் கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் குறித்த தனது கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், தன் மீதும் எந்த தவறும் இல்லை என்றும் கூறி, டி.ஆர்.பாலு கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
இதையடுத்து, அவதூறு வழக்கில் விசாரணையை தொடங்குவதற்காக, வழக்கை டிசம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினமும் அண்ணாமலை ஆஜராக உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டதாகவும், டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணைக்காக டி.ஆர்.பாலு தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜரானார்கள்.
|
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு: அக்.31-க்கு விசாரணை ஒத்திவைப்பு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-05 20:15:00 |
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி எதிரான போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்ட 46 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015ம் ஆண்டு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, விசாரணை நடத்திய மத்திய குற்றபிரிவு காவல்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய குற்றபிரிவு காவல்துறையிடம் குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்களில் சில விளக்கங்களை கேட்ட நீதிபதி, அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
|
சட்ட விரோதமாக விளம்பர பேனர் வைத்தால் கிரிமினல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-05 19:55:00 |
சென்னை: சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்திருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பர பலகை விழுந்து இளம்பெண் பலியானது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, விதிகளை மீறி விளம்பர பலகைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளைமீறி செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அவர்களுக்கு எதிரான குற்ற வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, 'சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. சட்ட விரோதமாக விளம்பர பலககைகள் வைப்பவர்கள்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது' என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அரசு தரப்பில் கூறப்படுவதை பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
|
காவிரி பிரச்சினையில் முதல்வரிடம் எதிர்பார்ப்பது என்ன? - தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் பட்டியல் | சி.எஸ். ஆறுமுகம் | தஞ்சாவூர் | 2023-10-05 19:46:00 |
தஞ்சாவூர்: “நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் நெய்வேலியில் இருந்து மின்சாரம் வழங்க மாட்டோம் என்கிற அறிவிப்பை, தஞ்சாவூருக்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தவறாமல், தயங்காமல் வெளியிட வேண்டும்” என்று தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில், "நிகழாண்டு கர்நாடகா அரசால், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துப் போய்விட்டதால் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அதே வேளையில் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல் கர்நாடக அரசு அங்குள்ள விவசாயிகளை தூண்டிவிட்டு அந்த மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள், வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு நாடகம் நடத்தியுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், தொழிலாளிகளின் ஆதரவுடன் தமிழக அரசின் ஒத்துழைப்போடு, தமிழகம் தழுவிய கடையடைப்பு மற்றும் முழு பொது வேலை நிறுத்த்துடன் கூடிய முழு பந்துக்கான அறிவிப்பினை நாளை (அக்.6) தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். குறுவை, சம்பா, தாளடி சாகுபடியில் எதிர்கொள்ள இருக்கும் வாழ்வாதாரம், பொருளாதார இழப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசின் மீது மற்றொரு சிறப்பு வழக்கு தொடர்வதற்கான அறிவிப்பினையும் வெளியிட வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசும், மத்திய அரசும் அறிவித்து, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிதியைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக, மத்திய அரசு அறிவிக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை முழுமையாக விலக்கிக் கொண்டு புதிதாக முதல்வரின் பயிர் காப்பீடு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்திட வேண்டும். நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் நெய்வேலியில் இருந்து மின்சாரம் வழங்க மாட்டோம் என்கிற அறிவிப்பையும் தவறாமல், தயங்காமல் வெளியிட வேண்டும்.
மேலும் நிகழாண்டு காவிரி ஆற்று நீரை முழுமையாக நம்பி சம்பா, தாளடி சாகுபடி செய்யலாமா? வேண்டாமா என்பதையும் அதற்கு மாற்று என்ன என்பதையும் தங்களுடைய தஞ்சாவூர் வருகையின் போது அறிவித்திட வேண்டும்" என கூறியுள்ளார்.
|
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காக சென்னையில் அக்.9-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 19:40:00 |
சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 9-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், “`உழைப்பவரே உயர்ந்தவர்’, `உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழிகளை தாரக மந்திரமாகக் கொண்டு உழைத்து வரும் தொழிலாளர்கள், அனைத்து நிலைகளிலும் இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அதிமுக ஆட்சிக் காலங்களில் தொழிலாளர்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியும், எண்ணற்ற உதவிகளை செய்தும், தொழிலாளர்களுடைய நலன்கள் பேணி பாதுகாக்கப்பட்டு வந்தது.
திமுக அரசு பதவியேற்று 29 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு சிறிதும் அக்கறை காட்டாமல் தொழிலாளர் விரோத அரசாக விளங்கி வருகிறது. குறிப்பாக, போக்குவரத்துத் துறையில் எங்கெங்கெல்லாம் தனிப்பட்ட முறையில் பலன்பெற முடியும் என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ற வகையில் இந்த அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
இந்நிலையில்,போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்கிடவும்; போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிடவும்; 100 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியம்; ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) மற்றும் பணப் பயன்களை உடனடியாக வழங்கிடவும், திமுக அரசை வலியுறுத்தி, அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அக்.9ம் தேதி, திங்கட் கிழமை பிற்பகல் 3 மணியளவில், சென்னை, பல்லவன் அலுவலகம் முன்பு, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையிலும்; அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்து மண்டலங்களிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைப் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
|
ப்ரீமியம் திமுக எம்.பி. வீட்டில் ஐடி ரெய்டு முதல் அண்ணாமலையின் தேர்தல் பார்வை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.5, 2023 | செய்திப்பிரிவு | பாதிப்பு | 2023-10-05 18:52:00 |
குறுவை பாதிப்பு: ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு: காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் கைது: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் வியாழக்கிழமை அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் பல்வேறு சமுதாய கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
|
குறுவை பாதிப்பு | டெல்டா மாவட்டங்களில் ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு: முதல்வர் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 18:45:00 |
சென்னை: காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால், கடந்த 12-6-2023 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் திறந்துவிட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
|
“தமிழக கோயில்கள் குறித்த பிரதமரின் பேச்சு... வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம்” - கே.எஸ்.அழகிரி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 18:37:00 |
சென்னை: "இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போட்டு பாஜகவை வளர்த்துவிடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு என்றைக்கும், எந்தக் காலத்திலும் நிறைவேறாது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“‘தென் மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, கோயில் சொத்துகளையும், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறைகேடாக பயன்படுத்தி வருகிறது, இது ஒரு அநீதி. சாதிவாரிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக உரிமை எழுப்பும் காங்கிரஸ் கட்சி கோயில்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துமா?’ என்று தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தேவையற்ற சர்ச்சையை எழுப்பியிருக்கிறார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருப்பதைவிட தமிழகத்தில் கோயில் நிர்வாகம் என்பது இந்து சமய அறநிலையத் துறை என்ற அமைப்பின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1927-ம் ஆண்டிலேயே சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1951-லும், பிறகு 22 ஜனவரி 1959-ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழகத்திலுள்ள கோயில்கள் அனைத்தும் அரசுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இத்தகைய நிர்வாகத்தின் மூலம் கோயில்கள் என்பது யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று கடவுளை தரிசிக்கவும், வழிபடவும் முழு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 1931-ம் ஆண்டிலேயே ஆலயங்களில் அரிஜன பிரவேசம் மறுக்கப்பட்ட போது மதுரை வைத்தியநாத ஐயர் மீனாட்சி அம்மன் கோயிலில் தியாகி கக்கன் உள்ளிட்ட அம்மக்களை அழைத்துக் கொண்டு போராட்டம் நடத்திய வரலாற்றை பிரதமர் மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக ராமானுஜர், வள்ளலார், பெரியார் ஆகியோர் சமய சீர்திருத்த கருத்துகளை பரப்பி, கோயில்களில் வழிபாட்டு உரிமையை பெற்றுத் தந்த வரலாற்றுப் பெருமை தமிழகத்துக்கு உண்டு. அந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் எந்த பாகுபாடும், தவறுகளும், தனிப்பட்ட சிலருடைய ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்துகிற வகையில் இந்து சமய அறநிலையத்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பி. பரமேஸ்வரனை நியமித்து புரட்சி செய்ததை எவரும் மறந்திட இயலாது. அத்தகைய நியமனத்தின் மூலம் எந்த கோயில்களில் நுழைய எந்த சமுதாயம் மறுக்கப்பட்டதோ, அதே சமுதாயத்தைச் சேர்ந்தவரை அமைச்சராக நியமித்து கோயில்களில் அவருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்ற காட்சியை பார்த்து நாடே மகிழ்ந்தது. இந்து மதத்துக்குள்ளாக இருந்த சாதிய ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, சனாதன அணுகுமுறையை புறக்கணிக்கிற பணியை தமிழகம் நீண்ட காலமாக செய்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபு நியமிக்கப்பட்டு இந்து கோயில்களில் ஓர் ஆன்மிகப் புரட்சியே நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 36,425 கோயில்களும், 56 மடங்களும், ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் நிலங்களையும் இன்றைக்கு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது.
இவர் அமைச்சராக பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் தனியார் வசமிருந்து ரூபாய் 5137 கோடி மதிப்புள்ள கோயில்கள் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான திருக்கோயில்களில் குடமுழுக்குகள், வருமானம் இல்லாத கோயில்கள் அனைத்திலும் ஒருகால பூஜை நடத்துவதற்கு நிதியுதவியும், எல்லாவற்றுக்கும் மேலாக பெரியாரின் கனவை நினைவாக்குகிற வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் பெண்கள் உள்ளிட்ட பலர் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கோயிலின் கர்ப்ப கிரகத்துக்குள் நுழையக் கூடாது, கோயில் கொடி மரத்தை தாண்டி உள்ளே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டு கோயிலுக்குள் அனைத்து சாதியினரும் வேறுபாடின்றி உள்ளே நுழைந்து வழிபடுகிற உரிமையை பறிக்கிற வகையில் பிரதமர் மோடி பேசியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. இத்தகைய அநீதிகள் எல்லாம் கோயில்கள் ஒருசில தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போது நடைபெற்றது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடவுளை தரிசிக்க நந்தனாருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, அதற்காக தீக்குளித்து உயிர் நீத்த வரலாறு தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இத்தகைய மாபெரும் புரட்சியை ஒட்டித்தான் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அனைவருக்கும் பொதுவாக செயல்பட்டு வருகிறது என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், சிறுபான்மையினர் நடத்தும் வழிபாட்டுத் தலங்களை ஏன் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார். கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை இருப்பதைப் போல, பள்ளிவாசல் மற்றும் தர்காக்களுக்கு வஃக்பு வாரியம் என்ற அரசுத்துறை உண்டு.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் போல இதற்கும் அமைச்சர் உண்டு. தற்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக சேகர்பாபு இருப்பதை போல வஃக்பு வாரிய துறைக்கு செஞ்சி மஸ்தான் இருக்கிறார். இதற்கொன செயலாளராக தனி ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்ட உறுப்பினர்கள் செயல்பட்டு அனைத்து பள்ளிவாசல் மற்றும் தர்காக்களை நிர்வகித்து வருகின்றனர். சமயத்தின் அடிப்படையில் இங்கே என்ன பாரபட்சம் உள்ளது என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.
இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போட்டு பாஜகவை வளர்த்துவிடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு என்றைக்கும், எந்த காலத்திலும் நிறைவேறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
|
சென்னையில் கைதான ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட மறுப்பு - ‘சமுதாயக் கூடங்களில் அடிப்படை வசதியின்றி அவதி’ | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 16:23:00 |
சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ள சமுதாய கூடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லை எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் பல்வேறு சமுதாய கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர், புதுப்பேட்டை என சென்னையின் பல இடங்களில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவைக்கப்பட்டிருந்தாலும் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்துவருகின்றனர்.
அரசு தங்களது கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்த இடைநிலை ஆசிரியர்கள், சாப்பிட மறுத்து போராடிவருகின்றனர். ஆசிரியர்கள் அனைவருக்கும் சமமாக உணவு கிடைக்கவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டுள்ளது என்பதால் சாப்பிட மறுத்து போராடுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஆசிரியர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கும் சமுதாய கூடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்கள் எழுந்துள்ளன. சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கழிவறையில் தண்ணீர் வரவில்லை என்றும், குடிநீர் வசதியும் இல்லை எனவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே, 3 ஆசிரியர்கள் சமுதாய கூடத்தில் மயக்கமடைய, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
புதுப்பேட்டையில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும் இதேநிலைதான். அனைத்து ஆசிரியர்களும் அடிப்படை வசதிகள் கேட்டு அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். கழிவறை வசதி இல்லாததால் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனிடையே, "ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
“போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள ஆசிரியர்களை தமிழக அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையாவது ஏற்று அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: இதனிடையே, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு முழு நேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்றும், டெட் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் போட்டித் தேர்வை ரத்து செய்துவிட்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திவந்தனர். அவர்களது கோரிக்கை குறித்து ஆலோசிக்க 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட அறிவிப்பை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் இன்று அறிவித்தனர்.
பின்னணி: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 8 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனிடையே, நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 10,359 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. அவர்களுக்கான ஊதியம் ரூ.2,500 வரை உயர்த்தி வழங்க முடிவாகியுள்ளது. கூடுதலாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் வரையான மருத்துவக் காப்பீடு திட்டமும் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார்.
ஆனால், அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
|
“2024 தேர்தலில் திமுக - பாஜக இடையேதான் போட்டி” - ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அண்ணாமலை உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 15:12:00 |
சென்னை: "திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். 2024 தேர்தலில் அதை பார்த்துவிடலாம்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், வியாழக்கிழமை தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் மாநில துணைத் தலைவர்களான கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அதை எதற்கு ஊடகங்களிடம் சொல்ல வேண்டும். தமிழக மக்களிடத்தில் எப்போது சொல்ல வேண்டுமோ, அப்போது சொல்கிறேன். பாஜக கட்சி எப்படி தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தப் பாதையில் செல்ல வேண்டும். 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் கிடையாது. கட்சியின் தலைவர்களுடன் உள்ளரங்கில் விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்வு.
பாஜகவைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணி 1998-ல் ஆரம்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக என்டிஏ இருக்கிறது. வெவ்வேறு காலக்கட்டத்தில் என்டிஏவின் தன்மை மாறியிருக்கிறது. நிறைய கட்சிகள் வந்துள்ளனர்.நிறைய கட்சிகள் சென்றுள்ளனர். நிறைய கட்சிகள் பரிமாணத்தோடு மீணடும் வந்திருக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி 2024-ல், தமிழகத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்காக மிகப்பெரிய அளவில் இங்கிருந்து மக்களவை உறுப்பினர்களை அனுப்பிவைக்கும். மற்றபடி இந்தக் கூட்டத்தில் என்ன பேசினோம். தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது எல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க வேண்டிய விஷயம் இல்லை.
பாஜகவைப் பொறுத்தவரை, என்டிஏவை பிரதானப்படுத்திச் செல்கிறோம். 2024-ல் பாஜக நிச்சயமாக, தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை இங்கு முன்னெடுக்கும். அதற்கான அறிகுறிகள் தேர்தலுக்கு முன்பே தெரியும். 2024-ல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் வாக்கு சதவீதத்தையும் நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றார்.
அப்போது, பாஜகவுடன் அதிமுக இல்லை என்று வருத்தப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்தந்த கட்சிகள், அந்தந்த கட்சியின் வளர்ச்சியைத்தான் பார்க்க வேண்டும். பாஜக தன்னுடைய வளர்ச்சியைப் பார்க்கிறது. இதில் வருத்தப்படவோ, சந்தோஷப்படவோ ஒன்றும் இல்லை. நான், ஒருவர் இருக்கிறார் என்பதற்காக சந்தோஷப்பட்டதும் இல்லை, சென்றுவிட்டனர் என்பதற்காக வருத்தப்பட்டதும் இல்லை.
என்னுடைய ஒரே நோக்கம், பாஜக வலிமை அடைய வேண்டும் என்பது மட்டும்தான். அதுவே தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் நோக்கமாக இருக்கிறது. 2024 என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்கான தேர்தல். தமிழகத்தில் 2024-ல், தமிழகத்தில் 39-க்கு 39 நரேந்திர மோடியின் பக்கம் வரும்" என்றார்.
அதிமுக தலைவர்களை விமர்சிப்பதாக, உங்கள் மீது குற்றம்சாட்டி கூட்டணி உடைக்கப்பட்டுள்ளதே என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "என் மீது இந்த குற்றச்சாட்டு மட்டும் இல்லை. தமிழகத்தில் உள்ள பல கட்சிகள், பல குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அதற்கெல்லாம் பதிலளிப்பது எல்லாம் சரியாக இருக்காது. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் செல்ல வேண்டிய பாதையில் தெளிவாக இருக்கிறேன். எந்தப் பாதையில் பாஜக செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன்.
எனவே, என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் குறித்து நான் பொருட்படுத்துவது இல்லை. அதற்கெல்லாம் நான் பதிலும் சொல்லவில்லை. எனவே, இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
அதிமுக கூட்டணி முறிவு குறித்து அக்கட்சியினர் கருத்துக் கூறி வரும் நிலையில், பாஜக அமைதி காப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் அமைதி காப்பதற்கு ஒன்றும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, 2024-ல் எங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். இது எங்களுடைய கல்யாணம், எங்களுக்கான தேர்தல். அதற்கான வேலைகளை நாங்கள் செய்யப் போகிறோம்" என்றார்.
அப்போது அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, 2024 தேர்தல் முடிவுகள்தான். அந்த முடிவு தெரியாமல், யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் கூறலாம். உள்ளாட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களில் பாஜக தனியாக சென்றதால்தான், மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகியது. எனவே, 2024 தேர்தல் முடிவுகள் வரட்டும். இது மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பதற்கான தேர்தல். எனவே இந்த தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆதரவாகத்தான் இருக்கும்" என்றார்.
அப்போது அவரிடம் அதிமுகவா, பாஜகவா என்று சவால் விடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். இதை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறி வருகிறேன். இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை. திமுகவா, பாஜகவா என்று சவால். 2024 தேர்தலில் அதை பார்த்துவிடலாம்" என்று அவர் கூறினார்.
|
“பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக குறித்து விவாதிக்கவில்லை” - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 14:22:00 |
சென்னை: "பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. பாஜக என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். எப்படியெல்லாம் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது" என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், வியாழக்கிழமை தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் மாநில துணைத் தலைவர்களான கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் பாஜக வெற்றிகரமாக அடியெடுத்து வைக்க வேண்டும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை இருக்கக் கூடிய இந்த 7 மாத காலம், அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பணிகள் இன்றைய கூட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு, பாஜகவைச் சேர்ந்தவர்கள் முழுமூச்சோடு, வேகத்தோடு, ஈடுபாட்டோடு களம் இறங்கி பணிபுரிய வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.
அதிமுக கூட்டணி குறித்து இந்தக் கூட்டத்தில் ஏதாவது விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கெனவே இருக்கிறது. அந்தக் கூட்டணியின் அடிப்படையில், என்னென்ன விஷயங்களை பாஜக கடைபிடிக்க வேண்டும். எப்படியெல்லாம் இந்தக் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது" என்றார்.
மாநில கட்சியான அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டது. தேசிய கட்சியான பாஜக தனது முடிவை எடுப்பதற்கு காலதாமதமாவது என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் இப்போது சொல்லவேண்டிய விஷயங்கள் ஒன்றும் கிடையாது. பாஜகவைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் வருகிறது. அதற்கு முன்பாக 5 மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 5 மாநிலத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் பாஜக இருந்து வருகிறது" என்றார்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் யாருக்கு முன்னடைவு, யாருக்கு பின்னடைவு என்றெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. எங்களை வலிமைப்படுத்தக் கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம். அது நிச்சயமாக இந்த இரண்டு மாதங்களுக்கும் முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.
|
வருமான வரி சோதனை @ ஜெகத்ரட்சகன் | “பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல்” - முதல்வர் ஸ்டாலின் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 13:40:00 |
சென்னை: "ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது.ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கின் கைதும், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் இல்லத்தில் நடந்த சோதனைகளும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு எப்படி அரசியல் நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கான தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது. ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கின் கைதும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் இல்லத்தில் நடந்த சோதனைகளும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு எப்படி அரசியல் நோக்கத்துடன் இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதற்கான தெள்ளத்தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான இத்தகைய திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அமலாக்கத்துறை வெளிப்படைத்தன்மையோடும் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளதை பாஜக வசதியாக மறந்துவிடுகிறது. ஆனால், சட்டத்தையும் மக்களாட்சியையும் துச்சமாக மதித்துச் செயல்படுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளிடையே தொடர்ந்து வளர்ந்து வரும் ஒற்றுமையைக் கண்டு பாஜக அஞ்சி நடுங்குவது இதன் மூலம் நன்கு தெரிகிறது. பழிவாங்கும் நடவடிக்கைகளை விடுத்து உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் கவனம் செலுத்துவது நல்லது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று (அக்.5) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
|
கேஸ் கசிவால் தீ விபத்து: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகரின் மனைவி உள்பட்ட இருவர் உயிரிழப்பு | கி.பார்த்திபன் | நாமக்கல் | 2023-10-05 12:54:00 |
நாமக்கல்: கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகரின் மனைவி உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயம் அடைந்த கேஸ் ஏஜென்சி ஊழியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வீதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (70). வியாழக்கிழமை காலை இவரது வீட்டுக்கு நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் (25) என்பவர் சிலிண்டர் மாற்றுவதற்கு சென்றுள்ளார். அப்போது பார்த்தசாரதி வீட்டின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் என்பவரது மனைவி தனலட்சுமி (60) தனது வீட்டில் கேஸ் சிலிண்டரில் கசிவு உள்ளது. அதை சரி செய்து தரும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து தனலட்சுமி வீட்டுக்கு சென்ற அருண்குமார் அங்கு கேஸ் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்து உள்ளது. தீ பரவியதில் தனலட்சுமி மற்றும் அருண்குமார் ஆகியோர் காயமடைந்தனர். மேலும், தீ பரவியதில் ஏற்பட்ட புகை பார்த்தசாரதி வீட்டிலும் பரவி உள்ளது. இதில் பார்த்தசாரதி மயக்கம் அடைந்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்புத்துறையினர் பார்த்தசாரதி மற்றும் தனலட்சுமி, கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் ஆகிய மூவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பார்த்தசாரதி மற்றும் தனலட்சுமியும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தீக்காயம் அடைந்த அருண்குமாருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
|
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஆசிரியர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 12:25:00 |
சென்னை: "ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட, நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்.
100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் திமுக முதல்வர் ஸ்டாலின், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்", என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
|
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 11:48:00 |
சென்னை: கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்த 12,000 ஆசிரியர்களை, ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று, தேர்தல் வாக்குறுதி எண் 181ல் கூறி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆசிரியர்கள் பல முறை கோரிக்கை வைத்தும், பொய்யான நம்பிக்கை கொடுத்து வந்த திமுக, தற்போது அற வழியில் போராடிய ஆசிரியர்களை, சமூக விரோதிகளைக் கைது செய்வதைப் போல, அத்து மீறிக் கைது செய்திருக்கிறது. வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல என்றாலும், நாட்டின் எதிர்காலமான மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை, இப்படி தரக்குறைவாக நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வீண் விளம்பரத்துக்காக, சிலை வைக்கிறோம், பூங்காக்கள் கட்டுகிறோம் என்று கடன் மேல் கடன் வாங்கி, மக்களைக் கடன்காரர்களாக்கியிருக்கும் திமுக, நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப் பெருமக்களை அவல நிலையில் தள்ளியிருக்கிறது. உடனடியாக, கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
|
முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றும் வசதி: சேலம் கோட்டத்தில் 6 மாதங்களில் 126 பேர் பயன் | க.சக்திவேல் | கோவை | 2023-10-05 10:49:00 |
கோவை: ஒருவரது பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கு எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன? என்பது குறித்து பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. இதனால், பலர் டிக்கெட்டை ரத்து செய்துவிடுகின்றனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் பயணத்தை ரத்து செய்ய வேண்டி வந்தால், முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றித்தரும் வசதி ரயில்வேயில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மட்டும் அதிகபட்சமாக ஈரோட்டில் 42 பேர், கோவையில் 30 பேர், சேலத்தில் 27 பேர், கோவை வடக்கு ரயில்நிலையத்தில் 19 பேர் உட்பட சேலம் கோட்டத்தில் மொத்தம் 126 பேர் பயன்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தனிப்பட்ட நபர் ஒருவர் பயணத்தை ரத்து செய்ய வேண்டி இருந்தால், 24 மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலைய முதன்மை டிக்கெட் கண்காணிப்பாளரிடம் கடிதம் அளித்து, தங்கள் தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவிக்கு பயண முன்பதிவை மாற்றித்தரலாம்.
இதேபோல, பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல முன்பதிவு செய்து, அதில் யாரேனும் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் 48 மணி நேரத்துக்குமுன் தொடர்புகொண்டு, தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றித் தரலாம். இதற்கு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் சார்பில் கடிதம் அளிக்க வேண்டும்.
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு குழுவாகச் செல்ல நினைத்தவர்களில் யாரேனும் சிலர், தங்களது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அந்த பயணக் குழுவின் தலைவர் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கடிதம் அளித்து, டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக் கொள்ள முடியும். தேசிய மாணவர் படையில் (என்சிசி) உள்ள மாணவர்கள் குழுவாக பயணிக்க முன்பதிவு செய்து, யாரேனும் வர இயலாவிட்டால, சக மாணவருக்கு பயண டிக்கெட்டை பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.
கூடுதல் கட்டணம் இல்லை: இவ்வாறு டிக்கெட்டில் பெயரை மாற்றம் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.
முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டுமே பெயர் மாற்ற கோரிக்கை ஏற்கப்படும். பெயர் மாற்ற கடிதத்துடன் உறவினர் என்பதற்கான அடையாள அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
ஆசிரியர்கள் கைது கண்டிக்கத்தக்கது; தீர்வை அரசு திணிக்க கூடாது- அன்புமணி ராமதாஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 10:44:00 |
சென்னை: போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள ஆசிரியர்களை தமிழக அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையாவது ஏற்று அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் 3 வகையான ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை அரைகுறையாக நிறைவேற்றுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், தங்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் கடந்த 11 நாட்களாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருவோர் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 25-ஆம் நாள் முதலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என்று கோரி 27-ஆம் நாள் முதலும், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று 28-ஆம் நாள் முதலும் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்திய ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பல்வேறு கட்டங்களில் நடத்திய பேச்சுகள் வெற்றி பெறாத நிலையில், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடன் நேற்று கலந்தாய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தன்னிச்சையாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
பணி நிலைப்பு கோரி போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 ஊதிய உயர்வு வழங்கப்படும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய 3 உறுப்பினர் குழு அமைக்கப் படும், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் பணிக்காக காத்திருப்போருக்கு ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 58 ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். ஆனால், இது ஆசிரியர்களின் கோரிக்கைகளில் சிறு பகுதியைக் கூட நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மை.பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 12 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 2012&ஆம் ஆண்டில் பணிக்கு சேர்ந்த அவர்களுக்கு 2021 வரையிலான 10 ஆண்டுகளில் ரூ.5000 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப் பட்டிருந்தால் குறைந்தது ரூ.40 ஆயிரம் ஊதியமாக கிடைத்திருக்கும். ஆனால், அதை செய்யாத அரசு, ரூ.2500 ஊதிய உயர்வு வழங்குவது எந்த வகையில் நியாயம்?
அதேபோல், 2009 ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு இணையான பணி செய்யும் இடைநிலை ஆசிரியர்களை விட மாதம் ரூ.16,000 குறைவாக ஊதியம் பெருகின்றனர். இது அநீதி என்று 2018&ஆம் ஆண்டில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இப்போது அதிகாரம் அவரது கைகளுக்கு வந்து விட்ட நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்றுவது தான் சரியானதாக இருக்கும். ஆனால், ஊதிய முரண்பாட்டை களைய ஏற்கனவே பலமுறை குழுக்கள் அமைக்கப்பட்டு, அறிக்கைகள் பெறப்பட்டு விட்ட நிலையில், மீண்டும் ஒரு குழுவை அமைப்பது காலம் தாழ்த்தும் நடவடிக்கையே தவிர வேறு எதுவும் இல்லை.
தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 2018 வரை போட்டித்தேர்வு நடத்தப்படவில்லை. 2018&ஆம் ஆண்டு ஜூலை 20&ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149&இன் படி தான் போட்டித்தேர்வு திணிக்கப்பட்டது. அதை அப்போதே திமுக எதிர்த்தது. அப்படிப்பட்ட அரசாணையை ரத்து செய்வதற்கு கூட திமுக அரசு முன்வரவில்லை என்றால், இந்த அரசுக்கும், முந்தைய அரசுக்கு வேறுபாடு என்ன?
ஆசிரியர்கள் இப்போது முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகள் தான். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு இன்னும் கூடுதல் காலக்கெடு கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசின் இந்த நிலைப்பாட்டை மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஆசிரியர்களின் போராட்டத்தை சரியான முறையில் கையாள தமிழக அரசு தவறி விட்டது. போராட்டம் தொடங்கி 6 நாட்கள் வரை அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கே அரசு முன்வரவில்லை. தாமதமாக அரசு நடத்திய பேச்சுகளிலும் கூட ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படவில்லை. ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அவர்களை அழைத்துப் பேசி, அரசின் நிலைமையை விளக்கி, ஒரு சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அரசு அதன் தீர்வுகளை ஆசிரியர்கள் மீது திணித்தது தான் போராட்டம் தொடர்வதற்கு காரணம் ஆகும்.
இந்த உண்மைகளையெல்லாம் உணராமல், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தங்களின் வாழ்வுரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அடக்குமுறை மூலம் நசுக்க முயலக் கூடாது.
போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள ஆசிரியர்களை தமிழக அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையாவது ஏற்றுக் கொண்டு, மீதமுள்ள கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் அரசு விதைக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
|
குமரியில் தொடர் மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; 2 நாட்களில் 5 பேர் உயிரிழப்பு | செய்திப்பிரிவு | நாகர்கோவில் | 2023-10-05 10:33:00 |
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றும் மழை நீடித்தது. ஆறுகளில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இருந்து விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று பகலில் மிதமான மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு நேற்று 2-வது நாளாக விடுமுறை விடப்பட்டது.
மழை அளவு: பாலமோர், பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், சுருளோடு, தக்கலை, குளச்சல், மாம்பழத்துறையாறு, திற்பரப்பு, கோழிபோர்விளை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருக்கிறது.
நேற்று காலை 8 மணி வரையான24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 110 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குழித்துறை 97 மி.மீ., ஆணைக்கிடங்கு 94,மாம்பழத்துறையாறு 93, கோழிப்போர்விளை 84, களியல் 79, நாகர்கோவில் 72, பெருஞ்சாணி 67, புத்தன்அணை 63, கொட்டாரம் மற்றும் பாலமோர் தலா 62, தக்கலை 59, முள்ளங்கினாவிளை 57, சுருளோடு 56, அடையாமடை 52, சிற்றாறு இரண்டில் 46, சிற்றாறு ஒன்றில் 42, பூதப்பாண்டி 31, பேச்சிப்பாறையில் 29, குருந்தன்கோடு 28, குளச்சல், திற்பரப்பு மற்றும் முக்கடலில் தலா 26, கன்னிமார் 20, இரணியல் 18 மற்றும் ஆரல்வாய்மொழி 10 மி.மீ. மழை பெய்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை: அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் கொட்டித் தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பழையாறு, கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு உட்பட மாவட்டத்தில் உள்ளஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுசீந்திரம் சோழன்திட்டை தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் வாழை, மரவள்ளி, தென்னை, ரப்பர் போன்ற தோட்டக்கலைப் பயிர்களும், மலைப் பயிர்களும் சேதமடைந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அணைகளின் நீர்மட்டம்: பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 30.80 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு 1,546 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து274 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது.
அணைக்கு 1,564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 3 நாளில் 10 அடியாக உயர்ந்துள்ளது. மழை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை நீர்ஆதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மாங்காடு - முஞ்சிறை சாலையில்தண்ணீர் தேங்கியுள்ளது. திக்குறிச்சியில் குடியிருப்புகளையும், குலசேகரம், அருமனை, சுருளோடு, தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தாழக்குடி அருகே மீனமங்கலம் பகுதியில் வீடு இடிந்து ஒருவர் இறந்தார்.
ஆற்றூர் பகுதியில் மழை பாதிப்பால் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.தக்கலை அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி இறந்தார். இதனால் இரு நாட்களில் மழை பாதிப்புக்கு குமரி மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
|
புதுச்சேரி | திமுக எம்.பி. ஜெகரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை சோதனை | செ.ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2023-10-05 08:46:00 |
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி க்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அகரம் கிராமத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி உள்ளது. இன்று விடியற்காலை 2 மணியளவில் சென்னை மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையைச் சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்லூரி நிர்வாகக் கட்டிடம், மருத்துவமனை நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் யாரையும் வெளியில் அனுப்பவில்லை, மேலும் காலை 6 மணி ஷிப்டுக்கு வந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை.
மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லக்கூடிய நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். தொடர்ந்து 8 மணிக்கு மேல் வந்த நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் உள்ளே அனுமதிக்காததால் வாயிலில் காத்திருந்தார்கள். பிறகு 9.30 க்கு மேல் அடையாள அட்டையை பரிசோதித்த பின்பு மருத்துவ மாணவர்களையும், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களையும் உள்ளே அனுமதித்தனர்.
ஜெகத்ரட்சகன் எம்.பியின் சொந்த ஊர் புதுச்சேரியையொட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கலிங்கமலையில் உள்ளது. இவருக்கு புதுச்சேரியில் நட்சத்திர விடுதிகள், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இருப்பினும் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது. இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை பின்னணி: கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே அமலாக்கத் துறை சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அமைச்சர். அதேபோல் அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது திமுக எம்.பி. ஜெகரட்சகன் வீடு, சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
|
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறிக்க அண்ணாமலையை காரணம் காட்டிய அதிமுக? | ஆர்.ஷபிமுன்னா | புதுடெல்லி | 2023-10-05 07:49:00 |
புதுடெல்லி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாத யாத்திரையில் நிகழ்த்தும் உரைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதை காரணம் காட்டி அதிமுக சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதையடுத்து அண்ணாமலை பதவி நீக்கப்படுவார் எனச் செய்திகள் பரவுகின்றன. டெல்லிக்கு சென்ற அண்ணாமலைக்கு கட்சித் தலைமை பலஅறிவுறுத்தல் அளித்து அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுபோன்ற தகவல்கள் இருந்தாலும், கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதற்கு பாஜக கேட்கும் குறிப்பிட்ட தொகுதிகளே காரணம் எனத் தெரியவந்துள்ளது. அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக 15 முதல் 20 தொகுதிகள் வரைஒதுக்க, அதிமுகவிடம் வலியுறுத்தி இருந்தது. இந்த தொகுதிகள் அனைத்தும் திமுக பலம் குறைந்துள்ள தொகுதிகள் என்பது பாஜகவின் கணிப்பு.
இதுபோல், திமுக பலம் குறைந்த தொகுதிகள் அதிமுகவின் பலம் வாய்ந்த தொகுதிகளாக இருப்பது இயல்பாகும். இவற்றை அதிமுகவிடம் இருந்து பறித்து அக்கட்சியின் ஆதரவில் தாம் வெற்றிபெற பாஜக திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. இவற்றில் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்டகொங்கு மண்டலப் பகுதிகள் முக்கியமாக உள்ளன. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிமுகதலைவர்கள், ஒரு குழு அமைத்துஅறிக்கை தயார் செய்திருந்தனர். இந்த அறிக்கை கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற மக்களவை தேர்தல் பற்றிய புள்ளிவிவரங்களை கொண்டிருந்தது.
இந்த அறிக்கையுடன் முன்னாள் முதல்வர் பழனிசாமி கடைசியாக டெல்லிக்கு வந்தபோது மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக கேட்கும் தொகுதிகளை தம்மால் ஒதுக்க முடியாதநிலையை விளக்கியிருந்தார். இதை அமைச்சர் அமித்ஷா சற்றும் ஆர்வம் இன்றி கேட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜகவின் தேசியநிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, “கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பின் எங்கள் தலைமை தமிழகத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறது. மக்களவை தேர்தலில் இங்கு பாஜக கணிசமான தொகுதிகளை பெறுவது முக்கியம். இதில் தாம் பாதிக்கப்படுவதாக கூறி அதிமுக விலகிச் சென்றுள்ளது. இதற்கு தேர்தல் வெற்றிக்கு பின் பாஜக ஆட்சி அமைய உறுதியாக ஆதரவு அளிப்பதாக கூறுகின்றனர். எனினும் அதிமுகவின் கூட்டணி முறிவில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை. இச்சூழலை சமாளிக்க தீவிரமாக யோசித்து வருகிறோம். அதிமுக கூட்டணி முறிவின் மீது அறிக்கை கேட்கவே அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவர் மஞ்சள், தேயிலை தூள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரிவிலக்கு கேட்கவே நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்தார். அண்ணாமலையின் பாத யாத்திரையால் பாஜக வளரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தேவை இல்லை” என்று தெரிவித்தன.
பாஜகவின் இந்துத்துவா அரசியலை தமிழகத்தில் அரங்கேற்றுவது தொடர்ந்து சிக்கலாக உள்ளது. எனினும், ஒரு மாநிலத்தில் செல்வாக்கான கட்சியுடன் கூட்டணி வைத்தே அங்கு பாஜக வளர்வது வரலாறாகி விட்டது. பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், மகாராஷ்டிராவில் சிவசேனா, பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் ஆகியவை பாஜக கால் பதிக்க உதவின. இதுபோன்று தமிழகத்தில் அதிமுகவின் தேவை பாஜகவுக்கு உள்ளது.
ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் வெல்வது கடினம் என்பதை அதிமுக உணர்கிறது.மேலும் தோல்வி அடைந்தால் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் அபாயம் உள்ளதாக அதிமுக கருதுகிறது. எனவே, மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு தேர்தலுக்கு பின் பாஜகவுக்கு ஆதரவளிக்கும் எண்ணத்தில் உள்ளது. இதன் காரணமாக அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கும் என்று தெரிகிறது.
|
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரி சோதனை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 07:28:00 |
சென்னை: திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக்.05) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பூட்டை உடைத்து சோதனை: இதுதவிர பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் சென்றபோது அந்த வீடு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல். மேலும், ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
|
அன்பில் மகேஸ் அறிவிப்புகளை ஏற்க மறுத்து சென்னையில் போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் கைது | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:47:00 |
சென்னை: அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர டிபிஐ வளாகத்தில் மற்றொரு பகுதியில் பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டு நலச்சங்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் கல்வித் துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தை தொடர்வது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அன்பில் மகேஸ் அறிவிப்பு: இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை ஏற்க முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்தபின் அமைச்சர் அன்பில் மகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்த பின்பு சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி பல்வேறு துறைகளில் 1.6.2009-க்கு பிறகு ஆசிரியர் மற்றும் பிற பணிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சம்பள முரண்பாடு, இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது.
இதை ஆய்வுசெய்ய நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித் துறை செயலர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 3 மாதங்களில் அறிக்கை தயாரித்து அதன் முடிவை முதல்வரிடம் சமர்பிக்கும். ஆசிரியர் பணிக்கான உச்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிநியமனம் சார்ந்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. எனவே, அவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இதுதவிர அரசுப் பள்ளிகளில் தற்போது 10,359 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. அவர்களுக்கான ஊதியம் ரூ.2,500 வரை உயர்த்தி வழங்க முடிவாகியுள்ளது. கூடுதலாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் வரையான மருத்துவக் காப்பீடு திட்டமும் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
இதேபோல், பொது நுாலகத் துறையில் 3-ம் நிலை நூலகர் பணியில் 2,058 இடங்கள் உள்ளன. அதில் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஊர்ப்புற நூலகர்கள் 1,530 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 446 பேருக்கு 3-ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்படும். அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போதும் 5 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையே காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. எண்ணும், எழுத்தும் பயிற்சியும் நடைபெற்று வருகிறது. எனவே, ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் தொடரும்... கைது... - அதேநேரம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்புகள் தங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, தங்கள் போராட்டத்தை தொடர்வதாக டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் சங்கங்கள் அறிவித்துள்ளன.
முன்னதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடைநிலை ஆசிரியர்களை நேற்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்வது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
|
விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா: காவல் ஆணையர் அனுமதி கிடைக்குமா? | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:38:00 |
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இதில் த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், பிரியா ஆனந்த்,மிஷ்கின், கவுதம் வாசுதேவ்மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன்ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.வரும் 19-ம் தேதி படம் வெளி யாக உள்ளது.
விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22-ம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான்ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் விஜய், அனிருத், அசல்கோலார் பாடியுள்ளனர். இந்தப்பாடல் வரவேற்பை பெற்றது. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், இதன் இசை வெளியீட்டு விழாவை, கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. ஆனால், கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது. ‘பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டை நடத்தவில்லை’ என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தெரிவித்திருந்தது.
இதையடுத்து லியோ படத்தின்டி ரெய்லர் இன்று (அக்.5)வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக விஜய் பட ட்ரெய்லர் வெளியானால், ரசிகர்களை மகிழ்விப்பதற்காக திரையரங்குகள் அதை ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்வது வழக்கம். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் உள்ள கார் பார்க்கிங்கில் பிரம்மாண்ட ஸ்கிரீன் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, தியேட்டர் நிர்வாகம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, அனுமதி தொடர்பாக காவல் ஆணையரை அணுகுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.
ஏற்கெனவே லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு கொண்டாட்டத்துக்கும் சிக்கல் ஏற்பட்டிருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
அரையாண்டில் ரூ.769 கோடி சொத்து வரி வசூல்: அக்.30-க்குள் செலுத்தி 5% தள்ளுபடி பெறலாம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:35:00 |
சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டில் ரூ.769 கோடி சொத்து வரி வசூல்செய்யப்பட்டுள்ளது. 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல்அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30 வரையிலும், 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
மேலும், முதல் அரையாண்டு சொத்துவரியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள்ளாகவும், 2-ம் அரையாண்டு சொத்துவரியை அக்.30-ம் தேதிக்குள்ளாகவும் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கான முக்கிய வருவாய் இனங்களில் சொத்துவரி பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிதியாண்டில் இதுவரை வசூலிக்கப்பட்ட சொத்துவரி ரூ.769 கோடி ஆகும். இவற்றில் ரூ.321 கோடி இணையதளம் மூலமாக 4 லட்சத்து 77 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
சொத்து வரியை பொதுமக்கள் எளிதாக செலுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, மாநகராட்சியின் சார்பில் சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் சேவை மூலம் நினைவூட்டல் மற்றும் பணம் செலுத்துவதற்கான இணையதள இணைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
இவை அனைத்தும் GCCCRP, GCCPTX, GCCREV, GCCCOV, GCCGEN, GCCTRD, GCCPGR, GCCCER, GCCSER, CHNCRP என்ற முகவரியிலிருந்து அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறான குறியீட்டிலிருந்து அனுப்பப்படும் குறுந்தகவல் சேவையுடன் இணைத்து அனுப்பப்படும் இணைப்பின் வழியாகச் சொத்து உரிமையாளர்கள் எவ்வித தயக்கமுமின்றி சொத்துவரியைச் செலுத்தலாம்.
மேலும், வரி வசூலிப்பாளர்களின் மூலமாக, பிஓஎஸ் கையடக்கக் கருவி உதவியுடன், கடன் மற்றும் பற்று அட்டைகள் (Credit and Debit)மூலமாகச் செலுத்தலாம். மண்டலம்அல்லது வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களிலும் செலுத்தலாம்.
மாநகராட்சியுடன் ஒப்பந்தம் இயற்றியுள்ள குறிப்பிட்ட வங்கிகளில், நேரடியாக பணமாகச் செலுத்தலாம். ‘நம்மசென்னை’, பேடிஎம் செயலிகளிலும் செலுத்தலாம். மாநகராட்சியின் இணையதளம் www.chennaicorporation.gov.in வாயிலாக, இணைய வழியாகவும், சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள கியூஆர் கோடு உதவியுடனும் சொத்துவரி செலுத்தலாம்.
எனவே, சொத்து உரிமையாளர்கள் 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.30-ம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
|
தரிசனத்துக்கு அனுமதிக்காததால் பழநி கோயிலில் பக்தர்கள் - காவலாளிகள் கைகலப்பு | செய்திப்பிரிவு | பழநி | 2023-10-05 06:30:00 |
பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்காததால் பக்தர்கள்- காவலாளிகளுக்கு இடையே தள்ளு முள்ளு, கைகலப்பு ஏற்பட்டது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் பாத விநாயகர் கோயில் அருகேயுள்ள படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு செல்ல முயன்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளிகள் பக்தர்களைத் தடுத்து நிறுத்தினர். மேலும் மலைக்கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்கும் நேரம் முடிந்து விட்டதாக கூறினர்.
இதை ஏற்க மறுத்த பக்தர்கள், மலைக்கோயிலுக்கு செல்ல முயன்று காவலாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென ஆத்திரமடைந்த பக்தர்கள் காவலாளிகளை தள்ளி விட்டனர். இதில் பக்தர்கள், காவலாளிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
4 பேர் சஸ்பெண்ட்: சம்பந்தபட்ட தனியார் நிறுவன காவலாளிகள் செல்வகணபதி, தங்கவே ல், கருப்பையா , ராஜசேகர் ஆகியோரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது.
|
மதுரையில் மேல்நிலை குடிநீர் தொட்டி மீது பாதுகாப்பு உபகரணம் இன்றி பணிபுரியும் தொழிலாளர்கள் | செய்திப்பிரிவு | மதுரை | 2023-10-05 06:28:00 |
மதுரை: மதுரை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிகிறார்கள்.
மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 100 வார்டுகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இத்திட்டத்தில் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து வரும் குடிநீரை, விநியோகம் செய்ய மாநகராட்சி பகுதியில் 47 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்படுகின்றன. இதில் பெரும்பாலான குடிநீர் தொட்டிகள் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில், சில இடங்களில் இன்னும் பணிகள் நடக்கின்றன.
பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமானப் பணி நடக்கிறது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், கவச உடைகள் இன்றி பணிபுரிகிறார்கள். சிறு அசம்பாவிதம் ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்தானதாகும். எனவே, மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள், கவச ஆடைகள் அணிந்து பணிபுரிகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
|
‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக அரசு தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவு ரத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:25:00 |
சென்னை: ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் வகையில் முந்தைய உத்தரவை திரும்பப்பெற்ற தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020 ஜன.14 அன்று ‘துக்ளக்’ பத்திரிகையின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள்குறித்து தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு முந்தைய உத்தரவை ரத்து செய்து, குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்குதொடர அனுமதி கோரி தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரத்திடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தார். அதையடுத்து முந்தைய உத்தரவை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திரும்பப்பெற்றார்.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எஸ்.குருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, மனுதாரரான துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரும் வகையில், முந்தைய அரசு தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற்ற தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்தார்.
|
புகையிலை பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:20:00 |
சென்னை: தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுநீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் குட்கா, பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, மேற்கொண்டு வருகிறது.
உணவகங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் கடந்த ஆக.28-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஷவர்மா, மீன் மற்றும்அனைத்து வகையான இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும்15,236 உணவகங்களை ஆய்வுசெய்து, 1,572 உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வதுகண்டறியப்பட்டு, 5,018 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ரூ.8,79,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 23கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், தேங்காய் சட்னி, தயிர் மற்றும் மோர் ஆகிய உணவு பொருட்களின் தரம் குறித்தும் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 7,760 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 238 கடைகளில் தரம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு, 213 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,47,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட தொகை ரூ.10,26,800 ஆகும்.
உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி, புகையிலை மற்றும் நிகோடினை சேர்மானமாகக் கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அமல்படுத்தியது. இந்த தடையை ஆண்டுதோறும் நீட்டித்துவருகிறது. அதன்படி, இத்தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து உணவுப் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
191.1 டன் பறிமுதல்: கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் அளவிலான குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளது. 603 உணவுமாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, 535 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது என அறிக்கை பெறப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ரூ.21.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 35 உணவு மாதிரிகள் தரம் குறைவானது என அறிக்கை பெறப்பட்டு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ரூ.2.93 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவு நிறுவனங்களில் 1,67,986இணையவழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. 48,217 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, 2,975 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது எனவும், 9,720 உணவு மாதிரிகள் தரமற்றது எனவும், பகுப்பாய்வறிக்கை பெறப்பட்டது.
அதனடிப்படையில், உரிமையியல் நீதிமன்றத்தில் 9,093 வழக்குகள் தொடரப்பட்டு ரூ.7.97 கோடி அபராதமும், குற்றவியல் நீதி மன்றத்தில் 2,063 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.40 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உணவின் தரம் குறித்த புகார்களை TN Food Safety Consumer App மூலமாகவும், 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
சென்னை விமான நிலையத்தில் இணையதள பிரச்சினை: 20 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:18:00 |
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இணையதள பிரச்சினையால் 20விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயணம் செய்யவரும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள், அந்தந்த விமான நிறுவன கவுன்ட்டர்களில் கம்ப்யூட்டர்கள் மூலமாக வழங்குவார்கள். அந்த கம்ப்யூட்டர்கள் இயங்குவதற்கான இணையதளங்கள் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரைஇயங்கவில்லை.
இதனால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்களை வழங்கமுடியவில்லை. அந்தந்த விமானநிறுவன கவுன்ட்டர்களில் உள்ள ஊழியர்கள், போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர்.
இதனால் ஒவ்வொரு கவுன்ட்டர்களிலும், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டியது நிலை ஏற்பட்டது. இதனால் விமானங்களில் பயணிகள் ஏறுவதும் தாமதம் ஆகி, சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இதனால், துபாய், சார்ஜா,தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்களும், அந்தமான், ஆமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் எனமொத்தம் 20 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
|
ரூ.2 கோடி வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு கவனிக்காத மகள்கள்: முதியவரின் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆணையர் உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:13:00 |
சென்னை: ரூ.2 கோடி மதிப்புடைய வீட்டுடன் கூடிய நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு மகள்கள் தன்னை கவனிக்கவில்லை. எனவே, தான் எழுதிக் கொடுத்த தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என முதியவர் அளித்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராஜகோபால் (84)என்பவர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘வளசரவாக்கம், திருப்பூர் குமரன் தெருவில் ரூ.2 கோடி மதிப்பில் எனக்கு வீட்டுடன் கூடிய நிலம் இருந்தது. என்னை நன்றாகக் கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்து, எனது 5 மகள்கள் மற்றும் மருமகன்கள் அந்த இடத்தை தான செட்டில்மென்ட் பெற்றுக் கொண்டனர். தற்போது அவர்கள் உறுதி அளித்தபடி என்னை கவனிக்கவில்லை. எனவே, நான் எழுதிக்கொடுத்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்துசெய்ய வேண்டும்’’ எனக் கூறி கண்ணீர் வடித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், முதியவர் ராஜகோபால் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையருக்கு உத்தரவிட்டார். அதன்படி, நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களிடம் நேற்று 18 புகார் மனுக்களையும், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் 25 போலீஸாரிடமிருந்து மனுக்களையும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது துணைஆணையர் எஸ்.ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்) மற்றும்போலீஸார் உடனிருந்தனர்.
|
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ‘சாதாரண் வந்தேபாரத்’ ரயில் இம்மாத இறுதியில் அறிமுகம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:10:00 |
சென்னை: ஏழை எளிய நடுத்தர மக்களும் பயணிக்கும் வகையில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ‘சாதாரண் வந்தேபாரத்’ ரயில் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த மாத இறுதியில் இந்த ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தேபாரத் வகை ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்லவரவேற்பு கிடைத்து வருகிறது. இங்கு, இதுவரையில் 35 வந்தேபாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 34 ரயில்கள் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ‘ஏசி’ பெட்டிகளாகவும், சொகுசு ரயிலாக இருக்கின்றன. மற்ற விரைவு ரயில்களை ஒப்பிடுகையில், கட்டணமும் அதிகமாக இருப்பதாக பயணிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சித்தரஞ்சன் தொழிற்சாலை: இதற்கிடையே, சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களும் ‘வந்தே பாரத்’ போன்ற வசதிகளை பெற, முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் கூடிய சாதாரண் வந்தேபாரத் அல்லது அந்த்யோதயா வந்தேபாரத் என்ற பெயரில் இயக்கரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, 2 சாதாரண் வந்தேபாரத் ரயில்கள் தயாரிப்பு பணி ஐசிஎஃப் தொழிற்சாலையில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வந்தேபாரத் ரயில் போன்ற வசதிகளோடு சில மாற்றங்களை செய்து, சாதாரண் வந்தேபாரத் ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்த ரயிலில்,தனியாக இன்ஜின்கள் இருபுறமும் பொருத்தப்படும். மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில், இதற்கான இன்ஜின்கள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
இந்த ரயிலில், 8 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், மூன்றாம் வகுப்பு ‘ஏசி’ பிரிவில் 12 பெட்டிகள், மாற்றத்திறனாளிகள், லக்கேஜ் உட்பட மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும். இந்த வகை ரயில் பெட்டிகள் தயாரிப்புபணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
முதல் ரயிலை இந்த மாதஇறுதியில் அறிமுகப்படுத்த உள்ளோம். அதன்படி, இந்த ரயிலை தயாரித்து ரயில்வேவாரியத்துக்கு தகவல் தெரிவிப்போம். எந்த ரயில்வே மண்டலத்துக்கு அனுப்புவது என்பது தொடர்பாக வாரியம் முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அன்புமணி வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:08:00 |
சென்னை: நிதி நெருக்கடி காரணமாக கிடப்பில் போடாமல் சென்னை விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் வட எல்லையான எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 50 கிமீ பயணிக்க வேண்டும்.
அதற்கு வசதியாக பொதுப் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பேருந்து வசதிகளை ஒரு கட்டத்துக்கு மேல் அதிகரிக்க முடியாது என்பதால், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள்மூலமாக மட்டுமே அதிக எண்ணிக்கையிலான பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை வழங்க முடியும். அதற்கு கிளாம்பாக்கம் முதல் ஏற்கெனவே மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம் வரை புதிய ரயில் பாதை ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
திட்டச் செலவு ரூ.4,080 கோடி: கிளாம்பாக்கம் - விமான நிலையம்இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2021-ம் ஆண்டே தயாராகிவிட்டது. அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதற்கு ஓராண்டுக்கு மேல் ஆனது. மொத்தம் ரூ.4,080 கோடி தேவைப்படும் 15.30 கி.மீ. நீளம் கொண்ட இந்த திட்டத்துக்கு தமிழக அரசுதான் முழுமையாக நிதி வழங்க வேண்டும்.
ஏற்கெனவே ரூ.61,843 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்காததால், அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.10,000 கோடியை தமிழக அரசே ஒதுக்கி வருவதாகவும், இத்தகைய சூழலில் கிளாம்பாக்கம் - விமான நிலையம் திட்டத்துக்கும் நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசு தாமதிக்க கூடாது: சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் மிக முக்கியமான திட்டம்ஆகும். இத்திட்டத்தை செயல்படுத்த நிதி தடையாக இருக்கக் கூடாது. நிதி நெருக்கடி காரணமாக கிடப்பில் போடக் கூடாது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசிடம் நிதி கோரி 2 ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு அதன் பங்கு நிதியை வழங்கவேண்டும். தமிழக அரசும் பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் நிதியுதவி பெற்றாவது விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
சாதிவெறி தாக்குதலைத் தடுப்பதற்கு தனி நுண்ணறிவு பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:07:00 |
சென்னை: விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சார்ந்த இளம்பெண் சந்தியா (18) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருதலைக் காதல் விவகாரத்தில் கொலை செய்த ராஜேஷ் கண்ணன்எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சந்தியா குடும்பத்தினருக்கு எஸ்சி, எஸ்டிவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அரசு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசுப் பணி வழங்க வேண்டும்.
சாதியப் படுகொலைகளையும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும் தடுக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், சாதிவெறி, மதவெறி தாக்குதல்களை தடுக்கும் வகையில் தனிநுண்ணறிவுப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
குஜராத் ஓகா - மதுரை - சிறப்பு ரயில் சேவை டிசம்பர் வரை நீட்டிப்பு | செய்திப்பிரிவு | மதுரை | 2023-10-05 06:05:00 |
மதுரை: ஓகா - மதுரை - ஓகா சிறப்பு ரயில் சேவையை டிசம்பர் வரை நீட்டித்து மேற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஓகா - மதுரை சிறப்பு ரயில் (09520) ஓகாவிலிருந்து அக்டோபர் 2, 9, 16, 23, 30 நவம்பர் 6, 13, 20, 27 டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 11.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் மதுரை - ஓகா சிறப்பு ரயில் (09519) மதுரையிலிருந்து அக்டோபர் 6, 13, 20, 27 நவம்பர் 3, 10, 17, 24 டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10.25 மணிக்கு ஓகா சென்று சேரும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2 மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது என மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரி சோதனை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:04:00 |
சென்னை: பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு சென்னை, கோவை, மங்களூரு, கொச்சி உள்ளிட்ட 9 இடங்களில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை, காலிமனை விற்பனையில் வந்த வருமானத்தை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பு செய்துமத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக இந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த வகையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருவதால், சோதனை முழுமையாக முடிந்த பிறகே வரி ஏய்ப்பு விவரங்களை வெளியிட முடியும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் திட்டவட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:03:00 |
சென்னை: சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரான எம்.முனுசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளைச் சேர்ந்த சமூகத்தினர் வசிக்கின்றனர். குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களும், வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களும் அதிகமாக உள்ளனர்.
சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் அரசின் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் அனைவருக்கும் சமமாக சென்றடையும். பட்டியலின, பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
எனவே சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு அளித்துள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
எனவே சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி மனுதாரரின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகும்படி அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது.
|
மாநிலக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை; இறுதிகட்டத்தில் மொழி பெயர்ப்பு பணி: அடுத்த கல்வியாண்டு அமலுக்கு வரும் என தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 06:00:00 |
சென்னை: மாநிலக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தமிழில் மொழிப் பெயர்க்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படிமாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக இந்த குழுவினர் ஏற்கெனவே பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்தனர்.
இதையடுத்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவறிக்கை தயாரிக்கும் பணியில் குழுவினர் ஈடுபட்டனர். அனைத்து பணிகளையும் முடித்து ஜூன் மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிக்கை தயாரிப்பு முடிவடையாததால் இந்த குழுவுக்கு செப்டம்பர் மாதம் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி மாநில கல்விக் கொள்கை குழுவினர் சுமார் 500 பக்கங்கள் வரையான வரைவு அறிக்கையை கடந்த மாதம் தயார் செய்தனர். அதற்கு ஒட்டுமொத்த குழுவின் ஒப்புதலும் கிடைத்தது. அந்த வரைவு அறிக்கையை தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் சிலர்கூறும்போது, ‘‘மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வடிவமைக்கப்பட்டு, தமிழில் மொழிப் பெயர்க்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
அறிக்கையில் செய்தசில திருத்தங்களால் சற்று தாமதமாகிவிட்டது. எனினும், சிறந்தமுறையில் வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளோம். மேலும், தமிழக முதல்வரின் அனுமதி பெற்று விரைவில் அரசிடம் இந்த வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதிலுள்ள அம்சங்கள் அடுத்த கல்வியாண்டு (2024-25) முதல்அமலுக்கு வரும்’’ என்று தெரிவித்தனர்.
|
திமுகவின் கனவை கலைத்த அதிமுக-பாஜக பிரிவு: தமிழகத்தின் அரசியல் களம் மாறுமா? | கி.கணேஷ் | சென்னை | 2023-10-05 05:49:00 |
சென்னை: மக்களவைத் தேர்தலில் தொகுதி உடன்பாட்டை தனக்கு சாதகமாக்க நினைத்த திமுகவின் கனவை, அதிமுக-பாஜக பிரிவு கலைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பை நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்நோக்கியுள்ளன. பாஜகவை வீழ்த்தியாக வேண்டும் என்ற நோக்கில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கி, தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன.
அதேநேரத்தில், 5 மாநில தேர்தல்களில் தனது இருப்பை நிலைநிறுத்தும் பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அமித்ஷா, 5 மாநில தேர்தலுடன், மக்களவைத் தேர்தலுக்கும் சேர்த்து கட்சியின் நிலைப்பாடுகளை உருவாக்கி வருகிறார்.
இதற்கிடையில், தமிழகத்தின் அரசியல் களம் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி தவிர்த்து, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் தனித்தனியாகப் போட்டியிட்டன.
திமுக கூட்டணியில் திமுக நேரடியாக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., விசிக ஆகியவை தலா 2, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், ஐஜேகே தலா 1 தொகுதிகளில் போட்டியிட்டன. அதேபோல, அதிமுக கூட்டணியில் அதிமுக 20, பாமக 7, பாஜக 5, தேமுதிக 4, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமாகா, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
2024 மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணி வியூகத்துடன் இரு கட்சிகளும் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை முன்னிறுத்தி திமுக சார்பில் இண்டியா கூட்டணிக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
தலைகீழ் மாற்றம்: அதிமுகவைப் பொறுத்தவரை கட்சித் தலைவர்கள் மத்தியில் சிறு சிறு கருத்து மோதல்கள் இருந்தாலும், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன்தான் கூட்டணி என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல், தமிழக அரசியல் களத்தை தலைகீழாக மாற்றியுள்ளது. பிரிந்த இரு கட்சிகளும் புதிய கூட்டணிகளை எதிர்பார்க்கும் நிலையில், திமுகவின் கனவு கலைந்து, நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, பெரும்பான்மையில் சிக்கல் உருவானால், அதிக எம்.பி.க்களுடன் தனக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது திமுகவின் எதிர்பார்ப்பு. ஆனால், தற்போதைய அரசியல் சூழலால், தொகுதிப் பங்கீட்டில், கூடுதல் இடங்களை விட்டுக் கொடுக்கும் நிலை திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் தனது கட்சியினரை நிறுத்திவிட்டு, காங்கிரஸுக்கு 5 அல்லது 7 தொகுதிகளைத் தந்து, இதர கட்சிகளுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகளை வழங்கும் திட்டத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், அதிமுக தற்போது பாஜகவை வெளியேற்றிவிட்டு, புதிய கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறது. அதேபோல, அதிமுகவை தவிர்த்து, இதர கட்சிகளை சேர்த்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலைவிட காங்கிரஸ் கூடுதலாக 5 தொகுதிகளையும், இதர கட்சிகள் கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகளையும் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதிமுக-பாஜக கூட்டணி முறிவு, இந்தக் கட்சிகள் தங்கள் தேவையை கேட்டுப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி முறிவை விமர்சிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளில் சில, தங்களின் கூட்டணி தொடர்பாக மவுனம் சாதித்து வருகின்றன. இது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவுடன் மநீம கூட்டணி: இதைத் தவிர்க்கவே, அதிமுக-பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் என்று திமுக தலைவர்கள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகிய நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது மநீம கூடுதல் இடங்களைக் கேட்கும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தற்போதைய நிலை குறித்துப் பேச திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. இதற்காக விரைவில் மூத்த நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
|
புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது குறித்த மருத்துவ ஆணைய அறிவிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | செய்திப்பிரிவு | கூறியிருப்பதாவது | 2023-10-05 05:41:00 |
சென்னை
புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க, மாநில மக்கள்தொகை அடிப்படையில் கட்டுப்பாடு விதிப்பதை ஏற்க முடியாது. எனவே, இதுகுறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தும் வரை, தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற அடிப்படையிலேயே, 50, 100 அல்லது 150 இடங்கள் கொண்ட ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி கடிதம் அளிக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இது, அனைத்து மாநிலங்களின் உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பு. மேலும், கடந்த பல ஆண்டுகளாக மாநிலத்தின் சுகாதார கட்டமைப்புக்காக அதிக அளவில் முதலீடு செய்து வரும் மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கும் செயல்.
தற்போது இந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ள அளவுகோலின்படி, மருத்துவர் - மக்கள்தொகை அளவு என்பது மாநில அளவிலான விதிமுறைகளை ஒப்புநோக்கும்போது பொருந்தாததாக உள்ளது. மாநில அளவில் போதிய மருத்துவர்கள் இருந்தாலும், மாவட்ட அளவில் கிடைப்பது தொடர் பிரச்சினையாகவே இருக்கும். அந்தந்த பின்தங்கிய பகுதிகளில் மருத்துவ கல்லூரியை திறப்பதன் மூலமாகவே இப்பிரச்சினையை தீர்க்க முடியும்.
மாநில அளவிலான அளவுகோல் அடிப்படையில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, தகுதியான மாவட்டங்களில் இதுபோன்ற சுகாதார நிறுவனங்கள் வருவதை தடுத்துவிடும்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறையினரின் தொடர் முதலீடுகளாலேயே, மருத்துவர்கள் - மக்கள்தொகை விகிதம் அதிகமாக உள்ளது. மத்திய அரசின் முதலீடு இதில் இல்லை என்ற உண்மையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நாங்கள் பல்வேறு திட்டங்களை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியபோதும், மதுரை எய்ம்ஸ் திட்டம் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. இந்த சூழலில், புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விதிக்கப்பட்டுஉள்ள கட்டுப்பாடுகள், எதிர்காலத்தில் மருத்துவ துறையில் மத்திய அரசின் புதிய முதலீடுகளை முற்றிலும் தடுத்துவிடும். மேலும், கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்கான அடிப்படை உரிமை மீது எந்த ஒரு நிர்வாக அறிவுறுத்தல் மூலமாகவும் கட்டுப்பாடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு, இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தவும், அதுவரை தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கையை நிறுத்தி வைக்கவும் மத்திய சுகாதாரத் துறைக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
|
போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 05:35:00 |
சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்ட நிலையில், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். துறை செயலர் காகர்லா உஷா, இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை ஏற்க முடிவு செய்யப்பட்டது. ‘பகுதிநேர ஆசிரியர்களின் மாத தொகுப்பூதியம் ரூ.2,500 வரை உயர்த்தி வழங்கப்படும். ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு 3 மாதத்தில் அறிக்கை அளிக்கும். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு உயர்த்தப்படும்’ என்று அமைச்சர் தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
|
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் மகன்கள் உட்பட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை | செய்திப்பிரிவு | திருச்சி | 2023-10-05 05:30:00 |
திருச்சி: திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகேயுள்ள வேலக்குறிச்சியை சேர்ந்தவர் பி.எம்.செங்குட்டுவன். இவர் 1996 சட்டப்பேரவைத் தேர்தலில்மருங்காபுரி தொகுதியில் வென்று, திமுக அமைச்சரவையில் இடம்பெற்றார்.
இவர் அமைச்சராக இருந்தகாலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.42 லட்சம்மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2003-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், செங்குட்டுவன், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள்மீனாட்சி, அவரது கணவர் ராஜலிங்கம், சகோதரர் மகள் வள்ளி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.இந்த வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி கே.பாபு நேற்று தீர்ப்பளித்தார். இதில், பன்னீர்செல்வம், சக்திவேல், மீனாட்சி, வள்ளி ஆகிய 4 பேர் ஊழலுக்கு உடந்தையாக இருந்ததால், தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் பி.எம்.செங்குட்டுவன், அவரது மருமகன் ராஜலிங்கம் ஆகியோர் உடல் நலக்குறைவால் வழக்கும்நடைபெறும்போதே மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இருப்பதால், 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
|
மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் சப்தமிட்ட நபர்; ‘சிபில் ஸ்கோர்’ குறைவாக இருந்ததால் கடனுதவி வழங்கப்படவில்லை: வங்கி தரப்பில் விளக்கம் | செய்திப்பிரிவு | கோவை | 2023-10-05 05:02:00 |
கோவை: கோவையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாபெரும் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, அரங்கில் நுழைந்த நபர் ஒருவர், வங்கிக்கடனுதவி பெற விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என சப்தமிட்டார். இதையடுத்து, அந்த நபரை மேடைக்கு அழைத்துப் பேச வாய்ப்பு வழங்கிய மத்திய அமைச்சர், அவரது புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள்கூறும்போது, "கடன் வழங்கும்போது ‘சிபில் ஸ்கோர்’ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில், பலமுறை கோரிக்கை விடுத்தும் கடனுதவி வழங்கவில்லை என்று சதீஷ் என்பவர் பேசினார்.
ஏற்கெனவே பெற்ற கடனைசரியாக செலுத்தாததால் அவரது‘சிபில் ஸ்கோர்’ குறைவாக உள்ளது. எனவேதான் அவருக்குகடனுதவி மறுக்கப்பட்டுள்ளது. தன்னிடம் தவறை வைத்துக்கொண்டு, பெரிய விழாவில் இடைமறித்து சப்தமிட்டபோதும்,மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்நபரிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொண்டார்" என்றனர்.
விழாவில் முறையிட்ட சதீஷ்‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
மத்திய அமைச்சரிடம் முறையிட்ட பின்னர் மண்டல மேலாளர், என்னை அழைத்துப் பேசினார். இதுவரை நான் வங்கிக்கு பலமுறை சென்றபோதும் உயரதிகாரிகளாகிய நீங்கள் குறைகளைக் கேட்கவில்லை, தற்போதுதான் கேட்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர், என்னை மீண்டும் அழைத்துப் பேசுவதாக கூறினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவால் நடைபயணம் தள்ளிவைப்பு: சென்னை கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 04:52:00 |
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அக்.6-ம் தேதி நடைபெற இருந்த நடைபயணம் அக்.16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்று நடக்க இருக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை திட்டமிட்டபடி பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் அண்ணாமலை அக்.3-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, அக்.4-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தனது 3-ம் கட்ட நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையில் நடைபயணத்தை அக்.6-ம் தேதி மாற்றியமைத்துவிட்டு, அண்ணாமலை உடனடியாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ், நிர்மலா சீதாராமன் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார். இதையடுத்து, நேற்று முன்தினம், இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் அண்ணாமலை சென்னை திரும்பினார்.
இந்நிலையில், அண்ணாமலைக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருமல், உடல் வலி, தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை நுரையீரல் துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு சுவாசக் குழாயில் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து, வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர். இதனால், அண்ணாமலையால், 6-ம் தேதி தொடங்க இருந்த நடைபயணத்தில் பங்கேற்க முடியாது என்றும் எனவே, நடைபயணத்தை 16-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாகவும் பாஜக அறிவித்துள்ளது.
அதேசமயம், பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலை தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அமைந்தகரையில் திட்டமிட்டபடி நடைபெறும்.இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய தகவலை அண்ணாமலை வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
|
ஏழை, எளிய மக்களுக்கான நலத் திட்டங்களில் தொய்வு, தாமதமின்றி பணியாற்றுங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-05 04:45:00 |
சென்னை: ஏழை, எளிய மக்களுக்கு நலம் தரும் திட்டங்களில் எந்தத் தொய்வும், தாமதமும் இன்றி பணியாற்றுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற 2 நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல்நாளில், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்த மாநாட்டு தொடக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஆட்சியர்கள், காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற இரண்டாம் நாளான நேற்று மாநாட்டின் நிறைவு விழா நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:
எந்தவொரு திட்டத்தையும் முதல்வரின் திட்டமாக, ஒரு கட்சி சார்ந்த திட்டமாகக் கருதாமல், அலுவலர்கள் அனைவரும் தங்கள் கனவுத் திட்டமாக, மக்களுக்கான திட்டமாக நினைத்து, அதை முழு ஈடுபாட்டோடு நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அது மக்களுக்கு நன்மை பயக்கும்.
திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்பார்கள். அதிகாரிகள் நினைத்தால் அவை வளரும்; அதிகாரிகள் புறக்கணித்தால் அது மெலியும். அதிகாரிகள் என்பவர்கள் தனி மனிதர்களாக இருக்க முடியாது. செயல்படவும் முடியாது. அவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இருந்து சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து செயல்பட வேண்டும். அத்தகைய காலம்தான் பொற்காலமாக அமையும்.
மாவட்ட ஆட்சியர்களால் மாவட்டங்களில் இயங்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்க இயலும். அதனை திறம்படச் செய்து, அரசுத் திட்டங்களின் மூலம் மக்கள் முழுப் பயனையும் பெறச் செய்ய வேண்டும்.
தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களில் ஏழை எளிய மக்களிடையே, குறிப்பாக, மகளிரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இத்திட்டத்தில் சுமார் 1.63 கோடி மகளிருக்கு, எந்தவித சிரமுமின்றி, சீரிய முறையில் விண்ணப்பங்களை வழங்கி, பின்னர் பூர்த்தி செய்த படிவங்களைத் திரும்பப் பெற்றதே மாபெரும் சாதனையாகும்.
அந்த விண்ணப்பங்களைக் குறைந்த காலத்துக்குள் ஏற்கெனவே உள்ள தரவுகளுடன் கணினி தொழில்நுட்ப உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதன்மூலம் தகுதியுள்ள சுமார் 1.06 கோடி மகளிர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைத்தது. அதே நேரத்தில், இத்திட்டத்தில் விடுபட்டவர்கள் தற்போது விண்ணப்பம் அளித்து வருகிறார்கள். அவற்றையெல்லாம் முறையாக, விரைவாகப் பெற்று, ஆய்வு செய்து, அவற்றின்மீது விதிகளின்படி தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் தொழில் துறையின் வளர்ச்சிக்காக பல கொள்கைகளையும் வெளியிட்டு, அந்நிய முதலீட்டாளர்களை ஈர்த்து, அதன்மூலம் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க அரசு அரும்பாடுபட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக, நம்முடைய திட்டங்களின் மூலம் கல்வி, சமூகம், பொருளாதாரம் என்ற அனைத்துத் தளங்களிலும் நம் மாநிலம் தற்போது சரியான பாதையில் நடைபோடுகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு நலம் தரும் திட்டங்களில் எந்தத் தொய்வும், தாமதமும் இல்லாதவாறு பணியாற்றுங்கள். இதனை நீங்கள் மனதிலே கல்வெட்டாகச் செதுக்கி வைத்துக் கொண்டு செயல்பட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு அது வளர்ச்சியைத் தரும். மகிழ்ச்சியைத் தரும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடங்குவதற்கு முன்னதாக உங்களது பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
|
கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு | அ.அருள்தாசன் | திருநெல்வேலி | 2023-10-04 21:57:00 |
திருநெல்வேலி: திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் 19 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு கூறியுள்ளது.
பாளையங்கோட்டை அருகே ஆரோக்கியநாதபுரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி நடைபெற இருந்த புதிய தமிழகம் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது காரில் சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை- தூத்துக்குடி நெடுஞ்சாலையிலுள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே அவரது கார் சென்றபோது, திடீரென்று ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. கார் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு வேகமாக காரை ஓட்டிச் சென்றதால் டாக்டர் கிருஷ்ணசாமி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவத்தை அடுத்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அப்போது பதற்றம் நிலவியது.
டாக்டர் கிருஷ்ணசாமியை நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து மொத்தம் 15 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் வன்கொடுமைகள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 15 பேரில் சங்கர், திரவியம், மதன் ஆகிய 3 பேர் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி பத்மநாபன் இன்று தீர்ப்பு கூறினார். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திருநெல்வேலி ராமையன்பட்டியை சேர்ந்த டி. சிவா என்ற சிவலிங்கம் (46), பி. லெட்சுமணன் (41), மூன்றடைப்பு அருகே பானான்குளத்தை சேர்ந்த எம். தங்கவேல் (53) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் வெடிபொருட்கள் சட்டத்தின்கீழ் இவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், உடமைகளை சேதப்படுத்துதல் தடுப்பு சட்டத்தின்கீழ் 2 ஆண்டு, எஸ்.சி. சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 19 ஆண்டுகளுக்குப்பின் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
|
கூட்டணி, தேர்தல் குறித்து பேசக் கூடாது என தெரிவிக்கப்பட்டதாக செல்லூர் ராஜூ தகவல் | ஒய். ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2023-10-04 20:49:00 |
மதுரை: “அதிமுக கூட்டணி குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேச வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதில்களை எங்களுடைய பொதுச் செயலாளர் தெரிவிப்பார்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.1296 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பணிகள் எந்த அளவு நடைபெற்று வருகிறது என தெரியவில்லை. மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் தலையிட்டு இந்தத் திட்டத்தின் கீழ் பணம் வசூல் பண்ணுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழாய் பதிப்பது தொடர்பாக 8000 முதல் 25 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதனை கண்காணிக்க வேண்டும். முடிக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகள் பம்பிங் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். அவசரகதியில் இந்த குடிநீர் திட்டப் பணிகளை செய்யக்கூடாது.
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தினால் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் பயன்பெறும். இதனால் வரும் 50 ஆண்டுகளுக்கு மதுரையில் தண்ணீர் பிரச்சினை இருக்காது. மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் தங்கும் வசதிகளையும் அவர்களுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் விளையாட்டு துறை அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்கள், அதிமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது “அதிமுக கூட்டணி குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேச வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதில்களை எங்களுடைய பொதுச் செயலாளர் தெரிவிப்பார்” என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
|
மதுரை - தென்காசி நான்கு வழிச் சாலை முழுமையாக போடப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு | ஒய். ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2023-10-04 20:20:00 |
மதுரை: தென் தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மதுரை-தென்காசி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை, மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல், குன்னத்தூர், டி.கல்லுப்பட்டி, அழகாபுரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் போன்ற முக்கிய நகரங்களை கடந்து தென்காசி செல்கிறது. சுமார் 160 கிமீ., காணப்படும் இந்த சாலையில் மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், சதுரகிரி மகாலிங்கம், தென்காசி காசி விஸ்வநாதர், பாபநாசம் போன்ற முக்கிய ஆன்மீக ஸ்தலங்களும், குற்றாலம் போன்ற சிறந்த சுற்றுலா ஸ்தலங்களும் உள்ளன.
குற்றால சீசனுக்கும், சபரிமலை சீசனுக்கும் இந்த சாலை வழியாகதான் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கும், தென்காசிக்கும் சென்று வருகிறார்கள். இப்படி ஆன்மீகம், சுற்றுலா மற்றும் வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வந்தும், நான்கு வழிச்சாலையாக மாற்றப்படாமல் இரு வழிச்சாலையாக இருந்து வந்தது. எனினும், இந்த சாலையின் இரு புறமும் வழிநெடுக நிழல் தரும் மரங்கள் பசுமைப்போர்வை போல் ரம்மியமாக காணப்பட்டதால் இந்த சாலையில் பயணிப்பது பொதுமக்களுக்கு புத்துணர்வை தருவதாக இருந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கடையநல்லூர், சங்கரன் கோயில் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை என்பதால் இது பீக் ஹவர் மட்டுமில்லாது நாள் முழுவதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருக்கும். அதனால், மதுரை திருமங்கலத்தில் இருந்து 160 கி.மீ., தொலைவில் உள்ள தென்காசிக்கு பஸ்சில் செல்வோர் 5.30 - 6 மணி நேரமும், காரில் செல்வோர் 4 - 5 மணி நேரமும் பயணம் செல்லும் நிலை உள்ளது. மதுரையில் இருந்து தென்காசி, கேரளா செல்வோருக்கு வேறு மாற்று சாலை வசதியில்லாததால் இந்த சாலையைதான் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
மேலும் இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக பராமரிக்காததால் அதிகளவு வாகன விபத்துகள் நடக்கும் சாலையாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாகவே இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் மட்டுமில்லாது, கேரளாவை சேர்ந்த மக்களும் வலியுறுத்தி வந்தனர். தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டநிலையில் இந்த கோரிக்கை இன்னும் வலுப்பெற்றது.
அதனடிப்படையில் இந்த சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை 71.6 கி.மீ தொலைவிற்கு ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின்கீழ் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு ரூ.1264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் இருந்து தொடங்கும் இந்த நான்கு வழிச்சாலை டி.கல்லுப்பட்டி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வரை பை-பாஸ் சாலை வழியாக செல்கிறது.
ஆனால், இந்த சாலையை ராஜபாளையம் வரை மட்டுமே போடுவதால் எந்த பயனும் இல்லை. ராஜபாளையத்தில் இருந்து தென்காசி வரை இரண்டாம் கட்டமாக நான்கு வழிச்சாலை போடுவதற்கு நிலம் கூட இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் விரைவுப்படுத்தப்படவில்லை. ராஜபாளையம் - தென்காசி வரைதான் இந்த சாலை ஏராளமான குக்கிராமங்கள், நகரப்பகுதிகள் வழியாக செல்கிறது. அதனால், முக்கியமான இப்பகுதியில் நானகுவழிச்சாலை போட்டால் மட்டுமே தென்காசிக்கு செல்வோர் எளிதாகவும், விரைவாகவும் செல்ல முடியும்.
ராஜபாளையத்திற்கு பிறகு இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கதாதால் இத்திட்டம் பாதியில் நிற்கும் அபாயம் உள்ளது. மதுரை-தென்காசி வரை முழுமையாக புதிய நான்கு வழிச்சாலை அமைத்தால் மட்டுமே, தென் தமிழகத்தையும், கேரளா மாநிலம் கொல்லத்தையும் இணைக்கும் முழுமையான சாலையாக இது அமையும்.
இதனிடையே, தற்போது திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரையிலான பகுதியில் நான்குவழிச்சாலை போடும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த நான்கு வழிச்சாலைக்காக இந்த சாலையில் பசுமைப்போர்வைபோல் காணப்பட்ட லட்சக்கணக்கான மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. அதனால், இந்த சாலையில் தற்போது செல்வோர் வெட்ட வெளியில் பாலைவனத்தில் பயணம் செல்வதுபோல் உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அலட்சியத்தால் நடக்கும் பணியால் ஆபத்து: சாலை அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறையின் நேரடி கண்காணிப்பில் நடக்காததால் தொழிலாளர்கள் பல இடங்களில் ஒரு வழிச்சாலையில் மட்டுமே போக்குவரத்தை அனுமதிகின்றனர். மேலும், சாலையோரம் 8 அடி ஆழத்திற்கு குழியும் தோண்டிப்போட்டுள்ளதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஒரு வழிச்சாலையில் ஒரு பஸ் வந்தால் எதிரே வரும் வாகனங்கள் வழிவிட முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
மேலும், பருவமழை பெய்யும் நேரம் என்பதால் இரவு நேரத்தில் குழி எது, சாலை எது என்பது தெரியாத நிலை உள்ளது. இப்படி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு இல்லாதல் இந்த புதிய சாலைப்பணி அலட்சியமாகவும், அஜராக்கிரதையாகவும் நடப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
|
“கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்” - பிரதமரை மேற்கோள் காட்டி வானதி சீனிவாசன் வலியுறுத்தல் | க.சக்திவேல் | கோவை | 2023-10-04 20:16:00 |
கோவை: “மதச்சார்பின்மையை காக்க இந்து கோயில்களில் இருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (அக்.4) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தெலங்கானா மாநிலம் நிஜாமாபாதில் நேற்று (அக்.3) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘தமிழ்நாட்டில் இந்து கோயில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயில்களின் சொத்துகள் கூட்டுச் சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தமிழ்நாடு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை’ என்று பேசியிருக்கிறார்.
தமிழக இந்துக்களின் மிக முக்கியமான பிரச்சினை குறித்து, அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை பிரதமர் பதிவு செய்திருக்கிறார். இதனால், யாரும் கண்டுகொள்ளாத தமிழக இந்துக்களின் பிரச்சினை, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. மதச்சார்பற்ற அரசுக்கு மத விவகாரங்களில், கோயில் நிர்வாகங்களில் தலையிட உரிமை இல்லை.
அதிக வருமானம், அதிக சொத்துக்களை கொண்ட கோயில்களில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது. சிதிலமடைந்து கிடக்கும் ஆயிரமாண்டு கோயில்கள் கூட சீரமைக்கப்படுவதில்லை. கோயில் சொத்துக்களில் இருந்து வர வேண்டிய வாடகை, குத்தகை வந்தாலே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை போல ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மருத்துவமனை, ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு மேல்நிலைப் பள்ளியை நடத்த முடியும்.
ஆனால், கோயில் சொத்துக்களில் இருந்து வர வேண்டிய வாடகை, குத்தகையை வசூலிக்கவோ, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கவோ, கோயில்களை நிர்வகிக்கும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில்களை, இந்து மதத்தை, பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். எனவே, மதச்சார்பின்மையை காக்க, இந்து கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
|
குப்பை அள்ளுவதிலும் மாநகராட்சி - அரசு மருத்துவமனை மோதல்: தூர்நாற்றம் வீசுவதால் மதுரை மக்கள் பாதிப்பு | ஒய். ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2023-10-04 19:55:00 |
மதுரை: ‘குப்பை’களை அள்ளுவதிலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை - மாநகராட்சி இடையே நீடிக்கும் மோதலால் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கமடைந்து, மருத்துவமனை வளாகத்தில் தூர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகள், மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
மதுரை அரசு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை, மருத்துவமனையின் தனியார் ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து பிரேதபரிசோதனை கட்டிடம் அருகே உள்ள மருத்துவமனை குப்பை தொட்டிகளில் போடுகின்றனர். நோயாளிகளுக்கு பயன்படுத்தி தூக்கி வீசப்படும் ‘பயோ மெடிக்கல்’ (Bio Medical) கழிவுகளை தனியாக சேகரித்து அதனை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். ஆனால், அந்த கழிவுகளையும், இந்த குப்பை தொட்டியில் போடுவதாக மாநகராட்சி சுகாதாரத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். அதனால், குப்பை அள்ளுவதில் மாநகராட்சிக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் இடையே கடந்த பல ஆண்டாகவே தீர்க்க முடியாத மோதல் நீடித்து வருகிறது.
அதனால், அடிக்கடி மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மருத்துவமனை குப்பைகளை அள்ளாமல் போட்டுவிடுவதும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிந்து சிதறி கிடப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த குப்பை தொட்டிகள் அருகேதான் பிரேதபரிசோதனை கூடம் உள்ளது. தினமும் பிரேதபரிசோதனையில் 20க்கும் மேற்பட்ட உடல்களுக்கு பரிசோதனை நடக்கிறது. அந்த உடல்களை வாங்குவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறவினர்கள் வந்து செல்கிறார்கள்.
அவர்கள், உடல்களை வாங்குவதற்கு அப்பகுதியில் காத்திருக்க முடியாத அளவிற்கு அப்பகுதியில் நிரம்பி வழியும் குப்பைகளில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த குப்பை தொட்டிகள் அருகேதான் குழந்தைகள் வார்டும் உள்ளது. குப்பை தொட்டிகளில் அள்ளப்படாமல் உள்ள குப்பைகள் மழையிலும், வெயிலிலும் நனைந்து தூர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் மாடுகள், தெருநாய்கள் அந்த குப்பைகளை கிளறிவிடுகின்றன. அதானல், குப்பை தொட்டிகளில் இருந்து நாலாபுறமும் குப்பைகள் சிதறி கிடக்கின்றன.
சமீபத்தில் கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்துக்கும், மாநகராட்சிக்கும் இடையே இருந்த மோதல் இன்னும் அதிகமானது. அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மருத்துவமனை வளாகத்தில் குவியும் ‘குப்பை’களை அள்ளுவதிலும் தற்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
மாநகராட்சி தரப்பினர் கூறுகையில், ‘‘குப்பை தொட்டிகளில் மருந்து ஊசிகள், மருத்துவர்கள் பயன்படுத்திய கையுறைகள், நோயாளிகளுக்கு பயன்படுத்தி தூக்கி வீசியேறியப்படும் மருந்துவக் கழிவுகள் போன்ற பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டபடுவதால் அதனை அப்புறப்படுத்தும் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பலமுறை சொல்லியும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை’’என்றனர்.
மருத்துவமனை தரப்பினரோ, ‘‘மருத்துவமனையில் தினமும் சேகரித்து வைக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் எடுக்க வருவதில்லை, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கூறினாலும் அவர்கள் குப்பை அள்ளாமல் இருப்பதற்கு ஏதாவது எங்கள் மீது குறைசொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள். மருத்துவக்கழிவுகள் பாதுகாப்பாகதான் வெளியேற்றப்படுகிறது. கடைசியில் நோயாளிகள், மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்று புலம்புகிறார்கள்.
மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், நேரடியாக மருத்துவமனை வளாகத்திற்கு சென்று அங்குள்ள பிரச்சனைகளை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு இந்த குப்பை பிரச்சனையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்து அன்றாடம் குப்பைகளை தரம் பிரித்து பாதுகாப்பாக தூய்மைப்பணியாளர்கள் அள்ளுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
|
மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 18:48:00 |
சென்னை: மயிலாடுதுறை அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு கடையில் நிகழ்ந்த விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று (அக்.4) மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறையைச் சேர்ந்த மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (அக்.4) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயில் அருகில் மோகன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நாட்டு வெடிகள், வாணவெடிகள் உள்ளிட்ட வெடி வகைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு சுப துக்க நிகழ்ச்சிகளுக்கும், தீபாவளி பண்டிகையின்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை மதியம் இந்த வெடி குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த விபத்தில் வெடி தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். உடலின் பாகங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது.
|
“தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு” - ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனைப் பேச்சு | க.ரமேஷ் | கடலூர் | 2023-10-04 18:37:00 |
கடலூர்: “தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கேட்கும் பொழுதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கின்றது” என்று நந்தனார் குரு பூஜை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், மா.ஆதனூர் கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் இன்று (அக்.4) திருநாளைபோவார் நாயன்மார் என்கிற நந்தனார் குரு பூஜை விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11 மணி அளவில் மா.ஆதனூருக்கு வந்தார். பின்னர் அக்கிராமத்தில் உள்ள நந்தனார் கோயிலை பார்வையிட்டு அங்கிருந்த நந்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, ஆளுநருக்கு மேல தாளம் முழங்கிட பறை இசையுடன் வரவேற்று அளிக்கப்பட்டது. பின்னர், அதே பகுதியில் சிவ குலத்தமம் பூணூல் அணியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை ஆளுநர் ரவி துவக்கி வைத்தார். ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்கினார். தமிழ் சேவா சங்க நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்கவலர் ஞானசரவணவேல் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி நாகராஜன் வரவேற்று பேசினார். இவ்விழாவில் 250-க்கும் மேற்பட்டோர் பூணூல் அணிந்து கொண்டனர்.
இதில் ஆளுநர் ரவி பேசுகையில், "ஒரு சமுதாயத்தின் மீது சாதியக் கொடுமைகள் நடைபெறும் வரை நாம் தலை நிமிர்ந்து வாழ முடியாது. பூணூல் அணியும் நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன். இதில் நீங்கள் வேறு, நான் வேறு என்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தப் பிரிவுகளை மறந்து நாம் ஒன்றாக இருக்க வேண்டும், நமது நாட்டின் பிரதமர், நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும், அனைத்து மக்களையும் தன்னுடைய சொந்த மக்களாக நினைத்து பாடுபட்டு வருகிறார். அனைவரையும் ஒரு குடும்பமாக நடத்தப்படுகின்றனர். இந்த சிந்தனை எங்கள் மகாகவி பாரதியார் உடையது. நம் நாட்டில் அனைவரையும் தம்முடைய குடும்பமாக பிரதமர் நடத்தி வருகிறார்.
இன்னொரு புறம் நாட்டு மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து ஒரு வகையான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. பாரதியார் வரிகள் போல இந்த நாட்டில் ஒரே குடும்பமாக குடும்பத்தினரை போல நாட்டின் வளர்ச்சிக்காகவும், உங்களுடைய வளர்ச்சிக்காக நாம் அனைவரும் கைகோத்து ஒரு குடும்பமாக செயல்பட்டு, அதனால் நிச்சயம் ஒரு நல்ல எதிர்காலத்தை நாம் அடைய முடியும்.
அதிகபட்ச வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை, தண்டிக்கப்படுவதில்லை. ஆகவே, இந்தக் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றது. கேவலமாக, வன்மையாக கண்டிக்கத்தக்கக் கூடிய ஒரு குற்றச் செயல்தான் பாலியல் வன்கொடுமை. அந்தக் குற்றச் செயலில் ஈடுபவர்கள் 100 பேரில் வெறும் ஏழு சதவீதம் பேர் மட்டும்தான் தண்டிக்கப்படுகிறார்கள். தவிர மீதம் உள்ள 93 சதவீதம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள்.
மேலும், சாதிய வன்கொடுமைகள் எந்த அளவுக்கு மோசமாக சென்றுவிட்டது என்றால், தமிழகத்தில் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கின்ற மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலத்தை கலக்கின்றார்கள், நாங்குநேரியில் படிக்கின்ற 12 வயது மாணவரை நன்றாக படிக்கிறான் என ஆசிரியர்கள் பாராட்டியதன் காரணமாக மாற்று சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களே, அந்த மாணவனின் வீடு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த மாதிரி கொடுமைகள் தமிழகத்தில்தான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதற்காக தங்களுடைய சாதியின் அடிப்படையில் கலர், கலராக கயிறுகளை கையில் கட்டிக்கொண்டு தன்னை ஒரு மாணவரிடம், இன்னொரு மாணவர் மாணவர் இடத்தில் வித்தியாசப்படுத்தி கொண்டு வருகின்றனர். இது எந்த மாதிரியான கலாச்சாரம் என தெரியவில்லை. கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது.
நந்தனார் போல் உள்ள சிவபக்தர் விழாவில் கலந்து கொள்வது பாக்கியமாக கருதுகிறேன், மிகப் பெரிய முனிவர்கள் எப்பொழுதுமே ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து தான் தோன்றியிருக்கின்றார்கள். உலகத்தை தோற்றுவித்த பிறகு உலகில் உள்ள ஒவ்வொரு அசைவிலும் ஆண்டவர் இருக்கின்றார். நமது அனைவரின் உள்ளத்திலும் கடவுள் இருக்கின்றார். நாம் எத்தனை வகையாக இருந்தாலும், தனித் தனியாக நம்முடைய பிரார்த்தனை முறைகள் வேறுபட்டு இருந்தாலும், நம் அனைவருடைய உள்ளங்களிலும் கடவுள் ஒருவர் எல்லாருடைய மனதிலும் கூடியிருக்கின்றார்.
வேதத்தில் நம்மில் யாரும் தாழ்ந்தவர்களோ, உயர்ந்தவர்களோ அல்ல. நாம் அனைவரும் சமமானவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நாட்டில் எல்லா பகுதிகளிலும் அதாவது இந்தப் பாகுபாடு, இந்தப் பிரிவினை உள்ளது. ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்வுகளை கேட்கும் பொழுதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கின்றது. காரணம், இந்த சமுதாயத்தில், மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற இந்த ஒரே காரணத்துக்காக அவர்கள் மீது இத்தனை சாதிய வன்கொடுமைகள் திணிக்கப்படுவதை நினைக்கும்போது உண்மையிலேயே மனம் வேதனை அடைகிறது.
பொருளாதாரம், ஒற்றுமையில் பாகுபாடு என்று இது அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயத்தில் ஒரு மாபெரும் பிரிவினரை ஆலயத்துக்குள் பிரவேசிக்க தடை செய்யப்பட்டு வருகின்றது. இதைபார்க்கும் பொழுது மனம் வேதனை அடைகிறது. இந்த மாதிரி செயல் எங்களுடைய இந்த சனாதன தர்மத்திலோ அல்லது இந்து மத தர்மத்திலோ இல்லை" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
இந்நிகழ்வில் தென்னிந்திய ஆதிதிராவிடர் மகாஜன சங்கம் பொதுச் செயலாளர் மாறன் நாயகம், சிதம்பரம் சுவாமி சகஜானந்தர் பேரன் ஜெயச்சந்திரன். புனிதா இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|
மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி ஆலையில் விபத்து: 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு | வீ.தமிழன்பன் | மயிலாடுதுறை | 2023-10-04 17:48:00 |
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (அக்.4) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயில் அருகில் மோகன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நாட்டு வெடிகள், வாணவெடிகள் உள்ளிட்ட வெடி வகைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு சுப துக்க நிகழ்ச்சிகளுக்கும், தீபாவளி பண்டிகையின்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை மதியம் இந்த வெடி குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டது.
இந்த விபத்தில் வெடி தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். உடலின் பாகங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும், ஒரு சிலர் காயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
வெடி குடோனுக்கு அருகில் உள்ள வீடுகளிலும் புகை சூழ்ந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொறையாறு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயை அணைத்தனர். பொறையாறு போலீஸார் விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணை மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
|
தூத்துக்குடியின் 33 ஊராட்சிகளில் சாதி பெயரிலான 80 தெருக்களின் பெயரை மாற்றும் ஆட்சியரின் முயற்சிக்கு ஆதரவு! | ரெ.ஜாய்சன் | தூத்துக்குடி | 2023-10-04 17:29:00 |
தூத்துக்குடி: சாதி பெயரில் தெருக்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் விரைவில் உருவாகவுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக மாவட்டத்தில் 33 ஊராட்சிகளில் உள்ள சாதி பெயரில் உள்ள 80 தெருக்களின் பெயர்களை மாற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் சாதி ரீதியான மோதல் காரணமாக வெட்டப்பட்டனர். இதையடுத்து சாதிய மோதல்களை தடுக்கவும், சமூக ஒற்றுமையை வளர்க்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சாதிய அடையாளங்கள்: இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள சாதி ரீதியான அடையாளங்களை பொதுமக்களின் உதவியோடு அகற்றும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் களம்இறங்கியது. இதன் முதல் நடவடிக்கையாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாதி பெயரில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற பரிந்துரை செய்தார். இதனை மேல ஆத்தூர் கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து மேல ஆத்தூர் ஊராட்சியில் சாதி பெயரில் இருந்த 9 தெருக்களின் பெயர்களை மாற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இந்த 9 தெருக்களுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் சூட்டப்பட்டது.
ஆட்சியர் நடவடிக்கை: இதன் தொடர் நடவடிக்கையாக மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சாதி பெயரில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சித் தலைவர்களுக்கு ஆட்சியர் செந்தில் ராஜ் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். ஆட்சியரின் இந்த வேண்டுகோளை தற்போது மேலும் 33 ஊராட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 33 ஊராட்சிகளில் சாதி பெயர்களில் உள்ள 80 தெருக்களின் பெயர்களை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஒன்றியத்தில் வர்த்தகரெட்டிபட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, அல்லிகுளம், கோரம்பள்ளம், தெற்குசிலுக்கன்பட்டி, கருங்குளம் ஒன்றியத்தில் கொங்கராயகுறிச்சி, கலியாவூர், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் அணியாபரநல்லூர், இடையர்காடு, சூளைவாய்க்கால், அகரம், மாரமங்கலம், ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் அங்கமங்கலம், கடையனோடை, வெங்கடேசபுரம், சேந்தமங்கலம், உடன்குடி ஒன்றியத்தில் குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி ஒன்றியத்தில் செமபுதூர், கயத்தாறு ஒன்றியத்தில் உசிலங்குளம், தெற்கு மயிலோடை, அய்யனார்ஊத்து, சோழபுரம், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் மீனாட்சிபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், எப்போதும்வென்றான், கே.தளவாய்புரம், ஓட்டப்பிடாரம், பசுவந்தனை, பரிவல்லிக்கோட்டை, புதூர் ஒன்றியத்தில் மாசார்பட்டி, மேலக் கல்லூரணி, முத்தையாபுரம், முத்துசாமிபுரம் ஆகிய 33 ஊராட்சிகளில் உள்ள மொத்தம் 80 தெருக்களின் பெயர்களை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம்: இது குறித்து ஆட்சியர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களில் தெருக்களின் பெயர்கள் சாதிய அடையாளங்களுடன் இருந்தன. அவற்றை நீக்கி சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள், தமிழ் இலக்கிய ஆளுமைகள், விஞ்ஞானிகள், மிகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை அமைக்குமாறு கிராம ஊராட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தோம். இதனை ஏற்று மேல ஆத்தூர் கிராம ஊராட்சியில் சாதி பெயரில் அமைந்த 9 தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 33 கிராம ஊராட்சிகளில் 80 தெருக்களின் சாதி பெயர்களை நீக்கி பொதுவான பெயர்களை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசிதழில் வெளியீடு: மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று தெருக்களின் சாதி பெயர்களை நீக்கிய ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி. தெருக்களின் பெயர் மாற்றம் விரைவில்அரசிதழில் வெளியிடப்பட்டு, புதிய பெயர்களை நிரந்தரமாக அனைத்து ஆவணங்களிலும் இடம் பெறச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் மற்ற ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் சாதி பெயரிலான தெருக்களின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
|
‘மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி’ - அண்ணாமலையின் நடைபயணம் ஒத்திவைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 17:17:00 |
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக, அக்.6-ம் தேதி தொடங்கவிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம், அக்.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுளள் பதிவில், "மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை, அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவிருந்த நிலையில், மாநிலத் தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. நாளை திட்டமிட்டப்படி மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
அத்துடன், அண்ணாமலை உடல்நிலை தொடர்பாக, க்ளென் ஈகிள்ஸ் தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கை ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அதில், அண்ணாமலை இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அண்ணாமலை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் இறுதியில், கோவையில் தொடங்கவிருந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
|
“உரிமைத் தொகை கிடைக்காமல் பெண்கள் பலரும் பாதிப்பு” - முன்னாள் அமைச்சர் காமராஜ் | சி.எஸ். ஆறுமுகம் | தஞ்சாவூர் | 2023-10-04 17:02:00 |
தஞ்சாவூர்: “விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும்” என முன்னாள் அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக கட்சியின் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட, மாநகர செயலாளர் மற்றும் ஜெ.பேரவை மாநில இணை செயலாளர் ஆகியோரது அறிமுகக் கூட்டமும், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிமுக அமைப்பு கழக செயலாளரும், திருவாரூர் மாவட்டச் செயலாளருமான காமராஜ் தலைமை வகித்துப் பேசியது: “தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. காவிரி டெல்டாவுக்குப் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகாவிடம் கேட்காமல், பெங்களூருவில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று விருந்து சாப்பிட்டு வருகிறார்.
மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்று பல பெண்கள் உரிமைத் தொகை கிடைக்காமல் அலைந்து வருகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து பெண்களுக்கும் விடுபடாமல் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்கியதை இன்றும் மக்கள் பாராட்டுகின்றனர். எனவே, அதிமுக ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். அதற்காக அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடுமையாக உழைக்கவேண்டும்” எனத் தெரிவித்தார். முடிவில் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.
|
“சட்டம் - ஒழுங்கு சீரழிவு... திமுக அரசின் தோல்வி” - நெல்லை இளம்பெண் படுகொலைக்கு சீமான் கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 16:42:00 |
சென்னை: "தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. காவல்துறையைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தற்போதைய சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கான முழுபொறுப்பையும் ஏற்று, அதனைச் சீர்செய்வதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, திருநெல்வேலி மாநகரில் உள்ள அழகு நிலைய பொருள் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்த நிலையில், ஒரு தலைகாதல் காரணமாக அதே பகுதியில் பணிபுரிந்து வந்த இளைஞரால் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக இளம்பெண்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துவருவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது. 18 வயது நிரம்பாத இளம் பிள்ளைகள் அதிக அளவில் கொலை செய்யப்படுவதும், கொலை செய்யும் அளவுக்குக் கொடூர குணமுடையவர்களாக ஆகிவிட்டதும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதையே காட்டுகிறது.
தமிழகத்தில் 60 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆண்டுவரும் இரு திராவிடக் கட்சிகளின் நெறிதவறிய ஆட்சியால் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை சந்தையாக தமிழ் நிலத்தை மாற்றி நிறுத்தியுள்ளதன் விளைவே தற்போது இளைய தமிழ்ச்சமூகம் சீரழிந்துள்ளதற்கான முக்கியக் காரணமாகும். மதுபானத்தை அரசே விற்கும் திராவிடக் கட்சிகளின் கொள்கை நிலைப்பாடே தமிழகத்தில் நடக்கின்ற அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாகும். குறிப்பாக, திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே முற்றாகச் சீரழிந்துள்ளது.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. காவல்துறையைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தற்போதைய சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்கான முழுபொறுப்பையும் ஏற்று, அதனைச் சீர்செய்வதற்கான முயற்சியை இனியாவது துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
ஆகவே, சந்தியாவைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், சந்தியாவின் குடும்பத்தினருக்கு துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்று சீமான் கூறியுள்ளார்.
|
ராணுவ அதிகாரியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து: 2013 வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-04 16:07:00 |
சென்னை: கடந்த 1987-ல், இலங்கையில் நடந்த உள்நாட்டு போரை நிறுத்தும் நோக்கில் அனுப்பப்பட்ட அமைதிப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட, டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி கொள்முதலில் ஊழல் செய்ததாக அப்போதைய ராணுவ மேஜர் ஜெனரலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1987-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையில் நடந்த உள்நாட்டு போரை நிறுத்தும் நோக்கில், இந்தியாவில் இருந்து அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த, அமைதிப்படை வீரர்களுக்காக உணவுப் பொருள்கள் சப்ளை செய்வதற்கான குழுவில் மேஜர் ஜெனரல் ஏ.கே.குப்தா அங்கம் வகித்தார். அவர், அமைதிப்படை வீரர்களுக்கு வழங்கிய டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மேஜர் குப்தாவை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2013-ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஏ.கே.குப்தா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள அஹமத்நகருக்கு அழைத்துச் சென்றபோது மேஜர் குப்தா தப்பிச் சென்றதை வைத்து, சிபிஐ நீதிமன்றம், வெறும் யூகங்களின் அடிப்படையில், எந்த காரணங்களையும் தெரிவிக்காமல் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், மேஜர் குப்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்வதாகக்கூறி தீர்ப்பளித்தார்.
|
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-04 14:52:00 |
சென்னை: சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில், அதன் தலைவர் எம். முனுசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம், அரசின் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அனைவருக்கும் சமமாக சென்றடையும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக அரசிடம் மனு அளித்திருந்தேன். அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழணை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது. எனவே, இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மறுத்துவிட்டனர்.
மேலும், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அரசுக்கு மனு அளித்துள்ள நிலையில், மனுதாரர் இது தொடர்பாக அரசை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
|
குமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 14:21:00 |
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ ஓட்டுநர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (47), மகள் ஆதிரா ( 23) மற்றும் மகன் அஸ்வின் (19) ஆகிய மூவரும் நேற்று (அக்.3) அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். தனது குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன், என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் நேற்று மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், கர்ப்பிணி மகள் ஆகியோர் மரணம் அடைந்தனர். திருவட்டாறை அடுத்துள்ள ஆற்றூர் தொப்பவிளையைச் சேர்ந்தவர் சேம் (50). வாகன ஓட்டுநர். இவரது மனைவி சித்ரா(47). இவர்களுக்கு அஸ்வின் (19) என்ற மகனும், நீது ஆதிரா (24) என்ற மகளும் இருந்தனர். ஆதிராவுக்கு திருமணமாகி பிரசவத்துக்காக தாயார் வீட்டுக்கு வந்திருந்தார். அஸ்வின் நாகர்கோவில் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
குமரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. சேம் வெளியே சென்றிருந்த நிலையில், தாய், மகன், மகள் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டின் சுற்றுச்சுவரில் மின்கசிவு ஏற்பட்டு இருந்திருக்கிறது. இதை அறியாமல், நேற்று மாலை அஸ்வின் வீட்டுக்கு வெளியே சென்றபோது சுற்றுச்சுவரில் அவரது கைபட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த சித்ரா தனது மகனைக் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த கர்ப்பிணியான ஆதிராவும் அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. 3 பேரும் தூக்கி வீசப்பட்டு வெகு நேரமாக அங்கே கிடந்துள்ளனர்.
|
முதல்வர் குறித்து அவதூறு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ பகிரங்க மன்னிப்புக் கேட்க உயர் நீதிமன்றம் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-04 14:18:00 |
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதற்காக பொதுக் கூட்டத்தைக் கூட்டி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க, அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தைவெளி பகுதியில் செப்டம்பர் 19-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக, கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் காவல் துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், குமரகுரு மீது கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி குமரகுரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது பேச்சுக்காக சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரிவிட்டேன். ஆனால், அதன்பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் துறையிடம் குமரகுரு முறையான அனுமதி பெற்று மற்றொரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தனது பேச்சுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த நிபந்தனையை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
|
அண்ணாமலையை மாற்ற அதிமுக கோரிக்கை வைத்ததா?- எடப்பாடி பழனிசாமி விளக்கம் | செய்திப்பிரிவு | எடப்பாடி | 2023-10-04 13:26:00 |
எடப்பாடி: "தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்துகளும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதுபோல், பாஜகவுக்கு 20 இடங்கள் வேண்டும், 15 இடங்கள் வேண்டும் என்றெல்லாம் அவர்களும் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, அதை மறுபரிசீலனை செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "அது அவர்களின் விருப்பம். ஏற்கெனவே நான் தெளிவுபடுத்திவிட்டேன். சேலம் மாநகர், மாவட்ட பூத் கமிட்டி நிகழ்ச்சியிலேயே நான் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். 25.9.23 அன்று, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தார்கள்.
அதனடிப்படையில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக்கொள்கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் அடிப்படையில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது" என்றார்.
அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "மக்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. வாக்களித்தப் பிறகுதான் முடிவு தெரியும். எங்களைப் பொறுத்தவரை, அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
காரணம், சிதம்பரம் தொகுதியில் 324 வாக்குகள்தான் குறைவு. ஈரோட்டில் 7800 வாக்குகள்தான் குறைவு.நாமக்கல்லில் 15,400 வாக்குகள்தான் குறைவாகப் பெற்றோம். இந்த மூன்று தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் எங்களது வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் 20ஆயிரம் வாக்குகள், வேலூரில் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் என 10 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிவாய்ப்பை இழந்தோம்.
காஞ்சிபுரத்தில் 42,000, கடலூரில் 50,000, இப்படி பல நாடாளுமன்ற தொகுதிகளில் 50,000 வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்று 10 தொகுதிகளிலும் வெற்றியை இழந்தோம். ஒருலட்சத்துக்கும் குறைவாகப் பெற்று 7 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். எனவே, எங்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றிவாய்ப்பு இருக்கிறது. எனவே, 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.
கடந்த இரண்டரை ஆண்டுகாலத்தில், தமிழகத்தில் மிகமோசமான மக்கள்விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2021 தேர்தலின்போது, திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் 524 அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டார். ஆனால், 10 சதவீத அறிவிப்புகளைக்கூட நிறைவேற்றவில்லை. ஆனால்,ஊடகங்களில் அறிவிக்கப்பட்டதில் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பச்சைப் பொய்யை சொல்லி வருகிறார்.
இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் மின்கட்டணம், வீட்டுவரி, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்கள் வாழ்க்கை நடத்துவதே சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறோம். எனவே, இத்தேர்தல் எங்களது தலைமையில் அமைக்கப்படும் கூட்டணிக்கு மிகமிக சாதகமாக இருக்கும்" என்றார்.
அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக அழுத்தம் கொடுத்ததால்தான் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியதா? என்ற கேள்விக்கு, "அது தவறான செய்தி. எங்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, அது தவறான செய்தி என்று ஏற்கெனவே கூறிவிட்டார். அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.
பாஜகவில் மத்தியில் உள்ள தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிரதமர் மோடி உட்பட யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் அதிமுக தொண்டர்களின் மனதை காயப்படுத்திவிட்டது. ஒரு கட்சி வளமாக செழிப்பாக தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும். அவர்கள் உழைத்தால்தான் வெற்றி பெற முடியும். தலைவர்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி நடத்த முடியாது.
எனவே, எங்களது தொண்டர்களின் உணர்வுகளை மதித்துத்தான் நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம். பாஜக சார்பில் இடங்கள் ஒதுக்கீடு குறித்தும் பேசவில்லை. ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் இதுதொடர்பான செய்திகள் தவறானவை. பாஜகவுக்கு 20 இடங்கள் வேண்டும், 15 இடங்கள் வேண்டும் என்றெல்லாம் அவர்கள் எந்த கோரிக்கையும் வைக்கவும் இல்லை. அதுகுறித்து பேசவும் இல்லை.
அதேபோல, தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அதிமுக கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்துகளும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதிமுக தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறினோம். எனவே, அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறும். அதேபோல, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்" என்று அவர் கூறினார்.
|
69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 12:05:00 |
சென்னை: "69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால் அதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பிஹார் அரசைத் தொடர்ந்து ஒடிசா மாநில அரசும், கர்நாடக அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றன. ஒடிசாவில் மே 1 முதல் ஜூலை 10 வரை நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அம்மாநில அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதை விரைவில் வெளியிட இருப்பதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையிலான புதிய அறிக்கையை கர்நாடக அரசிடம் நீதிபதி ஜெயப்பிரகாஷ் ஹெக்டே தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அடுத்த மாதத்துக்குள்ளாக தாக்கல் செய்யும்; அதன்பின் அதன் விவரங்களும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகநீதியைக் காப்பதற்கான ஒடிசா மற்றும் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.
சமூகநீதியின் தொட்டில் தமிழகம் தான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். சமூகநீதி வழங்குவதற்கான பல முன்முயற்சிகள் தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியுள்ளன. அதேபோல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல் என்ற சமூகநீதித் தென்றலும் தென் எல்லையான தமிழகத்திலிருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்படி கடந்த 44 ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் போதிலும், அதை செய்ய சமூகநீதியின் தொட்டிலான தமிழகத்தை ஆண்ட, ஆளும் அரசுகள் முன்வரவில்லை.
பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை ஒட்டுமொத்த இந்தியாவும் வரவேற்கும் நிலையில், அதுகுறித்து தமிழக அரசோ, தமிழகத்தை ஆளும் திமுகவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
சமூகநீதி சார்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கும் மாநிலம் தமிழகம் தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற 2010-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பழைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால் அதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒடுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் ஆகும்.
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல. தமிழக அரசுக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஒரு மாதத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய தடையாக இருப்பது எது என்பது தெரியவில்லை. சமூகநீதிக்கு எதிரான தடைகள் எவையாக இருந்தாலும் அவற்றை உடைத்து தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்கான ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பிறப்பிப்பார் என்று நம்புகிறேன்", என்று அவர் கூறியுள்ளார்.
|
புதிய மருத்துவக் கல்லூரி விவகாரம்: தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்திவைக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 11:40:00 |
சென்னை: புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்.
தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டுமென்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடிதத்தின் விவரம் வருமாறு: தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினைப் பற்றி தங்களின் கனிவான கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அந்த அறிக்கையின்படி, இளநிலை மருத்துவக் கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில உரிமைகள் மீதான நேரடி ஆக்கிரமிப்பு ஆகும்.
மேலும் பொது சுகாதாரத் துறையிலும், பொது சுகாதார கட்டமைப்பிலும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்கள் பல ஆண்டுகளாகவே பொது சுகாதாரத் துறையை மேம்படுத்தி வருகிறது. அதனால் தான் இங்கே மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாமல் இருக்கிறது. சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்றளவுக்கு உயர்ந்துள்ளது.
பொதுத் துறை மட்டுமல்லாது தனியார் துறையிலும், நமது தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநில மக்களுக்கும் சிறந்த மருத்துவத்தை தருகின்றனர். இதனால் தரமான சுகாதார சேவைகளுக்கான தேவை தமிழகத்தில் மென்மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் மிகமிக அவசியம். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இவை அமைக்கப்பட வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ இடங்கள் என்று நிபந்தனை விதிப்பது பொருத்தமானதாக இல்லை.
மேலும், புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. மருத்துவர் - மக்கள் விகித்தாரம் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார்கள். தமிழகத்தில் போதுமான அளவு மருத்துவர் - மக்கள் விகிதாச்சாரம் இருந்தாலும் கூட சில மாவட்டங்களில் மருத்துவர் - மக்கள் விகிதாச்சாரத்தில் பற்றாக்குறை இருக்கத்தானே செய்கிறது. இந்தப் பிரச்சினைக்கு பின் தங்கிய பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதே தீர்வாக இருக்க முடியும். புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில நிலவரங்களைக் கொண்டு தடை விதிப்பது தேவையுள்ள மாவட்டங்களுக்கு அநீதி இழைப்பதாகிவிடும்.
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
குமரியில் விடிய விடிய கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை; முதியவர் மரணம் - முழு நிலவரம் | செய்திப்பிரிவு | நாகர்கோவில் | 2023-10-04 09:55:00 |
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் மரணமடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவ மழை தவறிய நிலையில், கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக மழை அதிகரித்தது. இதில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இடை விடாது இடி மின்னலுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அதிகபட்சமாக குருந்தன் கோட்டில் 134 மிமீ., மழை பெய்திருந்தது. நாகர்கோவிலில் 97 மிமீ., கொட்டாரத்தில் 82, அடையாமடையில் 75, மயிலாடியில் 74, கோழிப் போர்விளையில் 73, மாம்பழத்துறையாறு இரணியலில் தலா 72, ஆனைக்கிடங்கில் 70, பாலமோரில் 62, முள்ளங்கினாவிளையில் 61, பூதப்பாண்டியில் 60, தக்கலையில் 54,
குழித்துறையில் 45, குளச்சல் மற்றும் சிவலோகத்தில் 38, களியலில் 37, திற்பரப்பு மற்றும் சிற்றாறு ஒன்றில் 35, கன்னிமாரில் 30, பேச்சிப் பாறையில் 29, சுருளகோட்டில் 25 மிமீ மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரி மழை விகிதம் 53 மிமீ., ஆகும். குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச மழை விகிதம் இதுவாகும்.
மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை நீர்மட்டம் நேற்று 30 அடியை தாண்டியது. அணைக்கு விநாடிக்கு 2,127 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 331 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் நேற்று 56 அடியாக உயர்ந்தது.
அணைக்கு 1,939 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 13.71 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 396 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6 மாதங்களுக்கு பின்னர் 5 அடியாக உயர்ந்தது. இதனால் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழையால் குமரி மாவட்டத்தில் குளிரான தட்பவெப்பம் நிலவியது. நேற்று பகலில் வெயிலின்றி மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இடைவிடாது சாரல் மழை பொழிந்த நிலையில் அவ்வப்போது கனமழை கொட்டித் தீர்த்தது. அதேநேரம் மழையுடன் காற்று இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கீரிப்பாறை, குற்றியாறு உட்பட மலை கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
மாவட்டம் முழுவதும் ரப்பர் பால்வெட்டும் தொழில், கட்டிடத் தொழில், மீன்பிடி தொழில் போன்றவை முடங்கின. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்கள் மற்றும் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள், நாட்டுப் படகுகள் அனைத்தும் கரைகளிலும், மீன்பிடி துறைமுக தங்கு தளங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
மாவட்டம் முழுவதும் மழையால் ஓடு, மற்றும் மண் சுவரினால் ஆன 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் தாழக்குடி மீன மங்கலத்தை சேர்ந்த வேலப்பன்(60) என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கியபோது சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வேலப்பன் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஒழுகினசேரி, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, குலசேகரம், குளச்சல், தக்கலை அகஸ்தீஸ்வரம், குண்டல், கோட்டாறு ரயில் நிலைய பகுதி, ஊட்டுவாழ்மடம் உட்பட மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வேறு பகுதிக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து முடங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
வள்ளியாறு, பழையாறு, கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு உட்பட மாவட்டத்தில் உள்ள ஆறு, கால்வாய்கள், கிளைக் கால்வாய்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. மாவட்டத்தில் உள்ள 2,040 பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. மழையை பயன்படுத்தி கும்பப்பூ சாகுபடி பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
தோவாளை செக்கர்கிரி மலை, சுங்கான்கடை மலை உட்பட பல மலை பாதைகளில் மழைக்கால அருவிகள் வெள்ளிநிறத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இவை சாலையை கடந்து சென்றதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தெற்கு குண்டல் உட்பட பல பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றதால் அவ்வழியாக சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர்.
மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் நேற்று விடுமுறை அளித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் மழை பாதிப்பில் இருந்து விடுபட்டனர். குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள் மற்றும் நீர்நிலைகளை மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
திற்பரப்பில் குளிக்க தடை: குமரியில் கனமழை நீடித்து வரும் நிலையில் சிற்றாறு அணைப் பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியத்தில் இருந்து திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் நேற்று மாலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்வதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே, வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளைச் செய்து வருகிறது. மழை வெள்ளப் பாதிப்பை தடுக்கும் வகையில் தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் 8 தீயணைப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்திலும் மீட்பு கருவிகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்தது. இங்குள்ள ரப்பர் படகுகள் மிதவைக் கருவிகள் அனைத்தும் சரியான முறையில் உள்ளதா என பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இப்பணிகளை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், உதவி அலுவலர் துரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு சென்று செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதோடு வெள்ளம் அதிகமாக செல்லும் காட்டுப் பகுதிகளுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசியில்... - திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை நீடிப்பதை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 92.75 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 667 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 50.90 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 28.75 அடியாக இருந்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்தது. மதியத்துக்கு மேல் வானில் மேகம் திரண்டு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 31.40 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணையில் நீர்மட்டம் தலா 2 அடியும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
|
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 50% வரை குறைப்பால் மக்கள் தவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 08:00:00 |
சென்னை: தமிழக மக்களுக்குப் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டுவருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர்பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் கொழுப்புச் சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை,நீல நிற பாக்கெட்களில் அடைத்துவிற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் நேரடி ஆவின் பாலகங்கள், பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் (4.5% கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்) விநியோகம் 50 சதவீதம்வரை குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.3 விலை குறைப்பு: திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டு ரூ.44 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது 500 மிலி ரூ.22-க்குவிற்பனை செய்யப்பட்டது. இந்தபால் விற்பனை வாயிலாக ஆவினுக்கு லிட்டருக்கு ரூ.7 நஷ்டம்ஏற்படுகிறது.
இதைக் காரணம் காட்டி, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, ஊதா நிற பசும்பால் பாக்கெட் (சமன்படுத்தப்பட்ட பால்) அனுப்பப்பட்டது. இந்த பால் 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்டது. விரைவில் பச்சை நிற பால் பாக்கெட்விநியோகம் 70 சதவீதம் வரைகுறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், பால் முகவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் பால் முகவர்கள் கூறியதாவது: ஆவின் பால் கொள்முதல் குறைந்து வருவதால், பச்சை நிற பாக்கெட் பால் விநியோகம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, நீல நிற பாக்கெட்பால் வழங்கி வருகின்றனர்.இது பச்சை நிற பாக்கெட் பாலை விட கொழுப்புச் சத்து குறைந்தது.
இதனால், தனியார் நிறுவனத்தின் பால் பாக்கெட்களை மக்கள் நாடிச் செல்லும் நிலை உள்ளது.எனவே, பச்சை நிற பாக்கெட்பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
ஆவின் நிர்வாகம் மறுப்பு: இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத்கூறும்போது, ``எல்லா வகை பால் பாக்கெட்களையும் பொதுமக்களுக்கு தடையின்றி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சந்தையில் தேவைக்கு ஏற்ப, சில வகைபால் பாக்கெட்கள் அதிகம் விநியோகம் செய்யப்படும்.
ஆனால், எந்தவகை பால் பாக்கெட்கள் விநியோகத்தையும் குறைக்கவில்லை. அதேநேரத்தில், நீல நிற பாக்கெட் பாலுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், அதிகமாக விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் பால் கொள்முதல் குறையவில்லை. தினசரி 30 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது" என்றார்.
|
தமிழகத்தில் அக். 9 வரை மழைக்கு வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:25:00 |
சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் அக். 9-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (அக். 4) முதல் வரும் 9-ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அக். 3-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவானமழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோட்டில் 13 செ.மீ., நாகர்கோவிலில் 10 செ.மீ., கொட்டாரத்தில் 8 செ.மீ., அடையாமடை, அணைகெடங்கு, இரணியல், மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும், தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும்லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
|
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க பரிந்துரை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:24:00 |
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்களில் தலா 3 ஏசி பெட்டிகளை இணைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று,சோதனை அடிப்படையில் முடிவு எடுக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: மின்சார ரயிலில் எல்லா தரப்பு மக்களும் பயணிக்கும் வகையில், வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது. குறிப்பாக, நெடுந்தொலைவுக்கு செல்லும் மக்கள்கார், இருசக்கர வாகனத்தைத் தவிர்த்து, மின்சார ரயில்களில் செல்ல, மின்சார ரயில்களில் ஏசிபெட்டிகளைச் சேர்க்க வேண்டும்.சென்னை கடற்கரை-செங்கல்பட்டுவழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களிலும்தலா 1 முதல் 3 ஏசி பெட்டிகள் சேர்க்க ரயில்வேக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தோம்.
மேலும், இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதன் அறிக்கை விரைவில் எங்களிடம் சமர்ப்பிப்பார்கள். அந்த ஆய்வு அறிக்கையுடன் தெற்கு ரயில்வேக்கு மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்படும். இந்த ஆய்வில் பயணிகள் தேவை, நிறுத்தங்கள் வசதி,எத்தனை பெட்டிகள் இணைக்கலாம், பயணிகளின் வருகை எப்படி இருக்கும், செலவுகள் மற்றும் வருவாய் உள்ளிட்டவை குறித்து இடம்பெறும்.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஏற்கெனவே மும்பை புறநகர் மின்சார ரயிலுக்காக ஏசி பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. அதுபோல, சென்னை புறநகர் மின்சார ரயில்களுக்கான ஏசிபெட்டிகளைத் தயாரித்து இணைக்கலாம் என்று கருத்துகளை வழங்கிஉள்ளோம்.
எங்கள் கருத்தை ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டோம். அவர்களும் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். முதலில் சோதனை ஓட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் முடிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 4 கூட்டம் நடத்திவிட்டோம். அடுத்த கூட்டம் அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ``சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்ற கும்டா பரிந்துரை தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இருப்பினும், எந்த முடிவும் எடுக்கவில்லை. பயணிகளின் தேவை அடிப்படையில் அடுத்த கட்ட முயற்சி எடுக்கப்படும்'' என்றனர்.
|
அம்பத்தூர் மண்டலத்தில் அக்.6-ல் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்ட முகாம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:20:00 |
சென்னை: அம்பத்தூர் மண்டலத்தில் அக்.6-ம் தேதி ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டமுகாம் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக மேயரிடம் அளிக்கஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில் ‘மக்களைத் தேடி மேயர்’ என்ற திட்டம், கடந்த மே 3-ம் தேதி சென்னை ராயபுரத்தில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திரு.வி.க.நகர், அடையாறு மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களிடம் இருந்துகோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு,அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக மக்களைத் தேடி மேயர் திட்டத்தின்கீழ், அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காலனியில் வரும் 6-ம்தேதி (வெள்ளிக்கிழமை) மேயர் பிரியா, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்.
கொரட்டூரில் உள்ள சுவாதி பேலஸில் காலை 10 முதல் மதியம்1 மணி வரை மேயர் மனுக்களை பெறுகிறார். எனவே, அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் இந்தவாய்ப்பை பயன்படுத்தி, தங்கள்பகுதியில் உள்ள சாலை, மழைநீர்வடிகால், தெரு மின்விளக்கு, கழிப்பிட வசதிகள், பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழ், சொத்துவரி, தொழில்வரி, குப்பை அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றம், பூங்கா மற்றும்விளையாட்டு திடல் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கலாம் என மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
|
சென்னையில் அக்.17 வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:16:00 |
சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரு மார்க்கத்தில் தலா இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இன்று (அக்.4) முதல் அக். 17-ம் தேதி வரை இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
இதேதடத்தில் அக். 8-ம் தேதி முதல் அக். 15-ம் தேதி வரை 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.
தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு அக்.4-ம் தேதி முதல் அக்.17-ம் தேதி வரை இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
இதே தடத்தில் அக்.8-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
|
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய ஓபிஎஸ் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:14:00 |
சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமுரண்பாட்டை களைய நடவடிக்கை எடுப்பதுடன், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாணவ, மாணவியருக்கு கல்வி நன்கு கற்றுத்தரப்பட வேண்டுமெனில், ஆசிரியர்கள் மனநிலை நன்றாக இருக்க வேண்டும். ஆனால், கடந்தஇரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மன உளைச் சலுக்கு ஆளாகியுள்ளனர்.
வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக கூறும் திமுக அரசு, ஆசிரியர்களின் முக்கியமான கோரிக்கைகளை கிடப்பில் போட்டிருப்பது வேதனையளிப்பதாகும். இது மாணவ, மாணவியரின் கல்வியை பாதிக்க வழிவகுக்கும். முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு மேலும் காலம் தாழ்த்தாமல் இடைநிலைஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை உடனே களையவும், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
திருவள்ளூர் அருகே கவிழ்ந்த ஆவின் பால் டேங்கர் லாரி - சாலையோரத்தில் ஆறாக ஓடிய 3,500 லிட்டர் பால் | செய்திப்பிரிவு | திருவள்ளூர் | 2023-10-04 06:13:00 |
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆவின் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து, 3,500 லிட்டர் பால் சாலையோர பள்ளத்தில் ஆறாக ஓடி வீணானது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து, சுமார் 7 ஆயிரம் லிட்டர் பாலுடன் ஆவின் டேங்கர் லாரி ஒன்று, நேற்று அதிகாலை திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஆவின் பால் பண்ணைக்கு வந்து கொண்டிருந்தது.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதாமல் இருக்க, டேங்கர் லாரி ஓட்டுநர் லட்சுமணன் லாரியை சாலையோரமாக இயக்கினார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரத்தில் பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.இதனால், டேங்கர் லாரியிலிருந்து, 3,500 லிட்டர் பால் கொட்டி, சாலையோர பள்ளத்தில் ஆறாக ஓடி வீணானது.
இதுகுறித்து, தகவலறிந்த காக்களூர் ஆவின் பால் பண்ணை அதிகாரிகள், திருவள்ளூர் தாலுகா போலீஸார், சம்பவ இடம் விரைந்து, ஆவின் பால் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
|
பிஹார் மாநில நடவடிக்கைக்கு வரவேற்பு; தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:12:00 |
சென்னை: பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரவேற்பு அளித்துள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பாமக நிறுவனர் ராமதாஸ்: சாத்தியமே இல்லாதது என்பது போன்ற மாயை ஏற்படுத்தி வந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது பிஹார் மாநில அரசு. பிஹாரில் ஏற்றப்பட்டுள்ள சமூகநீதி விளக்கு வெகுவிரைவில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒளி கொடுக்கும். தமிழக அரசும் சாதிவாரி மக்கள்தொகைகணக்கெடுப்பை நடத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண் டும்.
திக தலைவர் கி.வீரமணி: இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி சாதனை படைத்துள்ளது பிஹார் மாநில அரசு. எந்தெந்த பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் எத்தனை விழுக்காடு கிடைத்துள்ளது என்பது இதனால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிஹாரைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் சாதிவாரிக் கணக் கெடுப்பை நடத்த வேண் டும்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: சுதந்திரம்அடைந்து 75 ஆண்டுகளாகியும் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து வருவது மாபெரும் சமூக அநீதியாகும். எனவே பிஹார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்,சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தமுடியும் என பிஹார் மாநிலம்உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பு இல்லாமல் சமூகநீதிமுழுமையடையாது. தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
தவாக தலைவர் தி.வேல்முருகன்: சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், சாதிகளிடையே சமநிலையை உருவாக்க முடியும். அந்தவகையில் நாட்டுக்கே வழிகாட்டும் விதமாக, பிஹார் அரசு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்ட பலரும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த வலியுறுத்தி யுள்ளனர்.
|
விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் அடாவடி வசூல்: அரசு வேடிக்கை பார்ப்பதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:07:00 |
சென்னை: அண்மையில் முடிவுற்ற தொடர் விடுமுறை நாட்களில் கடுமையாக உயர்த்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை செலுத்தி பயணித்த பொதுமக்கள், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண அரசு முயற்சிக்குமா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.
விடுமுறை, விழா நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தடுக்க முடியாததாக மாறிவிட்டது. இதனால்சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளில் கல்வி, பணி நிமித்தமாக தங்கியிருப்போர் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியே சொந்த ஊர் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர். இதில் குடும்பமாக சொந்த ஊர் செல்ல விரும்புவோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏனெனில், சென்னையில் இருந்து சுமார் 600 கிமீ சென்று திரும்ப 3 உறுப்பினர் உள்ள குடும்பத்தினர் குறைந்தபட்சமாக பேருந்து கட்டணத்துக்காக மட்டும் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக அண்மையில் முடிவுற்ற விடுமுறை நாட்களில் நாகர்கோவிலில் இருந்து சென்னை திரும்ப ரூ.4,700 கட்டணம் அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், நெல்லைக்கு ரூ.4 ஆயிரம், கோவைக்கு ரூ.5 ஆயிரம் என ரொக்கமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தால், சேமிப்புகளை பயணச்சீட்டுக்காக செலவழிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். இவ்வாறு விமான கட்டணத்துக்கு இணையாக வசூலிக்கப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணம், பெரும்பாலானோரின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளதை அவர்களது குமுறல்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.
இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் காளிராஜ் கூறியதாவது:
ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சொந்த ஊரான தென்காசி செல்கிறோம். எத்தனை நாட்கள் முன்பாக திட்டமிட்டாலும் ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. தற்போது குழந்தைகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் ஊருக்கு சென்றுவிட்டோம். ஆனால், சென்னை திரும்பும்போது ஆம்னி பேருந்துகள் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறிவிட்டேன். இருக்கையில் பயணிக்கவே ஒருவருக்கு ரூ.1500 செலுத்த வேண்டியிருந்தது. எனது வருமானத்துக்கு சற்று சமாளித்து வந்து சேர்ந்துவிட்டேன்.
இதுவே மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் பெறும் ஒருவருக்கு ஊர் செல்வதே எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. ஏன் தனியார் பேருந்தை நாடுகிறீர்கள், சொகுசு வசதிக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது போன்ற கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், 8 மணிநேரம் அமர்ந்து செல்ல முடியாத பெரும்பாலானோர் படுக்கை வசதியுடன் அதிகளவில் இயங்கும் ஆம்னி பேருந்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. அரசு கண்காணிப்பில் இருக்கும்போதும்கூட கட்டணத்தை கட்டுக்குள் வைக்கத் தவறியது யார்? எங்களது இன்னலை ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக போக்குவரத்து ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், "தனியார் நிறுவனசெயலி மூலமாகவே இருக்கை முன்பதிவுசெய்யப்படுகிறது. எனவே, அச்செயலிகளுக்கு அரசு சார்பில் தக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க முடியும். கடந்த காலங்களில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன" என்றனர்.
கட்டணம் தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் தெரிவிக்கையில், "ஆம்னி பேருந்துகளுக்கு உரிமையாளர்கள் தரப்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சங்க விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சங்கம் ஒத்துழைப்பு வழங்கும்" என்றார்.
இப்பிரச்சினை தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க சட்டத்தில் வழிவகை இல்லை. ஒரு சிலரே அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். தற்போது விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரம், பொதுமக்களுக்கு போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
|
சென்னை ஆற்காடு சாலையில் சீரமைப்பு பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:06:00 |
சென்னை: போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு சாலையை சீரமைக்கும் பணிகள்துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இப்பணிகள் அனைத்தும் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடம்பாக்கம் முதல் போரூர்வரையிலான ஆற்காடு சாலையில்வடபழனி, சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகியபகுதிகளில் சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் மூலம் சாலை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சாலைகள் சேதம்: வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், அவ்வப்போது பெய்யும்மழையாலும், பிற துறைகளின்பணிகள் சாலை ஓரம் நடைபெறுவதாலும் சாலை சேதமடைந் துள்ளது. சாக்கடை நீரை சென்னைபெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத் தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இணைந்து ஆழ்துளையில் நிரம்பி வரும் தண்ணீரை சுத்தம் செய்து வருகின்றனர்.
மேலும், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில், சாலை சீரமைப்புப் பணிகளையும், மெட்ரோ ரயில் தூண் பணிகள் முடிவடைந்த இடங்களில் தடுப்புகளை மாற்றி அமைக்கும் பணிகளையும் ஒப்பந்ததாரர் தொடங்கியுள்ளார். இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
|
425 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அண்ணா பல்கலை. எப்படி செயல்படுகிறது? - பதிவாளர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:04:00 |
சென்னை: காலியாக 425 பேராசிரியர் பணியிடங்களை வைத்துக்கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது? என்பது குறித்து அப்பல்கலைக்கழகப் பதிவாளர் நாளை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2010-11-ம் ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பலர் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்யாமல்புதிதாக தற்காலிக ஆசிரியர்களைநியமிக்கக் கூடாது என்றும், இதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டன.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்றும், காலியாகஉள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்றும் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.
அப்போது நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்கும் விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன? 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க ஏன் நேரடித் தேர்வு நடத்தக் கூடாது? என்று கேள்விகள் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போதுபல்கலைக்கழகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழும (ஏஐசிடிஇ) விதிகளின்படி உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் என அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 1,745 ஆசிரியர்கள் பணியில்இருக்க வேண்டும்.
ஆனால் 981பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிலும் 556 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 425 பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக உள்ளது. வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கடந்த முறை இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை என்றும், 2020-ம்ஆண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தனி நீதிபதிஉத்தரவு பிறப்பித்து 3 ஆண்டுகளுக்குப் பிறகே கடந்த செப்டம்பர் மாதம்சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை 3 ஆண்டுகளாக அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர் இத்தனை பணியிடங்களை காலியாக வைத்துக்கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது? என்பது குறித்து அப்பல்கலைக்கழக பதிவாளர் பதில் அளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (அக்.5) தள்ளி வைத்துள்ளனர். தவறும்பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
|
நிர்மலா சீதாராமனை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்: மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணியை ஏற்படுத்த முயற்சியா? | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:01:00 |
சென்னை: அதிமுக - பாஜக இடையேயான பிளவை சரிசெய்ய தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். இந்த பின்னணியில் கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் இன்னும் 6 மாதங்களில் வரவுள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இண்டியா என்ற கூட்டணியை அமைத்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்க வைக்கவும், கூடுதலாக கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும் பாஜக தலைமை வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் சரியில்லை எனக் குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சமீபத்தில் அதிமுக வெளியேறியது.
இந்த கூட்டணி முறிவை அதிமுக மற்றும் பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் ஒரு தரப்பு விரும்பினாலும், மற்றொரு தரப்பினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கூட்டணியில் அதிமுக வெளியேறியது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அதிமுகவை மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டணியில் உள்ள சில கட்சிகளை சேர்ந்தவர்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம் சேலத்தில் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தொண்டர்களின் முடிவு என்று பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மீண்டும் கூட்டணியில் இணைய அதிமுக தலைமை சம்மதம் தெரிவிக்காத நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோரை சந்தித்து பேசுவதற்கு பாஜக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதேபோல் அதிமுகவும், நாம் தமிழர் கட்சி மற்றும் பாமகவுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பாஜக இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் கொண்டு வந்து கூட்டணியை பலப்படுத்தவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதனால், திமுக கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், பாஜக தலைமை அழைப்பின்பேரின் டெல்லி சென்ற அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல், மக்களவைத் தேர்தல், கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது ஆகிய அம்சங்கள் குறித்து அண்ணாமலையிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, “அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும், பிளவை சரிசெய்ய பெரியவர்கள் எல்லாம் பேசி வருகிறார்கள்” என்றார்.
பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறும்போது, “கூட்டணி குறித்து தேவையான நேரத்தில் பதில் அளிக்கப்படும்” என்றார்.
இந்நிலையில், நேற்று கோவையில் அரசு நிகழ்சிகளில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக சந்தித்ததாகவும், கூட்டணி பற்றி பேசவில்லை என்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்தாலும், இச்சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை நாளை ஆலோசனை: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால், நேற்று சென்னையில் நடைபெற இருந்த கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. அதேநேரத்தில், நேற்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் நாளை சென்னை அமைந்தகரையில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
|
ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய மக்கள்: சென்னை புறநகர், செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 06:00:00 |
சென்னை: தொடர் விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களிலிருந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய மக்களால் சென்னை புறநகர் மட்டும் அல்லாமல் அதற்கு முன்பு உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
வார விடுமுறை, காந்தி ஜெயந்தி உட்பட கடந்த 28-ம் தேதிமுதல் நேற்று முன்தினம் வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டது. இதையடுத்து சென்னையில் பணிபுரியும் வெளி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றனர். மேலும், பலர் சுற்றுலாவுக்காகவும், உறவினர்கள், நண்பர்களை காணவும் சென்னையிலிருந்து வெளியூர் நோக்கிக் கிளம்பினர்.
இந்நிலையில், விடுமுறை முடிந்து தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி ஒரே நேரத்தில் மக்கள் நேற்றும், நேற்று முன்தினமும் படையெடுத்தனர். இதனால், விழுப்புரத்திலிருந்தே நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது. குறிப்பாக செங்கல்பட்டு, பெருங்களத்தூர் வர வர நெரிசல் மேலும் அதிகரித்தது. வாகனங்கள் உரிய வேகத்தில் செல்ல முடியாமல் சாலையிலேயே ஆமை வேகத்தில் நகரும் சூழல் ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னைக்குள் நுழைந்ததால் நேற்று காலை11 மணி வரையிலும் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியைக் கடப்பதற்கே பல மணி நேரம் தேவைப்பட்டது. இதனால் திருச்சி –சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார், பேருந்து, ஆம்னி பேருந்து என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.
ஒழுங்குபடுத்திய போலீஸார்: அதேபோல, ஜிஎஸ்டி சாலை, செங்கல்பட்டு, வண்டலூர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரத்திலும் அதிகளவு நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸார் அதிகளவு குவிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் இதுபோன்ற வாகன நெரிசல் ஏற்பட்டதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.
இதேபோன்று கோயம்பேடு பேருந்து நிலையம், நூறடி சாலை சந்திப்பு, விருகம்பாக்கம், நெற்குன்றம் போன்ற பகுதிகளிலும் வாகன நெரிசலைக் காண முடிந்தது.
|
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம்; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 05:55:00 |
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்படுகின்றன. கடந்த வாரம் மிலாது நபி, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்பியபோது தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டதால் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
விடுமுறை நாட்களில் தமிழக அரசு சார்பில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததாலும், அரசுப் பேருந்துகள் தரம் இல்லாததாலும் பொதுமக்கள் தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் தொடர்ந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இதை தமிழக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
எனவே, பண்டிகை நாட்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்க, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து, தனியார் பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
அதேநேரம், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
|
மாதர் தேசிய சம்மேளன மாநில மாநாடு | ஆர்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்தும் வரை போராடுவோம்: பொதுச் செயலாளர் ஆனி ராஜா உறுதி | செய்திப்பிரிவு | திருச்சி | 2023-10-04 05:54:00 |
திருச்சி: ஆர்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்தும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று மாதர் தேசிய சம்மேளன அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆனி ராஜா கூறினார்.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 15-வது மாநில மாநாடு திருச்சியில் நேற்று தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கிவைத்து சம்மேளனத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆனி ராஜா பேசியதாவது:
இந்தியாவில் பாஜக ஆட்சிக்குவந்த பின்னர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பழங்குடியினர் மீதான வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டுள்ளது. பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ், பாஜக போன்றவை நாட்டில் வெறுப்புணர்வை வளர்த்து வருகின்றன.
இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்க நிறைய சட்டங்கள் இருந்தாலும், அவை செயல்படாமல் உள்ளன. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டாலும், அது இப்போதைக்கு அமல்படுத்தப்படாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி மறுவரையறை செய்த பிறகுதான் அமல்படுத்தப்படும் என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை.எனவே,பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை வீழ்த்தும் வரை மாதர் சம்மேளனம் போராடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநிலத் தலைவர் பி.பத்மாவதிதலைமை வகித்தார். அமைப்பின்மாநில முன்னாள் செயலாளர் வசந்தா ரத்தினவேலு மாநாட்டுக் கொடியேற்றினார். மாநில துணைச் செயலாளர் டி.பி.லலிதா, தியாகிகள் நினைவுச்சுடரைப் பெற்றுக் கொண்டார். இன்று (அக். 4) மாலை பொதுக்கூட்டத்துடன் மாநாடு நிறைவடைகிறது.
|
தமிழகத்தில் ஓராண்டில் 479 பிரசவ உயிரிழப்புகள்: பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 05:49:00 |
சென்னை: தமிழகத்தில் பேறு கால மரணங்களைத் தடுக்க பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மட்டும் இல்லாமல், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்தை உறுதி செய்யும்சிறப்பு திட்டங்களும் நடைமுறைப்படுகின்றன. இதனால், பிரசவ காலஇறப்புகள் குறைந்தாலும், முற்றிலும் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டுஏப்ரல் மாதம் முதல் நடப்பாண்டுமார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த பேறுகால உயிரிழப்புகளுக்கான காரணங்களை பொது சுகாதாரத் துறை ஆய்வு செய்தது. அந்தஆய்வின் முடிவில், ஓராண்டில்479 உயிரிழப்புகள் ஏற்பட்டிருப் பதும், முக்கிய காரணமாக தலா20 சதவீதம் உயர் ரத்த அழுத்தம், அளவுக்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதும் தெரியவந்தது.
அடுத்தபடியாக 10 சதவீத இதய பாதிப்புகள் ஆகும். அதேபோல், நரம்புசார் பாதிப்புகளாலும், ரத்தகிருமித் தொற்று காரணமாகவும் தலா 9 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்த கர்ப்பிணிகள் 7 சதவீதமாகவும், கருக்கலைப்பின் போது 5 சதவீதமும், கல்லீரல் பாதிப்புகளால் 4 சதவீத இறப்புகளும் பதிவாகியுள்ளன.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவது இயல்பானது. அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தவறும் போதுதான் அதன் தீவிரம் அதிகமாகிறது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், வலிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும். அது ஒரு கட்டத்தில் உயிரிழப்புக்கு வழிவகுக்கும். ஹீமோகுளோபின் அளவை சரிவர பராமரித்தால் ரத்தப்போக்கு ஏற்படும்போது அதனை சரிசெய்ய முடியும்.
இவ்வாறாக பேறு காலத்தில் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளையும், மருத்துவர்களின் பரிந்துரைகளையும் பின்பற்றி நடந்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும்” என்றார்.
|
கிராம ஊராட்சிகளில் 'முடங்கிய' திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: ஆய்வுக்கு உட்படுத்துமா ஈரோடு நிர்வாகம்? | எஸ்.கோவிந்தராஜ் | ஈரோடு | 2023-10-04 05:43:00 |
ஈரோடு: ஈரோடு மாவட்ட கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் முறையாக செயல்படுத்தப் படாததால், சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, நீர்நிலைகள் மற்றும் காற்று மாசு அடைவது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள கிராமங்களில், தூய்மைப்பணியை செம்மையாக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமத்தின் தெருக்களில் குப்பைகள் குவிவதைத் தடுக்கவும், குப்பைத்தொட்டி வைத்து ஓரிடத்தில் அவற்றை சேர்ப்பதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டை தடுக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, தூய்மைப்பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து பெற்று வருகின்றனர்.
ஊராட்சிகள் தோறும் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுகிறது. 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் மற்றும் 300 வீடுகளுக்கு மூன்று சக்கர வாகனம் எனத் திட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்க, ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த மண்புழு உரத்தினை மலிவு விலையில் வழங்குவது திட்டத்தின் நோக்கமாகும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளிலும் இந்த திட்டம் நடைமுறையில் இருந்தாலும், திட்டத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 2 லட்சம் வீதம் ரூ.5 கோடிக்கு மேல் செலவிடப்பட்டும், திட்டத்தின் நோக்கம் செயல்படவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்களில் பலர், முறையாக பணிக்கு வருவதில்லை. சேகரிக்கும் குப்பைகளை முறையாக தரம் பிரிப்பதில்லை.
மாறாக, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஒட்டிய, ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால், நீர்நிலைகள் மாசடைந்து வருகிறது. பல இடங்களில் குப்பைகளை எரிப்பதால், மாசு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் சாப்பிடுவதால், அவற்றுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறப்பு வரை செல்கிறது. குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், குப்பை பிரிக்கும் இடம், மண்புழு தயாரிக்கும் இடம் ஆகியவை சமூக விரோத செயல்களுக்கான கூடாரமாக மாறி விடுகிறது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஊராட்சி வாரியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டால் உண்மை நிலை தெரியவரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தூய்மைப்பணியாளர்கள் தரப்பில் கூறியதாவது: ஊராட்சிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இவற்றை பழுதுநீக்கி தர வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குப்பைக்கிடங்குகள், உரக்கிடங்குகளுக்கான கட்டமைப்பு வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்துகொடுக்க வேண்டும். எங்களின் ஊதியத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும், என்றனர்.
ஈரோடு மாவட்ட கிராம ஊராட்சிகளின் பொறுப்பு அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்ட ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சில இடங்களில் குப்பைகளை பிரிக்காமல் தீ வைத்து எரிப்பதாக புகார் வருகிறது. அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மக்காத குப்பைகளைப் பொறுத்தவரை ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மக்கும் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றும் நடைமுறைக்கு சில இடங்களில் மட்டுமே வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
|
திக சார்பில் அக். 6-ம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு தஞ்சையில் பாராட்டு விழா | செய்திப்பிரிவு | தஞ்சாவூர் | 2023-10-04 05:38:00 |
தஞ்சாவூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திக சார்பில் ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்ற பட்டம்முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளது.
வரும் 6-ம் தேதி மாலை 5மணிக்கு தஞ்சை புதிய பேருந்துநிலையம் அருகேயுள்ள மாநகராட்சி அரங்கில் நடைபெறும்இந்த விழாவுக்கு திக தலைவர் கி.வீரமணி தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்கிறார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர்வீ.குமரேசன் முன்னிலை வகிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றுகிறார்.
மேலும், வீரமணி தொகுத்த‘தாய் வீட்டில் கலைஞர்’ நூலைமுதல்வர் ஸ்டாலின் வெளியிட,அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றுக் கொள்கிறார்.
|
தொடக்கப் பள்ளி சார்பு விதிகளில் மாற்றம்: அரசுக்கு பரிந்துரை வழங்க குழு அமைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 05:36:00 |
சென்னை: தொடக்கப் பள்ளி சார்பு விதிகளில் மாற்றம் செய்வது குறித்து தமிழக அரசுக்கு ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்க 3 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை:
உயர் நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி சார்பு விதிகளில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓர் அலகு என்று இருக்கிறது. இதை மாவட்ட அல்லது மாநில முன்னுரிமையாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை தமிழக அரசுக்கு அளிப்பதற்காக தனிக் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் தலைவராக பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி செயல்படுவார். அதன் உறுப்பினர்களாக தொடக்கக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஆகியோர் இருப்பார்கள். இந்தக் குழு தமது அறிக்கையை 3 மாத காலத்துக்குள் அரசிடம் சமர்பிக்க வேண்டும். இந்தக் குழுவின் பணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை தொடக்கக் கல்வி இயக்குநர் கவனித்துக் கொள்ள வேண்டும்.
|
6 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் நீர்மட்டம் 35 அடியாக சரிவு | த.சக்திவேல் | மேட்டூர் | 2023-10-04 05:32:00 |
மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 867 கனஅடியாகவும் இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம்கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 3,122 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1,560 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 6,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் 35.38 அடி, இருப்பு 9.83 டிஎம்சி.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
தற்போது, கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் அணைக்கு 11,800, கபினிக்கு 5,481 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கு விநாடிக்கு 2,592 கனஅடிநீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், தற்போது நீர்வரத்து குறைவாகவும், நீர் திறப்பு அதிகமாகவும் இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2017 ஜனவரி 24-ம் தேதி 35.01 அடியாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அணை நீர்மட்டம் 35.38 அடியாக சரிந்துள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில், வரும் 8 அல்லது 9-ம் தேதி வரைதண்ணீர்விட முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டுக்காக அதிகபட்சம் 9 டிஎம்சியும், குறைந்தபட்சம் 4 டிஎம்சியும் இருப்பு வைக்க வேண்டும். குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து குறைந்தபட்சம் விநாடிக்கு 500 கனஅடி, அதிகபட்சம் 2,000 கனஅடிவரை தண்ணீர் திறக்கப்படும்” என்றனர்.
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
|
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்துவோரை தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 05:31:00 |
சென்னை: அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள் பங்கேற்ற 2 நாள் மாநாடு தொடங்கியது. சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு குறித்த மாநாட்டு முதல் நிகழ்வின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவது முதல் இலக்கு. அடுத்தது, பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது. அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களுக்கு இடம் அளிக்க கூடாது. மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்பட வாய்ப்பு உள்ளது. அதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.
கள்ளச் சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழித்து, குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது கவலையளிக்கிறது.
இந்த நிலையை மாற்ற, காவல், நெடுஞ்சாலை, போக்குவரத்து துறைகள் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும்.
சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுககு சிரமம் தரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் கூடாது.
பட்டியலின, பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து, மக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப், தொலைபேசி எண்ணை ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும்.
சமீபத்தில், தூத்துக்குடி விஏஓ லூர்துபிரான்சிஸ், திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்குகளில் போலீஸார் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது பாராட்டத்தக்கது.
தற்போது, உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணி்ப்பாளர்கள், அவற்றை தொடர்ந்து கண்காணித்து, பொய்ச் செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடும்,மாலையில் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், சரக டிஐஜிக்கள், மண்டல ஐ.ஜி.க்கள், பல்வேறு பிரிவுகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற மாநாடும் நடைபெற்றன.
ஐபிஎஸ் அதிகாரிகள் உடனான மாநாட்டின் நிறைவில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, ‘‘சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதுதான் ஒரு அரசின் மிக முக்கியகடமை, சாதனை. டிஐஜிக்கள் மாதம்ஒருமுறையும், ஐ.ஜி.க்கள் 2 மாதம் ஒருமுறையும் அனைத்து வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.நிலுவையில் உள்ள அனைத்து பிடியாணைகளையும் நிறைவேற்றி, சட்டம் - ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்போரை கைது செய்து, தேவைப்பட்டால் குண்டர்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும் 7, 8 மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த காலகட்டத்தில் காவலர் முதல் காவல் துறை உயர் அதிகாரிகள் வரை மிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும்’’ என்றார்.
மாநாட்டில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
2-வது நாளான இன்று, ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர்களுடனான மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில், “மக்களின் நண்பனாக” திகழ்ந்து காவல்துறை அதிகாரிகள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆக்கபூர்வமான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினேன்.
வெளிப்படையான விவாதத்தின் வழியே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக… pic.twitter.com/SM9iE6S5uv
|
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஜெயக்குமார் மனு ஏற்பு | செய்திப்பிரிவு | விழுப்புரம் | 2023-10-04 05:29:00 |
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரானசெம்மண் குவாரி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டது.
2006-2011-ல் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார்.அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டது.
இதில், அமைச்சர் பொன்முடி, அவரது மகனான கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கவுதம சிகாமணி, ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸார் 2012-ல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றஉத்தரவுபடி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய லோகநாதன் உடல்நலக்குறைவால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “அமைச்சர் பொன்முடிமீதான வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சியாக மாறி, சாட்சியம் அளித்து வருகின்றனர். அரசு அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராக அரசு அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? நேர்மையான முறையில் அவர்கள் சாட்சியம் அளிக்க முடியாது. எனவே அரசு தரப்புக்கு உதவியாக எங்களையும் இவ்வழக்கில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணைக்காக, விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த 25-ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜரானார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் இருப்பதால், அந்தமனு ஏற்கப்பட்டதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஆட்சேபனை இருந்தால் அரசு தரப்பும், பொன்முடி தரப்பும் தெரிவிக்கலாம் என்றுஉத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில், முன்னாள் அரசுவழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார்.
|
ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்: 250 பேர் மருத்துவமனையில் அனுமதி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-04 05:19:00 |
சென்னை: ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கல்வித்துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே, காலாண்டு விடுப்பு முடிந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 1 முதல் 5-ம்வகுப்புக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நேற்று முதல் தொடங்கியது. வரும் அக். 6-ம் தேதி வரை நடைபெற உள்ள பயிற்சியை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் புறக்கணித்துள்ளனர். நேற்றைய பயிற்சியில் 12,402 பேர் பங்கேற்கவில்லை.
முன்னதாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், விசிக தலைமை நிலைய செயலாளர் அ.பாலசிங்கம் உட்பட நிர்வாகிகள் இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
டிபிஐ வளாகத்தின் மற்றொரு பகுதியில் பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டு நலச்சங்கத்தினரும் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கலைந்து செல்லுமாறு கூறி காவல் துறையினர் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்க ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். வளாகத்தில் ஆசிரியர்கள் அமைத்திருந்த சாமியானா பந்தல்களை போலீஸார் அகற்றினர். கூடுதல்போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். இதனால், பரபரப்பான சூழல் காணப்பட்டது.
|
ஆம்னி பேருந்துகள் ஆய்வு: வேலூர் சரகத்தில் ரூ.8.83 லட்சம் அபராதம் விதிப்பு | செய்திப்பிரிவு | வேலூர் | 2023-10-04 04:18:00 |
வேலூர்: தொடர் விடுமுறை காரணமாக வேலூர் சரகத்தில் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,022 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய விதிகளை பின்பற்றாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.8.83 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை நாளில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்க்க ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவ லர்கள் ராமலிங்கம் (ராணிப் பேட்டை), வெங்கடேசன் (வேலூர் பொறுப்பு), செங்குட்டுவேல் (அரக்கோணம்), ராம கிருஷ்ணன் (வாணியம்பாடி),
அமர்நாத் (ஆம்பூர்), காளியப்பன் (திருப் பத்தூர்), ஆனந்த் (கிருஷ்ணகிரி), துரைசாமி (ஓசூர்), பறக்கும் படை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அன்பு செழியன் (கிருஷ்ணகிரி), பிரதீபா (வேலூர்) மற்றும் மோட்டார் வாகன ஆய் வாளர்கள் சிவக்குமார், மாணிக்கம், வெங்கட்ராகவன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வாலாஜா, பள்ளி கொண்டா, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி நேற்று வரை திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.
இதில், ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட மொத்தம் 1,022 வாகனங்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டன. பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பு, அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தி யிருந்தது, அதிக ஒளி வீசும் முகப்பு விளக்கு பொருத்தியது, ஓட்டுநர் ‘சீட்' பெல்ட் அணியாதது, முதலுதவி பெட்டி இல்லாதது, பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டாதது, உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள், வரி செலுத்தாதது என மொத்தம் ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் அபராத மாக வசூலிக்கப்பட்டது.
மேலும், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் நிர்ணயிக் கப்பட்டு வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 410 வசூலிக்கப்பட்டது. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாத 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. மொத்தம் ரூ.8.83 லட்சம் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
|