Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
ட்ரோன் கேமரா ஆய்வை தொடர்ந்து நடவடிக்கை: அண்ணாசாலை - நந்தனம் சாலை சந்திப்பில் புது ‘யூ’ வளைவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 07:00:00 |
சென்னை: வாகன நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணாசாலை - நந்தனம் சாலை சந்திப்பில் புதிய `யூ' வளைவுஅமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும் வகையிலும் பல போக்குவரத்து மாற்றங்களை செய்து வருகின்றனர். வாகனங்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்த போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை போக்குவரத்து போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிபுணர் குழுக்கள் இணைந்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கூகுள் நிறுவனத்துடன் இணைந்ததோடு மட்டும் அல்லாமல் நவீன கருவி மூலம் வாகனங்களின் எண்ணிக்கை, நெரிசல் அடர்த்தி போன்றவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அண்மையில் அண்ணாசாலை - ஸ்பென்சர் சந்திப்பில் புதிய போக்குவரத்து மாற்றம் கடந்த மாதம் 14-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அண்ணாசாலை - நந்தனம் சாலை சந்திப்பில் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே புதிய போக்குவரத்து மாற்றத்தை நடைமுறைப்படுத்த போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து, இச்சாலை சந்திப்பில் ட்ரோன்களை பறக்கவிட்டு அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம், சிக்னல் பகுதியில் தேங்கி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை உட்பட பல்வேறு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் தற்போது அண்ணாசாலை சந்திப்பு - நந்தனம் சாலை சந்திப்பு அருகே புதிய ‘யூ’ வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மூப்பனார் பாலத்தைகடந்து சேமியர்ஸ் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி அண்ணா சாலை வந்தடைந்து கிண்டி நோக்கி செல்லலாம்.
அவர்கள் அண்ணா மேம்பாலம் வழியாக செல்ல விரும்பினால் அதே வழியாக இடதுபுறம் திரும்பி சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு நேராக சென்று மீண்டும் அண்ணா சாலையில் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியின் முன்பு வலதுபுறம் திரும்ப புதிதாகயூ வளைவு கொடுக்கப்பட்டுள்ளது.
சேமியர்ஸ் சாலைவழியாக தி.நகர் செல்ல விரும்புபவர்களும் இதே யூ வளைவில் வலதுபுறம் திரும்பி, நந்தனம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி செல்ல வேண்டும். இதன் மூலம் வாகனங்கள் தேவையற்ற சிக்னலில் சிக்காமல், நேரமும் மிச்சமாகி சீரான வேகத்தில் செல்ல முடியும்என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் தெரிவித்தார். தற்போது சோதனைஅடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
|
கூட்ட நெரிசலை தவிர்க்க 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை ரூ.2,821 கோடியில் கொள்முதல் செய்ய திட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 06:20:00 |
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக, ரூ.2,821 கோடியில் 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 30 புதிய மெட்ரோ ரயில் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது, விமான நிலையம்முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை- சென்னை சென்ட்ரல்வரையும் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் தினசரி 2.50 லட்சம் முதல் 2.80 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர்.
நெரிசல் மிகுந்த நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நெரிசலை தவிர்க்கும் வகையில் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனிடையே, இரு வழித்தடங்களிலும் பயணிகள் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கை 4-ல் இருந்து 6-ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டது.
இதுதொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதையடுத்து, 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் வாங்க ஒப்புதல் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கருத்துரு அனுப்பியது. இந்த கருத்துருவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து, மெட்ரோரயில் முதல்கட்டத்தின் கட்டமைப்பு முழுவதையும் இயக்குவதற்காகவும், 2028-ம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கிட்டு, ரூ.2,820.90 கோடிமதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல் செய்யப்படும். இதற்காக, பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்கட்டமாக, 6 பெட்டிகளை கொண்ட 5 மெட்ரோ ரயில்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
ரூ.2,821 கோடி மதிப்பில் 6 பெட்டிகளைக் கொண்ட 28 மெட்ரோரயில்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 6 பெட்டிகளைக் கொண்ட 5 மெட்ரோ ரயில்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.300 கோடி கடன் வாங்கப்பட உள்ளது.
இதற்கான ஆவணப் பணிகள் தொடங்கியுள்ளன. கடன்ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு, 30 மெட்ரோ ரயில் பெட்டிகளை வாங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
முதல்வர், அமைச்சர் குறித்து அவதூறு: பொதுக்கூட்டம் போட்டு வருத்தம் தெரிவித்த கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் | செய்திப்பிரிவு | கள்ளக்குறிச்சி | 2023-10-10 06:15:00 |
கள்ளக்குறிச்சி: அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு. நீதிமன்ற உத்தரவு காரணமாக அதே இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடத்தி வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியில் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில் திமுகவினரால் புகார் அளிக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன
உயர் நீதிமன்றம் உத்தரவு: இதையடுத்து முன் ஜாமீன் பெற சென்னை உயர்நீதி மன்றத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முறையாக அனுமதி பெற்று, மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி மந்தவெளியில், அதிமுக மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் குமரகுரு, “முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பேச்சு புண்படும்படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூக வலைதளங்கள் வாயிலாக நான் தெரிவித்திருந்தேன்.
இப்போதும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக, அவ்வாறு புண்படும்படி பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.
|
அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வாலாஜாபாத்தில் அக்.12-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 06:13:00 |
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி அக். 12-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதி, வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சாலையெங்கும் பரவிக் கிடக்கும் கழிவுநீரால் கடுமையான சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
பாலாற்றின் குறுக்கே வாலாஜாபாத் - அவளூர் தரைப் பாலம் வெள்ளத்தால் சேதமடைந்துவிட்டதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக அவதியுறுவதோடு, விபத்துகளிலும் சிக்குகின்றனர்.
வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களோ, சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகளோ, மருத்துவ உபகரணங்களோ இல்லாத காரணத்தால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் வாலாஜாபாத் பகுதியில் வாழும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசையும், பேரூராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, வாலாஜாபாத் பேரூராட்சியில் நிலவிவரும் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யவும், பாலாற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள தரைப் பாலத்தை சீரமைக்கவும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமித்து, மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் உடனடியாக ஏற்படுத்தித் தரவும் வலியுறுத்தி அதிமுக சார்பில் 12-ம் தேதி காலை 10 மணிக்கு, வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக அமைப்புச் செயலாளர்களான மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் தலைமையிலும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் முன்னிலையிலும் நடைபெறும்.இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|
சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 06:10:00 |
சென்னை: சென்னையில் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருக்கும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது. அந்த வகையில், அண்ணா சாலை, ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஆனால், ஒயிட்ஸ் சாலை,ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்துஅண்ணாசாலை செல்ல அனுமதி கிடையாது.
அதேபோல், ஒயிட்ஸ் சாலை, பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்லலாம். அண்ணாசாலை, பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ்சாலை செல்ல அனுமதி கிடையாது. மேலும், ஜி.பி.ரோடு சந்திப்பு மற்றும்பின்னி சாலையில் இருந்து அண்ணாசாலை வந்து ஒயிட்ஸ் சாலை நோக்கிசெல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
ஸ்பென்சரில் ‘யூ’ வளைவு: எனவே, நேராக ஸ்மித் சாலைசந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் சாலை, ஒயிட்ஸ் சாலை வழியாக செல்லலாம். ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில்வலதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணா சாலைவழியாக செல்லாம். ஆனால், ஸ்மித் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
திருவிக, ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்றுஇடதுபுறமாக திரும்பி, அண்ணாசாலை வழியாக செல்லலாம்.
அண்ணாசாலை, பட்டுல்லாஸ்சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே சாலைநோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி அண்ணாசாலையின் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ள ‘யூ’ வளைவில் திரும்பி பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
2022-23-ம் நிதியாண்டில் ரூ.1,253 கோடி வருவாய் ஈட்டிய தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை: அஞ்சல்துறை தலைவர் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 06:03:00 |
சென்னை: கடந்த 2022-23-ம் நிதியாண்டில் தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை ரூ.1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அதன் முதன்மை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்திய அஞ்சல்துறை, ஐக்கியஅஞ்சல் ஒன்றியம் 1874-ல் நிறுவப்பட்டதன் நினைவாக அக்.9 (நேற்று)முதல் வரும் 15-ம் தேதி வரை அஞ்சல் வாரமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. ‘நம்பிக்கையோடு ஒன்றிணைவோம்’ என்பதே இந்த ஆண்டுக்கான உலக அஞ்சல் தின கருப்பொருளாகும். அஞ்சல்வாரத்தை முன்னிட்டு வரும்13-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெறும்.
இதன்படி, அக்.10-ம் தேதி நிதிஅதிகாரமளிப்பு தினத்தை முன்னிட்டு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வும், 11-ம் தேதி அஞ்சல்தலை சேகரிப்பு தினத்தன்று அஞ்சல்தலை சேகரிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியிலும், 12-ம் தேதி அஞ்சல் மற்றும் பார்சல் தினத்தன்று வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி அவர்களுக்கு அஞ்சல்துறையின் புதிய சேவைகள் குறித்தும், 13-ம் தேதி அந்தியோதயா தினத்தன்று மக்களுக்கு அஞ்சல்துறை குறைந்த செலவில் வழங்கப்படும் சேவைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை பார்சல் சேவை, அஞ்சல் சேவைஉள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம்,கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.8 சதவீதம் அதிகம்.
அஞ்சலக சேமிப்பு கணக்கு மூலம் கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.659.97 கோடியும் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு மூலம் ரூ.1,181.37 கோடி பிரீமியம் வருவாயும், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு மூலம் ரூ.721.24 கோடி பிரீமியமும், தங்க பத்திரம் விற்பனை மூலம் ரூ.4.66 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2022-23 ம் நிதியாண்டில் சேமிப்பு கணக்கு மூலம், ரூ.689.21 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிர்ணயித்ததைவிட ரூ.695.97 கோடி, அதாவது, 101 சதவீதம் வருவாய் ஈட்டப்பட்டது. அதே போல், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், 32.57 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டதன் மூலம், அகில இந்திய அளவில் தமிழ்நாடு வட்டம் 2-வது இடத்தைப் பிடித்தது.
அதேபோல், மகளிர்மதிப்பு சேமிப்பு பத்திரம் திட்டத்தின்கீழ் 2.89 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டதன் மூலம் தமிழ்நாடு வட்டம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு சாருகேசி கூறினார். இச்சந்திப்பின்போது, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
|
போக்குவரத்து துறையில் அரசின் வருவாய் அதிகரித்தும் தொழிலாளர்களுக்கு செலவிட மனம் வரவில்லை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 06:00:00 |
சென்னை: அரசின் வருவாய் அதிகரித்தும்போக்குவரத்து தொழிலாளர்களுக்காக செலவிட அரசுக்கு மனமில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். போக்குவரத்துத் துறையைதனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் சென்னை, பல்லவன் இல்லம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்குஎதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்று 29 மாத கால ஆட்சியில் தமிழ்நாடு போராட்டக் களமாக மாறிவிட்டது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைவருமே இன்று போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு, 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு தவறான தகவலை கூறி வருகிறது.
ஜெயலலிதா ஆட்சியில், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பண பலன்களுடன் வீட்டுக்கு சென்றனர். இன்று வெறும் கையுடன் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. எங்கள்ஆட்சியில் 6 ஆயிரம் பேருந்துகளை கொள்முதல் செய்தோம்.
பராமரிப்பு சிறப்பாக இருந்தது. உதிரி பாகங்களும் போதுமான அளவு இருந்தது. ஆனால் இப்போது பராமரிப்பும் இல்லை, உதிரி பாகங்களும் கையிருப்பில் இல்லை. எங்கள் ஆட்சியில் 14 ஆயிரம் பேரை பணியமர்த்தி இருக்கிறோம். ஆனால் திமுக ஆட்சியில் ஒருவரைகூட நியமிக்கவில்லை. பழனிசாமி ஆட்சி காலத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடிக்குபணப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று கையில் தட்டு ஏந்தி போராடும் அளவுக்கு போக்குவரத்து தொழிலாளர்களின் நிலை இருந்து வருகிறது.
கடந்த ஆண்டைவிட இந்தஆண்டு வருவாயை அதிகப்படுத்தி இருப்பதாக நிதியமைச்சர் தங்கம்தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த வருவாயை தொழிலாளர்களுக்கு செலவிட அரசுக்குமனம் வரவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஸ்டாலினை சந்தித்து கூடுதல் தொகுதிகளை கேட்டாரே தவிர, தொழிலாளர்களுக்காக எதையும் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
|
சட்டப்பேரவையில் காவிரி விவகார தீர்மானம்: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 05:40:00 |
சென்னை: காவிரி விவகார தீர்மானம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. காவிரி விவகாரம் தொடர்பான தீர்மானத்தின் மீது விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தி இருக்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்றுதான் தீர்மானத்தில் உள்ளது.
எதிர்கட்சித் தலைவர்: பெங்களூருவில் நடந்த ‘இண்டியா’ கூட்டணியின் கூட்டத்தில் கலந்துக் கொண்ட முதல்வர், அப்போதே கர்நாடக முதல்வரிடம் நட்பின் அடிப்படையில் காவிரியில் தண்ணீர் கேட்டு இருக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் அப்பாவு: நீங்கள் பிரதமரை சந்தித்தபோது காவிரியில் தண்ணீர் தர கேட்டிருக்கலாமே.
எதிர்க்கட்சித் தலைவர்: நாங்கள் பிரதமரை சந்தித்தபோது எல்லாம் காவிரி பிரச்சினை குறித்து பேசியிருக்கிறோம்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: காவிரி பிரச்சினையில் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். அப்படி இருக்கும்போது கர்நாடக முதல்வருடன் இதுதொடர்பாக பேசினால், நீங்களே பேசி பிரச்சினையை முடித்துக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் சொல்லிவிடும். அப்படி பேசுவது நமது உரிமையை அடகு வைப்பதற்கு சமமாகும்.
எதிர்கட்சித் தலைவர்: அப்படிப்பட்ட கட்சியுடன் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும்.
நீர்வளத்துறை அமைச்சர்: கூட்டணி வேறு. உரிமை வேறு. ‘இண்டியா’ என்பது எப்படியாவது பாஜகவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பதற்காக உருவானது.
எதிர்க்கட்சித் தலைவர்: காவிரியில் நமது உரிமையை பெற அதிமுக எம்.பி.க்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: பாஜகவை காப்பாற்ற வேண்டிய சூழலில் நாடாளுமன்றத்தை முடக்கினீர்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்: காவிரி விவகாரம் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பேசவில்லை?
முதல்வர்: எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு, நாங்கள் பேசவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். துணிச்சல் பற்றி அவர் எங்களுக்கு சொல்ல வேண்டாம்.
எதிர்க்கட்சித் தலைவர்: நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். மக்கள் பிரச்சினையை பற்றி பேசுகிறோம்.
முதல்வர்: தவறான கருத்தை பதிவு செய்யும்போது மறுப்பது எங்களது கடமை.
எதிர்க்கட்சித் தலைவர்: மத்திய அரசுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். குறுவை சாகுபடி பாதிப்புக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதாது. பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கவில்லை. விவசாயிகளுக்கு தேவையான அளவு நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். குறுவை சாகுபடி பொய்த்துபோய் விட்டது. சம்பா, தாளடி சாகுபடிக்கு என்ன செய்யப்போகிறோம். இன்னும் 6 மாத காலத்துக்கு மேட்டூர் அணைக்கு நீர் வராது. இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்தாலும், முழுமனதோடு இந்த அரசு செயல்பட்டால்தான் நீரை பெற முடியும். மத்தியில் ஆட்சி மாறி மாறி வந்தாலும், கர்நாடகத்தில் தேசிய கட்சிகள்தான் ஆளுகின்றன. எந்த ஆட்சி வந்தாலும் நீர் கிடைப்பது சிரமம். அதனால், நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி கர்நாடகத்தில் இருந்து நீரை பெற வேண்டும். அதற்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
|
தெர்மாகோலால் அணைகள் மூடல்: அமைச்சர் பதிலால் சிரிப்பலை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 05:32:00 |
சென்னை: அணைகளில் உள்ள தண்ணீர் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடிவைத்துள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு, ‘‘மதுரை மாவட்ட குடிநீருக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டப் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது. அதை விரைவுபடுத்த வேண்டும். மதுரை மாவட்ட மக்களுக்கு கழிவுநீர் கலக்காத நல்ல நீரை வழங்க வேண்டும்’’ என்றார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, ‘‘தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்றாலும், கிணறுகள் தோண்டுவதற்கான அனுமதி பெறப்படவில்லை. மேலும், குழாய் பதிக்கும் பணிகளும் முடிக்கப்படவில்லை. தற்போது 15 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மதுரைக்கு தினசரி 160 மில்லியன் லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்’’ என்றார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ‘‘நிச்சயம் தண்ணீர் கிடைக்கும். அணைகளில் உள்ள தண்ணீர் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடிவைத்துள்ளோம்’’ என கூறினார். இதைக் கேட்டதும் பேரவையில் இருந்த முதல்வர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.
|
முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை மரணம்: பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்தவர் | செய்திப்பிரிவு | கோவை | 2023-10-10 05:25:00 |
கோவை: கோவையில் வசித்து வந்தமுன்னாள் வலுதூக்கும் வீராங்கனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
சென்னையை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி(53). தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 1991-ம் ஆண்டுசர்வதேச மகளிர் வலுதூக்கும்போட்டியில் 3-ம் இடமும், 1992,1994-ம் ஆண்டுகளில் நடந்தஆசிய வலுதூக்கும் போட்டியில் 44 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
1995-ம் ஆண்டு நடந்த ஆசியவலுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
இவரின் கணவர் அசோக் கோவையில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் மூத்த உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஹரிகிருஷ்ணன், மகேஸ்வர் என்ற இரு மகன்களும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.
சாமுண்டீஸ்வரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
அவரது உடல் இறுதி சடங்குக்காக சொந்த ஊரான சென்னைக்கு கொண்டு செல் லப்பட்டது.
|
தமிழகத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 8,000 மேல்நிலை தொட்டி அமைக்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் | செய்திப்பிரிவு | திண்டுக்கல் | 2023-10-10 05:22:00 |
திண்டுக்கல்: தமிழகத்தில் 2024-ம் ஆண்டு இறுதிக்குள் 8,000 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டி முடிக்கப்படும். குடிநீர் தொட்டி இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறோம் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 8 வாரங்கள் ஊதியம் தரவில்லை என்பது தவறான தகவல். இந்ததிட்டத்தில் மத்திய அரசு ரூ.2,100-கோடியை விடுவிக்காமல் இருந்தது. இதில் ரூ.1,800 கோடி கடந்த வாரம் மத்தியஅரசு வழங்கியது அந்த தொகைபணியாளர்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.300 கோடியையும் மத்திய அரசு விடுவித்தால்உடனடியாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
தமிழக கிராமப் புறங்களில் 1,496 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டுவதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 2,500மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்ட ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தொட்டி இல்லாத கிராமங்களே இல்லை என்றநிலையை உருவாக்கி வருகிறோம். தமிழகத்தில் 2024-ம்ஆண்டு இறுதிக்குள் 8,000 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டி முடிக்கப்படும். விரிவடையும் நகரப் பகுதி, கிராமப் பகுதிகளுக்கு போதிய மின் வசதி ஏற்படுத்தி தர திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர தமிழக முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
|
ரூ.2,893 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 05:16:00 |
சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
நடப்பு 2023-24-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள், ரூ.2,893.15 கோடி நிதி ஒதுக்க வழிவகை செய்கின்றன. 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்த பிறகு, புதிய பணிகள் மற்றும் புதிய துணை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதற்கு, பேரவையின் ஒப்புதலை பெறுவதும், எதிர்பாராச்செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையை அந்த நிதிக்கு ஈடுசெய்வதும் இந்த துணை மானிய கோரிக்கையின் நோக்கம் ஆகும்.
மாநில பேரிடர் தணிப்பு நிதியின்கீழ், சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகள், கடலூர் மாநகராட்சிக்கு மழைநீர் வடிகால் அமைக்க அரசு ரூ.304 கோடி அனுமதித்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, திருச்சி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு பங்கு மூலதன உதவியாக ரூ.175.33 கோடி அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 25 வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட 1.85 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் மானிய நிவாரண உதவி வழங்க ரூ.181.40 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுவனங்களின் ஊழியர்களின் நிலுவையை தர, மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு வழிவகை முன் பணமாக ரூ.171.05 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடல் நகர்ப்புற புத்துணர்வு, நகர்ப்புற மாற்றங்களுக்கான ‘அம்ருத்’ இயக்கத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்த மாநில, மத்திய அரசின் பங்காக ரூ.893.23 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
2013 தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மாநிலத்துக்குள் உணவு தானியங்களை கையாளுதல், விநியோகித்தல், நியாயவிலை கடைகள் மற்றும் முகவர்களுக்கான லாபம் ஆகியவற்றுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பங்காக ரூ.511.84 கோடியை அரசு அனுமதித்துள்ளது. ‘தொழில் 4.0’ தரநிலையை அடையும் நோக்கில் 45 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை சீர்மிகு மையங்களாக தரம் உயர்த்த ரூ.277.64 கோடி, அடையாறு நதி மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.139.44 கோடிக்கு அரசு கூடுதல் அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
|
உம்மன் சாண்டி, எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 05:10:00 |
சென்னை: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, காலை 10 மணிக்குசட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் இ.ஏ.லியாவுதீன் சேட் (அரவக்குறிச்சி), கே.பழனியம்மாள் (ராசிபுரம்), வெ.அ.ஆண்டமுத்து (பவானிசாகர்) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அதன்பின், அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
மவுன அஞ்சலி: தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் தனது 95-வது வயதில் மறைந்த, பஞ்சாப் மாநிலத்தின் 5 முறை முதல்வராக பணியாற்றிய பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலர் ப.சபாநாயகம், கேரளாவில் 2 முறை முதல்வராகவும், 12 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் வாசித்தார்.
இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
|
மண் கடத்தல் குறித்து புகார் அளிப்பவரை அச்சுறுத்துவது கடுங்குற்றம்: உயர் நீதிமன்றம் கருத்து | செய்திப்பிரிவு | மதுரை | 2023-10-10 05:06:00 |
மதுரை: மண் கடத்தல் குறித்து புகார்அளிப்பவர்களை அச்சுறுத்துவது கடுமையான குற்றம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த நித்யானந்தம் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தமனுவில் கூறியிருப்பதாவது:
முசிறி அருகே சிட்டிலரை ஏரியில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மண்கடத்தப்படுகிறது.
இது தொடர்பாக ஊராட்சித்தலைவர் பாலகுமார், டெல்லிகுமார் மீது போலீஸில் புகார் அளித்தேன். இதனால் என் வீடு மீதுதாக்குதல் நடத்தப்பட்டது. என்னையும், குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸில் புகார்அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஏரியில் சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்து டிப்பர் லாரிகளில் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள்எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘மண்கடத்தல் குறித்து புகார் அளிப்பவர்களை மிரட்டுவதும், அவர்களின் வீடுகளை சேதப்படுத்துவதும் கடுமையான குற்றமாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. மனு தொடர்பாக திருச்சிமாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
|
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடியேற்றம்: கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | கோவை | 2023-10-10 05:03:00 |
கோவை: தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்.9-ம் தேதி (நேற்று) மாநிலம் முழுவதும் நிறுவனங்களில் கருப்புக் கொடியேற்ற தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, கோவையில் கணபதி, ஆவாரம்பாளையம், இடையர்பாளையம் உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழில் முனைவோர் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால், சுருளிவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு செப்டம்பரில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.இதனால் 8 லட்சம் தொழில்முனைவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தொழிலை விட்டுச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு கிலோவாட்டுக்கு ரூ.35-ல்இருந்து ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றொரு தரப்பினருக்கு ரூ.550 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார நிலைக் கட்டணம் மற்றும் உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணஉயர்வைக் கைவிட வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சென்னையில் வரும் 16-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
|
இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 04:55:00 |
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10, 11-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 13 முதல் 15-ம் தேதி வரை ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
10-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 11-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் நீங்கலாக இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.
9-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 6 செமீ, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 செமீ, நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், குன்னூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், (நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
|
அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா; அக்.17 முதல் 4 நாட்களுக்கு தொகுதிவாரியாக பொதுக்கூட்டங்கள்: பழனிசாமி அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 04:50:00 |
சென்னை: அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தொகுதிவாரியாக 4 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் நடத்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எம்ஜிஆர் தோற்றுவித்து, ஜெயலலிதா போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுக, அக்.17-ம் தேதி 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, அனைத்து சட்டப்பேரவை தொகுதிகள், கட்சி செயல்படுகிற புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அக்.17, 18, 26, 28 ஆகிய 4 நாட்கள் அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள், அதில் சிறப்புரை நிகழ்த்துவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் நான் 18-ம் தேதி உரையாற்ற உள்ளேன்.
மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அணி பிரதிநிதிகளுடன் இணைந்து, சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, தங்கள் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும். கட்சி எம்எல்ஏக்கள், கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி. எம்எல்ஏக்கள் ஆகியோர் தாங்கள் சார்ந்த சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள், படங்களுக்கு 17-ம் தேதி மாலை அணிவித்து, இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம், நலத் திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாட வேண்டும்.
|
பொன்முடி விடுதலையை எதிர்த்து தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கு விசாரணை தள்ளிவைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 04:45:00 |
சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சராக உள்ள பொன்முடி, கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மற்றும் குடும்பத்தினர் மீது கடந்த 2002-ல் அதிமுக ஆட்சியின்போது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை விசாரித்த வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோரை விடுவித்தது.
வேலூர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில், உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து, அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரன் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு பொன்முடி தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற நீதிபதி, விசாரணையை அக்.19-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
|
செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 04:43:00 |
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. உடல்நிலை சீரான பிறகு, அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்துஇந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனால், ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அவரது உடல்நிலை சீரான பிறகு, பிற்பகலில் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் புழல்சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
|
முதல்வர் ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு: 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 04:41:00 |
சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்தை இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்தார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கட்சியினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து ராமதாஸ் எழுதிய கடிதத்தை கொடுத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த கோரி மனு அளித்தோம். முதல்வரும் முடிவெடுப்பதாக சொன்னார். 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சமூக நீதி பிரச்சினை. தமிழகத்தின் வளர்ச்சி பிரச்சினை. மிகப்பெரிய சமூகமான வன்னியர் சமூகம் முன்னேறினால் தமிழகம் வளர்ச்சி அடையும். இதை, சாதி, மதம், இனப் பிரச்சினையாக பார்க்கக்கூடாது.
சாதிவாரி கணக்கெடுப்புக்கும் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும். பிஹாரை விட மக்கள் தொகை குறைவான தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை எளிதாக நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
ராமதாஸ் கடிதம்
முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ பணிகள் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு தாமதமாகி வருகிறது. தேவை ஏற்பட்டால் எத்தகைய போராட்டங்களையும் நடத்த பாமக தயாராகவே இருக்கிறது. ஆனாலும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்கள், ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு 11-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கையைப் பெற வேண்டும். அதனடிப்படையில், பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
|
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு | செய்திப்பிரிவு | அரியலூர் | 2023-10-10 04:38:00 |
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தின் வயல் பகுதியில் திருமழபாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உரிமம் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இங்கு நாட்டு வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர் - அரியலூர் சாலையில் இவருக்கு சொந்தமான பட்டாசு கடையும் உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதமேஉள்ள நிலையில், இந்த ஆலையில் வெடி தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. சிவகாசி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, விரகாலூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், பட்டாசு ஆலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்கு இந்த வெடி சத்தம் கேட்டது. அடுத்த சில விநாடிகளுக்கு அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும், அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், திருவையாறு, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள், கீழப்பழுவூர், திருமானூர் போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி, அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. தீ ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, நண்பகல் 12 மணிக்கு மேல் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டு, அரியலூர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் விருதுநகரை சேர்ந்த சீனு (21), பன்னீர்செல்வம் (55), அரியலூர் மாவட்டம் விரகாலூர் அண்ணா நகர் ரவி (45), இவரது மனைவி சிவகாமி (38), ராசாத்தி (50),வெண்ணிலா (48), திருச்சி மாவட்டம் குமுளூர் அறிவழகன் (56), தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி சிவக்குமார் (38), திருவலஞ்சுழி ஆனந்தராஜ் (50), அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமம் சின்னதுரை (55), திருமானூர் முருகானந்தம் (20) ஆகிய 11 பேர் உயிரிழந்தனர்.
ரூ.1 கோடி பட்டாசுகள் நாசம்: விபத்து நடந்த இடத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சிவகாசியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சில பட்டாசு ரகங்கள் கொண்டு வரப்பட்டு குடோனில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் வெடித்து சாம்பலாகின. விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த டிரைலருடன் கூடிய டிராக்டர், ஒரு வேன், 8 இருசக்கர வாகனங்கள் ஆகியவையும் எரிந்து நாசமாகின.
ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு: விபத்து நடந்த இடத்துக்கு மாவட்டஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வந்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அரியலூர் அதிவிரைவு படை, ஆயுதப் படை காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உரிமையாளர், நிர்வாகி கைது: விபத்து தொடர்பாக பட்டாசு ஆலைஉரிமையாளரான திருமழபாடி ராஜேந்திரன் (55), ஆலையை நிர்வகித்து வரும் அவரது மருமகன் அருண் (40) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:அரியலூர் மாவட்டம் வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்ட செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். விபத்தில்உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 7 பேருக்கு தலா ரூ.50 ஆயிரத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கினர்.
|
பாஜகவின் `பி' டீமாக அதிமுக செயல்படுகிறது: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 04:37:00 |
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை விட்டு பிரிந்தாலும் அக்கட்சியின் ‘பி’ டீமாக அதிமுக செயல்படுகிறது என்று அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் அக்கட்சியை பாதுகாக்கும் எண்ணத்தை பழனிசாமி வெளிப்படுத்தியுள்ளார்.
தீர்ப்பை அமல்படுத்த காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவைதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் காவிரி விவகாரமானது கர்நாடகா, தமிழகம், உச்ச நீதிமன்றம் என்றே சுழல வேண்டும் என்ற பாஜகவின் சிந்தனையையே பழனிசாமியும் வெளிப்படுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் பாஜகவின் பி டீமாக மோடி அரசை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் பழனிசாமி பேசினார்.
கடந்த 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை 22 நாட்கள் அதிமுக எம்பிக்கள் முடக்கியதாக பழனிசாமி கூறியது முற்றிலும் உண்மையற்ற தகவல். அது மோடிக்கு ஆதரவாக அமளி செய்து நாடகம் நடத்தினர். பேரவை தீர்மானத்தின் மீது பேசிய பழனிசாமி இறுதியில் வரவேற்றார். மத்திய அரசுக்கு அழுத்தம் தரவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
|
5-வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை: ஜெகத்ரட்சகன் உறவினர்களிடம் தீவிர விசாரணை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 04:30:00 |
சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது மகள், மருமகனிடம் இருந்து வெளிநாட்டு கரன்சிகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் சிக்கி இருப்பதாகவும், அதனை கைப்பற்றி வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தனக்கு சொந்தமான கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள், மகள், மருமகள், உறவினர்கள் தொடர்புடைய இடங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், மதுபான ஆலைகள், வீடுகள், நட்சத்திர விடுதிகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அந்தவகையில், ஜெகத்ரட்சகனின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கார்கள் என ஒன்றுவிடாமல் வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வீட்டுக்கு பணம் எண்ணும் இயந்திரத்தை கொண்டு சென்று அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.
ஏற்கெனவே, ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்து 2 பைகளில் கணக்கில் வராத பல கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஈக்காட்டுத்தாங்கலில் ஜெகத்ரட்சகனின் மகளுக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து கட்டுக்காட்டாக பணம், வெளிநாட்டு கரன்சிகள், பல கோடி மதிப்பிலான 7 வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக ஜெகத்ரட்சகனின் மகள், மருமகனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, கைக்கடிகாரங்களுக்கு முறையான ரசீது, ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மகள், மருமகனுக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
ஜெகத்ரட்சகன் வீடு, கல்வி, தொழில் நிறுவனங்களில் உள்ள கணினி, லேப்டாப்களில் தொழில்நுட்ப உதவியுடன் தடயவியல் ஆய்வையும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனை, கல்லூரி அலுவலகங்கள் ஆகியவற்றில் மென்பொருட்கள் பயன்படுத்தி கணக்கு வழக்குகளை மறைத்து வைத்திருக்கின்றார்களா என்ற சோதனையும் நடைபெறுகிறது.
மேலும் வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதா, சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கணக்குகள் வழக்குகள் உள்ளதா என்பது உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனாலும், இந்த சோதனையில் இதுவரை என்னவெல்லாம் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.
|
தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-10 04:29:00 |
சென்னை: உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில், காவிரி விவகாரம் தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்த 69.7 டிஎம்சி நீர் அளவையும், தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை குறுவை பாசனத்துக்காக திறந்து வைத்தோம். திறந்துவிடப்பட்ட நீரும் கடைமடைப் பகுதி வரை சென்றது.
செயற்கையான நெருக்கடி: நமது வேளாண் பெருமக்களும் கடந்த ஆண்டுகளைப் போலவே குறுவைப் பயிரை இந்த ஆண்டும் சிறப்பாக பயிரிடுவதற்கான பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடக மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை.
இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்துவரும் நிலையில் கடந்த 5-ம் தேதி வரை 90.25 டிஎம்சி நீர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம்ஏக்கர் பரப்பளவில் குறுவை, சம்பா சாகுபடிக்காக, முறைபாசனப்படி நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நாட்களுக்கு நமக்கு உரிய நீரை பெற்று, குறுவை பயிரையும், அடுத்து நடவுசெய்யப்பட உள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.
உணவுத் தேவை.. உயிர்த் தேவை: தமிழக மக்களின் உணவுத் தேவைக்காக மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கும் அவசியமானது காவிரி நீர். அதை தமிழக மக்களுக்கு பெற்றுத் தருவதில் எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டு பெற்றுத்தருவோம். மத்திய அரசு இதில் முறையாக செயல்பட்டு தமிழகமக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் இறுதிதீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை இந்த பேரவை அரசினர் தனித் தீர்மானம் மூலம் ஒருமனதாக வலியுறுத்துகிறது. நான் முன்மொழிந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்று, நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
தொடர்ந்து, இத்தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசியதாவது: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: கர்நாடகாவில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், காவிரி விவகாரத்தில் ஒன்றுசேர்ந்து விடுகின்றனர். அந்த ஒற்றுமைதான் அங்கு பலம்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்தாலும், முழு மனதோடுஇந்த அரசு செயல்பட்டால்தான் நீரை பெற முடியும். கர்நாடகாவில் எந்த ஆட்சி வந்தாலும் தண்ணீர் கிடைப்பது சிரமம். அதனால், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெறுவதற்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்.
பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்: இந்த தீர்மானம் முழுமையான தீர்வை நோக்கியதாக இல்லை. எங்கள் கோரிக்கையான நதிகளை தேசியமயமாக்குதல், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு போன்றவற்றை தீர்மானத்தில் சேர்த்துக் கொள்வதாக உறுதிதந்தால் ஆதரிப்போம். இவ்வாறு அவர்கள் பேசினர்.
வானதி சீனிவாசன் பேசியதை தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்) கே.மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), டி.சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் ஆதரித்து பேசினர். இதையடுத்து, குரல்வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
|
டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் இடமில்லை: திருச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு | ஜி.செல்லமுத்து | திருச்சி | 2023-10-10 04:12:00 |
திருச்சி: திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள படுக்கைகள் நிரம்பியதை அடுத்து புதிதாக வரும் நோயாளிகள் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் விட்டுவிட்டு பெய்யும் மழை காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக திருச்சி மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ஒரு சிறுவன், கர்ப்பிணி உட்பட 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் இதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டில் உள்ள 60 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இதனால், போதிய படுக்கை வசதியில்லாததால் ஏற்கெனவே சிகிச்சை பெறுபவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி செல்லும் வரை புதிதாக வரும் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில நேரங்களில் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் வரும் போது, ஏற்கெனவே சிகிச்சை பெற்று வருபவர்களை தரையில் படுக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் தனி வார்டில் படுக்கைகள் நிரம்பி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச் சாட்டியுள்ளனர்.
இது குறித்து நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வதாஸ் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் எங்கள் பகுதியில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. எனது மகனுக்கு காய்ச்சல் இருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனைக்கு பிறகு டெங்கு உறுதி செய்யப்பட்டது.
அங்கு சிகிச்சை பெற ரூ.40 ஆயிரம் வரை செலவாகும் என்பதால், அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எனது மகனை அழைத்துச் சென்றேன். ஆனால், அங்கு படுக்கை இல்லாததால், எங்களை திருப்பி அனுப்பிவிட்டனர். எனவே, அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
இது தொடர்பாக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் நேருவிடம் கேட்டபோது, “திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளில் தலா ஒரு முதுநிலை மருத்துவர், 2 முது நிலை பயிற்சி மருத்துவர்கள், 2 செவிலியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, பெரியவர்கள் 28, குழந்தைகள் 14, கர்ப்பிணிகள் 5 என மொத்தம் 47 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை உறுதி செய்யப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் நோயாளிகள் அதிகரிக்கும்பட்சத்தில் தேவைக்கேற்ப படுக்கைகள் அதிகரிக்கப்படும்” என்றார்.
|
உதயநிதியை அவதூறாக பேசிய விவகாரம்: பொதுக்கூட்டம் போட்டு வருத்தம் தெரிவித்தார் அதிமுக மாவட்ட செயலாளர் | செய்திப்பிரிவு | கள்ளக்குறிச்சி | 2023-10-10 04:08:00 |
கள்ளக்குறிச்சி: அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு. நீதிமன்ற உத்தரவு காரணமாக அதே இடத்தில் நேற்று பொதுக் கூட்டம் நடத்தி வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியில் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமர குரு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில் திமுக-வினரால் புகார் அளிக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து முன் ஜாமீன் பெற சென்னை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முறையாக அனுமதி பெற்று, மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி மந்தவெளியில், அதிமுக மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் குமரகுரு, “அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பேச்சு புண்படும்படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூக வலைதளங்கள் வாயிலாக நான் தெரிவித்திருந்தேன். இப்போதும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக, அவ்வாறு புண்படும்படி பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.
|
ஈரோடு - ஜோலார்பேட்டை இடையே ரயிலின் இயக்கத்தில் மாற்றம் | செய்திப்பிரிவு | சேலம் | 2023-10-10 04:06:00 |
சேலம்: ஈரோடு - ஜோலார்பேட்டை இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலானது, ஈரோடு - திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் வழியாக, ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜோலார்பேட்டை ரயில்வே யார்டில், ரயில் பாதை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலானது, இன்று (10-ம் தேதி), 12, 13, 21, 23 ஆகிய தேதிகளில், ஈரோடு - திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.
ரயிலின் இயக்கம் திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மறு மார்க்கத்தில், ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயிலானது, இன்று (10-ம் தேதி), 12, 13, 21, 28-ம் தேதிகளில் திருப்பத்தூர் - ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். ரயிலின் இயக்கம் ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சேலம் | 2023-10-10 04:04:00 |
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழ் குடமுழுக்கு கூட்டு இயக்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. கும்பாபிஷேக நாளன்று, சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகத்தை, தமிழில் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சேலத்தை அடுத்த இளம்பிள்ளையைச் சேர்ந்த தமிழ்க் குடமுழுக்குக் கூட்டியக்கம் சார்பில் ஓம் பதினெண் சித்தர் குரு குலப் பள்ளி தலைவர் சத்திய மூர்த்தி தலைமையில் 10 பேர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மனு குறித்து சத்திய மூர்த்தி கூறியது: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், பல நூறு ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோயிலின் குடமுழுக்கு வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேகம், பிரதிஷ்டை பூஜை என சமஸ்கிருத வழிபாட்டு அடிப்படையில் குடமுழுக்கு அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், உத்தரவுக்கு மாறாக, கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாரியம்மன் கோயில் மரபின வழிபாட்டு முறையானது கம்பம் நடுதல்,
அலகு குத்துதல், மா விளக்கு ஏந்துல், ஆடு கோழி பலியிடுதல், பொங்கலிடுதல், மஞ்சள் நீராட்டுதல் ஆகிய அனைத்தும் சமஸ்கிருத வழிபாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே, கோயிலின் குடமுழுக்கினை, சித்தர்கள் அருளிய தமிழ் மந்திரங்கள், நாயன்மார்களின் திருமுறை ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்த தோத்திரங்கள் தமிழின ஆச்சாரியார்களால் ஓதப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல், சமஸ்கிருதத்தை மட்டுமே முன்னிறுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
ஆர்ப்பாட்டம்: இதேபோல், சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகத்தை, தமிழில் மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்த வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் இணைந்து சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தில், தமிழர் கலாச்சார இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பொன் சரவணன் தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேச மக்கள் முன்னணி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், தமிழில் மந்திரங்கள் ஓதி குட முழுக்கு நடத்த, தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
உள்ளூர் விடுமுறை: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் ஆடித் திருவிழாவுக்கு, பொங்கல் வைக்கின்ற நாளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே. கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில், மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில்,
கும்பாபிஷேக நாளான வரும் 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத் தலைமையிலான பாஜக-வினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் கலந்து கொள்ளும் வகையில் கும்பாபிஷேக நாளன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்.
|
கிராம சபை கூட்டத்தில் விவசாயியை உதைத்த வழக்கு கொலை முயற்சி வழக்காக மாற்றம் | அ.கோபால கிருஷ்ணன் | ஶ்ரீவில்லிபுத்தூர் | 2023-10-10 00:20:00 |
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தில் விவசாயியை உதைத்த ஊராட்சி செயலர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான ராஜு என்பவரின் ஜாமீன் மனுவை ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காகுளம் கிராமத்தில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பன் என்பவரை எம்.எல். ஏ மான்ராஜ், பிடிஓ மீனாட்சி, ஊராட்சி தலைவர் பூ முன்னிலையில் ஊராட்சி செயல் அலுவலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்தார். இதுகுறித்த புகாரில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த வன்னியம்பட்டி போலீஸார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். விவசாயி அம்மையப்பனை தாக்கிய தங்கபாண்டியன் ஆதரவாளரான ராசு என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்து முன்ஜாமீன் பெற்றார்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ராசு தாக்கல் செய்த மனுவை ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீதான கொலை மிரட்டல் வழக்கை கொலை முயற்சி வழக்காக மாற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விவசாயி அம்மையப்பன் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
மதுரையில் காதில் பூ வைத்து நூதனமான முறையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் போராட்டம் | சுப. ஜனநாயகசெல்வம் | மதுரை | 2023-10-09 21:23:00 |
மதுரை: மதுரையில் இன்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நூதன முறையில் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி இன்று மதுரையில் காதில் பூ வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்பிரேமானந்தி முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் கல்யாணசுந்தரம், மாவட்டச்செயலாளர் பரமேஸ்வரன், ஐசிடிசி மாநில பொதுச்செயலாளர் வாசுகி ஆகியோர் பேசினர். இதில், ஆசிரியர் சங்க சரவணன், டான்சாக் மாவட்ட துணைத்தலைவர் மணிகண்ணன், நெடுஞ்சாலைத்துறை சங்க நிர்வாகிகள் மாரி, அன்பு, முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
|
காமராசர் பல்கலை. டீனை பதவி நீக்க வலியுறுத்தி பரபரப்பு சுவரொட்டிகள் | என். சன்னாசி | மதுரை | 2023-10-09 20:50:00 |
மதுரை: காமராசர் பல்கலைக்கழக டீன் கண்ணதாசனுக்கு எதிராக மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் சம்பளம் வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துணைவேந்தர் மற்றும் நிர்வாக பொறுப்பிலுள்ள பதிவாளர், தேர்வாணையர், டீன் உள்ளிட்டோரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் நிலையில், இப்பல்கலைக்கழக டீன் கண்ணதாசனுக்கு எதிராக மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, மதுரை ஆட்சியர் அலுவலக பகுதி, காமராசர் பல்கலை கல்லூரி, ரேஸ்கோஸ் உட்பட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ‘தமிழக அரசே, உயர்கல்வித் துறையே நடவடிக்கை எடு’ மதுரை காமராசர் பல்கலை கல்லூரிகளில் பேராசிரியர்கள், முதல்வர்கள் பணி நியமனத்தில் துணைவேந்தர் , பதிவாளர் பணம் வசூலித்து தகுதியில்லாதவர்களை நியமனம் செய்த கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி, அரசியல் அதிகார தோரணையில் செயல்படும் முன்னாள் எம்எல்ஏ -வின் மகன் பேராசிரியர் கண்ணதாசனை (டீன்) அப்பதவியில் இருந்து உடனே விடுவித்து, நிரந்தர பணி நீக்கமும் செய்யவேண்டும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது, காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
|
மதுரையில் ‘ரோடு ரோலர்’கள் பற்றாக்குறையால் ஜல்லிகளுடன் சாலைகள் - மக்கள் அவதி | ஒய். ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2023-10-09 19:56:00 |
மதுரை: ‘ரோடு ரோலர்’ பற்றாக்குறையாலும், அதற்கு டீசல் போடுவதற்கு தயங்குவதாலும் மதுரை மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் புதிய சாலைகள் அமைப்பதில் தோய்வு ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முடிந்த வார்டுகளில் ஜல்லிகள் நிரப்பி 1 மாதம் முதல் 3 மாதம் ஆனநிலையிலும் புதிய சாலை அமைக்கப்படாததால் ஜல்லி நிரப்பி சாலைகளில் செல்லும் பொதுமக்கள் கால்களை பதம்பார்ப்பதோடு வாகனங்களுடைய டயர்கள் பஞ்சராகி பொருளாதார இழப்பும், உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் புதிய குடிநீர் விநியோக குழாய்கள், வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது. புறநகர் 28 வார்டுகளில் பாதாள சாக்கடைப்பணிகள் நடக்கிறது. இந்த இரு பணிகளும் முடிந்த வார்டுகளில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு ஈடுபடுத்தப்பட்டநிலையில் அவர்களுக்கும், அவர்களை மேற்பார்வை செய்யும் மாநகராட்சி பணியாளர்கள், ஒப்பந்த நிறுவன ஊழியர்களுக்கும் இடையே மொழி பிரச்சினை ஏற்படுகின்றன.
அதனால், பாதாளசாக்கடைப்பணிகளில் பல்வேறு குறைபாடுகளும், குளறுபடிகள் ஏற்பட்டு, அதன்பிறகு மீண்டும் மீண்டும் சாலைகள் சாலைகளை தோண்டி இப்பணிகள் நடக்கின்றன. சாலைகளை தோண்டும்போது, எந்த இடத்தில் பழைய குடிநீர் குழாய்கள், பாதாள சாக்கடை குழாய்கள் செல்கிற என்பது தெரியாமலே ஒப்பந்த ஊழியர்கள் சாலையை தோண்டுவதால் அடிக்கடி குடிநீர் குழாயும், பாதாளசாகடை குழாய்களும் உடைந்து குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் கிடைக்காததால், கிடைக்கிற தொழிலாளர்களை கொண்டு ஒப்பந்த நிறுவனங்கள், இந்த பிரமாண்ட திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை திட்டப்பணிகள் முடிந்த சாலைகளில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு போதிய தொழிலாளர்களும், வாகனங்களும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஜல்லிகளை நிரப்பி, மேடு பள்ளங்களை சரி செய்து புதிய சாலைகள் போடுவதற்கு ‘ரோடு ரோலர்’கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ‘ரோடு ரோலர்’ ஒரு சிலவையே இருப்பதால் இந்த ரோலர்கள் மட்டுமே அனைத்து வார்டுகளுக்கு கொண்டு சென்று வருகின்றன. மேலும், ரோடு ரோலர்களுக்கு டீசல் போட வேண்டும் என்பதற்காகவும் அவற்றை பயன்படுத்தாமலும் உள்ளனர்.
அதனால், சாலைகள் அமுங்கி மேடு, பள்ளங்களாக உருவாகியிருப்பதை உடனடியாக ஒப்பந்த நிறுவனங்களால் சரி செய்ய முடியவில்லை. பொதுமக்கள் வாகனங்கள் சென்று அதன் மூலம் சாலைகளில் போட்ட ஜல்லிகள் அமுக்கிய பிறகே ஒப்பந்ததாரர்கள் புதிய சாலைகளை போடுகின்றனர். இந்த ஒப்பந்த நிறுவனத்தினர் அரசியல் செல்வாக்குடன் இப்பணிகளை டெண்டர் எடுத்து இருப்பதால் அவர்களை மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து கண்டிக்கவும் முடியவில்லை. அதனால், மற்றொரு புறம் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு, மூன்று நாளைக்கு ஒரு முறை ஒரே ஒரு முறை ‘ரோடுரோலர்’ எடுத்து வந்து, அதையும் பெயரளவுக்கே நிரப்பப்பிய ஜல்லிகளை அமுக்கிவிட்டு செல்கின்றனர். அப்படியிருந்தும் ஜல்லிகள் அமுங்காமல் கற்கள் கூர்முனையுடன் மேலே நிற்பதால் இந்த சாலைகளில் செருப்புகளை அணிந்து நடந்து சென்றாலும் கால்களை ஜல்லிகள் பதம் பார்க்கின்றன. ஜல்லிகளில் நடந்து செல்லும் பெண்கள், முதியவர்களுக்கு கால்வலி ஏற்படுகிறது.
கார்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் டயர்களை பதம்பார்த்து அடிக்கடி பஞ்சராகிவிடுகிறது. பல வார்டுகளில் புதிய சாலை போடுவதற்காக ஜல்லிகள் நிரப்பி ஒரு மாதம் முதல் 3 மாதம் ஆனநிலையில் தற்போது வரை புதிய சாலைகள் போடவில்லை. அதனால், மக்களுக்கு பொருளாதார இழப்புகளும், உடல் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
இதுகுறித்து ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திடம் கேட்டால், “புதிய சாலைகள் போடுவது எளிதில்ல, பல ப்ராசஸ் உள்ளன. அதன் அடிப்படையிலே போட வேண்டிய இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது” என்று சமாளிக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், பதில் சொல்ல முடியாமல் விக்கி நிற்கிறார்கள். மக்கள், ஜல்லிகள் நிரப்பி சாலைகளில் செல்ல முடியாமல் அன்றாடமும் பாடாதபாடு படுகிறார்கள்.
மாநகராட்சியில் பொதுவாக வடக்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில்தான் இதுபோல் நீண்ட நாட்கள் ஜல்லிகள் நிரப்பி சாலைகள் போடப்படாமல் உள்ளது. மாநகராட்சி மேயர், ஆணையாளர், புதிய சாலைகளை போடுவதற்கு ஒப்பந்தம்விடப்பட்ட சாலைகளை பட்டிலிட்டு அதன் விவரங்களை நேரில் ஆய்வு மக்கள் படும் துயரங்களை போக்கி புதிய சாலைகளை போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதுகுறித்து மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ‘‘ஜல்லிகள் நிரப்பி 20 நாளில் போட ஆரம்பிக்கலாம். அதுபோன்ற ஜல்லிகள் நிரப்பி போடப்படாத சாலைகளை பட்டியல் எடுத்து உடனடியாக போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.
|
சாத்தூர் பொருட்காட்சி அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-09 19:26:00 |
சென்னை: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பொருட்காட்சி நடத்துவதற்கான அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான தமிழக செய்தி, விளம்பரத் துறை ஊழியர்களின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பொருட்காட்சி நடத்த அனுமதி கேட்டு சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள செய்தி, விளம்பரத்துறை அலுவலகத்தில் மதுரை பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்த அனுமதியை வழங்குவதற்கு அந்த துறையின் பொருட்காட்சி பிரிவு கணக்காளரான அன்பரசு என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் மாணிக்கவாசகம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின்படி, செப்டம்பர் 19ம் தேதி அந்த தொகையை மாணிக்கவாசகம் கொடுத்தபோது, அதை பெற்ற கணக்காளர் அன்பரசன், அலுவலக உதவியாளர் பாலாஜி ஆகியோர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஜாமீன் கோரி அன்பரசன், பாலாஜி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி மணிமேகலை முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் உஷாராணி, தலைமை செயலகத்தில் உள்ள அரசு கணக்காளர் அன்பரசன் அலுவலகத்தில் சோதனை நடத்திய போது 90 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், ராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை ஆகிய பகுதிகளில் பொருட்காட்சி நடத்த லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளதால், விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஜாமீன் வழங்கக் கூடாது என வாதாடினார்.
இதையடுத்து, அரசு ஊழியர்களான அன்பரசன், பாலாஜி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
|
அக்.11 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயர் அப்பாவு அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 18:30:00 |
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 11 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டன்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமைச் செயலகத்தில், திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று காவிரி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளை (அக்.10), 2023-24 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவதாம் நடைபெறும்.
நாளை மறுநாள் அக்.11ம் தேதியன்று, நிதி அமைச்சர் இந்த துணை மானியக் கோரிக்கைக்கு பதில் அளிப்பார். அன்று சட்டமன்றத்தில், ஏதேனும் மசாதோக்கள் கொண்டு வந்தால், அவை விவாதிக்கப்பட்டு, அன்றைய தினமே நிறைவேற்றப்படும். ஒட்டுமொத்தமாக அக்.9, 10 மற்றும் அக்.11 ஆகிய மூன்று நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
|
“என்ன துணிச்சல் என்பது எங்களுக்குத் தெரியும்!” - பேரவையில் முதல்வர், இபிஎஸ் இடையே காரசார வாதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 18:22:00 |
சென்னை: தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் அதிமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டப் போராட்டங்களை பட்டியிலிட்டார். பின்னர், "காவிரி நீர் சம்பந்தமாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும். அதை வலியுறுத்த வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "நான், என்னுடைய தீர்மானத்தைப் படிக்கிறபோது, தெளிவாக படித்திருக்கிறேன். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை பேரவை ஒருமனதாக கேட்கிறது. தீர்மானத்தில் ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன்" என்றார்.
அப்போது குறுக்கிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், "உச்ச நீதிமன்றம் சென்று தண்ணீர் விடவில்லை என்று கூறினால், உடனே கர்நாடக அரசு என்ன சொல்வார்கள். இரு மாநில அரசுகளும் பேசித் தீர்த்துக் கொள்கிறோம் என்பார்கள். உடனே நீதிபதிகள் பேசித் தீர்த்துக்கொள்ள அனுமதித்து, வழக்கை ஒத்திவைத்துவிடுவர். எனவே, தற்கொலை செய்வதற்கு சமம் நீங்கள் பேசுவது. தமிழகத்தின் உரிமையை அடகுவைப்பதற்கு சமம்" என்றார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தற்கொலைக்கு சமம் என்ற வார்த்தை சரியானது இல்லை. அப்படிப்பட்ட கட்சியோடு ஏன் நீங்கள் கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 38 எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் உள்ளனர். ஏன் இந்த காவிரி பிரச்சினையை அவர்கள் எழுப்பவில்லை" என்றார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "காவிரி பிரச்சினை குறித்து திமுக உறுப்பினர்கள் பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். நான் பேசியதை நிரூபிக்கவா? இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லக் கூடாது. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்று சட்டமன்றத்தில் இப்படி பேசுவதுதான் மரபா?" என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, "பேசினால் மட்டும் போதுமா? 38 பேரும் சேர்ந்து அவையை ஒத்திவைத்திருக்கலாம் அல்லவா? அப்படி அழுத்தம் கொடுத்ததால்தான் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, காலதாமதம் செய்ததால், மத்திய அரசு மீது நாங்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். துணிச்சலோடு தொடர்ந்தோம். அந்த துணிச்சல், உங்களிடத்தில் காணவில்லையே? பார்க்க முடியவில்லையே?" என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,"துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன துணிச்சல் என்பது எங்களுக்குத் தெரியும். அதை இங்கு சொல்லி, அவை மரபை மீற வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாக, உறுதியாக பலமுறை காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்கிறோம். பலமுறை அவையே நடக்கமுடியாத அளவுக்கு செய்திருக்கிறோம்.
ஏதோ சட்டமன்றத்தில், நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தால், அமைதியாக அமர்ந்துள்ளோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று கருதுகிறாரா எதிர்க்கட்சித் தலைவர்?" என்றார். இப்படியாக காவிரி விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்தின் போது திமுக அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
|
இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரிய சாந்தன் வழக்கு - நீதிபதி சுந்தர் மோகன் விலகல் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-09 17:59:00 |
சென்னை: இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி, ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான சாந்தன், இலங்கையை சேர்ந்தவர். அவர் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இலங்கையில் உள்ள தனது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனிருந்து அவரை கவனித்துக்கொள்ளும் வகையில் திருச்சி முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென கடந்த மாதம் மனு அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் தன்னை இலங்கை அனுப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த மனுவை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
|
“வாடும் சம்பா இளம் நெற்பயிரை காக்க தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்” - டெல்டா விவசாயிகள் வேதனை | வி.சுந்தர்ராஜ் | தஞ்சாவூர் | 2023-10-09 17:53:00 |
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பொட்டுவாச்சாவடியில் சம்பா பருவத்தில் நேரடி விதைப்பின் மூலம் முளைவிட்டுள்ள இளம் நெற்பயிர்களை காப்பாற்ற, விவசாயிகள் கல்லணைக் கால்வாய் ஆற்றில் இருந்து டீசல் மோட்டார்கள் மூலம் வயலுக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர். காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து 16-ம் தேதி கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் பகிர்ந்து விடப்பட்டது.
இந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். 5.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நிலையில், போதிய அளவு தண்ணீர் இல்லாததால் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. எஞ்சிய நெற்பயிர்கள் முற்றிய நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறுவை சாகுபடியை தொடர்ந்து பெரும்பாலான விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்வது வழக்கம். இதற்காக டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு தேவையான விதைகள், உரங்கள் ஆகியவற்றை வேளாண்மைத் துறையினர் விவசாயிகளுக்கு வழங்கி வந்தனர்.
ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தொடங்கியிருக்க வேண்டிய சம்பா நடவு பணியை, போதிய மழையின்மை மற்றும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு சரிவால் விவசாயிகள் காலதாமதப்படுத்தி வந்தனர். எனினும், மோட்டார் பம்புசெட், ஆழ்துளை கிணறு பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளும், ஆற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகளும் செப்டம்பர் மாதம் இறுதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 80 ஆயிரம் ஏக்கரிலும் சம்பா சாகுபடியை தொடங்கி உள்ளனர்.
சம்பா சாகுபடியில் பம்புசெட் பாசனம் உள்ள விவசாயிகள் நடவு முறையையும், ஆற்றுப்பாசனம் மூலம் சாகுபடி செய்பவர்கள் நேரடி நெல் விதைப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வருவது சரிந்ததால், கல்லணையில் இருந்து காவிரி, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீர் வரத்து குறைந்ததால், நெற்பயிருக்கு தேவையான தண்ணீரை பாய்ச்ச முடியவில்லை.
இதனால் சம்பா இளம் நெற்பயிர் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதை பார்த்த விவசாயிகள், இப்போது பயிரை எப்படியாவது காப்பாற்றி விட்டால், விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை நெற்பயிர் விளைய பின்னர் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆறுகள், குளங்கள், குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் கூடுதல் செலவு செய்து வயலுக்கு இறைத்து வாடும் நெற்பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, தஞ்சாவூர் அருகே பொட்டுவாச்சாவடியில் நேரடி நெல் விதைப்பு மூலம் தெளிக்கப்பட்ட சம்பா நெற்பயிர் 70 ஏக்கரில் முளைவிட்டு, தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதை பார்த்த அப்பகுதி விவசாயிகள், கல்லணைக் கால்வாய் ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் இரவு பகலாக இறைத்து வயலுக்கு பாய்ச்சி நெற்பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வாடும் சம்பா இளம் நெற்பயிரை வளர்த்தெடுக்கமோட்டார் மூலம் தண்ணீர் விவசாயிகள் கண்ணீர் பம்புசெட் இல்லைபொட்டுவாச்சாவடி விவசாயி கே.மாதவன் கூறுகையில், கல்லணைக் கால்வாய் ஆற்றின் கரையோரம் நாங்கள் சாகுபடி செய்து வருகிறோம். எங்களுக்கு பம்புசெட் கிடையாது. ஆற்றுப்பாசனத்தை நம்பி தான் விவசாயம் செய்கிறோம். குறுவையில் நாங்கள் நடவு செய்யவில்லை, சம்பா தான் இந்த பகுதிக்கு ஏற்ற பருவம் என்பதால் நாங்கள் நேரடியாக நெல் விதைத்துள்ளோம். ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரையிலான நெற்பயிர்கள் முளைவிட்டுள்ளன.
ஆனால், போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் தற்போது வாடி, காய்ந்து கருகி வருகின்றன. இதனால் கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து டீசல் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து நெற்பயிரை காப்பாற்றி வருகிறோம். இதற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஆனாலும், வாடும் பயிரை பார்க்க மனமில்லாமல் செலவு செய்து காப்பாற்றி வருகிறோம் என்றார்.
தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்: திருவாரூர் மாவட்டத்தில் ஒருபோகம் மட்டுமே சாகுபடி செய்யக்கூடிய திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றியத்தின் சில பகுதிகளில் வழக்கம்போல சிஆர்.1009 என்ற நெல் ரகத்தை தெளிக்காமல், 100 முதல் 120 நாட்கள் வயதுடைய கோ42, 45, 39 ஆகிய ரகங்களை தெளித்துவிட்டு, தண்ணீருக்காக காத்திருக்கின்றனர். இடையிடையே வந்த வெப்பச்சலன மழையால் முளைவிட்ட சம்பா நெற்பயிர்கள், கடந்த 15 நாட்களாக தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயி மாசிலாமணி கூறியதாவது: இப்பகுதியில் வாய்ப்புள்ள விவசாயிகள் மட்டும் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் மோட்டார் பம்புசெட்களில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி, பாசனம் செய்து வருகின்றனர். முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதிகள் கடலோரப் பகுதிகள் என்பதால், அருகருகே உள்ள மோட்டார் பம்புசெட்களை ஒரே நேரத்தில் இயக்க முடியாது. ஏதாவது ஒரு ஆழ்குழாய் கிணறில் மட்டுமே தண்ணீர் வரும் சூழல் உள்ளதால், மோட்டார் பம்புசெட் விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என தெரிவித்தார்.
பம்புசெட் இல்லை: பொட்டுவாச்சாவடி விவசாயி கே.மாதவன் கூறுகையில், கல்லணைக் கால்வாய் ஆற்றின் கரையோரம் நாங்கள் சாகுபடி செய்து வருகிறோம். எங்களுக்கு பம்புசெட் கிடையாது. ஆற்றுப்பாசனத்தை நம்பி தான் விவசாயம் செய்கிறோம். குறுவையில் நாங்கள் நடவு செய்யவில்லை, சம்பா தான் இந்த பகுதிக்கு ஏற்ற பருவம் என்பதால் நாங்கள் நேரடியாக நெல் விதைத்துள்ளோம். ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரையிலான நெற்பயிர்கள் முளைவிட்டுள்ளன.
ஆனால், போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் தற்போது வாடி, காய்ந்து கருகி வருகின்றன. இதனால் கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து டீசல் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து நெற்பயிரை காப்பாற்றி வருகிறோம். இதற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஆனாலும், வாடும் பயிரை பார்க்க மனமில்லாமல் செலவு செய்து காப்பாற்றி வருகிறோம் என்றார்.
|
மதுரையில் தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நஷ்டம் தரும் திட்டத்தை கைவிட கோரிக்கை | சுப. ஜனநாயகசெல்வம் | மதுரை | 2023-10-09 17:41:00 |
மதுரை: தமிழகம் முழுவதும் தொடக்க கூட்டுறவு வங்கிகளை நஷ்டப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை நஷ்டப்படுத்தும் பல்நோக்கு சேவை மைய திட்டத்தில் தேவையற்ற வேளாண் உபகரணங்கள், டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல்-கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிடவேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகில் இன்று நடைபெற்றது.
இதற்கு, அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் காமராஜ்பாண்டியன் தலைமை வகித்தார். செய்தி தொடர்பு செயலாளர் ஆசிரியத்தேவன் முன்னிலை வகித்தார். இதில் மதுரை மாவட்டச் செயலாளர்கள் கணேசன் (மதுரை), அருணகிரி (தேனி), ரவிச்சந்திரன் (திண்டுக்கல்), யோகசரவணன் (சிவகங்கை), பாலசுப்பிரமணியன் (புதுக்கோட்டை), கிருஷ்ணன் (ராமநாதபுரம்) ஆகியோர் பேசினர். இதில், ஓய்வுபெற்றோர் சங்க மாவட்ட நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம் (மதுரை), பிரிட்டோ (சிவகங்கை), முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), நெடுமாறன் (புதுக்கோட்டை), சுப்பையா (திண்டுக்கல்), முருகன் (தேனி) உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மதுரை மாவட்டப் பொருளாளர் பாரூக் அலி நன்றி கூறினார். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 700 கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள், 1000 ரேஷன்கடை விற்பனையாளர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ற்கும் கலந்து கொண்டனர். தமிழக அரசு கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அக்.12-ல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
|
முட்புதர்கள், கழிவுகளால் வரட்டாறு அணை கால்வாயில் நீரோட்டம் தடைபடும் அபாயம் | எஸ்.செந்தில் | அரூர் | 2023-10-09 17:31:00 |
அரூர்: அரூர் அருகே வரட்டாறு அணை கால்வாய் உரிய பராமரிப்பின்றி முட்புதர்கள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும் அடைபட்டு உள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக கால்வாயை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாறு அணை உள்ளது. இந்த அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, நாச்சினாம்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி, மாவேரிப்பட்டி, கம்மாளம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, புதூர் ஆகிய 15 கிராமங்களைச் சேர்ந்த 5,108 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதுடன் 25 ஏரிகளும் நிரம்புகின்றன.
இந்நிலையில், வரட்டாறு அணையின் பிரதான மற்றும் வலது, இடதுபுறக் கால்வாய்களில் பல இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. கால்வாய்களில் சிலர் கழிவுகளை கொட்டி அடைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், கால்வாயில் தண்ணீர் செல்லும் போது தடைபடும் நிலையுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கால்வாய் ஆக்கிரமிப்புகளால் விவசாய நிலங்களில் தண்ணீர் வெளியேறி சேதம் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்க கால்வாய்களை தூர் வார வேண்டும் என பொதுப் பணித்துறையினரிடம் விவசாயிகள் பல முறை வலியுறுத்தினர். இருந்த போதிலும் அதற்கான நிதிஒதுக்கீடு இல்லை என துறை சார்பில் கைவிரிக்கப்பட்டது.
இதனால் மாற்று ஏற்பாடாக தற்போது கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களைக் கொண்டு கால்வாய்களில் அடைபட்டுள்ள மண் மேடுகள், கற்கள், முட்புதர்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் கூறியதாவது: வரட்டாறு அணை கட்டப்பட்டபோது அமைக்கப்பட்ட கால்வாய்கள் அதன் பிறகு சரியாக பராமரிக்காமல் உள்ளது. பல இடங்களில் கால்வாயில் விரிசல் ஏற்பட்டு நீர் கசியும் வகையில் உள்ளது. இது தவிர பல இடங்களில் விவசாயக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் நீர் செல்லமுடியாத அளவு அடைபட்டுள்ளது.
எனவே, பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக இவற்றை சீரமைக்க வேண்டும். உரிய நிதி இல்லை என பொதுப்பணித்துறை கூறுவதால், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக 100 நாள் வேலைத் திட்டப்பணியாளர்களை கொண்டு கால்வாய்கள் செல்லும் கிராம ஊராட்சிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
|
சொத்துக் குவிப்பு வழக்கு | அமைச்சர் பொன்முடியின் கோரிக்கையை ஏற்று அக்.19-க்கு ஒத்திவைப்பு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-09 17:29:00 |
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் துணை காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்தார். 1996 மே 13 முதல் 2002 மார்ச் 31 வரையிலான நாட்களை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை காலமாக எடுத்துக்கொண்டு, 2002 மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், ‘பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை’ எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391-வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை, பொன்முடி உள்ளிட்டோர் இந்த வழக்கில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதேநேரம், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிபுத் துறை மற்றும் பொன்முடி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில், 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி நடைமுறைப்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (அக்.9) விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
|
சட்டப்பேரவையில் மதுபான விதி திருத்தங்கள் தாக்கல்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-09 17:26:00 |
சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் இன்று (அக்.9) சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், ஹோட்டல்கள், அதை சார்ந்த பார்கள் ஆகியவற்றுக்கு உரிய உரிமத்துடன் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் எஃப்.எல்.12 என்ற புதிய உரிமத்தை தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த எஃப்.எல்.2 சிறப்பு உரிமமானது, மதுபானங்களை இருப்பு வைத்து, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் மாநாடுகள், நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கொண்டாட்டங்கள், திருவிழாக்களில், விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பரிமாறுவதற்காக வழங்கப்படுகிறது.
கருத்தரங்க அரங்கம், மாநாட்டுக் கூடங்கள், திருமண அரங்கங்கள், விருந்து அரங்கம் ஆகியவற்றில் மதுபானங்களை இருப்பு வைத்து விநியோகிக்கவும் சிறப்பு உரிமம் அனுமதிக்கும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த பின்னர், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் பாலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்க வகை செய்யும் வகையில் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா என தெரிவிக்கும்படி அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மதுபான சட்ட திருத்த விதிகள், சட்டமன்றத்தில் இன்று (அக்.9) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்தார்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனு இன்று தான் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை திருத்த விதிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்தும் உத்தரவிட்டனர்.
|
பேரவையில் ஸ்டாலின் Vs இபிஎஸ் முதல் இஸ்ரேல் எல்லைகளில் உச்சகட்ட போர் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.9, 2023 | செய்திப்பிரிவு | நிறைவேற்றம் | 2023-10-09 17:08:00 |
காவிரியில் தண்ணீர் திறக்க தனித் தீர்மானம் நிறைவேற்றம்: சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்
இத்தீர்மானம் முழுமையானதாகவும், நிரந்தர தீர்வை நோக்கியதாகவும் இல்லை எனக் கூறி பாஜக சார்பில் வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தனித் தீர்மானத்துக்கு ஆதரவு ஏன்? - இபிஎஸ் விளக்கம்: "காவிரியில் இருந்து விவசாயிகளுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்க வேண்டும். ஏதாவது வகையில் அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம். அதன் அடிப்படையில்தான், இந்த அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்து இருக்கிறோம்" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதனிடையே "காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக இல்லாத காரணத்தால், தமிழகத்தின் நலன் உண்மையாகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படும் பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பேரவையில் முதல்வர், இபிஎஸ் இடையே காரசார வாதம்: காவிரி பிரச்சினையில் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.
“மத்திய அரசு மீது நாங்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். துணிச்சலோடு தொடர்ந்தோம். அந்த துணிச்சல், உங்களிடத்தில் காணவில்லையே? பார்க்க முடியவில்லையே?" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் ,"துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன துணிச்சல் என்பது எங்களுக்குத் தெரியும். அதை இங்கு சொல்லி, அவை மரபை மீற வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாக, உறுதியாக பலமுறை காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்கிறோம். பலமுறை அவையே நடக்கமுடியாத அளவுக்கு செய்திருக்கிறோம்.
ஏதோ சட்டமன்றத்தில், நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தால், அமைதியாக அமர்ந்துள்ளோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று கருதுகிறாரா எதிர்க்கட்சித் தலைவர்?" என்றார்.
ரூ.5,381 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு: "கருத்து குருடர்களாக இருப்பவர் பலர், இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் ஆக்கிரமித்துள்ளதாக முழு விவரம் தெரியாமல் பேசி வருகின்றனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 5,381 புள்ளி 65 கோடி ரூபாய் அளவுக்கு திருக்கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன" என்று இந்து சமய அறநிலையைத் துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவையில் கூறியுள்ளாார்.
அரியலூர் அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் 10 பேர் பலி: அரியலூர் மாவட்டம் விரகாலூரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள்: தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிட்டார். அதன்படி, தெலங்கானாவில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 7ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 17-ம் தேதியும் நடைபெற உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 17ம் தேதியும், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 23ம் தேதியும், வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும் நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது.
“காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு” - ராகுல்: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனைக்கு காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவும் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க பேராசிரியர் கிளாடியாவுக்கு பொருளாதார நோபல் பரிசு: நடப்பு ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் நோபல் பரிசு, அமெரிக்க பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக" கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் எல்லைகளில் போர் உச்சகட்டம்: ஒரு நிமிட இடைவெளி கூட இல்லாமல் காசாவில் தாக்குதல் நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளன.
சனிக்கிழமை முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்தனர். அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இந்தத் தாக்குதல்களின்போது 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு, காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வெளித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் 500 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தென்பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் ராணுவம் போரிடும் நேரத்தில், வடக்கு பகுதியில் லெபனான் எல்லையில் இருந்து மற்றொரு எதிரியான ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் ராணுவம் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இருபுறமும் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதால், எல்லைப் பகுதிகளில் போர் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
அக்.14 வரை ஏர் இந்தியா சேவை ரத்து: இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் அளித்த பேட்டியில், “இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவர்கள் இந்திய தூதரகத்தை எப்போதும் தொடர்பு கொள்ளலாம். இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் அளிக்கும்” என்றார்.
ஏர் இந்தியா விடுத்துள்ள செய்தியில், “பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லி - டெல் அவிவ் இடையே வாரத்துக்கு 5 நாள் இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவைகள் அக்டோபர் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தமிழகத்தில் ரூ.5,381.65 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு: பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 17:00:00 |
சென்னை: "கருத்து குருடர்களாக இருப்பவர் பலர், இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் ஆக்கிரமித்துள்ளதாக முழு விவரம் தெரியாமல் பேசி வருகின்றனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 5,381.65 கோடி ரூபாய் அளவுக்கு திருக்கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன" என்று இந்து சமய அறநிலையைத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளாார்.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக வினாக்கள் விடை நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ”“பண்ருட்டியில் 45 ஆண்டு காலத்துக்கு மேலாக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலத்தை தனிநபர் ஒருவர் குத்தகை என்கிற பெயரில் ஆக்கிரமித்து அனுபவித்து வைத்திருந்தார். பல ஆண்டுகள் பல முயற்சிகளை நான் மேற்கொண்ட போதும் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. நான் இந்த அவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்தவுடன், அந்த இடம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழக முதல்வர் சட்டத்தின் ஆட்சி துணை கொண்டு அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயிலுக்கு சொந்தமாக்கப்படும் என அமைச்சர் கடந்த கூட்டத் தொடரில் அறிவித்தார்.
தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்தின் ஒரு பகுதியை மீட்டெடுத்த தமிழக தமிழக முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, பேருந்து நிலையம் அருகில் இருந்த மொத்தம் 6½ ஏக்கர் காலியிடத்தில் இரண்டரை ஏக்கர் மீட்கப்பட்டிருக்கிறது. மீதம் இருக்கின்ற 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் மீட்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இந்த ஆட்சியைப் பொறுத்தளவில், கருத்து குருடர்களாக இருப்பவர் பலர் இந்து சமய அறநிலையத் துறை தமிகத்திலே ஆக்கிரமித்துள்ளதாக முழு விவரம் தெரியாமல் கூறிக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, 5,381.65 கோடி ரூபாய் அளவுக்கு திருக்கோயில் சொத்துகளை குறிப்பாக, திருக்கோயில்கள் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்ற ஒரு பகுதியை சார்ந்த 9 நபர்களிடமிருந்து மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஆட்சியில் சொத்துக்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, உறுப்பினர் வேல்முருகன் கடந்த ஆண்டு வைத்த கோரிக்கை நிறைவேற்றி இருக்கின்றோம். இப்போது வைத்திருக்கின்ற கோரிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றுவதற்கு தமிழக முதல்வரின் உதவியோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்.
|
நேரடி ஆவின் பாலகங்கள்: கோவையில் போலி பெயரில் இயங்கும் கடைகளுக்கு கல்தா | டி.ஜி.ரகுபதி | கோவை | 2023-10-09 16:54:00 |
கோவை: விதிகளை மீறி செயல்படும் போலி ஆவின் பாலகங்களுக்கு பதிலாக ஆவின் நிறுவனமே நேரடியாக பாலகங்கள் அமைத்து வருகிறது. கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையத்தில் ‘ஆவின்’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் பால், இங்கு தரம் வாரியாகபிரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பால் ஊற்றும் உறுப்பினர்கள் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இவர்களிடமிருந்து தினமும் சராசரியாக 1.50 லட்சம் லிட்டர்பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஆவினுக்கு 1,300-க்கும் மேற்பட்ட பால் பூத்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் சராசரியாக 2 லட்சம் லிட்டர் வரை பால் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது. ஏறத்தாழ 1.50 லட்சம் வாடிக்கையாளர்கள் ஆவின் பாலை தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர்.
இதுதவிர, ஆவின் தயாரிப்புகளான நெய், பால்கோவா உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்களுக்கும் மக்களிடம் வரவேற்பு உள்ளது. தரம் மற்றும் விலை குறைவே இதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில், தனியார் வியாபாரிகள் மூலம் கோவையின் பல்வேறு இடங்களில் ஆவின்பெயரில் பாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை விதிமீறி செயல்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘ஆவின் சார்ந்த பொருட்கள் மட்டும் விற்பனை செய்வதாக ஆவின் நிர்வாகத்திடம் கூறி அனுமதி பெற்று கடைகளை அமைக்கின்றனர். ஆனால், இங்கு டீ கடைகள், பேக்கரிகள் போல டீ, காபி, வடை, போண்டா, குளிர் பானங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
ஆவின் என்ற பெயர் உள்ளதால், அதன் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் இங்கு பொருட்களை வாங்குகின்றனர். ஆனால், ஆவினுக்கும், இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது மக்களுக்கு தெரியாது. கோவையில் விதிகளை மீறி, ஆவின் பெயரில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான பாலகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து, ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆவின் பெயரில் பாலகம் அமைக்க வழங்கப்பட்ட உரிமம் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது ஆவின்பெயரில் பாலகம் அமைக்க தனியாருக்கு உரிமம் வழங்கவில்லை. ஆவின் பெயரை பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டு விட்டது.
ஆவின் பெயரை பயன்படுத்தி கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது தவறு. மாநகரில் 133 கடைகளில் ஆவின் பெயரில் பாலகம் அமைத்து டீ, காபி, தின்பண்ட வகைகள் விற்பனை செய்கின்றனர். ஆவின் பெயரை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.
ஆவின் நிர்வாகத்தின் சார்பில் நேரடியாக ‘அவுட்லெட்’எனப்படும் ஆவின் பாலகங்கள் அமைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.முதல் கட்டமாக 10 இடங்களில் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, கவுண்டம்பாளையத்தில் இரண்டு இடங்களிலும், ராமநாதபுரத்தில் ஓரிடத்திலும் நேரடி ஆவின்பாலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒண்டிப்புதூர், சாயிபாபாகாலனி, கவுண்டர் மில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சோமனூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும் விரைவில் அமைக்கப்படும்.
மாநகரில் காவல்துறையுடன் இணைந்து காந்திபுரம் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆவின் பாலகம்அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தனியார் மூலமும்ஆவின் சார்ந்த பொருட்களை ‘டீலர்ஷிப்’ முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.அசல்ஆவின் பாலகங்களில் பால், தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, கேக், இனிப்புகள், பிஸ்கட், ஐஸ்கிரீம் வகைகள் ஆகியவை விற்பனை செய்யப்படும். கூடுதலாக டீ, காபி, தண்ணீர் பாட்டில்களும் விற்கப்படும்.
வேறு எதுவும் விற்கப்படாது. இவ்வாறு மாதந்தோறும் 5 பாலகங்கள் ஆவின் சார்பில் நேரடியாக தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆவின் பெயரை பயன்படுத்தி விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றவும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் வலியுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘அனுமதியில்லாமல், ஆவின் பெயரை பயன்படுத்தி இயங்கும்கடைகளை அப்புறப்படுத்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தொடர்ச்சியாக அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றனர்.
|
காவிரி பிரச்னையில் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு ஏன்? - இபிஎஸ் விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 16:22:00 |
சென்னை: "காவிரியில் இருந்து விவசாயிகளுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்க வேண்டும். ஏதாவது வகையில் அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம். அதன் அடிப்படையில்தான், இந்த அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்து இருக்கிறோம்" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அதிமுக,பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர், தமிழக சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அதிமுக ஆட்சிக் காலத்தில், 6 வார காலத்துக்குள், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அப்போதைய மத்திய அரசு காலதாமதம் செய்தது. அதிமுகவைச் சேர்ந்த அன்றைய எம்பிக்கள் 22 நாட்கள், அவையை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதைத்தான் பேரவையில் நான் தெரிவித்தேன்.
இப்போது ஆட்சியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் 38 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். காவிரி விவகாரத்தில் என்ன அழுத்தம் கொடுத்தார்கள்? அவர்களால் ஒருநாளாவது அவையை ஒத்திவைக்க முடிந்ததா? தமிழகத்துக்கான உரிமையைப் பெற இவர்கள் என்ன செய்தார்கள்? விவசாயிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறுவை சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகி ஒரு விவசாயி உயிரிழந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், ஏன் மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் கொடுக்கவில்லை?
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழு அமைக்க காலம் தாழ்த்திய காரணத்தால், அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில்,நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்தது. இதுக்கு எல்லாம் ஒரு தில்லு, திராணி வேண்டும். அது இந்த அரசிடம் இல்லை. ஏதோ மேலோட்டமாக பேசிக் கொண்டுள்ளனர்.
இப்போது விவசாயிகள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர். அந்த கொந்தளிப்பை சமாளிப்பதற்காகத்தான் இப்போது இந்த தீர்மானைத்தைக் கொண்டு வந்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. நான் ஒரு விவசாயி. இதுபோன்ற தீர்மானத்தை எந்தக் கட்சி கொண்டுவந்தாலும், அதனை மனபூர்வமாக ஆதரிப்பது எங்களுடைய கடமை. விவசாயிகள் வேதனைப்படும்போது அவர்களுக்கு உற்றத்துணையாக அதிமுக எப்போதும் இருக்கும். அதைத்தான் இப்போதும் நாங்கள் செய்திருக்கிறோம். இருந்தாலும், காவிரி விவகாரத்தில், இந்த அரசாங்கம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதால்தான், தமிழகம் இன்றைக்கு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது" என்றார்.
முதல்வர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தால் பலன் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பலன் ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் ஆதரித்துள்ளோம். காரணம், விவசாயிகளுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்க வேண்டும். ஏதாவது வகையில் அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தால் சந்தோஷம். அதன் அடிப்படையில்தான், இந்த அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்து இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
|
காவிரியில் தண்ணீர் திறக்க தனித் தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 15:41:00 |
சென்னை: தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, பாமக சார்பில் ஜி.கே.மணி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் செல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் ஜெகன் மூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஜவாஹிருல்லாஹ், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.மாரிமுத்து, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாலி, விசிக சார்பில் சிந்தனை செல்வன், ஆகியோர் முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.
இத்தீர்மானம் முழுமையானதாகவும், நிரந்தர தீர்வை நோக்கியதாகவும் இல்லை எனக் கூறி பாஜக சார்பில் வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
|
காவிரி பிரச்சினை | “ஆம் ஆத்மி போல இண்டியா கூட்டணியை ஸ்டாலின் அணுகுவாரா?” - தமிழக பாஜக | எஸ்.ராஜா செல்லம் | தருமபுரி | 2023-10-09 15:18:00 |
தருமபுரி: “ஆம் ஆத்மி கட்சியைப் போன்று இண்டியா கூட்டணியை வலியுறுத்தி, தமிழக நலனை நிலைநாட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?” என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம், தருமபுரியை அடுத்த ஒட்டப்பட்டியில் இன்று (அக்.9) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கே.பி.ராமலிங்கம் கூறியது: ''பாரதிய ஜனதா கட்சி தேசியத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இதற்காக கட்சியின் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளுக்கெல்லாம் தலைமை தாங்கும் நிலைக்கு பாரத தேசம் உயர்ந்துள்ளது.
நமது பிரதமர் மோடியால் வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் நம் நாடு வெற்றிநடை போட்டு வருகிறது. ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை அவர் வழங்கி வருகிறார். தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியின் பெருமையை அவர் குறிப்பிட்டு பேசி வருகிறார். மக்களின் குலதெய்வ கோயில்களைக் கூட அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களாக மாற்றி அவற்றின் வருமானத்தையும் தமிழக அரசு கொள்ளையடித்து வருகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் யார் ஆட்சியில் இருந்தாலும் கூட, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வழங்குவதில் அரசியல் செய்யப்படுகிறது. அதேநேரம், அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அப்போதைய கர்நாடகா முதல்வர் பொம்மையிடம், காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு வலியுறுத்தினார். இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவிரி நீர் உரிமைக்காக மேல்முறையீடு மட்டும்தான் செய்து வருகிறார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தொடர்பான கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே கூட்டணியில் தொடர்வோம் என வலியுறுத்தி அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். காவிரி பிரச்சனை தொடர்பாக இப்படியொரு கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியிடம் முன்வைத்து வலியுறுத்தி தமிழக நலனை நிலைநாட்டுவாரா?'' என்று அவர் கூறினார். கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
|
குலுங்க வைக்கும் கொளத்தூர் சாலைகள்: பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள கோரிக்கை | செ.ஆனந்த விநாயகம் | சென்னை | 2023-10-09 14:59:00 |
சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து அமைக்கப்படும் சாலைகளை சீராக அமைக்க வேண்டும் என கொளத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையின் தவிர்க்க முடியாத பகுதியாக விளங்கும் கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் புரசைவாக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகள் இணைக்கப்பட்டு 2011-ம் ஆண்டு உருவானது. அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் போட்டியிட்டதால், முதல் தேர்தலிலேயே விஐபி தொகுதி பட்டியலில் கொளத்தூர் இடம்பெற்றது. செம்பியம், பூம்புகார் நகர், செந்தில் நகர், சண்முகம் நகர், சீனிவாசா நகர், மக்காரம் தோட்டம் என ஏராளமான பகுதிகள் கொளத்தூரில் உள்ளன.
இத்தொகுதி உருவானதில் இருந்து படிப்படியாக மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப்பட்டதோடு, அதை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான், சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதனால் சென்னையின் பிற பகுதிகளைப் போலவே போக்குவரத்து மாற்றம், சேதமான சாலைகள் என பல்வேறு சிக்கல்களை கொளத்தூர் மக்கள் எதிர்கொண்டனர்.
தற்போது பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. ஒரு சில இடங்களில் சாலை அமைக்கும் பணிகளைக் கூட மாநகராட்சி தொடங்கி விட்டது. எனவே, பாதாள சாக்கடைக்கான குழிகள், மேடு பள்ளங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சீரானமுறையில் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் கூறியதாவது: கொளத்தூரில் பல ஆண்டுகளாக புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் ஏற்கெனவே உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இங்கு வாகனங்களில் வருவோர் பெரும்பாலும் முதுகு வலியுடன் திரும்பும் நிலைதான் இருக்கிறது. இந்த சூழலில் தான் மழைநீர் வடிகாலுக்காக சாலைகள் தோண்டப்பட்டன. பல மாதங்களாக மந்த கதியில் நடைபெற்று வந்த மழைநீர் வடிகால் பணிகள் கடந்த 2 வார காலமாக முழு வீச்சில் நடைபெறுகின்றன.
இதனால் சாலையும் அவசர கதியில் அமைக்கப்படுகின்றன. இதில் பிரச்சினை என்னவென்றால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணி முடிந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலையின் ஒருபகுதியில் மட்டும் புதிதாக அமைத்துவிட்டு, மறுபகுதி பழையபடியே இருப்பது, கிழிந்த சட்டையில் ஒட்டு போட்டதுபோல் உள்ளது.
முழுமையாக சாலை சீரமைக்கப்படாததால், ஒட்டு போட்ட பகுதிகள் வரும் நாட்களில் விரிசலாக மாறும். பின்னர் சேதமடைந்து மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும்.
மேலும், பாதாள சாக்கடை குழிகளை புதுப்பிக்கும்போது, அவை சாலையின் மட்டத்துக்கு ஏற்ற வகையில் சமதளத்தில் அமைக்கப்படுவதில்லை. சில இடங்களில் சாலை மட்டத்திலிருந்து பள்ளமாகவும், சில இடங்களில் மேடாகவும் அமைக்கப்படுகின்றன. எனவே, மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை மீண்டும் சீரமைக்கும்போது பாதாள சாக்கடை போன்றவற்றை கருத்தில் கொண்டு சம தளத்தில் சாலைகள் அமைக்க வேண்டும்.
ஏனெனில் மீண்டும் சாலைகள் அமைக்க எத்தனை ஆண்டுகளாகும் என்பது தெரியாது. இந்தபணிகளை சரியாக செய்து முடிக்கும் பட்சத்தில் பல ஆண்டுகளுக்கு புதிய சாலைகள் அமைக்க வேண்டியிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
சீரமைக்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து முருகன் என்பவர் கூறியதாவது: கொளத்தூருக்கு உட்பட்ட 64, 65 வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். இங்கு மழைநீர் வடிகால் பணிகளுடன் மெட்ரோ ரயில் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தில்லை நகர் முதல் பிரதான சாலையில் மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
மேலும், சாலையின் நடுப்பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடைபெறுகிறது. ஆனால் அந்த சாலையின் தொடக்கமே மோசமாக சேதமடைந்து காணப்படுகிறது. மழைநீர் வடிகால் பள்ளங்களை மூடும்போது, இந்த பகுதிகளையும் சீரமைக்க வேண்டும்.
சீனிவாசா நகர் இரண்டாவது பிரதான சாலையில் பணிகள் முடிந்துள்ளன. ஆனால் தோண்டப்பட்ட இடத்தின் மீது போடப்பட்ட கற்கள், சாலையின் மேல்புறத்தில் வேகத்தடைபோல காட்சியளிக்கிறது. இதுமட்டுமின்றி, பூம்புகார் நகர் 17-வது தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும், நீண்ட நாட்களாக அந்த சாலை மிக மோசமான நிலையில் உள்ளது.
இதேபோன்ற பெரும்பாலான சிறிய தெருக்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இது ஒரு புறமிருக்க அவசர கதியில் அமைக்கப்படும் சாலைகள் மழை காலத்தை தாண்டி நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் சீராக சாலைகள் அமைப்பதற்கு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். ஏனெனில், பாதாள சாக்கடைக்கான இயந்திர நுழைவு குழிகள், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மழைநீர் வடிகால், சாலைகள் அமைப்பது ஆகியன மாநகராட்சியின் கீழ் வருகின்றன. எனவே, இத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சீரான சமதளத்தில் சாலைகளை அமைக்க முடியும்.
மேலும், போதிய ஆயுட்காலம் உள்ள சாலைகளை மறுசீரமைக்க வேண்டிய அவசியமில்லை என மாநகராட்சி விதிகள் கூறுகிறது. ஆனால் அந்த விதிகளுக்கு உட்படாத வகையில் சாலைகள் மோசமாக உள்ளன. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் நேரத்தை பயன்படுத்தி மிகவும் மோசமாக உள்ள சாலைகளையாவது சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சாலைகள் அமைப்பது தொடர்பாக 6-வது மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் கூறும்போது, "மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அனைத்து பகுதிகளுக்கும் சேர்த்தே சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குறிப்பாக அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அப்போது ஆக்கிரமிப்பு போன்றவற்றை அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்குப் பிறகே சாலைகள் அமைக்கப்படுகின்றன" என்றார். மக்கள் பயன்பெறும் வகையில் சமமான தளத்தில் தரமான முறையில் சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
|
மேய்க்கால் நிலம் இல்லாததால் நகர்ப்புற மாடுகளுக்கு மானிய விலையில் தீவனம்: அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை | இரா.ஜெயப்பிரகாஷ் | காஞ்சிபுரம் | 2023-10-09 14:58:00 |
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட பல்வேறு நகரங்களில் நகரமயமாக்கத்தின் விளைவாக மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் இல்லாததாலும், தீவனங்களின் விலை உயர்வாலும் மாடுகள் சாலைகளில் விடப்படுகின்றன. இதனால் குப்பையில் கிடக்கும் உணவுகளை உண்டு சுகாதாரமற்ற முறையில் வளர்கின்றன. எனவே நகர்ப்புறங்களில் வளரும் மாடுகளுக்கு மானிய விலையில் தீவனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாடுகள் பொதுவாக பால் கறந்த உடன் அதிகமாக உணவு சாப்பிடும் பழக்கம் கொண்டவை. புல், செடி, கொடிகளை விரும்பி உண்பவை. இவற்றுக்கு உலர் தீவனங்களும் உணவாக வழங்கப்படுகின்றன. கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகள் மேய்க்கால் நிலங்களுக்குச் சென்று செடிகள், புற்கள் போன்ற பசுந் தீவனங்களை உண்ணும். ஆனால் நகர்ப் புறங்களில் மேய்க்கால் நிலங்கள் இருப்பதில்லை. இதனால் இந்த மாடுகளுக்கு பெரும்பாலும் உலர் தீவனங்களே வழங்கப்படுகின்றன.
இந்த தீவனங்களின் விலையேற்றத்தால் மாடு வளர்க்கும் உரிமையாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பலர் மாடுகளை கட்டாமல் சாலையில் சுற்றித் திரிய விடுகின்றனர். இந்த மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்து குப்பையில் கிடக்கும் அழுகிய பழங்கள், காய்கறிகள், வீணாகக் கொட்டப்படும் உணவுகள் ஆகியவற்றை உண்கின்றன.
மேலும் பல மாடுகள் இவற்றுடன் சேர்த்து குப்பையில் கிடக்கும் பாலித்தீன் பைகளையும் விழுங்கிவிடுகின்றன. இதுபோன்ற சுகாதாரமற்ற முறையில் வளரும் மாடுகள் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், அந்த மாடுகள் கொடுக்கும் பால் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது.
மேய்க்கால் நிலம் இல்லாத நகர்ப்புற பகுதிகளில் மாடு வளர்ப்பவர்களுக்கு தீவனங்கள் என்பது பெரும் சுமையாக மாறிவருகிறது. அவர்களுக்கு மானிய விலையில் தீவனங்களை வழங்கினால்தான், மாடுகளை வீடுகளில் வைத்து பராமரிக்க அவர்களால் முடியும். இதனால் மாடுகள் சுகாதாரமற்ற முறையில் வளர்வது தடுக்கப்படும். மேலும் மாடுகள் இப்படி சாலையில் சுற்றித் திரிவதால் ஏற்படும் விபத்துகளும் தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெத்துராஜ் கூறும்போது, ‘நகர்ப்புறங்களில் மாடு வளர்ப்போர் அதிகம் உள்ளனர். வளர்ந்துவிட்ட நகர்ப்புறங்களில் மேய்க்கால் நிலங்களை உருவாக்குவது சாத்தியமில்லை. மேய்க்கால் நிலங்கள் இல்லாமல்போனது மாடு வளர்ப்போர் குற்றமல்ல.
பலருக்கு மாடு வளர்ப்பு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அவர்களுக்கு தீவனங்கள் நியாய விலைக் கடையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்நடைத் துறை மூலம் மாடுகளை பாதுகாப்பாக கட்டி வைக்க கொட்டகை அமைப்பதற்கும் மானியம் வழங்க வேண்டும்.
மேலும், குப்பையில் இருக்கும் உணவுகளை மாடுகள் சாப்பிடும்போது அங்கு நாய்களும் சாப்பிடுகின்றன. அப்போது பல நேரங்களில் நாய்கள் மாடுகளை கடித்துவிடுகின்றன. இது மாடு வளர்ப்போருக்கு தெரியவில்லை என்றால், மாடுகள் சில நேரங்களில் நாய்களைப்போன்று வெறிபிடித்ததுபோல் நடந்து கொள்கின்றன. சாலையில் திரிந்து பலரையும் துரத்துகின்றன. இவ்வாறு சாலையில் சுற்றித் திரியும்போது விபத்துகளும் ஏற்படுகின்றன’ என்றார்.
இதுகுறித்து கால்நடைத்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘நகர்ப்புறங்களில் மாடுகள் வளர்ப்போருக்கு மானிய விலையில் தீவனங்கள் வழங்குவதற்கோ அல்லது கொட்டகை கட்ட மானியம் தருவதற்கோ அரசுத் திட்டங்கள் எதுவும் இல்லை. இதுபோன்ற திட்டங்களை அரசுதான் அறிவிக்க வேண்டும். மேய்க்கால் நிலங்கள் இல்லாதாது மாடு வளர்ப்போருக்கு சிரமம்தான்.
அதற்காக மாடுகளை சாலையில் சுற்றித் திரிய அனுமதிக்க முடியாது. மாநகராட்சி மூலம் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்தால் ரூ.5 ஆயிரம் வரை கூட அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.
|
அரியலூர் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 14:31:00 |
சென்னை: அரியலூர் மாவட்டம் விரகாலூரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (அக்.9) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்து நடைபெற்ற இடத்துக்குச் சென்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
''முதல்வர் கொண்டு வந்த காவிரி தீர்மானம் முழுமையானதாக இல்லை'' - சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 14:22:00 |
சென்னை: "காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக இல்லாத காரணத்தால், தமிழகத்தின் நலன் உண்மையாகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படும் பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது, தீர்மானம் முழுமையானதாக இல்லை எனக்கூறி, பாஜக எம்எல்ஏ வானதி உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், சட்டப்பேரவைக்கு வெளியே வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கர்நாடகாவுக்கு தமிழக முதல்வர் செல்கிறார். அங்கிருக்கும் தலைவர்களோடு பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். ஆனால், அங்கிருக்கும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அரசாங்கத்தை வலியுறுத்தி, தமிழகத்துக்கான சட்டப்பூர்வமான உரிமையை, விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், கா்நாடக அரசுக்கு தன்னுடைய செல்வாக்கை, தன்னுடைய நட்பை, தன்னுடைய கூட்டணி பலத்தை வைத்து கர்நாடகத்தில் இருந்து நீரைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
நதி நீர் தாவாக்களில் ஒரு நியாயம் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாநிலங்கள் எதுவாக இருந்தாலும், சட்டத்தின்படி, நியாயத்தின்படி, அந்த மாநிலம் அதற்கான நீரை பெற வேண்டும். அதற்காக கொண்டுவரப்பட்ட, மிக முக்கியமான மசோதா அணை பாதுகாப்பு மசோதா. நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அதுகுறித்த விவாதத்தின்போது மாநில சுயாட்சி முக்கியம், மாநிலத்தின் அதிகார வரம்பில், சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாதென்று திமுக எதிர்ததது. ஆனால், தற்போது கர்நாடகத்திடம் நீரைப் பெற்றத்தர மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனவே, இதை திமுக அரசின் இரட்டை நிலைப்பாடாக நாங்கள் பார்க்கிறோம்.
தன்னுடைய இயலாமையை மறைப்பதற்கும், இரட்டை நிலைப்பாட்டுக்காகவும் இந்த தீர்மானம் முழுமையாக நிரந்தரமான தீர்வை நோக்கி நகராமல் இருப்பதற்கு திமுக, 1972-லிருந்து வரலாற்று ரீதியாக, ஒவ்வொரு முறையும் தமிழகத்தினுடைய நலனை சமரசம் செய்துகொண்டிருக்கிறது. இந்த மாநில அரசு இப்போதும் இன்னொரு அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக கருதுகிறது.
டெல்டா விவசாயிகளின் நலனுக்காக, தமிழகத்தின் நீர் உரிமைக்காக என்றும் நாங்கள் குரல் கொடுப்போம். கடந்த 5 ஆண்டுகாலம், கர்நாடகத்தில், பாஜக ஆட்சியில் இதுபோன்ற ஒரு சூழல்கூட எழுந்துவிடவில்லை என்பதை தமிழக மக்களுக்கு நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். 5 வருட காலம் பாஜக அரசு இருக்கும்போது இதுபோல எந்த சிக்கலும் வரவில்லை. இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இந்த சிக்கல் ஏன் வருகிறது?
திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக மிகப்பெரிய ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காவிரி நீரைக் கூட பெற்றுத்தர முடியாத இந்த கூட்டணி பிரதமரை எதிர்க்கிறார்கள்? எனவே, மக்களை ஏமாற்றுகின்ற நாடகமாக இந்த தீர்மானத்தைப் பார்க்கிறோம். எனவே, முதல்வர் கொண்டு வந்த தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக இல்லாத காரணத்தால், தமிழகத்தின் நலன் உண்மையாகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படும் பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
|
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 13:40:00 |
சென்னை: "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது: "தமிழகத்தின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய, காவிரி நதிநீர் உரிமையைக் காக்கும் கடமையை நோக்கிய நமது சிந்தனையை, எண்ணத்தை இன்னும் சொன்னால் கட்டளையை இடக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், காவிரி நதி நீர் உரிமையைக் காப்பதில், திமுக என்றும் எப்போதும் எந்த சூழலிலும் உறுதியாக இருக்கும் என்ற உறுதிமொழியை இந்த மாமன்றத்துக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த அரசு பொறுப்பேற்றப் பிறகு, காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராக திறந்துவிடப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான குறிப்பிட்ட ஜுன் 12ம் நாளன்று திறக்கப்பட்டது. 2022ம் ஆண்டு முன்கூட்டியே மே மாதம் 24ம் நாளன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதால், காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன.
இதன் பயனாக 2021-22ம் ஆண்டில், 46.2 லட்சம் டன் அளவிலும், 2022-23ம் ஆண்டில், 45.9 லட்சம் டன் அளவிலும், காவிரிப் பாசனப் பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையைப் படைத்தோம். உற்பத்தியும் பெருகியது. உற்பத்திப் பரப்பும் விரிவடைந்தது. இந்த சாதனையானது இந்த ஆண்டு தொடர்ந்தது. இந்த ஆண்டில் ஜுன் 1, 2023 நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்த 69.7 டிஎம்சி நீர் அளவையும், தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில்கொண்டு, 12.06.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்துக்காகத் திறந்துவைத்தோம்.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டிஎம்சிக்கும் மேலாக இருக்கும்போது உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக மேட்டூர் அணை ஜுன் 12ம் நாள் திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்துவைத்தோம். திறந்துவிடப்பட்ட நீர் கடைமடைப் பகுதிவரை சென்றடைந்தது. நமது வேளாண் பெருமக்களும், கடந்தாண்டுகளைப் போலவே குறுவைப் பயிரை சிறப்பாக பயிரிடுவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார்கள். இத்தகைய நிலையில், செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது.
கர்நாடக மாநில அரசு நமக்கு வழங்கவேண்டிய, உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்துவிடவில்லை. இதுதொடர்பாக எடுத்த முயற்சிகளை, விரிவாக சொல்ல வேண்டியதை நான் எனது கடமையாக கருதுகிறேன். கடந்த ஜுன் மாதத்தில், பிலுகுண்டுலுவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய 9.19 டிஎம்சிக்குப் பதிலாக 2.28 டிஎம்சி மட்டுமே வரப்பெற்றோம். இதனைத்தொடர்ந்து 3.7.2023 அன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாதவாரியாக ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் வழங்கவேண்டிய நீரினை உடனடியாக வழங்கிட கர்நாடகாவுக்கு உத்தரவிடமாறு வலியுறுத்தினார். மீண்டும் 5ம் தேதியும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், 2023-24 பாசன ஆண்டானது, ஒரு பற்றாக்குறை ஆண்டு என ஒரு காரணத்தைக்கூறி, இதன்பிறகும் கர்நாடகா நமக்கு அளிக்கவேண்டிய நீரினை அளிக்கவில்லை.
இதனால், குறுவைப் பயிர் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், 19.07.2023 அன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதவாரியாக தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நீரை அளிக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அறிவுறுத்துமாறு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து ஜுலை 20ம் தேதியன்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் மீண்டும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தினார்.
இதன்பின்னரும், கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. ஜுலை 27ம் தேதியன்று கர்நாடகவின் 4 அணைகளின் மொத்த கொள்ளளவு 30 ஆண்டு சராசரியில் 84 விழுக்காடாகவும், அந்த அணைகளின் நீர்வரத்து 30 ஆண்டு சராசரியில் 51 விழுக்காடாக இருந்தபோதிலும், பிலிகுண்டுலுவில் 13 விழுக்காடு மட்டுமே நீர் வரப்பெற்றது. இதைச் சுட்டிக்காட்டி தமிழகத்துக்கு உடனடியாக நீர் வழங்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கோரப்பட்டது.
தமிழக அரசு மேற்கொண்ட இந்த தொடர் முயற்சிகளை அடுத்து, ஜுலை 25 அன்று கபினி அணையிலிருந்து விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீரினை அடுத்த 6 நாட்களுக்கு திறந்துவிடுமாறு கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஜுலை 31ம் தேதியன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 83வது கூட்டத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடக அரசு அளிக்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடுமாறு கோரியது. இருப்பினும், ஆகஸ்ட் 1 முதல் பிலிகுண்டுலுவில் அடுத்த 7 நாட்களுக்கு விநாடிக்கு 10000 கனஅடி நீரினை மட்டுமே திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவை அளித்தது.
கர்நாடக அரசு நமக்கு வழங்கவேண்டிய நீரின் பற்றாக்குறையை சரிசெய்யுமாறு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அறிவுறுத்திட, ஆகஸ்ட் 4ம் தேதி பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். இதனையடுத்து ஆகஸ்ட் 10ம் தேதியன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டத்தில், பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 15,000 கனஅடி என்ற அளவில், ஆகஸ்ட் 11 முதல் அடுத்த 15 நாட்களுக்கு வழங்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆகஸ்ட் 11ம் தேதியன்று நடந்தக் கூட்டத்தில், 15,000 கனஅடி என்பதை, 10,000 கனஅடியாக ஆணையமே குறைத்துக் கொண்டது. இதனை ஏற்காமல், தமிழக அரசு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து, கர்நாடகா உடனடியாக 24,000 கனஅடி நீரை வழங்கவும், பற்றாக்குறையான 28.849 டிஎன்சி நீரை வழங்கவும் உத்தரவிடுமாறு கோரி ஆகஸ்ட் 14ம் தேதி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 15ம் தேதியன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், விநாடிக்கு 5000 கனஅடி நீரை 15 நாட்களுக்கு வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்தக் கூட்டங்களில், ஏற்கெனவே நிலுவையில் உள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு நாம் வலியுறுத்திய போதிலும் எந்தவித உத்தரவையும் ஆணையம் வழங்கவில்லை. எனவே செப்டம்பர் 19 அன்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். உடனடியாக 12,500 கனஅடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அறிவுறுத்துமாறு கோரிக்கைவிடுத்தனர். ஆனால், இந்த மனு மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனிடையே, செப்டம்பர் 19 அன்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது 22,23 மற்றும் 24வது கூட்டங்களில் எடுத்த முடிவினை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி ஒரு மனுதாக்கல் செய்தது. இம்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவுகளை பின்பற்றவும், இவ்வழக்குடன் தொடர்புடைய அனைத்து மனுக்களையும் முடித்துவைப்பதாகவும் ஆணையிட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 29 அன்று, நடைபெற்ற தனது 25வது கூட்டத்தில், பிலிகுண்டுலுவில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த அளவையும்விட குறைவாகவே கர்நாடகா, தற்போது பிலிகுண்டுலுவில் தண்ணீர் அளித்துவருவதால், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நீர்வளத்துறை தலைவருக்கு கடந்த 6.10.2023 அன்று எழுதிய கடிதத்தில், கர்நாடகா ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாததைச் சுட்டிக்காட்டி, ஆணையம் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு 11.10.2023 அன்று அடுத்தக் கூட்டத்தை நடத்த உள்ளது. இக்கூட்டத்தில், பற்றாக்குறை ஆண்டாகிய 2023-24ல், ஏற்கெனவே காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ள அளவில் கர்நாடகா அளிக்க வேண்டிய நீர் அளவில் உள்ள குறைபாட்டை ஈடுசெய்ய அடுத்த 10,15 நாட்களுக்கு அளிக்க வேண்டிய நீரையும் சேர்த்து வழங்க வலியுறுத்த உள்ளோம். மேலும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தேவைப்படின், தக்க சட்ட நடவடிக்கையும் எடுக்கபப்டும்.
தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களிலும், காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டங்களிலும், தொடர்ந்து வலுவாக வாதிட்டு வந்துள்ளதால், 2023-24 பற்றாக்குறை ஆண்டாக இருக்கும்போதிலும், 1.06.2023 முதல் 3.10.2023 வரை பிலிகுண்டுலுவில் 46.1 டிஎம்சி நீர் பெறப்பட்டுள்ளது. இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்துவரும் நிலையில், 5.10.2023 வரை, 90.25 டிஎம்சி நீர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, முறைப் பாசனத்தின்படி, நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், எஞ்சி உள்ள நாட்களுக்கு நாம் நமக்கு உரிய நீரைப் பெற்று குறுவைப் பயிரையும் அடுத்து நடவு செய்யப்படவுள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, நமது வேளாண் மற்றும் பொதுமக்களின் நலன்காக்க, மத்திய அரசை வலியுறுத்தி, இந்த தீர்மானத்தை இப்பேரவை நிறைவேற்ற வேண்டும் என கோருகிறேன்.
தமிழக மக்களின் உணவுத் தேவைக்காக மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர் தேவைக்கு அவசியமானது காவிரி நீர். அதை தமிழக மக்களுக்குப் பெற்றுத்தருவதில், எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்காமல், வாதிட்டுப் பெற்றுத்தருவோம். மத்திய அரசு இதில் முறையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும். இதற்கான அனைத்துவிதமான முயற்சிகளையும் திமுக அரசு செய்யும் என்று மாமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கிறேன். அதே உணர்வுடன், இந்த தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில், நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தீர்மானம்: தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. முதல்வரின் தனித்தீர்மானத்தை ஆதரித்து உறுப்பினர்கள் பேசினர்.
|
''10.5% இடஒதுக்கீட்டை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம்'': அன்புமணி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 12:06:00 |
சென்னை: "வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒடுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருவார்களா? என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. எனவேதான், இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரிலேயே, தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து வந்துள்ளோம்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, இன்று குழுவாக சந்தித்து, நடைபெறுகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழக முதல்வர் பேசி முடிவெடுப்பதாக கூறியிருக்கிறார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. பின்னர், திமுக ஆட்சிக்காலத்தில் உறுதி செய்யப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றம் அதில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனியாக உள் இடஒதுக்கீடு கொடுக்கலாம். அதில் எந்த தவறும் கிடையாது. சரியான தரவுகள் வைத்து நியாயப்படுத்தி கொடுங்கள் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு வழங்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிறது. அதன்பிறகு, தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை புதியதாக உருவாக்கி, புதிய உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமித்தது. வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுப்பதற்கான பரிந்துரைகளை தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் கொடுத்தது. ஆனால், 9 மாதங்கள் ஆகியும், ஆணையம் தமிழக அரசுக்கு இன்னும் எந்த பரிந்துரையையும் கொடுக்கவில்லை.
தரவுகளை சேகரித்து இடஒதுக்கீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த தரவுகள் ஏற்கெனவே இருக்கின்றன. புதிதாக ஒன்றும் உருவாக்க வேண்டியது கிடையாது. இந்த தரவுகளை சேகரிப்பதற்கு அதிகபட்சம் 15 நாட்கள்தான் ஆகும். ஆனால், 9 மாதங்களாகியும் இன்னும் எங்களுக்கு தரவுகள் வரவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த இடைப்பட்டக் காலத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 6 கடிதங்கள் தமிழக முதல்வருக்கு எழுதினார். தொலைபேசி வழி பேசியுள்ளார். நாங்களும் சந்தித்துப் பேசினோம். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து அழுத்தம் கொடுத்தனர். தமிழக அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருவார்களா? என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. எனவேதான், இன்று இந்தக் கூட்டத்தொடரில் தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து வந்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
|
அரியலூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பின்போது தீ விபத்து - தொடரும் துயரம் | பெ.பாரதி | அரியலூர் | 2023-10-09 12:00:00 |
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு கடை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு தீபாவளியையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் இந்த வெடி தயாரிப்பு கடையில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வெடி பொருட்கள் வெடித்தன. விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீ பரவல் காரணமாக விபத்து நடத்த பகுதியில் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், விபத்து நடத்தப் பகுதியில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 6 பேர் உயிரிழந்தனர். காலை 10 மணிக்கு தான் வேலை ஆட்கள் வந்ததற்கான வருகை பதிவேடு கணக்கெடுக்கப்படும். 9 மணிக்குள்ளாக விபத்து ஏற்பட்டதால், வேலைக்கு வந்தவர்கள் யார், யார் என இதுவரை தெரியவில்லை. தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொக்லைன் இயந்தரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வெடி விபத்தில் சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேலான அளவில் வெடி பெருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதே வெடி தயாரிப்பு கடையில் கடந்தாண்டு சிறிய அளவில் வெடி விபத்து ஏற்பட்டத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பில் வெடிகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
|
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது: மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 11:11:00 |
சென்னை: சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்தில் காலமான பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசிக்க, உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வினாக்கள் விடை நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதன்பின்னர், 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவிருக்கிறார். மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தி தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரவிருக்கிறார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21-ம் தேதி வரை நடைபெற்றது.
|
ரத்தக் கொதிப்பு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 07:59:00 |
சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ரத்தக் கொதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது இது 7-வது முறையாகும்.
இந்த நிலையில் இன்று (அக். 09) அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக் கொதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு அவருக்கு சர்க்கரை நோய்க்கான பரிசோதனையும் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகே அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படுமா அல்லது மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவாரா என்பது தெரியவரும்.
முன்னதாக, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அவரை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது காவலை நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
|
டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக புகார்; பெண் பயணி - பெண் டிக்கெட் பரிசோதகர் மோதல்: ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 06:20:00 |
சென்னை: மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தொடர்பாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பயணியும் பெண் டிக்கெட் பரிசோதகரும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவர் மீதும் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாம்பரம் முல்லை நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. இவர் நேற்றுமுன்தினம் மதியம் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்வதற்காக, மின்சார ரயிலில் ஏறினார். இந்த ரயில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்றபோது, அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் தேன்மொழி ஏறி, ஸ்ரீவித்யாவிடம் பயணச்சீட்டை கேட்டார். அவரிடம் பயணச்சீட்டு இல்லை என கூறப்படுகிறது.
செல்போன் பறிமுதல்: உடனடியாக, ஸ்ரீவித்யாவிடமிருந்த செல்போனை வாங்கிக் கொண்டு அபராதம் கட்டி விட்டு செல்போனை பெற்றுச் செல்ல தேன்மொழி தெரிவித்தாராம். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
இதற்கிடையில், இந்த ரயில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றபோது, அங்குள்ள டிடிஇ அலுவலகத்துக்கு இருவரும் சென்றனர். அங்கு மீண்டும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் இருவருக்கும் லேசானகாயம் ஏற்பட்டதாக புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் மாம்பலம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, டிக்கெட் பரிசோதகர் தேன்மொழி, வித்யா இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
|
செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கன அடி உபரிநீர் திறப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | செய்திப்பிரிவு | செம்பரம்பாக்கம் | 2023-10-09 06:14:00 |
செம்பரம்பாக்கம்: செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 23 அடி. மொத்த கொள்ளளவு 3,132மில்லியன் கன அடி. தொடர் மழைகாரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.05 அடியாகவும், நீர்வரத்து 393 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 138 கன அடியாகவும் இருந்தது.
முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து முதற்கட்டமாக 100 கன அடி நீரைத் திறந்து விடமுடிவு செய்யப்பட்டது. அதற்காக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அங்கு வசிக்கக் கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறு - குறு மற்றும்நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பூஜை செய்து உபரி நீரைத் திறந்துவிட்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகுகளில் 8, 10, 12 ஆகிய மதகுகளின் 3 ஷெட்டர்களின் வழியாக 100 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. தொடர் மழை மற்றும் நீர்வரத்தால்ஏரியின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் உபரிநீர் வெளியேற்றப்படுவது, மேலும் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
24 ஆயிரம் செல்லப் பிராணிகளுக்கு மாநகராட்சி சார்பில் சிகிச்சை: ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 06:12:00 |
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடப்பாண்டில் 24 ஆயிரம் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெறிநாய்க்கடி நோய்(ரேபிஸ்) பரவுவதைத் தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி மற்றும் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் அமைப்பு சார்பில் 1111 தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்தடுப்பூசி செலுத்தும் முகாம் செனாய் நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசிசெலுத்தி முகாமைத் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சென்னை மாநகராட்சியில் தெருநாய்கள் மூலம் வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்க புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி,கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய 5 நாய்இனக்கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகின்றன. தெருநாய்கள் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையிலும், நாய்கள் தொல்லை அதிகம் உள்ள இடங்களிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் 16 ஆயிரத்து 713 தெருநாய்களுக்கும், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை 11 ஆயிரத்து 220 தெருநாய்களுக்கும் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், மாமன்றஆளுங்கட்சித் தலைவர் நா.ராமலிங்கம், அண்ணாநகர் மண்டலக்குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், ஹெவன் ஃபார் அனிமல்ஸ் அமைப்பை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|
சென்னையில் 9 இடங்களில் ரூ.556 கோடி மதிப்பில் 3,238 குடியிருப்புகள்: அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 06:11:00 |
சென்னை: சென்னையில் 9 திட்டப் பகுதிகளில் ரூ.556.60 கோடியில் 3238 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் ரூ75.95 கோடி மதிப்பீட்டில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பெரியார் நகர் திட்டப்பகுதியில் ரூ.81.64 கோடி மதிப்பில் 448 புதிய குடியிருப்புகள், காந்தி நகர் திட்டப்பகுதியில் ரூ.83.50 கோடி மதிப்பீட்டில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
அதேபோல், வேம்புலியம்மன் திட்டப்பகுதியில் ரூ.32.62 கோடிமதிப்பில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பத்ரிக்கரை திட்டப்பகுதியில் ரூ.32.30 கோடியில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில் ரூ.29.85 கோடியில் 170 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஆண்டிமான்ய தோட்டம் திட்டப் பகுதியில் ரூ118.53 கோடியில் 702 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், நாட்டான் தோட்டம் திட்டப் பகுதியில் ரூ.41.08 கோடி மதிப்பீட்டில் 252 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பருவா நகர் திட்டப் பகுதியில் ரூ.61.13 கோடியில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இந்த 9 திட்டப் பகுதிகளில் ரூ.556.60 கோடி மதிப்பில் 3238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
பெட்ரோல் பங்க் நிறுவ விண்ணப்பிக்கலாம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 06:10:00 |
சென்னை: பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சில்லறை விற்பனை நிலையங்களை (பெட்ரோல் பங்க்) அமைக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
www.petrolpumpdealer chayan.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி தேதி.
இதுகுறித்து, கூடுதல் தகவல்களை அறிய 81220 85281, 97020 93023, 97020 93027, 97020 93025, 9702093024 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். அல்லது சென்னை, ஆழ்வார்ப்பேட்டை, டி.டி.கே. சாலையில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க வேண்டும்: ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 06:04:00 |
சென்னை: டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தலைமையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில்பொது சுகாதாரப் பணியாளர்கள்பங்கேற்றனர். அப்போது, செல்வவிநாயகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெங்கு பரிசோதனை முடிவுகளை விரைவாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 6 மணி நேரத்தில் டெங்கு பரிசோதனை முடிவுகளை வழங்க அனைத்து அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு பாதிப்பைக் கண்டறிவதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒருசிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த மூன்று மாதத்துக்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளது.
மழைக்காலம் தொடங்கும் போதே கொசுக்களால் டெங்கு,மலேரியா, சிக்குன் குனியா போன்றநோய்கள் பரவும் அபாயம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. தினமும் சுமார் 40 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மருத்துவமனைகளில் 503 பேர் டெங்குவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.
|
காவிரி நதிநீர் விவகாரத்தில் பொறுப்பை மறந்து பேசும் பிரதமர் மோடி: சீமான் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 06:00:00 |
சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில், பிரதமர் மோடி தனது பொறுப்பை மறந்து பேசுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும் கர்நாடக மாநில அரசு, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்சினையில் நீதிமன்றம் சென்றுதான் உரிமையை நிலைநாட்ட முடியும் என்றால், நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், இந்தியப் பிரதமர், காவிரி நீர் பிரச்சினைக்கும், தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல “இண்டியா கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் காவிரி நீருக்காக மோதிக் கொள்கின்றன” என்று பேசுகிறார். காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதை அவர் மறந்து பேசுகிறார்.
இந்திய இறையாண்மை, தேசிய ஒற்றுமை பேசும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள், கர்நாடகா என்று வரும்போது மாநிலக் கட்சியாக மாறிவிடும். தமிழகத்தில் தேசியக் கட்சிகள் தொகுதியை கேட்டுப் பெறும் நிலையிலும், அங்கு ஆளும் நிலையிலும் உள்ளன. எனவே, ஆட்சியை இழக்க அவர்கள் தயாராக இல்லை.
கூட்டணியை முறிக்க வேண்டும்: கர்நாடக மாநில முதல்வர், அம்மாநில மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என கருதுகிறார். அதேபோல, தமிழக மக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா? தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திமுக அறிவிக்க வேண்டும்.
உரிய தலைவன் இல்லாததால் சிக்கலை எதிர்கொள்கிறோம். நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், நமது மண்ணின் வளத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம். புதிய நீர்த்தேக்கங்களை அமைக்காமல், ஏற்கெனவே இருந்த நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து, இங்குள்ள கட்சிகள் விற்பனை செயதுவிட்டன.
தமிழக நடிகர்கள் போராடினால், திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகப் போராடுவது போலாகிவிடும். பெரும்பாலான திரையரங்கங்கள் திமுக கட்டுப்பாட்டில் இருப்பதால், போராடுவோரின் படத்தை வெளியிட திரையரங்கு கிடைக்காது. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மண்டல செயலாளர்கள் ஸ்ரீதர், தியாகராஜன், கோகுல், சால்டின், ஏழுமலை, மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
|
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 2,000 கனஅடியாக குறைப்பு | செய்திப்பிரிவு | மேட்டூர் | 2023-10-09 05:55:00 |
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் கர்நாடகா வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 154 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 139 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. நீர் இருப்பைக் கருத்தில்கொண்டு படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டாவுக்கான நீர்திறப்பு விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்தது. கடந்த 5-ம் தேதிவிநாடிக்கு 4,000 கனஅடியாகவும், 6-ம் தேதி 3 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று முன்தினம் 2,300கனஅடியாகவும், நேற்று மதியம்முதல் நீர் திறப்பு 2,000 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம் 31.72 அடி. நீர் இருப்பு 8.22 டிஎம்சி.
|
அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 05:48:00 |
சென்னை: அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கத்தின் மாநிலதலைவர் கதிரேசன், போக்குவரத்துறை அமைச்சருக்கு அனுப்பிஉள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசு போக்குவரத்து கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து, மிக குறைவான ஓய்வூதியத்தை பெற்று வரும் 92 ஆயிரம் ஓய்வூதியர்களின் குடும்பங்களுக்கு, 92 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்த்திவழங்கிட வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
ஓய்வூதியர்களின் நலன்களை பாதுகாத்திட நடைபெற இருக்கும் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மாநில அளவில் பதிவுபெற்ற 10 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தையும் அழைத்து பேச வேண்டும்.
இவ்வாறு தமிழக போக்குவரத்துறை அமைச்சருக்கு ஓய்வூதியர்கள் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
|
தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக மாவட்ட நிர்வாகி கைது | செய்திப்பிரிவு | பொள்ளாச்சி | 2023-10-09 05:42:00 |
பொள்ளாச்சி: தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவு செய்த பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த செல்வகுமார்(36), பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
இவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பதிவிட்டுள்ளதாக, திமுக கோவை தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகசாமி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளத்தை தவறாகப் பயன்படுத்துதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் செல்வகுமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர்.
இதையறிந்த பாஜகவினர், நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பிரதமர் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிடும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யாமல், பாஜக நிர்வாகிகள் மீது மட்டுமே போலீஸார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, செல்வகுமார் கைதுக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
|
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம்: நாளை முதல் போக்குவரத்து தொடக்கம் | செய்திப்பிரிவு | நாகப்பட்டினம் | 2023-10-09 05:35:00 |
நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாகை துறைமுகம் அருகில் கடுவையாற்று முகத்துவாரத்தை தூர் வாரும் பணி நடைபெற்றது.
மேலும், பயணிகளின் பாஸ்போர்ட்களை ஆய்வு செய்வது, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது, பயணிகள் கொண்டுவரும் உடமைகளைப் பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது போன்றவற்றை மேற்கொள்ள தனித்தனியாக அறைகளை உருவாக்கும் பணிகள் துறைமுகத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, துறைமுக வளாகத்தில், நாகை பயணியர் முனையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முற்பகல் `செரியாபனி பயணிகள் கப்பல்' நாகை துறைமுகத்துக்கு வந்தது. தொடர்ந்து, நேற்று காலை சோதனை ஓட்டம் நடைபெற்றது. நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சோதனை ஓட்டமாகச் சென்ற செரியாபனி பயணிகள் கப்பலில், அதில் பணியாற்றும் 14 துறைமுக அதிகாரிகள் சென்றனர். நாகை லைட் ஹவுஸ்அருகில் கடற்கரையோரம் நின்றபடி, பயணிகள் கப்பல் செல்வதை பொதுமக்கள் ரசித்தனர். இன்றும் (அக்.9) சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (அக். 10) முதல் தொடங்குகிறது. இதனால், நாகை மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
|
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 05:34:00 |
சென்னை: மதுரை, திருச்சி உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 9)முதல் 11-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 13,14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரைமற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 10, 11-ம் தேதிகளில் மேற்கூறிய மாவட்டங்களில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் நீங்கலாக இதர மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமானமழை பெய்யக்கூடும். அதிகபட்சவெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
அக். 8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் எழுமலையில் 10 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 6 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் புகையிலை நிலையம், வேடசந்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, சின்னார் அணை, மதுரை மாவட்டம் பேரையூர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, வேலூர் மாவட்டம் அம்முண்டி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழைபதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
அத்திப்பள்ளி பட்டாசுக் கடை விபத்து வழக்கில் 2 பேர் கைது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்வு: தமிழக அமைச்சர்கள் அஞ்சலி | கி.ஜெயகாந்தன் | ஓசூர் | 2023-10-09 05:30:00 |
ஓசூர்: கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பட்டாசுக் கடையில்ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோருக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி அஞ்சலி செலுத்தினர். இந்த வழக்கில் கடை உரிமையாளர் மற்றும் அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் ராமசாமி என்பவரது இரு பட்டாசுக் கடைகளை, அவரது மகன் நவீன்நடத்தி வந்தார். இங்கு தமிழகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். தீபாவளி விற்பனைக்காக நேற்று முன்தினம் லாரியிலிருந்து பட்டாசுகளை இறக்கியபோது, திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், கடையில் பணிபுரிந்ததொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம் அரூர் டி.அம்மாப்பேட்டையைச் சேர்ந்த வேடப்பன்(25), ஆதிகேசவன்(23), விஜயராகவன்(20), இளம்பரிதி(19), ஆகாஷ்(23), கிரி (22), சச்சின்(22) ஆகிய 7 பேர், திருவண்ணாமலை மாவட்டம் நீபந்துறையைச் சேர்ந்த பிரகாஷ்(20), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், வாணியம்பாடியைச் சேர்ந்த 2 பேர் என 13 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த கடை உரிமையாளர் நவீன் உள்ளிட்ட 7 பேர் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இதில், ஓசூரைச் சேர்ந்த அந்தோணி பால்ராஜ் (30) நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. அவர்களில் பலர் பட்டதாரிகள். அவர்களது உடல்கள் பிரேதப்பரிசோதனைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையே, தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு,ஓசூர் உதவி ஆட்சியர் சரண்யா, எம்எல்ஏ பிரகாஷ், ஓசூர் மேயர் சத்யா ஆகியோர் அத்திப்பள்ளி மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோர் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர்கள் வழங்கினர். உயிரிழந்தோரின் உடல்கள் தனித்தனியாக தமிழக அரசின்ஆம்புலன்ஸ் மூலம் பகல் 12 மணியளவில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
விபத்து தொடர்பாக அத்திப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கடை உரிமையாளர் ராமசாமி, அவரது மகன் நவீன் ஆகியோரைக் கைது செய்தனர்.
விபத்துக்கு காரணம் என்ன? கர்நாடக மாநில போலீஸார் கூறும்போது “விபத்துக்கு உள்ளான பட்டாசுக் கடையின் பின்பகுதியில் அனுமதியின்றி பட்டாசுக் கிடங்கு வைத்துள்ளனர். மேலும், ரூ.5 லட்சம் வரை பட்டாசுகளை இருப்புவைக்க அனுமதி பெற்ற நிலையில், ரூ.5 கோடி மதிப்பிலான பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமான பட்டாசுகளை குறுகிய இடத்தில் வைத்ததே, விபத்துக்கு முக்கியக் காரணம்" என்றனர்.
தலைவர்கள் இரங்கல்: அத்திப்பள்ளி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அத்திப்பள்ளி பட்டாசுக் கடை விபத்தில் 14 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையை அளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோர், விரைவில் நலம்பெறதமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாஜக தலைவர் அண்ணாமலை: தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. விபத்தில் காயமடைந்தோருக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும்நிலையில், அவற்றைத் தடுக்கும்வகையில் விதிகளைக் கடுமையாக்க வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இந்த விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்தி, பட்டாசு ஆலைகள், கடைகளில் பாதுகாப்புகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: எளிதில் தீப்பிடிக்கிற ஆபத்தான பொருட்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க வேண்டும்.
இந்திய கம்யூ. மாநில செயலாளர் இரா.முத்தரசன்: எதிர்காலத்தில் விபத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தேவையான மாற்றங்களை செய்து, சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
இதேபோல, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சமகதலைவர் ரா.சரத்குமார் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
|
முக்கிய வழித்தடங்களில் 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே நடவடிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 05:23:00 |
சென்னை: தெற்கு ரயில்வேயில் 1,394 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மேம்படுத்தி, 110 கி.மீ. வேகம் வரையில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையின் கையேட்டின்படி, ரயில்களில் வேகம் குரூப்-ஏ வழித்தடம், குரூப்-பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது. குரூப்-ஏ வழித்தடத்தில் 160 கி.மீ. வரையும், குரூப்-பி வழித்தடத்தில் 130 கி.மீ. வரையும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் பணிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதை அமைப்பது, தண்டவாளத்தின் தரத்தை மேம்படுத்துவது, நவீன சிக்னல்கள் அமைப்பது, பாலங்களை வலுப்படுத்துவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே, முக்கிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. மொத்தம் 413 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 130 கி.மீ. வரை வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவைதவிர, 1,218 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 1,394 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மேம்படுத்தி 110 கி.மீ. வேகத்துக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, ரயில் பாதைகளின் தரத்தை உயர்த்துவது, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு, வளைவுகளை நீக்குவது, தேவையற்ற நுழைவுகளை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை தவிர, 2023-24-ம் நிதியாண்டுக்குள் 1,394 கி.மீ. தொலைவுக்கு பாதையை மேம்படுத்தி, ரயில்களை 110 கி.மீ. வரை வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கொருக்குப்பேட்டை-அத்திப்பட்டு 3-வது, 4-வது பாதை, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மெதுவான பாதை, கரூர்-திண்டுக்கல், போத்தனூர்-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு, கன்னியாகுமரி-திருவனந்தபுரம், எர்ணாகுளம்-திருவனந்தபுரம், எர்ணாகுளம்-ஆலப்புழா, விழுப்புரம்-தஞ்சாவூர், மயிலாடுதுறை-திருவாரூர், திருவாரூர்-காரைக்குடி, நீடாமங்கலம்-மன்னார்குடி, திருச்சி-ராமேசுவரம், மதுரை-மானாமதுரை, விருதுநகர்-தென்காசி, மதுரை-திருமங்கலம், வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் ரயில்பாதைகளை மேம்படுத்தி, ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ஜோலார்பேட்டை-கோயம்புத்தூர் பாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
சென்னை - திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயிலில் ‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா? - எதிர்பார்ப்பில் சாமானிய ரயில் பயணிகள் | மு.வேல்சங்கர் | சென்னை | 2023-10-09 05:22:00 |
சென்னை: சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலில் சாமானிய மக்களும்பயணிக்கும் வகையில், ‘எகனாமிக்’வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது நவீன வசதிகளுடன் அதிவிரைவு ரயிலாக ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது, 34 ‘வந்தே பாரத்’ ரயில்கள்இயக்கப்படுகின்றன. இவற்றில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, விஜயவாடா - சென்னை சென்ட்ரல் இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.
வழக்கமான விரைவு ரயில்களில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல 11 மணி நேரம் ஆகும். ஆனால், ‘வந்தே பாரத்’ரயிலில் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றுவிடலாம். இந்த ரயிலில் ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும், 7 ஏசி சேர் கார் பெட்டிகளும் என 8 பெட்டிகளில் மொத்தம்590 பேர் பயணிக்க முடியும்.
பயணிகளுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும் எல்லா தரப்பு மக்களும் பயணிக்க முடியாத நிலையில் அதன் கட்டணம் உள்ளது. வந்தேபாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டிக்கு ரூ.3,055, சேர் கார் பெட்டிக்கு ரூ.1,665 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான நெல்லை, கன்னியாகுமரி ஆகிய விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிக்கு ரூ.395, மூன்று அடுக்குஏசி பெட்டிக்கு ரூ.1,040, 2 அடுக்குஏசி பெட்டிக்கு ரூ.1,460, முதல்வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2,440 எனகட்டணம் உள்ளது. இந்த விரைவுரயில்களின் தூங்கும் வசதி பெட்டிகளுக்கான கட்டணத்தைவிட ‘வந்தே பாரத்’ ரயிலின் சேர் கார் கட்டணம் பல மடங்கு அதிகமாகும். இதனால், சாமானிய, நடுத்தர மக்கள் பயணிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த பயணி சிவா கூறும்போது, "சென்னை - விழுப்புரத்துக்கு ‘வந்தே பாரத்’ ரயிலில் ஏசி சேர் காருக்கு ரூ.600 கட்டணம். ஆனால், வைகை அதிவிரைவு ரயிலில் சென்னை - விழுப்புரத்துக்கு ஏசி சேர் கார் வகுப்பு கட்டணம் ரூ.345 தான். எனவே, கட்டணத்தை சற்று குறைத்தால், நன்றாக இருக்கும் அல்லது எக்னாமிக் வகுப்பு பெட்டிகள் சேர்க்க வேண்டும்" என்றார்.
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்த பயணி சையது கூறும்போது, "வந்தே பாரத் ரயில்கட்டணம் அதிகம்தான். வியாபாரிகள், மருத்துவப் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு இந்த ரயில் பேருதவியாக உள்ளது.ஏசி சேர் கட்டணத்தை ரூ.1,660-ல் இருந்து ரூ.1,000 ஆக குறைக்க வேண்டும். தற்போது 8 பெட்டிகள் தான் உள்ளன. இதை 12 அல்லது 16பெட்டிகளாக உயர்த்த வேண்டும்" என்றார்.
இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க முன்னாள் துணைத்தலைவர் மனோகரன் கூறியதாவது:
‘வந்தே பாரத்’ ரயில்களில் சாமானியர்களின் பயணம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, குறைந்த கட்டணத்தில் பயணிக்க, ‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் வடிவமைத்து, ‘வந்தே பாரத்’ ரயில்களில் இணைக்க முன்வர வேண்டும். அப்படி இல்லை என்றால்,ஒரு தரப்பு மக்களின் ஆதரவையும்மற்றொரு தரப்பு சாமானிய மக்களின் எரிச்சலையும் ‘வந்தே பாரத்’ ரயில் விரைவில் சம்பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
‘வந்தே பாரத்’ ரயிலை உருவாக்க அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, அதிகதொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. எனவே, ‘வந்தே பாரத்’ ரயிலைமற்ற ரயில்களுடன் ஒப்பிட முடியாது. ஒவ்வொரு ரயிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு இயக்குவதில் ரயில்வேக்கு ரூ.768.51 வருவாய் கிடைக்கும். ‘வந்தே பாரத்’ ரயிலை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு ரூ.1,806.45 செலவிடப்படுகிறது. இதன்மூலமாக, ரயில்வேக்கு நிகரவருவாய்க்குப் பதிலாக, ரூ.1,037.94 நிகர இழப்பு ஏற்படுகிறது.
ஆனால், ஒரு ரயில் இயக்க செலவில், ரயில் பயணிகளிடம் 100 சதவீதகட்டணத்தில் 42.5 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மீதம் அரசு சலுகையாக அளிக்கப்படுகிறது. இந்த இழப்பை சரக்கு ரயில் மற்றும் ரயில்களின் ஏசி சேர் கார், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் கட்டணம் மூலமாக ஈடு கட்டப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால், ‘வந்தே பாரத்’ ரயிலில் எகனாமிக் வகுப்பு பெட்டிகள் பொருத்த வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், இதே வகையில், ‘புஸ்புல்’ ரயில் தயாரிக்கப்படுகிறது. இது சாதாரண ‘வந்தே பாரத்’ ரயில் போல இருக்கும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
|
ஓட்டுநர் நியமன டெண்டரை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாளை சிஐடியு ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 05:21:00 |
சென்னை: ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர் நியமனத்துக்கான டெண்டரை எதிர்த்து மாநிலம் தழுவிய அளவில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினோம்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும்போதே, தொழிலாளர் துறை அறிவுறுத்தலை மீறி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அண்மையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை நியமிப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் போன்ற நிரந்தரத் தன்மையுடைய பணிகளைக் கூட தனியாருக்கு தாரை வார்த்தால் பொதுத்துறை நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன என்ற கேள்வி எழுகிறது.
படித்த இளைஞர்களுக்கு அரசுப் பணியே கிடைக்காத நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதற்கான தூண்டுகோலாகவே நாளைய தினம் தமிழகம் முழுவதும் மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். சென்னையில் மாலை 4 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் பங்கேற்கிறார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
|
வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி டிச.4 முதல் ஜன.20 வரை வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 05:18:00 |
சென்னை: வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், நிரந்தரப் பணியிடங்களில் அயல்பணி மூலம் ஆட்களை நியமிப்பதைக் கண்டித்தும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களுக்கு பொதுச் சேவை வழங்குவதில் வங்கிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் கடந்த 1969-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டன. அதன் பிறகு, நாட்டின் அனைத்துப் பகுதிகள் மட்டுமின்றி குக்கிராமங்களிலும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன.
அண்மைக்காலமாக வங்கி வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல், வங்கிப் பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன. இதனால், வங்கி ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. அதே சமயம், வங்கிகளில் போதிய அளவுக்கு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவது இல்லை. ஊழியர்கள் ஓய்வு பெறுதல், பதவி உயர்வு மற்றும் ஊழியர்கள் இறத்தல் போன்ற சமயங்களில் காலியாகும் பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்படுவதில்லை. வங்கிகளில் வர்த்தகம் அதிகரிக்கும்போது கூடுதல் ஊழியர்களும் நியமிக்கப்படுவதில்லை.
அதிகளவு அரசு திட்டங்கள் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம், 50 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வங்கிக் கிளைகளில் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
ஊழியர் பற்றாக்குறை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடிவதில்லை. இதனால், வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.
மேலும், எழுத்தர் (கிளார்க்) போன்ற நிரந்தர பணிகளுக்கு அதிகளவு ஊதியம் வழங்கும் என்பதற்காக, அதைத் தவிர்க்கும் வகையில் அப்பணிக்கு அயல்பணி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, வங்கிகளில் போதிய ஊழியர்களை நியமிக்கக் கோரியும் நிரந்தரப் பணியிடங்களில் அயல்பணி மூலம் ஆட்களை நியமிப்பதைக் கண்டித்தும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வங்கிகள் தனித்தனியாக வரும் டிச.4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும், மாநில அளவிலான வேலை நிறுத்தம் ஜன.2 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜன.19 மற்றும் 20-ம் தேதி அகில இந்திய அளவில் 2 நாட்களும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சி.எச். வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
|
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: காவிரி குறித்து தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 05:14:00 |
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில், காவிரி தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21-ம் தேதி வரை நடைபெற்றது.
பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், அக்.20-ம் தேதிக்குள் கூட்டம் நடத்தப்பட வேண்டி இருந்தது. கடந்தசெப்.20-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அக்.9-ம் தேதி பேரவைகூடும் என்று அறிவித்தார்.
அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுதொடங்குகிறது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் காலமான பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
தொடர்ந்து, கேள்வி நேரம் இடம்பெறும். பிறகு, 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான துணை மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இதையடுத்து, காவிரி தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி இத்தீர்மானத்தை முதல்வர் கொண்டு வருகிறார்.
பின்னர், பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்படும். அனேகமாக 3-4 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை குறித்து பேரவைத் தலைவரிடம் அதிமுக ஏற்கெனவே மனு அளித்துள்ளது. இதுபற்றி பேரவையில் அதிமுக மீண்டும் கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது.
|
காவிரி அணைகளை கையாள ஆணையத்துக்கு அதிகாரம் வழங்குவதே முக்கியம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 05:11:00 |
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை செயல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. காவிரி சிக்கலின் அடிப்படையை அறியாமல், இதுபோல பெயரளவில் தீர்மானம் நிறைவேற்றுவதால் குறுவை பயிர்களையும் காக்க முடியாது; விவசாயிகள் கண்ணீரையும் துடைக்க முடியாது.
தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகுவதற்கு காரணமே காவிரி ஆணையமும், அதன் அதிகாரமற்ற தன்மையும்தான். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் சுமார் 100 டிஎம்சி தண்ணீர் இருந்தது. அப்போது தமிழக அரசு கோரியவாறு விநாடிக்கு 24,000 கனஅடி தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டிருந்தால், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருக்காது.
தண்ணீர் இல்லாமல் மேட்டூர் அணை மூடப்பட உள்ள இன்றைய நிலையில்கூட, கர்நாடக அணைகளில் 67 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அதில் இருந்து குறைந்தது 20 டிஎம்சி நீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டால், இப்போதும்கூட குறுவை பயிர்களை காப்பாற்ற முடியும். ஆனால், அவ்வாறு நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையம் தயாராக இல்லை. ஒருவேளை காவிரி ஆணையம் உத்தரவிட்டாலும், அதை கர்நாடக அரசு செயல்படுத்தாது. இந்த சூழலை மாற்றாத வரை, காவிரி பாசன மாவட்டங்களில் கண்ணீர் சூழல் மாறாது.
அதேநேரம், இந்த சூழல் மாற்ற முடியாதது அல்ல. தமிழகம், கர்நாடகா, கேரளாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி ஆணையத்துக்கு வழங்குவது மட்டுமே இதற்கான தீர்வு. ஆணையத்துக்கு அத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டால், தமிழகத்துக்கான தண்ணீரை ஆணையமே திறக்க முடியும். கர்நாடகா நினைத்தாலும், அதை தடுக்க முடியாது.
அதிகாரம் இல்லாத காவிரி ஆணையத்தால் பயன் இல்லை என்பது இப்போது தெளிவாகிவிட்ட நிலையில், அதை மாற்றி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய காவிரி ஆணையத்தை அமைப்பதுதான் சரியான தீர்வாகும். அதற்கான முயற்சிகளை தமிழகம் தொடங்க வேண்டும். அதன் தொடக்கமாக, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டவாறு அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து, அதற்கான அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
|
திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது; நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கேட்போம்: முதல்வரை சந்தித்த பிறகு கே.பாலகிருஷ்ணன் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 05:07:00 |
சென்னை: திமுகவுடன் கூட்டணி தொடர்வதாகவும், நாடாளுமன்ற தேர்தலின்போது அதிக இடங்கள் கேட்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் சந்தித்து வாச்சாத்தி விவகாரம் குறித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், வாச்சாத்தி தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில் உள்ளபடி, பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு, குற்றவாளிகளிடம் இருந்து 50 சதவீதம் தொகையை வசூலிப்பதுடன் அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசு பணி வழங்க வேண்டும். வாச்சாத்தி கிராம மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.
சம்பவத்தின்போது பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மாவட்ட வன அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்துக்கு 2 ஏக்கர் நிலம், வங்கிக்கடன் உள்ளிட்டவை மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: பாஜக கூட்டணியை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் மக்கள் திரள் மாநாட்டை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் நினைவூட்டியுள்ளோம். பேசி தீர்மானிக்கலாம் என்று முதல்வர் தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தோம். வரும் அக்.11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இதற்கு மார்க்சிஸ்ட் சார்பில் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளோம்.
திமுகவுடனான கூட்டணி நீடிக்கிறது. ஏற்கெனவே பெற்ற தொகுதிகளை விட குறைத்தா பேசுவோம், அதிகப்படுத்ததானே முயற்சிப்பார்கள். பேச்சுவார்த்தையின்போது எங்களின் கோரிக்கைகள் வைத்து சுமூக முடிவை எட்டுவோம்.
அதிமுகவிடம் இருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் இல்லை. அதிமுக- பாஜக பிரிந்தாலும், அவர்கள் ஒன்றாக இருந்தபோது எப்படி எதிர்த்து போராடினோமோ, அதே போராட்டம் இப்போதும் தொடரும். கடந்த 9 ஆண்டு கால பாஜக செய்த துரோகத்துக்கு ஆதரவு அளித்துவிட்டு, தற்போது மாறிவிட்டதாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அதிமுக பிரிந்ததால் புனிதமாகிவிட்டது என்று கூற முடியாது. வரும் அக்.13, 14-ம் தேதிகளில் மாநில குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், தேர்தல் பணிகள் தொடர்பாக முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
எமிஸ் பதிவேற்ற பணிகளை மேற்கொள்ள மாட்டோம்: தொடக்க கல்வி ஆசிரியர்கள் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 04:59:00 |
சென்னை: எமிஸ் பதிவேற்ற பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எண்ணும் எழுத்தும் திட்டம், ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கிறது. எனவே அதை முழுமையாக கைவிட வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதையும், அதன்மூலம் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய சொல்வதையும் கைவிட வேண்டும்.
மேலும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியதுமான எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ஆன்லைன் பதிவேற்றப் பணிகளில் இருந்தும், எமிஸ், டிஎன்எஸ்இடி செயலி மூலம் நடைபெறும் பதிவேற்றப் பணிகளில் இருந்தும் வருகிற 16-ம் தேதி முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக் கொள்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வருகை மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவேற்றம் தவிர மற்ற எந்த விவரங்களையும் செல்போன் மூலம் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யமாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ளும் பெரும்பாலான பணிகளை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்று கூறப்படும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த பணிகளை ஆசிரியர்கள் நாள்தோறும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
|
காரியமங்கலத்தில் மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் இருந்து வெளியேறும் எரிவாயு? - ஓஎன்ஜிசி விளக்கம் | செய்திப்பிரிவு | திருவாரூர் | 2023-10-09 04:06:00 |
திருவாரூர்: திருவாரூர் அருகே காரியமங்கலத்தில் மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் இருந்து எரிவாயு வெளியேறுவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி சார்பில் 100-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளை கடந்த 50 ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், மீத்தேன் திட்டம் தொடர்பான அச்சம் ஏற்பட்டதிலிருந்து பொதுமக்கள் திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் ஏற்கெனவே கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்பட்டு உற்பத்தி நின்று போன எண்ணெய் கிணறுகள் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பல மாதங்களாக, மூடி வைக்கப்பட்டுள்ளன. அதுபோல, திருவாரூர் அருகேஉள்ள காரியமங்கலம் கிராமத்தில் உற்பத்தி நின்று போன 2 கச்சா எண்ணெய் கிணறுகளை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டன.
இதில், கடந்த சில நாட்களாக மூடப்பட்ட கச்சா எண்ணெய் கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறி வருகிறது. கச்சா எண்ணெய் கிணற்றில் தேங்கியுள்ள மழைநீரில் எரிவாயு வெளியேறுவதால் நீர்க்குமிழி தோன்றி மறைந்து வருகிறது. இதனால், கிராம மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்நிறுவனத்தினர் யாரும் இதுவரை அதை சரி செய்யும் பணிகளை தொடங்கவில்லை என்றும், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், காரியமங்கலத்தில் எரிவாயு கசிவதாக கூறப்பட்ட கச்சா எண்ணெய் கிணற்றில், நேற்று காரைக்கால் ஓஎன்ஜிசி அலுவலகத்தில் இருந்து வந்த பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக ஓஎன்ஜிசி காரைக்கால் அலுவலக அதிகாரிகள் கூறியது: எண்ணெய் கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறுவது குறித்து தகவல் கிடைத்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். எண்ணெய் கிணறுகளில் எரிவாயு வெளியேறுவதால், பாதிப்பு ஏதும் இல்லை.
குறிப்பாக மூடப்பட்ட கிணற்றிலிருந்து வெளியேறும் வாயு, இயற்கை எரிவாயு இல்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எரிவாயு வெளியேறுவதாக கூறப்படும் எண்ணெய் கிணற்றின் மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, அதன் மீது இரும்பு பைப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளது.
இந்த இரும்பு பைப்புகளில் தேங்கியுள்ள எரிவாயு ஏதேனும் கசிகிறதா என்பது குறித்து 2-வது முறையாக முழுமையான ஆய்வை செய்யவுள்ளோம். ஓஎன்ஜிசியின் நேரடி மேற்பார்வையில் 2 கிணறுகளும் உள்ளன. எனவே, இது குறித்து பொதுமக்கள் எந்த வகையிலும் அச்சப்பட வேண்டியதில்லை என தெரிவித்தார்.
|
“காவிரி விவகாரத்தில் பொறுப்பை மறந்து பேசும் பிரதமர் மோடி” - சீமான் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-09 04:04:00 |
சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும் கர்நாடக மாநில அரசு, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்சினையில் நீதிமன்றம் சென்று தான் உரிமையை நிலை நாட்ட முடியும் என்றால், நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இந்தியப் பிரதமர், காவிரி நீர் பிரச்சினைக்கும், தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல “இண்டியா கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் காவிரி நீருக்காக மோதிக் கொள்கின்றன” என்று பேசுகிறார்.
காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதை அவர் மறந்து பேசுகிறார். இந்திய இறையாண்மை, தேசிய ஒற்றுமை பேசும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள், கர்நாடகா என்று வரும்போது மாநிலக் கட்சியாக மாறிவிடும். தமிழகத்தில் தேசியக் கட்சிகள் தொகுதியை கேட்டுப் பெறும் நிலையிலும், அங்கு ஆளும் நிலையிலும் உள்ளன. எனவே, ஆட்சியை இழக்க அவர்கள் தயாராக இல்லை.
கர்நாடக மாநில முதல்வர், அம்மாநில மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என கருதுகிறார். அதேபோல, தமிழக மக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா? தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திமுக அறிவிக்க வேண்டும். உரிய தலைவன் இல்லாததால் சிக்கலை எதிர்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், நமது மண்ணின் வளத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம். புதிய நீர்த்தேக்கங்களை அமைக்காமல், ஏற்கெனவே இருந்த நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து, இங்குள்ள கட்சிகள் விற்பனை செயதுவிட்டன. தமிழக நடிகர்கள் போராடினால், திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகப் போராடுவது போலாகிவிடும்.
பெரும்பாலான திரையரங்கங்கள் திமுக கட்டுப்பாட்டில் இருப்பதால், போராடுவோரின் படத்தை வெளியிட திரையரங்கு கிடைக்காது. இவ்வாறு சீமான் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில், மண்டல செயலாளர்கள் ஸ்ரீதர், தியாகராஜன், கோகுல், சால்டின், ஏழுமலை, மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
|
“மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தவாகவுக்கு ஒரு தொகுதி கேட்போம்” - வேல்முருகன் | செய்திப்பிரிவு | சேலம் | 2023-10-09 04:02:00 |
சேலம்: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை ஒதுக்கித்தர வலியுறுத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஏற்காட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், கட்டமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை ஒதுக்கி தர வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: கடலூரில் இயங்கி வரும் சிப்காட்டில் 50-க்கும் மேற்பட்ட கெமிக்கல் நிறுவனங்களும், பல சாய தொழில் நிறுவனங்களும் இயங்கி மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன.
மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் கடலூர் என சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன. பசுமைத் தாயகம், பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகளும் இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளன. மேலும், கழிவுகள் நேரடியாக கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
அபாயகரமான ஆலைகளை இனங்கண்டு தமிழக அரசும், முதல்வரும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஈரோடு, நாமக்கல், கோவை மாவட்டங்களில் சாயப்பட்டறைகளால் ஆறு பாழாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை ஏரி, குளம், குட்டைகளில் நிரப்புவதற்கான திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.
மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசும், தமிழக அரசும் அனுமதி அளிக்கக் கூடாது. இதற்காக மக்கள் இயக்கங்களை நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும். மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்கித் தர வேண்டும் என வலியுறுத்துவோம். இவ்வாறு தெரிவித்தார்.
|
கிருஷ்ணகிரியில் பட்டாசுக் கடைகளை கண்காணிக்க தனி அலுவலரை நியமிக்க வலியுறுத்தல் | எஸ்.கே.ரமேஷ் | கிருஷ்ணகிரி | 2023-10-09 04:00:00 |
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளைக் கண்காணிக்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உட்பட பல்வேறு பகுதிகளில் 136 நிரந்தரப் பட்டாசுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை 29-ம் தேதி, கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசுக் கடைகளில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, அனுமதிக்கப்பட்ட அளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போதே, கெலமங்கலம் அருகே உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அரசு அலுவலர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில், விதிமுறைகளை பின்பற்றாத 48 பட்டாசுக் கடைகளின் உரிமங்களை ரத்து செய்து ஆட்சியர் கே.எம்.சரயு உத்தரவிட்டார். இந்நிலையில், ஓசூர் அருகே கர்நாடகா எல்லை அத்திப் பள்ளியில் நேற்று முன் தினம் நடந்த பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து எதிர்பாராமல் நடந்த விபத்தாக இருந்தாலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டதே உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளை கண்காணிக்கவும், விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை தொடர் ஆய்வு செய்யவும் தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பட்டாசுக் கடை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 35 சதவீதம், ஓசூர் அருகே மாநில எல்லையில் அமைந்துள்ள ஜுஜுவாடி, கர்நாடகா மாநில எல்லையில் உள்ள அத்திப் பள்ளியில் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்காக இங்கு அதிகளவில் பட்டாசுகள் விற்பனையாகும்.
இதனால், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், அதிகளவில் இருப்பு வைக்கப்படுகிறது. பொதுவாக கடைகளில் 100 கிலோ வரை கம்பி மத்தாப்பூ, பேன்சி ரக பட்டாசுகளும், 500 கிலோ வெடிக்கும் பட்டாசுகளை வைக்க உரிமம் அளிக்கப்படுகிறது. சிலர் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.
எனவே, வெடிப்பொருட்கள் சட்டத்தை பின்பற்றும் வகையில், வட்டாட்சியர் அளவிலான தனி அலுவலர்களை நியமித்து, சுழற்சி முறையில் அனைத்துக் கடைகளையும் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
“விருதுநகர், கன்னியாகுமரியில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம்” - கே.எஸ்.அழகிரி | அ.கோபால கிருஷ்ணன் | சிவகாசி | 2023-10-08 23:54:00 |
சிவகாசி: விருதுநகர், தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு மற்றும் பயிற்சி பாசறை கூட்டம் ஞாயிறு அன்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். சிவகாசி எம்எல்ஏ அசோகன் வரவேற்றார்.
எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், பழனி நாடார், ராதாகிருஷ்ணன் மற்றும் விருதுநகர், தென்காசி மாவட்ட நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி முதலில் கோரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியா முழுவதிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இடஒதுக்கீடு முழுமையாக கிடைக்கும் என ராகுல் காந்தி கூறி உள்ளார். நம் நாட்டில் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் 60 சதவீதம் உள்ள நிலையில் அவர்களுக்கு 28 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டில் சமநிலையை கொண்டு வர வேண்டும். மாநில வாரியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் சிக்கல் உள்ளதால் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் கோயில்களை அரசாங்கம் கைப்பற்றி இருப்பதால், கோயில்களின் சொத்து கொள்ளையடிக்கப்படுவதாக தவறான கருத்தை மோடி கூறியுள்ளார். ஒரு காலத்தில் கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகவும், வலிமை உள்ளவர்களின் சொத்தாகவும், எளியவர்கள் உள்ளே நுழைய முடியாத சூழ்நிலை இருந்தது. ஆங்கிலேயர் காலத்திலேயே கோயில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அதன்பின் காமராஜர் ஆட்சியில் இந்து அறநிலையத்துறை உருவாக்கி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை அமைச்சர் ஆக்கி, கருவறைக்குள் சென்று வணங்க வைத்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது வரவேற்க கூடியது. இண்டியா கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக மோடி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். பட்டாசு தொழிலுக்கு ஏற்றுமதி வசதியை ஏற்பத்த முதல்வரிடம் நேரில் வலியுறுத்துவோம். இண்டியா கூட்டணி அமைந்தால் பட்டாசு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் புதுமுகம், பழைய முகமும் கலந்து தான் இருக்கும். சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு உண்டு. விருதுநகர், கன்னியாகுமரி தொகுதி நாங்கள் சிறப்பாக செயல்பட்ட தொகுதி. அங்கு மீண்டும் போட்டியிட விரும்புகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.
|
மலைவாழ் மக்களால் பயணிக்க முடியாத சாலை - 75 ஆண்டுகளாக மனமிறங்காத அதிகாரிகள் @ திருப்பத்தூர் | ந. சரவணன் | திருப்பத்தூர் | 2023-10-08 19:00:00 |
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே தார்ச்சாலை அமைத்து தரக்கோரி கடந்த 75 ஆண்டுகளாக மனு அளித்து வரும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது எப்போது ? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு என 3 ஊராட்சிகள் உள்ளன. இந்த 3 ஊராட்சிகளிலும் 36 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்களின் பிரதான தொழிலாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் உள்ளது.
நாடு சுதந்திரம் அடைந் ததில் இருந்து மலைவாழ் மக்களுக்கு சரி யான சாலை வசதிகள் இல்லை, மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லை என இங்குள்ளவர்கள் பல ஆண்டுகளாக குற்றஞ் சாட்டி வருகின்றனர். ஜவ்வாது மலை மட்டுமின்றி வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை, ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை பகுதியிலும் சாலை வசதியை மேம்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டபோதிலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் இம்மாவட்ட மக்களிடம் அதிகம் உள்ளது.
இதற்கிடையே, ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு ஊராட்சியில் உள்ள விளாங்குப்பம் கிராமத்துக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததால் கடந்த 75 ஆண்டுகளாக அங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி, கிராமத்தையே காலி செய்து வேறு இடத்துக்கு சென்று விடலாமா? என்ற யோசனையிலும் இருப்பதாக அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து விளாங்குப்பம் மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது, ‘‘விளாங்குப்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலி வேலை போன்ற தொழில்களில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். விளாங்குப்பம் முதல் வழுதலம்பட்டு வரை ஏறத்தாழ 4 கி.மீ., தொலைவுக்கு சரியான பாதை வசதி இல்லை.
கரடு, முரடான சாலையில் தான் நாங்கள் பல ஆண்டுகளாக பயணித்து வருகிறோம். பெரியவர்கள் எப்படியோ சமாளித்துக் கொள்கிறோம். ஆனால், பள்ளி மாணவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. விளாங்குப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. உயர் கல்விக்கு வழுதலம்பட்டு பகுதி யில் உள்ள அரசுப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.
கரடு, முரடாக உள்ள 4 கி.மீ., தொலைவுக்கு மாணவ, மாணவிகள் நடந்து சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்ல வசதி இல்லாத மாண வர்கள் காலை 6.30 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டால் தான் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியும். அதேபோல, பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்ப மாலை 6 மணி ஆகிவிடுகிறது.
நடந்து வந்த களைப்பில் வீட்டுக்கு வரும் மாணவர்கள் வீட்டு பாடங்களை செய்ய முடியாமலும், படிக்க முடியாமலும் அவதிக் குள்ளாகின்றனர். இந்த பிரச்சினையில் அடுத்த நாள் காலை அப்படியே பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி, விளாங்குப்பம் கிராமத் தில் விவசாய நிலங்களில் பயிரிடப்படும் விளை பொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை.
விளை பொருட்களை ஏற்றிச்செல்ல வாடகை வாகனம் கூட எங்கள் மலை கிராமத்துக்கு வருவதில்லை. இரு சக்கர வாகனங்களிலும், மிதி வண்டிகளிலும் எடுத்துச் சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். மேலும், எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்களை டோலி கட்டித்தான் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கர்ப்பிணிகள் பிரசவத்துக்கு செல்லும் போது பல சிரமங்களை நாங்கள் கடந்த 75 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். எங்கள் நிலையை எடுத்துக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், உராட்சி ஒன்றிய அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர் என பலரிடம் மனு அளித்தும் எந்த ஒரு தீர்வும் இதுவரை காணப்படவில்லை.
சாலை வசதி கேட்டு போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஆனால், எங்கள் கிராமத்துக்கான சாலை வசதி இன்னுமும் ஏற்படுத்தி தராமல் இருப்பது வேதனையளிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு விளாங்குப்பம் முதல் வழுதலம்பட்டு கிராமம் வரை தார்ச் சாலை அமைத்து தர தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளை தொடங்க வேண்டும்’’ என்றனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்த போது, ‘ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள ஊராட்சிகளில் சாலை வசதிகளை உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் தான் மேற்கொள்ள வேண்டும். புதூர்நாடு ஊராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளாங் குப்பம் பகுதியிலும் ஆய்வு நடத்தி சாலை வசதி செய்து தர உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும்’’ என்றனர்.
|
அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்படும்: கர்நாடக முதல்வர் தகவல் | கி.ஜெயகாந்தன் | ஓசூர் | 2023-10-08 18:22:00 |
ஓசூர்: அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை தீ விபத்து குறித்து விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க உள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இன்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா,துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது,"அத்திப்பள்ளியில் ஜெயம்மா என்பவருக்கு சொந்தமான இடத்தில் ராமசாமி ரெட்டி என்பவர் பெயரில் லைசென்ஸ் பெற்று பட்டாசு விற்பனை செய்து வந்துள்ளனர். பட்டாசு கடைக்கு கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் இருந்து வாகனங்கள் மூலம் பட்டாசு வந்துள்ளன. அந்த பட்டாசுகளை தொழிலாளர்கள் இறக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெரிய வரவில்லை.
அங்குள்ள மின் ஒயவர்களோ அல்லது யுபிஎஸ் மூலமாகவோ இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம். விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவில்லை. நான் ஆய்வு செய்த வரையில் பட்டாசு கடையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகான பொருட்களும் இல்லை. மேலும் லைசன்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதியன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனுடைய காலம் 31.10.2028 வரை உள்ளது. அதற்கு முன்பு 18.1.2021 அன்று ஒரு லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதனுடைய காலம் 8. 1. 2026 வரை உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் இந்த விபத்து குறித்த வழக்கு சிஐடி வசம் ஒப்படைக்க உள்ளோம்" என்று கூறினார். இந்த பேட்டியின் போது, தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், கிருஷ்ணகிரி எம்பி, செல்லகுமார், மேயர் சத்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
|
மதுரை | வித்தியாசமான ஹேர்ஸ்டைல், அன்னநடை: பார்வையாளர்களைக் கவர்ந்த நாய்கள் கண்காட்சி | ஒய். ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2023-10-08 17:42:00 |
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 55 வகையான 500க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்துகொண்ட தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் பொம்மைகள் போல காட்சியளித்த சிச்சு, பொம்மேரியன் நாய்கள் முதல், வித்தியாசமான ஹேர்ஸ்டைல்களுடன் அன்னநடை போட்டு வந்த நாய்கள் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ரசிக்க வைத்தன.
மதுரை தமுக்கம் மைதானத்தில் தேசிய அளவிலான 37வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்க ஆன்லைன் முறையில் நாய்கள் பதிவு செய்யப்பட்டன. தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 55 வகைகளை சார்ந்த 500க்கும் நாய்கள் கலந்துகொண்டன.
சௌசௌ, சிச்சு, தாய் பொம்மேரியன், டூடுல், ஜெயின் பெர்னாட், ஆப்கான் ஹண்ட், ஜெர்மன் செப்பர்ட், டாபர் மேன்,கிரேடேன்,ராட் மாஸ்டிஸ், பாக்சர், ஜிவாவா, மால்டிஸ், சைபீரியன் அஸ்கி, ஸ்பேனியல் உள்ளிட்ட 55 வகையான விதவிதமான வித்தியாசமான வெளிநாட்டு இன நாய்களும், ராமநாதபுரம் மந்தை, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கண்ணி,கோம்பை உள்ளிட்ட 10 வகையான நாட்டின நாய்களும் கலந்து கொண்டன.
ஜப்பான் நடுவர் குழு: கண்காட்சியில் பங்கேற்ற நாய்களில் சிறந்த நாய்களை தேர்வு செய்ய ஜப்பான் நாட்டில் இருந்து மூன்று பேர் அடங்கிய நடுவர்கள் குழு வந்திருந்தனர். நாய்களின் உடல் கட்டமைப்பு , கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம், நாய்களின் உடல் தகுதி வயதுக்கேற்ப வளர்ச்சி நிறம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு இனங்களிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுக் கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
பார்ப்பதற்கு அச்சு அசல் பொம்மைகள் போன்று காணப்பட்ட சௌசௌ, சிச்சு, பொம்மேரியன் போன்ற நாய்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன. இந்த வகை நாய்களை சிகை அலங்கார நிபுணர்களை கொண்டு அதன் உரிமையாளர்கள் குழந்தைகளை போல வகை வகையான ஹேர்ஸ்டைல்களில் வண்ண வண்ண கிளிப்கள் அணிந்து அழைத்து வந்திருந்தனர்.
இதில் சில வகையான நாய்கள் பார்ப்பதற்கு பூனைக்குட்டிகள் போல குழந்தைகள் கண்டு குதூகலமடையும் வகையிலும், சில நாய்கள் பார்ப்போரை மிரளும் வகையில் 4 அடிவரை வளர்ந்து பிரமாண்ட தோற்றத்துடன் காணப்பட்டு பார்வையாளர்களை வியக்கவைத்தன. போட்டியில் ஒவ்வொரு நாயும் அன்னநடை போட்டு நடந்து சென்றவிதம் பார்வையாளர்கள் ரசிக்க வைத்தன. இந்த நாய் கண்காட்சியினை மதுரை மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்களிலும் இருந்தும் வந்திருந்த பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.
|
மல்லப்புரம் மலைச்சாலை அகலப்படுத்தப்படுமா? - 70 கி.மீ. சுற்றிச் செல்லும் கிராம மக்கள் | என்.கணேஷ்ராஜ் | கடமலைக்குண்டு | 2023-10-08 17:35:00 |
கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், மயிலாடும்பாறையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் மதுரை மாவட்டத்துக்குச் செல்ல மலைச்சாலை உள்ளது. ஆனால் குறுகிய சாலையாக உள்ளதால், இப்பகுதி கிராம மக்கள் 70 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை நீடிக்கிறது.
தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் கடமலை - மயிலை ஒன்றியம் உள்ளது. இங்கு, ஆத்தங்கரைப்பட்டி, துரைச்சாமிபுரம், எட்டப்பராஜபுரம், மயிலாடும்பாறை, குமணந்தொழு, மந்திச்சுனை, மூலக்கடை, முருக்கோடை, முத்தாலம் பாறை, நரியூத்து, பாலூத்து, பொன்னன் படுகை, சிங்கராஜபுரம், தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு உள்ளிட்ட ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளன.
இங்கு இலவம், முந்திரி மற்றும் காய்கறி பயிர்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் இக்கிராமங்கள் இருந்தாலும், மதுரை மாவட்டத்துக்குச் செல்வதற்கான தூரம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, மயிலாடும்பாறையிலிருந்து 21 கி.மீ.தொலைவில் மதுரை மாவட்டத்தில் உள்ள எம்.கல்லுப்பட்டி அமைந்துள்ளது.
இதற்கு, மல்லப்புரம் மலை வழியே 15 அடி அகல சாலையில் செல்ல வேண்டும். ஆனால், இச்சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், குறுகிய சாலை என்பதால் இரு சக்கர வாகனம், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன.
மற்ற வாகனங்கள் எல்லாம் கடமலைக்குண்டு, கண்டமனூர், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக சுமார் 70 கிமீ.சுற்றி மதுரைக்குச் செல்கின்றன. இதனால் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. மல்லப்புரம் மலைச் சாலையைப் பொருத்தளவில், ஒரு பக்கம் பள்ளத்தாக்கும், மறுபக்கம் ராட்சத கற்பாறைகளுமாக உள்ளன. இதனால் பலரும் பகலில் மட்டுமே இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையை அகலப்படுத்துவதன் மூலம், இரு மாவட்டப் போக்குவரத்தும் எளிதாகும். பயண நேரமும் வெகுவாய் குறையும். இது குறித்து இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதனால் குறைந்த நேரத்தில் அண்டை மாவட்டத்துக்குச் செல்ல வசதி இருந்தும், சுற்றிச் செல்லும் நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுப் போக்குவரத்தையும் தொடங்க முடியாத நிலை உள்ளது.
இது குறித்து மந்திச் சுனையைச் சேர்ந்த முனியாண்டி என்ற விவசாயி கூறுகையில், ‘தேனியை விட மதுரை காய்கறி மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைக்கிறது. ஆனால், போக்குவரத்து வசதி இல்லாததால் இரு சக்கர வாகனம், ஆட்டோவில் குறைந்த அளவே விளைபொருட்களை கொண்டு செல்ல முடிகிறது.
மேலும், மருத்துவம், கல்வி என பலரும் மதுரை மாவட்டத்துக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். ஆனால் பேருந்து போக்குவரத்து இல்லாததால், பல ஆண்டுகளாக பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறோம்’ என்றார்.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், ‘இது மலைப் பகுதி என்பதால் சாலையை விரிவுபடுத்தவோ, சீரமைக்கவோ வனத்துறையினர் எளிதில் அனுமதி அளிப்பதில்லை. அதனால் அவ்வப்போது சீரமைப்புப் பணிகளை மட்டுமே செய்து வருகிறோம்’ என்றனர்.
|
அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து | உயிரிழந்த 14 தொழிலாளர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு | கி.ஜெயகாந்தன் | ஓசூர் | 2023-10-08 17:22:00 |
ஓசூர்: கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 தொழிலாளர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அத்திப்பள்ளி போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர்.
தீபாவளி பட்டாசு விற்பனை: கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி முதல் தமிழக எல்லை ஜூஜூவாடி முதல் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளி சீசன் பண்டிகை நெறுங்கும்போது, இப்பகுதியில் உள்ள பட்டாசு கடை வைத்துள்ளவர்கள், சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆர்டர் செய்து லாரிகளில் கொண்டு வந்து பட்டாசுகளை அடுக்கி வைத்து விற்பனை செய்வது வழக்கம். இந்த சீசன் சமயங்களில் தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் பட்டாசு கடைகளில் வந்து பட்டாசுகளை பிரித்து அதனை பேக் செய்வதும்,விற்பனை செய்யும் பணியிலும் ஈடுப்படுவர்.
அதேபோல் இந்த ஆண்டு தீபாவாளியையொட்டி தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் ராமசாமி ரெட்டி என்பவர் பெயரில் அவரது மகன் நவீன் என்பவர் பட்டாசு கடை வைத்துள்ளார். அந்த பட்டாசு கடையில் தீபாவளி பண்டிகை சீசனுக்காக மேலும் ஒரு பட்டாசு கடையை திறந்து அதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 10 பேர், கள்ளகுறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த 10 பேர், வாணியம்பாடியை சேர்ந்த 2 பேர் என 22 பேர் பணி செய்து வந்தனர்.
பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து:இந்நிலையில் சிவகாசியில் இருந்து ஒரு கண்டெயினர் லாரி, 2மினி சரக்கு லாரி என 3 வாகனங்களில் பட்டாசுகளை சனிக்கிழமை கொண்டு வந்தனர். இதில் கண்டெயினர் லாரியில் இருந்த பட்டாசுகளை தொழிலாளர்கள் இறக்கி கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக பட்டாசு வெடித்து சிதறியதால் பட்டாசு கடை அருகே இருந்த கடைகளிலும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த அத்திப்பள்ளி மற்றும் அதன் சுற்றி உள்ள 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.
13 பேர் பலியான சோகம்: ஆனால் தீ கட்டுக்கொள் வராமல் எரிந்துகொண்டே இருந்ததால் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள்ள கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் நவீன் உள்ளிட்ட 7 பேர் காயத்துடன் தப்பினர். மேலும் தீவிபத்தில் சிக்கிக்கொண்ட தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டையை சேர்ந்த வேடப்பன்,25. ஆதிகேசன்,23. விஜயராகவஜன்,20. இளம்பருதி,19.ஆகாஷ்,23.கிரி,22.சச்சின்,22 ஆகிய 7 பேர், திருவண்ணாமலை மாவட்டம் நீபத்துறையை சேர்ந்த பிரகாஷ்,20. கள்ளகுறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர், வாணியம்பாடியை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 13 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
14-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: இறந்தவர்களின் உடல்கள் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பெற்று வந்த ஓசூரை சேர்ந்த அந்தோணி பால்ராஜ் (30) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி ஆட்சியர் சரயு, ஓசூர் உதவி ஆட்சியர் சரண்யா, எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் இறந்தவர்களின் உடல்களுக்கு மலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி தமிழக அரசு அறிவித்த ரூ, 3லட்சம் நிவாரணம் தொகை வழங்கப்பட்டது.
உடல்கள் ஒப்படைப்பு: இதன்பின்னர், இன்று பகல் 12 மணிக்கு இறந்தவர்களின் உடல்கள் தமிழக அரசின் ஆம்புலன்சில் ஏற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆம்புலன்சுகளில் உடல்களை அனுப்பும் போது நீபத்துறை சேர்ந்த இறந்தவரின் உறவினர்கள் தமிழர்கள் இறந்துள்ளதால், கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆறுதல் கூற யாரும் வரவில்லை. இதனை கண்டிக்கிறோம் எனக்கூறி ஆம்புலன்ஸ் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கர்நாடக மற்றும் தமிழக போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் உறவினர்கள் கண்ணீருடன் உடல்களை பெற்று கொண்டு சென்றனர்.
இருவர் கைது: இறந்தவர்கள் அனைவரும் படித்த பட்டாதாரிகள் தீபவாளி சீசனுக்காக வேலைக்காக வந்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமான நவீன் மற்றும் அவரது தந்தை ராமசாமி ரெட்டி ஆகிய இருவரையும் அத்திப்பள்ளி போலீஸார் கைது செய்தனர். இது குறித்து கர்நாடக போலீஸார் கூறும்போது,"விபத்துக்குளான பட்டாசு கடையின் பின்புறம் அனுமதியின்றி குடேன் வைத்துள்ளனர். மேலும் சிறிய அறைகளில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை வைத்து விற்பனை செய்ய வேண்டும் ஆனால் ரூ.5 கோடி மதிப்பிலான பட்டாசுகள் அடுக்கி வைத்துள்ளனர். இது மிகப்பெரிய தவறு" என்று கூறினர்.
|
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து | அனைத்து எம்எல்ஏக்களுடன் டெல்லியில் பிரதமரை சந்திப்பேன்: ரங்கசாமி உறுதி | அ.முன்னடியான் | புதுச்சேரி | 2023-10-08 17:14:00 |
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு அனைத்து கட்சி எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன். மாநில அந்தஸ்து கேட்பது நம்முடைய உரிமை என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடரும் என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இது புதுச்சேரி ஆளும் கட்சி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில அந்தஸக்காக அனைத்து கட்சி எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுத்த உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப் பேரவையில் தீர்மனம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தோம். மத்திய அரசு தற்போதைய நிலையே தொடரும் என கூறியுள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் மாறலாம். மாநில அந்தஸ்து சம்பந்தமாக அனைத்து கட்சி எம்எல்ஏக்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை கண்டிப்பாக சந்திப்பேன். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிளை சேர்த்துத்தான் புதுச்சேரி மாநில அந்தஸ்து கேட்போம். மீண்டும் மத்திய அரசை நேரடியாக சந்தித்து வலியுறுத்துவேன்.
மாநில அந்தஸ்து கேட்பது நம்முடைய உரிமை. அதை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிறோம். முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான் இருக்கும். கடந்த ஆட்சியில் எந்த அளவுக்கு பிரச்னையோடு இருந்தார்கள் என்று தெரியும். கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் மத்தியில் அவர்களது ஆட்சி இருந்தபோது கூட மாநில அந்தஸ்து வாங்கி இருக்கலாம். எனக்காக மட்டும் மாநில அந்தஸ்து கேட்கவில்லை. மாநில வளர்ச்சிக்காகவும், விரைவாக மக்களுக்கு பணியாற்றவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அதிகாரம் வேண்டும் என்றுதான் மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.
அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறேன். மாநில அந்தஸ்து கிடைத்தால் விரைவாக திட்டத்தை செயல்படுத்த கூடிய நிலை ஏற்படும். தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் இருக்கும். பத்திரப்பதிவு துறையில் யார் ஊழல் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை ஒவ்வொரு பகுதியாக கொடுத்து வருகிறோம். புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்கவும் வலியுறுத்துவோம். எங்களது கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுத்திக் கொண்டே இருப்போம்.
சிறப்பு நிதியும் மத்திய அரசிடமிருந்து வரும். புதிதாக சட்டப்பேரவை கட்டவும் நிதி கேட்டுள்ளோம். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக நாங்கள் அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம். பிள்ளைகளுக்கு ஒரு மாதத்தில் மடிக்கணினி கொடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தருமாறு மத்திய அரசிடம் கேட்போம். இவ்வாறு அவர் கூறினார்.
|
சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாடு: முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-08 16:13:00 |
சென்னை: இண்டியா கூட்டணி சார்பில் மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் ஆகியோர் இன்று (அக்.8) சந்தித்தனர்.
மகளிர் உரிமைத் தொகை வழங்கி மகளிரின் ஊதியமில்லா உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் நடவடிக்கைக்கும், விடுபட்டு போனவர்களுக்கு மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பளித்தமைக்கும் முதல்வருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இண்டியா கூட்டணி சார்பில் அகில இந்திய அளவில் 5 முக்கிய நகரங்களில் மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி பெருந்திரள் மாநாடுகள் நடத்திட சிபிஐ (எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். அந்த அடிப்படையில் சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை இண்டியா கூட்டணி சார்பில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும்,
> வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீதான வன்முறைம வழக்கில் 31 ஆண்டுகளாக நடந்து வரும் நீண்ட, நெடிய சட்டப்போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை அமல்படுத்துவது, குறிப்பாக வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு - அரசு வேலை, நிரந்தர வீடு, மற்றும் வாச்சாத்தி கிராமத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை உள்ளிட்டவற்றை அரசு தரப்பில் நிறைவேற்றுவது,
> ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக கடுமையான தொழில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்கு மின்சார வாரியத்தின் நிலை கட்டண உயர்வு மற்றும் பீக் ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறுவது,
> நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 36 முஸ்லீம் கைதிகளை விடுதலை செய்வது,
> அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கிடுவது,
> பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, சரண்விடுப்பு வழங்குவது; சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் - ஓய்வூதியம் வழங்குவது; தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது; அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது,
> இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, காலை சிற்றுண்டித் திட்டம் உள்ளிட்டு அரசின் நலத் திட்டங்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்குவது,
> அரசாணை எண் 354 படி மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது,
> மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டு 5 மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகையினை வழங்குவது, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, கேங் மேன் பணியாளர்களை நியமிப்பது,
> திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் தாக்குதலுக்கு ஆளான மாணவர், மற்றும் அவரது தங்கையின் பள்ளி படிப்பை தொடரவும், அக்குடும்பத்துக்கு அரசு வீடும், வேலையும் வழங்குவது, சந்திரா செல்விக்கு தமிழக அரசின் வீர தீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட மேற்கண்ட கோரிக்கைகளை கவனமுடன் கேட்டறிந்த முதல்வர், அரசு இவைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்கள்.
இச்சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து | தலைவர்கள் இரங்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-08 15:05:00 |
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அவர்களுக்கான நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை, இந்த திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: "கடந்த சில நாட்களாக பட்டாசு குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டாசு தயாரிக்கும் இடங்கள், குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் முறையான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதோடு, இது போன்ற விபத்துகள் மேலும் ஏற்படா வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்", என்று அவர் கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: "எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருள்களை மிகுந்த கவனத்துடன், அரசின் விதிமுறைகளை முறையாக கையாள வேண்டும். சிறிய கவனக்குறைவும் விலை மதிக்கமுடியாத உயிர் போக நிறைய வாய்ப்புள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்ததை அரசு உடனடியாக வழங்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
|
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்கள்: இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-08 13:07:00 |
சென்னை: "107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்குப் பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள்.
107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தடகள சாம்பியன்கள், கூர்மிகு வில்வித்தையர்கள், சீற்றமிகு கபடி அணியினர், இறகுப்பந்து நட்சத்திரங்கள் என இந்தியாவின் பலதரப்பட்ட திறமையாளர்களும் பெரிதும் இத்தொடரில் மின்னியுள்ளனர்.
குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்குப் பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள்.
இத்தகைய சிறப்பான பங்களிப்புடன் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது முயற்சிகளும் சாதனைகளும் இங்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்திய அணி, வெகு சிறப்பு" என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஆசிய விளையாட்டு போட்டியின் 14-வது நாளான நேற்று பதக்க பட்டியலில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தில் தொர்ந்து நீடித்தது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் 100-க்கும்மேற்பட்ட பதக்கங்கங்களை இந்தியா வெல்வது இதுவே முதன்முறையாகும். இதற்குமுன்னர் கடந்த 2018-ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா அதிகபட்சமாக 70 பதக்கங்கள் வென்றிருந்தது.
|
அரியலூர் அருகே அரசுப் பேருந்து - லாரி மோதி விபத்து: 10 பேர் காயம் | பெ.பாரதி | அரியலூர் | 2023-10-08 12:55:00 |
அரியலூர்: அரியலூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
அரியலூரில் இருந்து சுந்தரேசபுரம், தா.பழூர் வழியாக கும்பகோணத்துக்குக்கு அரசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் இன்று (அக்.8) காலை சென்றது. இந்த பேருந்து சுந்தரேசபுரம் கிராம வளைவில் திரும்பியபோது, சிமென்ட் ஆலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி அங்கே இருந்த டிரான்ஸ்பாஃர்மரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அரியலூர் மாவட்டம் கூழாட்டு குப்பம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி(56), அரியலூர் மேலத்தெரு சுரேஷ் மனைவி பாக்கியா(23), மகன் தரணிதரன்(10 மாதம்), மங்கையர்கரசி(40), சூர்யா(40), ரெங்கசமுத்திரம் தனம்(55) உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காலையில் நடந்த இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து குறிதது விக்கிரமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
|
அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து | அரூர் அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சோகம் | எஸ்.செந்தில் | அரூர் | 2023-10-08 12:15:00 |
அரூர்: அத்திப்பள்ளி பட்டாசுகடை விபத்தில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகே உள்ள வேட கட்டமடுவு ஊராட்சி,டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 9 நபர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்தள்ள அத்திப்பள்ளியில் உள்ள தனியார் பட்டாசு கடைகள் வேலை செய்து வந்தனர். சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சிக்கி டி அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு நபர்கள் உயிரிழந்தனர். இரண்டு நபர்கள் காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் விவரம் வருமாறு வேடப்பன் (21 ) இவர் ஒருவர் மட்டுமே திருமணமானவர், ஆதிகேசவன்(18), சச்சின் என்கின்ற முனிவேல் ( 20), இளம்பருதி (19), விஜயராகவன் (19),ஆகாஷ் (18) கிரி (18). ஒரே கிராமத்தினைச் சேர்ந்த 7 பேர் விபத்தில் இறந்ததால் கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இவர்களுடன் வேலைக்கு சென்ற ,அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நீப்பத்துறை சேர்ந்த பிரகாஷ்(18) பலியாகியுள்ளார்.விபத்தில் உயிரிழந்த அனைவரும் கல்லுாரி மற்றும் பள்ளி பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பீமாராவ்(20), லோகேஷ்(21) சிறிய அளவில் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
|
பட்டாசு விற்பனை விதிகளை கடுமையாக்க நடவடிக்கை எடுத்திடுக: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-08 11:53:00 |
சென்னை: "அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளி என்ற இடத்தில் பட்டாசுக் கடையில் பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
|
இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-08 11:34:00 |
சென்னை: இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி அளித்துள்ளார்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று (சனிழ்க்கிழமை) காலை இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இதுவரை இரு தரப்பிலும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களின் தாக்குதலை நியாயப்படுத்தி உள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ், பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சூழ்ந்துள்ள போர் மேகத்தால் பல நாடுகளும் தத்தம் மக்களுக்கு பயண எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. மத்திய அரசும் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் அவசர தேவைக்கு 97235 256748 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம் என்றும் அறிவித்திருக்கிறது.
அமைச்சர் உறுதி: இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என இதுவரை அயலகத் தமிழர் நல வாரியத்தில் 18 பேர் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அதில் கோவையைச் சேர்ந்த 3 மாணவர்களும் உள்ளதாகவும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், 18 பேரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இருக்கும் தமிழர்கள் [email protected], என்ற [email protected] மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும், +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 போன்ற தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலும் இருந்தும் உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்தும் தமிழர்கள் மீட்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
|
திருப்பூர் ஆட்சியருக்கு வந்த புகார் - தீண்டாமை சுவர் இடித்து அகற்றம் | செய்திப்பிரிவு | திருப்பூர் | 2023-10-08 11:31:00 |
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டு ராயபுரம் பிரதான சாலை, சூசையாபுரம் ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் அருந்ததியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
அங்கிருந்து மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியிருக்கக்கூடிய பகுதிக்கு செல்ல இயலாதவாறு, சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தடுப்புச் சுவர் (தீண்டாமை சுவர்) அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் சூசையாபுரம் பகுதியில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள், ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாக புகார் எழுந்தது.
எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் சிலர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, தொடர்புடைய பகுதியில் மாநகராட்சி உதவி ஆணையர் வினோத், வடக்கு வட்டாட்சியர் மகேஸ்வரன் மற்றும் வருவாய் துறையினர் ஆவணங்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். அதனடிப்படையில், சுவர் எழுப்பப்பட்ட இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதையடுத்து, அந்த சுவர் இடித்து அகற்றப்பட்டது. இந்த சுவரை எழுப்பியது கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி என்பதால், அவரது ஆதரவாளர்கள் சுவரை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் சுவர் அகற்றப்பட்டது.
|
கோவையில் போக்குவரத்து காவல் நிலைய எண்ணிக்கையை உயர்த்த வலியுறுத்தல்... ஏன்? | டி.ஜி.ரகுபதி | கோவை | 2023-10-08 11:17:00 |
கோவை: கோவை மாநகரில் சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போக்குவரத்து காவல் நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவலர்கள் நகரின் முக்கிய இடங்களில் நேரடியாக வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். தவிர, முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் அமைத்தும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
மேலும், சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், போலீஸ்-இ-ஐ (காவலர் மின்னணுக் கண்) பிரத்யேக செயலியின் மூலமும் சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. அதே சமயம், சட்டம் ஒழுங்கு, விசாரணைப் பிரிவு காவல் நிலையங்களுக்கு இணையாக போக்குவரத்து காவல் நிலையங்கள் இல்லாதது,
தேவையான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாதது போன்ற காரணங்களால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் சிரமங்கள் ஏற்படுவதோடு, போக்குவரத்து விதிமீறல்களை காவல்துறையினரால் சமாளிக்க முடியாத சூழல் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறியதாவது: மாநகர காவல்துறையில் தலா 20 சட்டம் ஒழுங்கு மற்றும் விசாரணைப் பிரிவுகள் உள்ளன. ஆனால், சாலை போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கு, விசாரணைப் பிரிவுக்கு ஏற்ப போக்குவரத்து காவல் நிலையங்கள் இல்லை. சிங்காநல்லூர், காட்டூர், ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ், பீளமேடு உள்ளிட்ட 8 போக்குவரத்து காவல் நிலையங்களே உள்ளன.
இங்கு பணியாற்றும் போலீஸார் தான் 20 காவல் நிலையங்களையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர். சமீபத்தில் மாநகருடன் இணைக்கப் பட்ட வட வள்ளி, துடியலூர் காவல் எல்லைகளில் போக்குவரத்து விதிமீறல்களை ஆர்.எஸ்.புரம், சாயி பாபா காலனி காவலர்களே கண்காணித்து வருகின்றனர். மாநகரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து விட்டது.
தேவையான எண்ணிக்கையில் காவல் நிலையங்கள் இல்லாதது, காவலர்கள் இல்லாதது போன்ற காரணங்களால் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணி, வாகன தணிக்கை மேற்கொள்ளும் பணிகளில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதற்கேற்ப போக்குவரத்து காவல் நிலையங்களை அதிகப்படுத்துவது அவசியம், என்றனர்.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: மாநகரில் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய எண்ணிக்கைக்கு இணையாக போக்குவரத்து காவல்நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். கருத்துரு அனுப்புமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், மாநகரில் கிழக்கு, மேற்கு என 2 போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் உள்ளனர். இங்கு மேலும் இரண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கவும் அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆயுதப் படையில் இருந்த ஒரு கம்பெனி காவலர்கள் போக்கு வரத்துப் பிரிவில் பிரித்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், என்றார்.
|
ODI WC 2023 @ சென்னை | சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி சிறப்பு ரயில்; 12 மணி வரை மெட்ரோ சேவை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-08 08:50:00 |
சென்னை: சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இன்று (அக்.8) நடைபெற உள்ளது. இப்போட்டியை முன்னிட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்புரயில் இயக்கப்படுகிறது. அதன்படி வேளச்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையை இரவு 11.15 மணிக்கு அடையும்.
சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு வேளச்சேரியை நள்ளிரவு 12.05 மணிக்கு அடையும். இந்த போட்டிக்கு மட்டுமின்றி, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளின் போதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அக்.13, 18, 23, 27ஆகிய நாட்களிலும் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை இன்று (அக்.8) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழக கிரிக்கெட் சங்கம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தப் படி கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் கிடையாது: மேலும், ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி, மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி ரயில்கள் இயக்கப்படும்.
இதுபோல, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கி மலை மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இன்று (அக்.8) இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பச்சை வழித் தடத்தில் ( சென்ட்ரல் - பரங்கிமலை வழித் தடம் ) இருந்து நீல வழித் தடம் மாறுவதற்கான ரயில் சேவை இயக்கப்படாது. உலக கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள், இதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிடுமாறு அறி வுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
|
யூடியூபர் டிடிஎஃப்.வாசனின் வாகன ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுக்கு ரத்து: காஞ்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை | செய்திப்பிரிவு | காஞ்சிபுரம் | 2023-10-08 07:23:00 |
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சாகசம் செய்து வீடியோ வெளியிடுவதற்காக, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று விபத்தில் சிக்கிய யூடியூபர் வைகுந்தவாசன் (எ) டிடிஎஃப்.வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரது மகன் டிடிஎஃப்.வாசன். இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று சாகசத்தில் ஈடுபட்டு, அந்த வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றி பிரபலமடைந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகேஇருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வதற்காக அதிவேகமாக ஓட்டியபோது விபத்தில் சிக்கிய வாசன் மீது, காஞ்சிபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது செயல்பாடுகள் சாலைகளில் செல்லும் இதர வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், இளைய தலைமுறையினர் அவரது செயல்பாடுகளைப் பின்பற்றக் கூடாது என்பதற்காகவும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பான குறிப்பாணை வழங்கப்பட்டது.
2033 அக்டோபர் வரை...: ஆனால், உரிய பதில் அளிக்காததால் அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2033 அக்டோபர் 5-ம் தேதி வரை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலும், இதுபோல பிற வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் அச்சுறுத்தும் வகையிலும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக மோட்டார் சைக்கிள், கார் ஓட்டுபவர்களின் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நீதிபதி கடும் கண்டனம்: முன்னதாக, டிடிஎஃப்.வாசன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத்தள்ளுபடி செய்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், "மலிவான விளம்பரத்துக்காக இதுபோல செயல்படுவது கண்டனத்துக்குரியது. அவரது யூடியூப் சேனலை மூடிவிட்டு, அவரின் இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தினால்தான் என்ன?" என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
|
டெல்டாவில் அக்.11-ல் முழு அடைப்பு: திமுக விவசாய அணி, காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-08 07:17:00 |
தஞ்சாவூர்/சென்னை: காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தி வரும் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக, திமுக விவசாய அணி மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக விவசாய அணி மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏகேஎஸ்.விஜயன் தலைமை வகித்தார். திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுச் செயலாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் நா.பெரியசாமி, காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் தெய்வசிகாமணி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஏகேஎஸ்.விஜயன் கூறியதாவது: நடப்பாண்டு தமிழக அரசு சார்பில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதால், வழக்கத்தைவிட கூடுதல் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்றது.
ஆனால், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டியதண்ணீரை கர்நாடக அரசு கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன.
கர்நாடகா அணைகளில் தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமாகதண்ணீர் இருந்தாலும், தமிழகத்துக்கு நீரைத் திறக்க கர்நாடக அரசுமறுக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜக, கன்னட அமைப்புகள் இரு முறை முழு அடைப்பு போராட்டம் நடத்தின.
எனவே, டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரைப் பாதுகாக்க, சம்பா சாகுபடியைத் தொடங்க, காவிரியில் மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகள், இந்தப் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட், மதிமுக ஆதரவு: டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுககட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “காவிரியில் தமிழகத்துக்கு போதிய தண்ணீர் திறந்து விடாததால் கடைமடைப் பகுதி குறுவை பயிர்கள்கருகி, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். முழு அடைப்புப் போராட்டத்துக்கு முழு ஆதரவளிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்க நிர்வாகிகள், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவை சந்தித்தனர். தமிழக விவசாயிகளுக்காக நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
|