Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
திருப்பத்தூர் அருகே விஏஓ மீது தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டம் | செய்திப்பிரிவு | திருப்பத்தூர் | 2023-10-04 04:16:00 |
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கிராம நிர்வாக அலுவலரை வழிமறித்து 2 பேர் தாக்கினர்.
இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் அருகே அய்யாபட்டியைச் சேர்ந்தவர் பிச்சை முத்து (56). சிராவயல் குரூப் கிராம நிர்வாக அலுவலராக கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை திருப்பத்தூர் வந்து விட்டு சிராவயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சிராவயல் குப்பைமேடு பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரை வழிமறித்தனர். பின்னர் கட்டையால் அவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர். இது குறித்து நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் அருள் ராஜ் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பிக்கு புகார் அனுப்பினார்.
|
ராமேசுவரம் - அஜ்மீர் ரயில் பிரோஸ்புர் வரை நீட்டிப்பு | செய்திப்பிரிவு | மதுரை | 2023-10-04 04:14:00 |
மதுரை: ராமேசுவரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. தற்போது புதிய பாம்பன் பாலவேலைகள் நடப்பதால் இந்த ரயில் மானாமதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.
பயணிகளின் வசதிக்கென இந்த ரயில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பிரோஸ்புர் கன்டோன்மென்ட் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதன்படி, இந்த ரயில் மானாமதுரையில் இருந்து செவ்வாய்க் கிழமைகளில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு வியாழக் கிழமை இரவு 10.45 மணிக்கு அஜ்மீர் சென்று சேரும்.
பின்னர் அஜ்மீரில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக் கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பிரோஸ்புர் கன்டோன்மென்ட் சென்றடையும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 7 முதல் பிரோஸ்புர் கன்டோன்மென்ட் - மானாமதுரை வாராந்திர ரயில் (20973) பிரோஸ்புர் கன்டோன்மென்ட்டிலிருந்து சனிக்கிழமை அதிகாலை 5.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு அஜ்மீர் வந்து சேரும்.
அங்கிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை இரவு 8.15 மணிக்கு மானாமதுரை வந்தடையும். அஜ்மீர் - பிரோஸ்புர் கன்டோன்மென்ட் இடையே கிஷன்கர், ஜெய்ப்பூர், ரிங்காஸ், சிகார், ஸூரு, சதுல்புர், டாஹ்சில் பத்ரா, ஹனுமன்கர்,சங்கரியா, மார்வார், படிண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|
திண்டுக்கல் மாநகராட்சியில் மண்டலங்கள் பிரிப்பு: 4 உதவி ஆணையாளர்கள் பணியிடம் உருவாக்கம் | செய்திப்பிரிவு | திண்டுக்கல் | 2023-10-04 04:12:00 |
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மண்டலத்துக்கு ஒரு உதவி ஆணையாளர் என 4 உதவி ஆணையாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உடனடியாக 4 பொறுப்பு உதவி ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சி, மாநகராட்சியாக 9 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. திண்டுக்கல் நகராட்சியில் இருந்த 48 வார்டுகளுடன் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 10 கிராம ஊராட்சிகள் சேர்க்கப்பட்டு, மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை எல்லை விரிவாக்கம் நடைபெறவில்லை.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி என்று பெயரில் மட்டும் மாற்றம் கண்டு, நகராட்சியில் இருந்த 48 வார்டுகள், அதே அலுவலர்களை கொண்டு இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு புதிய பணியிடங்களை உருவாக்கி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு புதிதாக நிர்வாக அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டது.
ஒரு கண்காணிப்பாளர் அலுவலகம் இருந்த நிலையில் தற்போது 4 கண்காணிப்பாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, மாநகராட்சியில் பணி புரிந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாநகராட்சியை வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு என 4 மண்டலங்களாகப் பிரித்து அவற்றுக்கு உதவி ஆணையாளர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி மாநகராட்சி நிர்வாக அலுவலர் எஸ்.வில்லியம் சகாய ராஜ் வடக்கு மண்டல உதவி ஆணையாளராகவும், உதவி பொறியாளர் வி.சுவாமி நாதன் மேற்கு மண்டல உதவி ஆணையாளராகவும், உதவி பொறியாளர் ஜி.வள்ளி ராஜம் தெற்கு மண்டல உதவி ஆணையாளராகவும், உதவி செயற்பொறியாளர் கே.சரவணக்குமார் கிழக்கு மண்டல உதவி ஆணையாளராகவும் பொறுப்பு வகிக்க உள்ளனர்.
இந்நிலையில், நகரில் மண்டலம் வாரியாக அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் அல்லது தனியார் இடங்களை வாடகைக்கு எடுத்து அலுவலகம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்தந்த பகுதி மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மண்டல அலுவலகங்களை நாடலாம்.
இதுவரை மண்டலத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்களுக்கு என்ன பணி என்றே தெரியாமல் இருந்த நிலையில், தற்போது புதிய அலுவலகத்தில் தங்கள் பணிகளை தொடங்க உள்ளனர். பணி பரவலாக்கப்பட்டதன் மூலம் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் மக்களின் குறைகளை எளிதில் தீர்த்து திறம்படச் செயல்பட வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது.
|
போச்சம்பள்ளி கொத்தகோட்டை கிராமத்தில் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு | செய்திப்பிரிவு | கிருஷ்ணகிரி | 2023-10-04 04:08:00 |
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கெண்டி காம்பட்டி கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (30). இவர் மத்தூரில் உள்ள இனிப்பகத்தில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30-ம் தேதி மாலை 6.15 மணியளவில் அதே பகுதியில் உள்ள சமத்துவபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அவர் மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் கோவிந்த ராஜ் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். தொடர்ந்து, கோவிந்த ராஜின் இருதயம், சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல் ஓசூர் காவேரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், மற்றொன்று கோவை மருத்துவக் கல்லூரிக்கும் தானமாக அளிக்கப்பட்டன. நேற்று அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.
கொத்தகோட்டை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில், கோட்டாட்சியர் பாபு, வட்டாட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|
சிப்காட் தொழிற்சாலைகளின் குற்றச் செயல்களை தடுக்க முடிவதில்லை: திருப்பூர் எம்பி சுப்பராயன் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | ஈரோடு | 2023-10-04 04:06:00 |
ஈரோடு: மாசுகட்டுப் பாட்டு வாரியம் ஊழல்வயப்பட்டு இருப்பதால், சிப்காட் தொழிற்சாலைகளின் குற்றச்செயல்களை தடுக்க முடியவில்லை, என திருப்பூர் எம்பி கே.சுப்பராயன் குற்றம்சாட்டினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகள் மாசடைந்து வருகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைத்த ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 4 தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டார்.
இந்நிலையில் திருப்பூர் எம்பி கே.சுப்பராயன், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாலத்தொழுவு குளம் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயத்தை பாழடிப்பதாக தொழில் வளர்ச்சி அமைந்து விடக்கூடாது. விவசாயத்தை பாழடிக்கின்ற தொழில்களை கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.
அவ்வாறு அனுமதிப்பது கிராமப் பகுதிகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான குற்றச்செயலாகும். சிப்காட்டில் நான் ஆய்வு செய்தபோது ரசாயன கலப்புள்ள நீர் மண்ணில் ஊடுருவி இருப்பதையும், மழைநீர் வடிகால் முழுவதும் மாசுபடுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இது கடுமையான அத்துமீறலாகும். இப்பகுதியைச் சேர்ந்த 25 ஊராட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டு என்னிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், மாசு கட்டுப்பாட்டு வாரிய அமைச்சர், அதிகாரிகளிடம் நேரில் வழங்கி, இந்த ஆபத்து குறித்து தெரிவிக்கவுள்ளேன். ஒரு சொட்டு மாசடைந்த நீரும் நிலத்தில் விழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளைச் சாரும். ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கும்போதே, அதனால் மாசு ஏற்படுமா என்பதை அறிந்து அதன் பின் கொடுக்க வேண்டும். ஆனால் அதில் பல வீனங்கள் உள்ளன.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஊழல்வயப்பட்டு இருக்கிறது. அதனால், சிப்காட் தொழிற்சாலைகளின் குற்றச்செயல்களைத் தடுக்க முடியவில்லை. சிப்காட்டில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் மாசினை கட்டுப்படுத்தவில்லை என்பது யதார்த்தம். தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதைத் தடுக்க குறுப்பிட்டக் காலவரம்பிற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி கோவை, திருப்பூர், உதகையில் போராட்டம் | செய்திப்பிரிவு | உதகை | 2023-10-04 04:02:00 |
கோவை / திருப்பூர் / உதகை: மத்திய அமைச்சரை பதவிநீக்கம் செய்யக் கோரி கோவை, திருப்பூர், உதகையில் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் குமரன் நினைவகம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்றவர்கள் பேசும் போது, ‘‘விவசாயிகள் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகவும், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு எதிராகவும், உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூம்கேரியில் விவசாயிகள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் காரை ஏற்றி, 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளரை கொலை செய்தார்.
இதையடுத்து அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டார். இதுவரை, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்திய விவசாயிகளின் கருப்பு தினமாக இதை கருதுகிறோம். அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும். மத்திய அரசு விவசாயிகள் சட்ட திருத்த மசோதா மற்றும் தொழிலாளர் சட்ட திருத்த மசோதாக்களை கைவிட வேண்டும்’’ என்றனர்.
ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் பங்கேற்றன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சு.பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல உதகை ஏடிசி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு வட்ட செயலாளர் சி.வினோத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன் தொடங்கி வைத்தார். மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
|
மங்களூரு - தாம்பரம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் | செய்திப்பிரிவு | கோவை | 2023-10-04 04:00:00 |
கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம் - மங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06049), தாம்பரத்தில் இருந்து வரும் 6, 13, 20, 27-ம் தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
மேலும், மங்களூரு - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்:06050), மங்களூருவில் இருந்து வரும் 7, 14, 21, 28-ம் தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் ரயில்நிலையம் சென்றடையும்.
செல்லும் வழியில் இந்த ரயில்கள், காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலசேரி, வடகரா, கோழிக்கோடு, திரூர், சொர்ணூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
அடுத்த 8 மாதங்களுக்கு அதிக கவனம் தேவை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 21:58:00 |
சென்னை: "அடுத்து வரும் ஏழு, எட்டு மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம்" என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பின் 2 தரப்பினரையும் இணைத்து நடத்தப்படும் இம்மாநாட்டின் இறுதியில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாடு இன்றும், நாளையும் சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இன்று (அக்.3) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையும் சாதனையும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதுதான். அமைதியான மாநிலத்தில் தான் அனைத்து துறைகளும் வளரும். நான் அடிக்கடி வலியுறுத்துவது குற்றங்களைக் குறைத்துவிட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்பதாக தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக, எளியோர் பக்கமாகக் காவல்துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், வறியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நாடக்கூடிய அரசாகும். ஒரு சாமானியர் தன்னுடைய புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காவல் நிலையத்தை நாடுகின்றார் என்றால், அந்த நம்பிக்கையினைக் காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்.
ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களைக் கனிவுடன் நடத்துவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டவும் வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பாளர்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். இவர்களை மற்ற பணிகளுக்காகப் பயன்படுத்துவதாக எனக்குத் தெரிய வருகிறது. அது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பெறப்படும் அனைத்து புகார்களும் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அனைத்து காவல்துறை ஆணையர், மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் குறைகேட்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆணையிட்டேன். அன்றைய தினம் நீங்கள் மனுதாரர்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து அதிக மனுக்களோ அல்லது திரும்பத் திரும்ப ஒரே பொருள் குறித்து தொடர்ந்து மனுக்கள் வரும் நிலையில் அந்தக் காவல் நிலையங்களுக்கு நீங்களே நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டறிந்து அதனுடைய பிரச்சனையை புரிந்து, அதனை முழுமையாகத் தடுத்து, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சட்டம் – ஒழுங்கு மற்றும் சாதி உணர்வுகளைத் தூண்டக்கூடிய பிரச்சினைகளில் கவனமுடன், மாவட்ட நிர்வாகத்திற்குக் கீழான அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும். ஃபோக்சோ வழக்குகளில் தடய அறிவியல் துறையின் ஆய்வறிக்கை மிக முக்கிய ஆதாரம் என்பதால் அதனை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்து வரும் ஏழு, எட்டு மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் காவலர் முதல் காவல்துறை உயரதிகாரிகள் வரை மிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களின் நிகழ்வுகளையும் கண்காணித்து வரவேண்டும். அமைதி மற்றும் சட்டம், ஒழுங்கு நிலை நாட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
|
கோவையில் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு - நடந்தது என்ன? | டி.ஜி.ரகுபதி | கோவை | 2023-10-03 20:54:00 |
கோவை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேசினர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருந்தது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா குறித்தும் பேசியதால், பாஜக - அதிமுக கூட்டணியில் மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில், பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக பல்வேறு வகைகளில் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கூட்டணி முறிவைத் தொடர்ந்து, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை புதுடெல்லியில் முகாமிட்ட கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்ததார். அப்போது, அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர்கள் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சருடன் சந்திப்பு: இச்சூழலில், கோவை கொடிசியா அரங்கில் இன்று (அக்.3) நடந்த வங்கிக் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர் திடீரென சந்தித்துப் பேசினர். எம்.எல்.ஏக்கள் மூவரும் மத்திய அமைச்சரிடம் மனுவை வழங்கினர். பாஜக - அதிமுக கூட்டணி முறிவு என்பது வெறும் நாடகம் என இண்டியா கூட்டணியில் உள்ள கட்சியினர் கூறி வரும் சூழலில், அதிமுக எம்.எல்.ஏக்கள், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளனர். இச்சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை, கோரிக்கை மனுவைத்தான் அளித்தோம் என அதிமுக எம்.எல்.ஏக்கள் தெரிவித்தாலும், தற்போதைய அரசியல் சூழலில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அரசியல் பேசவில்லை: இதுதொடர்பாக முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ கூறும்போது, ‘‘கடந்த மாதம் விவசாயிகளுடன் புதுடெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தோம். கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை உயர்த்த வேண்டும், விலையை கூட்டித்தர வேண்டும், வருடம் முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தோம்.
இந்நிலையில், கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர் வந்திருந்தார். இதில் பங்கேற்க முன்னோடி வங்கியில் இருந்து எங்களை அழைத்தனர். நாங்களும் கலந்து கொண்டோம். தற்போதும் மத்திய அமைச்சரை சந்தித்து மனுவை அளித்து கோரிக்கையை நிறைவேற்றித் தர வலியுறுத்தினோம். நானும், எம்.எல்.ஏக்கள் ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, தென்னிந்திய தென்னை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சக்திவேல் ஆகியோர் மத்திய அமைச்சரை சந்தித்தோம்.
இந்தச் சந்திப்பில் வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது. கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. பொதுச்செயலாளர் தான் எந்த முடிவும் எடுப்பார். அரசியல் ரீதியிலான சந்திப்புக்கும் இதற்கும் தொடர்பில்லை. பொள்ளாச்சி முழுமையாக தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இரண்டரை வருடங்களாக விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு எதுவும் செய்வதில்லை. அரசியல்பேச கட்சியில் முக்கிய தலைவர்கள் உள்ளனர். நாங்கள் எங்கள் தொகுதி மக்களுக்காக மட்டுமே சந்தித்து பேசினோம். அவர் நிதியமைச்சர், நாங்கள் எம்.எல்.ஏ என்ற அடிப்படையிலேயே சந்தி்த்தோம்’’ என்றார்.
|
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 3 கர்ப்பிணிகள் மரணம்: நீதி விசாரணைக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை | சுப.ஜனநாயகச் செல்வம் | மதுரை | 2023-10-03 20:50:00 |
மதுரை: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 3 கர்ப்பிணிகள் மரணத்தில் தமிழக அரசு நீதி விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செப்டம்பர் முதல் வாரத்தில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர். இதற்கிடையில் செப்.29-ம் தேதி மேலும் ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 70-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நிகழ்வதும், தரமான பிரசவ சிகிச்சை அளிக்கப்படும் என்பது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தற்போது நிகழ்ந்துள்ள கர்ப்பிணிகள் மரண சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நிகழ்ந்துள்ள உயிரிழப்புக்களால் அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கையை குறைக்கும்.
எனவே, கர்ப்பிணி பெண்கள் மரணம் குறித்த சம்பவங்களில் முறையான நீதி விசாரணை செய்யவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாத வண்ணம் தகுந்த மருத்துவ பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் தொகை வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
|
கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தினரின் அலுவலக சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம் | சுப. ஜனநாயகசெல்வம் | மதுரை | 2023-10-03 19:16:00 |
மதுரை: கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தினர் அலுவலக சாவிகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை பழங்காநத்தத்தில் இன்று தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு வங்கிகளை பயனற்ற திட்டங்களுக்கு நிதியை முதலீடு செய்யுமாறு கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு அலுவலக சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு அச்சங்கத்தின் கவுரவ செயலாளர் ஆசிரியத்தேவன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.ராஜா முன்னிலை வகித்தார். இதில், மாவட்டப் பொருளாளர் பாரூக்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், மாவட்டச் செயலாளர் கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகையில், “தமிழகத்தில் 4300 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், உரம் விநியோகம், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்துவருகிறோம். மேலும், வேளாண் சேவை மையம் என்ற திட்டத்தில் ஏற்கெனவே வாங்கப்பட்ட உழவு இயந்திரம், டிராக்டர், கதிரறுக்கும் இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் பயனற்று துருப்பிடித்து கிடக்கிறது.
இந்நிலையில், மீண்டும் கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள், லாரி, டிராக்டர், அறுவடை இயந்திரங்கள், டிரோன் என வாங்க ரூ.2 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இதனை கைவிடும் வரை தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். இதில் மதுரை மாவட்டத்திலுள்ள 170 சங்கங்களைச் சேர்ந்த 500 பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
|
“திராவிட மாடல் அரசு எப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்போகிறது?” - சீமான் கேள்வி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 19:12:00 |
சென்னை: 'எல்லார்க்கும் எல்லாம்' என்று திராவிடத்துக்கு புதிதாக ஒரு பொழிப்புரையை வழங்கி வரும் திராவிட ஆட்சியாளர்கள் எப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போகிறார்கள்? எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்வதல்ல சமூக நீதி; எல்லார்க்கும் எல்லாம் சரியான அளவில், சமமான அளவில் கிடைக்கச் செய்வதே உண்மையான சமூக நீதி என்பதை எப்போது உணரப்போகிறது 'திராவிட மாடல்' திமுக அரசு?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதி மண்ணில் குடிவாரி கணக்கெடுப்பு எப்போது? நாட்டிலேயே முதன் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பினை வெற்றிகரமாக நடத்தி முடித்து அதனை அனைத்து மக்களும் அறியும் வகையில் பொதுவெளியில் வெளியிட்டுள்ள பிஹார் மாநில முதல்வர் உண்மையான சமூக நீதிக் காவலர் நிதீஷ் குமாருக்கு அன்பு நிறைந்த பாராட்டும், வாழ்த்துகளும்.
அனைத்து மக்களுக்கும் சரியான சமமான நீதியை வழங்குவதே உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். அதற்கு அடித்தளமாக விளங்கும் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதன் மூலம் இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றார். சமூக நீதிக்கான நெடும் பயணத்தில் நிதிஷ்குமார் நிலைநாட்டியுள்ள புதிய மைல்கல் என்றென்றும் அவரது புகழை அழியாதுப் போற்றும் வரலாற்று பெருஞ்சாதனையாகும்.
சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பிஹாரில் 63 % உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் வெறும் 27% இட ஒதுக்கீட்டையும், மாறாக வெறும் 15 % மட்டுமே உள்ள முன்னேறிய வகுப்பினர் 10% இட ஒதுக்கீட்டையும் பெற்று வரும் சமூக அநீதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
'எல்லார்க்கும் எல்லாம்' என்று திராவிடத்துக்கு புதிதாக ஒரு பொழிப்புரையை வழங்கி வரும் திராவிட ஆட்சியாளர்கள் எப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்போகிறார்கள்? எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச்செய்வதல்ல சமூகநீதி; எல்லார்க்கும் எல்லாம் சரியான அளவில், சமமான அளவில் கிடைக்கச்செய்வதே உண்மையான சமூகநீதி என்பதை எப்போது உணரப்போகிறது 'திராவிட மாடல்' திமுக அரசு?
சமுக நீதி மண் என்று சொல்லிக்கொள்ளாத பிஹார் மாநிலம் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடித்து உண்மையான சமூகநீதிக்கான முதல் அடியை எடுத்துவைத்து முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் சமூக நீதி மண், பகுத்தறிவு பூமி, பெரியார் மண், அண்ணா மண் என்றெல்லாம் தற்புகழ்பாடும் திராவிடத் திருவாளர்கள் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த எப்போது முன்வரப் போகிறார்கள்?" என்று சீமான் கூறியுள்ளார்.
|
தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி எப்போது? - வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயத்தில் விவசாயிகள் | இரா.கார்த்திகேயன் | திருப்பூர் | 2023-10-03 17:34:00 |
திருப்பூர்: தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கிராமப்புறங்களின் பெரும் வாழ்வாதாரமாக இருப்பவை கால்நடைவளர்ப்புதான். இதனை நம்பி பெருமளவில் குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் எருமை மற்றும் மாடுகளை தாக்கும் சப்பைவாய் எனப்படும் கோமாரி நோய்க்கு தமிழ்நாடு முழுவதும் செலுத்த தடுப்பூசி வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுதொடர்பாக ஊத்துக்குளியை சேர்ந்த கால்நடை விவசாயி சின்னசாமி கூறும்போது, “தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு இருமுறை செலுத்தப்படும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி, நடப்பு மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு நோய் தாக்க ஆரம்பித்துவிட்டது.
இனி அடுத்தடுத்த கால்நடைகள் மற்றும் சந்தைக்கு கொண்டுவரப்படும் மாடுகள் மூலமாக எளிதில் பரவும் சூழல் இருப்பதால், உடனடியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்க வேண்டும். இந்நோய் வந்தால், வாயில் இருந்து உமிழ்நீர் சுனைபோல வந்துகொண்டே இருக்கும். தீவனம் சாப்பிடாமல், எருமைகள் மற்றும் மாடுகள் எளிதில் சோர்வடைந்துவிடும். பால் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கும். இப்படி தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறோம்” என்றார்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தமற்றொரு கால்நடை விவசாயி அ.பாலதண்டபாணி கூறும்போது, "கால்நடைகளை எளிதில் தாக்குபவை சப்பைவாய் எனப்படும் கோமாரி நோய். நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்துக்கான தடுப்பூசி இன்னும் செலுத்தப்படவில்லை. கலப்பின பசுக்களுக்கு எளிதில் ஏற்படும் நோய் தாக்குதலை கால்நடை விவசாயிகள் சமாளிக்க வேண்டிய சூழல் பெரும் சவாலாக உள்ளது.
அக்டோபர் மாதம் பிறக்க உள்ள சூழலில், இன்னும் தடுப்பூசி செலுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் மாநில அளவில் இல்லாததால், தடுப்பூசிகள் எப்போது செலுத்தப்படும் என்பது தற்போது வரை விடை தெரியாத கேள்வியாக உள்ளது. கோமாரி நோய் எளிதில் ஒரு மாட்டில் இருந்து மற்றொரு மாட்டுக்கு பரவுவதுதான், கால்நடை விவசாயிகளின் பெரும் கவலை.
தடுப்பூசிகளை மாநில அரசுக்கு இன்னும் மத்திய அரசு தரவில்லை. ஏற்கெனவே, தென் மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் பருவம் தப்பியும், குறைந்த அளவே பெய்யும் எனவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கால்நடைகளை வைத்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் தஞ்சையில் இருந்துவைக்கோல் கொள்முதல் செய்து,விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டது. தற்போது,அதே நடைமுறையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை மண்டல இணைஇயக்குநர் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாகஉள்ளது.
பொறுப்பு அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால், விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கும் சூழல்உள்ளது. அந்த இடத்தை உடனடியாக பூர்த்தி செய்வதுடன், திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களிலுள்ள கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
|
“சீமான் கடைசியாக எப்போது காவிரியை பார்த்தார்?” - மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி | இ.மணிகண்டன் | சாத்தூர் | 2023-10-03 17:00:00 |
சாத்தூர்: “தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி இன்னும் முறியவில்லை. அண்ணாமலைக்காக கூட்டணி முறிந்ததாக அதிமுகவினர் வெளிவேஷம் போடுகிறார்கள்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். மேலும், சீமானுக்கும் சில கேள்விகளை அவர் எழுப்பினார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியில் அங்கன்வாடி மையத்தையும், குண்டாயிருப்பு கிராமத்திலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களை சந்தித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ''அரசு அலுவலகங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்காமல் அரசு நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தேசியக் கட்சி. சில மாநிலங்களில் சில கட்சிகள் ஓலமிடுவதைப் போல சீமான் ஓலமிடுகிறார். தேசிய கட்சிகளை முன்னுக்குப் பின் முரணாக பேசிவருது சீமானின் வேலையாக உள்ளது. இவர் பாஜகவின் மத அடிப்படையிலான கோட்பாடுகளை மறைமுகமாக அரசியலில் கொண்டுவருகிறார். தமிழக மக்கள் எப்போதுமே சீமான் போன்றவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. நதிநீர் ஆணையம் கூறும்போது ஒரு நாள் கூட நிறுத்தாமல் கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிடுகிறது. இதை சீமான் போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும். சென்னையிலிருந்து அரசியல் பேசாமல் காவிரியை சென்று பார்க்க வேண்டும்
சீமான் கடைசியாக எப்போது காவிரியைப் பார்த்தார்? காவிரி பிரச்சினையை அரசியலாக்குவது பாஜகதான். கர்நாடகத்தில் ஆளும் கட்சி காங்கிரஸ். அங்கு 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது. குடும்பத்தில் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக மொழி வெறியர்களைத் தூண்டிவிட்டு நாடகம் நடத்துகிறது.
இங்கிருந்து சீமான் போன்றோர் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று பேசுவது அபத்தமானது. எங்களைப் பொறுத்தவரை கர்நாடக பாஜகவினர் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். அதற்காக சீமான் குரல் கொடுப்பாரா?
தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி இன்னும் முறியவில்லை. அண்ணாமலைக்காக கூட்டணி முறிந்ததாக அதிமுகவினர் வெளிவேஷம் போடுகிறார்கள். மோடி பிரதமராக வரக்கூடாது, அதற்காக வாக்குக் கேட்கிறோம் எனக் கூற எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவினரும் தயராரா?” என மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி எழுப்பினார். அப்போது, விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் செல்வக்கனி, கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் காளியப்பன், ராஜ்மோகன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
|
100 நாள் வேலைத் திட்டம் | “தமிழகத்தில் 9 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை” - ஜோதிமணி எம்.பி காட்டம் | க.ராதாகிருஷ்ணன் | கரூர் | 2023-10-03 16:54:00 |
கரூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ''மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் 91 லட்சம் பேர் தொடர்ச்சியாக வேலை செய்து வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 60,000 பயனாளிகள் உள்ளனர். இதில் 25,000 பயனாளிகளை நேரில் சந்தித்துள்ளேன். இதனால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். இதில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கக்கோரி கடந்த செப்.13-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதினேன். இதுவரை பதிலில்லை.
நாடு முழுவதும் உள்ள வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு ஊதியமாக வழங்க மட்டும் ஆண்டுக்கு ரூ.2.10 லட்சம் கோடி செலவாகும். இதுவன்றி அப்பணிகளுக்கும் நிதி தேவை. ஆனால் ரூ.60,000 கோடி மட்டுமே இப்பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021-22ம் நிதியாண்டை விட 18 சதவீதம் குறைவு. மோடி ஆட்சியில் 23 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டனர். மிக வேதனையானது. மத்திய அரசு இதற்கு பதில் தரவேண்டும். உடனடியாக ஊதிய பாக்கியை வழங்கவேண்டும்.
காவிரி கோரிக்கையை கர்நாடகா அரசு ஏற்காதது அநீதியானது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரை எம்.பிக்கள் சந்தித்தோம் தமிழகத்துக்கு கர்நாடகா அரசு அநீதி இழைக்கிறது. காவிரியில் 12,000 கனஅடி நீர் திறக்கவேண்டும் என்ற நிலையில் 5,000 கன அடி திறக்கவேண்டும் என உத்தரவிடுவது தவறாகும். இது சலுகை அல்ல. உரிமை. தமிழகத்தின் காவிரி கடைமடை வரை விவசாயத்திற்கும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீருக்கும் ஆதாரமாக காவிரி உள்ளது. கர்நாடகாவில் 1 டிஎம்சி, 2 டிஎம்சி நீர் தேக்கக்கூடிய சிறு அணைகள் உள்ளன. இவற்றை மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டும். மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும்.
காவிரி விவகாரத்தில் பாஜக அரசியல் பிரச்சினையாக இல்லாமல் மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். தமிழகத்துக்கு எதிரான போக்கை கைவிடவேண்டும். கர்நாடகா அரசு இவ்விகாரத்தில் சட்டப்படி, நியாயப்பட்டி, அரசியல் சாசனப்படி செயல் படவேண்டும்.
டெல்லியில் ஊடகவியலாளர் வீட்டில் அத்துமீறி நுழைந்து லேப்டாப், மொபைல் போன்வற்றை உளவுப் பிரிவினர் கைப்பற்றியுளனர். இவ்விகாரத்தில் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அடையப்போகிறது. அதனையொட்டியே இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது'' என்றார் ஜோதிமணி. கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
|
விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் அனைத்து குவாரிகள், கிரசர்கள் வேலை நிறுத்தம் | இ.மணிகண்டன் | விருதுநகர் | 2023-10-03 16:42:00 |
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் 133 குவாரிகளும் நாளை (அக்.4) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் குவாரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி நடைசீட்டு வழங்கக் கோரி தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிசரர் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் விருதுநகரில் உள்ள மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் தங்க முனிய சாமியை இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, நடை அனுமதி சீட்டு வழங்க இன்னும் 5 நாள்கள் அவகாசம் தேவை எனக் கூறி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. அதைடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகள் மற்றும் கிரசர்கள் நாளை (4-ம் தேதி) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலர் நாராயண பெருமள்சாமி கூறும்போது, “கடந்த 2019-ல் கரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் குவாரிகளும் இயங்கவில்லை. குவாரிகளின் குத்தகை காலத்தை நீட்டிப்பு செய்யக் கோரி நாமக்கல்லைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்க புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, ஒன்றரை ஆண்டு காலம் குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டது. இதேபோன்று தமிழகம் முழுவதும் கரோனா காலத்தில் செயல்படாத குவாரிகளின் குத்தகை காலமும் நீட்டிக்கப்பட்டன. இதேபோல் விருதுநகர் மாவட்டத்திலும் 27 குவாரிகளுக்கு குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநர் தங்க முனியசாமி துறை ரீதியான தேர்வு எழுதாமல் முறைகேடாக பதவி உயர்வு பெற்று வந்துள்ளார். இதையறிந்த அப்போதைய ஆணையர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுக்க முற்பட்டார் என்ற காரணத்தால் அவர் வழங்கிய குவாரி குத்தகை கால நீட்டிப்பை நிறுத்திவைத்து கேடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு விருதுநகர் மாவட்டத்தில் 27 குவாரிகளின் உரிமத்தை தடை செய்தார்.
மேலும், இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தவும், குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வந்தார். இது தொடர்பாக கடந்த 20-ம் தேதி அவரிடம் முறையிட்டபோது தடை செய்யப்பட்ட 27 குவரிகளுக்கும் 10 நாள்களில் நடை அனுமதி சீட்டு வழங்குவதாகத் தெரிவித்தார். அதன்படி, இன்று வந்து நடை சீட்டு கேட்டபோது, இன்னும் 5 நாள்கள் வேண்டும் என தேவையற்ற காரணங்களைக் கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தில் இவர் பணியேற்ற நாளிலிருந்து கண்மாய்கள், ஆறுகள், குளங்களில் அதிக கனிமத் திருட்டு நடைபெறுகிறது. அதை இவர் கண்டும் காணாமல் இருந்து வருகிறார். ஆனால், நியாயமாக குவாரிகள் செயல்பட நடவடிக்கை எடுக்காமல் வேண்டும் என்றே எங்களுக்கு கேடுசெய்து வருகிறார். அவரது தவறான செயல்களைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் 133 குவாரிகளும் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
|
“திமுக ஆட்சியில் தினசரி வாடிக்கையாகிவிட்ட கொலை” - கடலூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை சாடல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 16:05:00 |
சென்னை: "திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. சட்டம் - ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதல்வர் ஸ்டாலின். சட்டம் - ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது" என்று கடலூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற 17 வயது மாணவர், பேருந்து நிறுத்தத்தில் வைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலையாளிகளும், குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. சட்டம் - ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதல்வர் ஸ்டாலின். சட்டம் - ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் எதிர்க்கருத்து வைப்பவர்களைக் கைது செய்ய முனைப்பு காட்டும் முதல்வர், கொலை போன்ற கடும் குற்றச் சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார். முதல்வரின் கவனம் சட்டம் - ஒழுங்கை நோக்கித் திரும்ப, இன்னும் எத்தனை உயிர் பலிகள் வேண்டும்?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பு வெளியிட்ட தகவல்: ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (17). இவர் விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணி அளவில் இவர் பள்ளிக்கு செல்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் - விருத்தாசலம் சாலையில் உள்ள மேல் புளியங்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். இவருடன் பல மாணவர்களும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணிய மகன் ஆனந்த் (22) வந்தார். இவர் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு மின்சாரத் துறையில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஜீவாவிடம் சென்று தனியா பேச வேண்டும் என்று கூறி அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் பெலாந்துரை வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனிடையே, அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஜீவாவின் விழுந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள், ஜீவா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
|
நிர்மலா சீதாராமனை அரசியல் காரணங்களுக்காக சந்திக்கவில்லை: பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் | செய்திப்பிரிவு | கோவை | 2023-10-03 15:46:00 |
கோவை: "தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பாகவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தோம். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எல்லாம் பேசவில்லை. இந்தச் சந்திப்புக்கு வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது" என்று அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
கோவையில் மத்திய அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (அக்.3) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தென்னை விவசாயிகள் சார்பில் அவரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் கூறியது: "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்ற மாதம் ஏற்கெனவே டெல்லியில் சந்தித்து, தென்னை விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தோம். அந்த மனு குறித்து வலியுறுத்துவதற்காக நானும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, தென்னிந்திய தென்னை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சக்திவேல் ஆகியோர் இன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்தோம்.
தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக எங்களது மனுவை மீண்டும் கொடுத்தோம். இந்தச் சந்திப்புக்கு வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது. தென்னை நார் தொழிற்சாலைகள் நசிந்துபோய் கிடக்கின்றன. விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல், தேங்காய் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். இது தொடர்பாக மாநில அரசிடம் பலமுறை கடிதம் வழியாகவும், நேரடியாகவும் தெரிவித்தோம். ஆனால், மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பாகத்தான் மத்திய அமைச்சரை சந்தித்தோம். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எல்லாம் பேசவில்லை.
நாங்கள் வந்ததற்கு காரணம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, ஆனைமலை, உள்ளிட்ட எங்களுடைய பகுதி தென்னை விவசாயம் சார்ந்த பகுதி. எனவே, மத்திய அரசின் உதவியை கோரி மத்திய அமைச்சரை சந்தித்தோம். இங்கு நடந்த விழாவிலும் இதைத்தான் நான் பேசினேன். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார். அதற்காக நான் இங்கு வரவில்லை. ஒரு தொகுதி எம்எல்ஏ என்ற அடிப்படையில், மக்களின் பிரதான பிரச்சினை இது. எனவே, அவர்களுடைய கோரிக்கையை தெரிவிப்பதற்காக வந்தோம்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, கோவையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பின்பேரில், அதிமுக எம்எல்ஏக்கள் அங்கு சென்றிருந்தனர். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
|
வேலூர் மாநகராட்சியில் சின்னாபின்னமான 'ஸ்மார்ட் சிட்டி' சாலைகள்: பொதுமக்கள் அவதி | ந. சரவணன் | வேலூர் | 2023-10-03 15:39:00 |
வேலூர்: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் சாலை வசதிகள் சரியில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மண் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறிவிட்டன. இந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை உருவாகிவிட்டது.போதாக்குறைக்கு பாதாள சாக்கடை திட்டம் காரணமாக நன்றாக இருந்த சாலைகள் கூட தற்போது படுமோசமாகி விட்டதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
வேலூர் மாநகராட்சி செயல்பாடு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு நடத்திய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சாலைகள் பராமரிப்பு சரியில்லை, மாநகராட்சியின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என வெளிப்படையாக அதிகாரிகளை எச்சரித்தார். மேலும், சாலைகள் அமைப்பதற்கு முன்பாக மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அமைச்சர் கூறினால் என்ன? பொதுமக்கள் கூறினால் என்ன? அதை நாங்கள் ஏன்? பின்பற்ற வேண்டும் என்ற நிலையில் தான் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். சாலை சரியில்லை என பொதுமக்கள் கூறினால், சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தை காரணம் காட்டி எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவர்கள்தான் அனைத்துக்கும் பொறுப்பு என தங்கள் கடமையை தட்டிக்கழித்து விடுகின்றனர்.
மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை பணிகளை ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் எங்களுக்கு தலைமை செயலகம்வரை ஆதரவு உள்ளது. எங்கள் ஒப்பந்த காலம் முடியும்வரை எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கூறுவதால் மாநகராட்சி அதிகாரிகளே அவர்களை நிர்ப்பந்தம் செய்யமுடியாமல் தவிப்பதாக அதிகாரிகளே ஆதங்கப்பட்டு கூறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதனால், எந்த ஒரு வேலையும் மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளுக்கான விதிமுறைகள் காற்றில் பறக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஆகிவிட்டது என பெருமை அடித்துக்கொண்டாலும், அதற்கு ஏற்றார்போல் ஒன்றும் நடக்க வில்லை. அடிப்படை வசதிகள் கேள்விக் குறியாகவே உள்ளன. மாநகராட்சி 2-வது மண்டலத்துக்குட்பட்ட 21, 22, 23, 24, 25 ஆகிய 5 வார்டுகளுக் குட்பட்ட செங்கா நத்தம், தியாகராஜ புரம், பகுதி 5 போன்ற இடங் களில் உள்ள சாலைகளில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால், இதில் பெரும்பாலான இடங்களில் கால்வாய் வசதிகள் அமைக்கப்பட வில்லை.
கால்வாய் ஏற்படுத்தாமலேயே இங்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ஜல்லிக்கற்கள் மீது ‘வைப்ரேசன் ரோலர்' உபயோகிக்காமல் வெறுமனே போட்டு விட்டு செல்வதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த வார்டுகளின் பெரும்பகுதி சாலைகள் சேதமடைந்துள்ளன. ஆனால், எல்லா இடங்களையும் சரி செய்வதாக கூறி விட்டு ஓரிரு இடங்களில் மட்டுமே சாலை போடப்படுகிறது. பல இடங்களில் அரை அடி பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.
அதேபோல, பேஸ்-4 வனத்துறை அலுவலகம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு தனி தீவுப்போல் உள்ளது. இந்த பகுதியில் சிதிலமடைந்துள்ள அரசு குடியிருப்பு பகுதிகளில் கால்நடைகள் கட்டியிருப்பதால் மழைநீருடன், கால்நடை கழிவுகளும் கலந்து அப்பகுதியில் குட்டைப்போல் தேங்கியுள்ளது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை.
இதேபோல, முதலாவது மண்டலத்துக்குட்பட்ட 14-வது வார்டுக்கு உட்பட்ட காட்பாடி காந்திநகர் பகுதியில் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் விவேகானந்தர் தெரு மற்றும் விருதம்பட்டு 15-வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகர், நேதாஜி நகர், பூங்காவனம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெருக்களின் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. மழை பெய்யும்போதெல்லாம் அந்த சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
வடிகால்வாய் இல்லாததால் உடனடியாக மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த சாலைகளில் பயணிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்’’ என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது ‘மக்கள் சிரமத்தை தவிர்க்கவே சாலை போடும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. விரைவில், அனைத்து இடங்களிலும் அடிப்படை வசதிகள் விரைவில் ஏற்படுத்தி தரப்படும்’ என்றனர்.
|
மகளிர் உரிமைத் தொகை வழங்க வலியுறுத்தி கும்பகோணத்தில் ஏராளமான பெண்கள் முற்றுகை | சி.எஸ். ஆறுமுகம் | கும்பகோணம் | 2023-10-03 15:31:00 |
கும்பகோணம்: கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி ஏராளமான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட மகளிர்களுக்கு, ஆயிரம் ரூபாய் வழங்க வழங்கப்படும் என அறிவித்தது, அதன்படி கடந்த செப்டம்பர் 15-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், கும்பகோணம் வட்டத்தில் பல்வேறு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினாலும் பெரும்பாலோனாருக்கு பல்வேறு காரணங்களால் வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்துக்குரிய தொகை வராதவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள இ-சேவை மையத்தில் கோடாட்டாசியருக்கு மேல்முறையீடு செய்யலாம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, விடுப்பட்டவர்கள் அண்மைக் காலமாக இந்த இ-சேவை மையத்தில், மேல்முறையீடு செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் 100-க்கும் மேற்பட்ட மேல்முறையீடு செய்பவர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்ய வந்தவர்கள் திரண்டனர். ஆனால், அந்த இ-சேவை மையத்தில் இணையதளம் செயல்படாததால் ஆத்திரமடைந்த பெண்கள், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாகத் தகவலறிந்த காவல் ஆய்வாளர்கள் அழகேசன், நாகலட்சுமி மற்றும் போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர், அவர்கள் அனைவரும் இ-சேவை மையத்தில் திரண்டனர். இதனையறிந்த கோட்டாட்சியர் எஸ். பூர்ணிமா, வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், அங்குள்ள பெண்களிடம், பதிவு செய்து தொகை வராதவர்கள் மட்டும் மேல் முறையீடு செய்யலாம், இதேபோல் புதியதாகப் பதிவு செய்வதற்கான உத்தரவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை. மேலும், இணைய தளம் செயல்படாததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்ததின் பேரில் அனைவரும் அந்த இடத்திலிருந்து கலைந்துச் சென்றனர்.
இது தொடர்பாகப் பெண்கள் கூறியது: "கடந்த ஒரு வாரமாக புதியதாகப் பதிவு செய்ய வேண்டும் என வருவாய்த் துறை அலுவலகத்திற்கு வந்து சென்றோம். அங்குள்ள அலுவலர்கள், எங்களை செவ்வாய்க் கிழமை வாருங்கள் எனக் கூறினர். அதனால் எங்களைப் போன்ற 100-க்கும் மேற்பட்டோர் காலை 6 மணி முதல் காத்திருந்தோம். இதேபோல் பதிந்து தொகை வராதவர்களும், மேல்முறையீடு செய்ய வந்தவர்களும் குவிந்தனர்.
அதன் பிறகு 10-மணிக்கு வந்த இ-சேவை அலுவலர், இணையதளம் செயல்படவில்லை எனத் தகவல் ஒட்டியதால், உரிய பதில் கூறாமல் 4 மணி நேரம் காக்க வைத்து அலைக்கழிப்பதால், ஆத்திரமடைந்த நாங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, மாவட்ட நிர்வாகம், எங்களைப் போன்ற பெண்களை அலைக்கழிக்காமல், உரியத் தகவலை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன் கூறியது: "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட புதிய பதிவிற்கான எந்த உத்தரவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை. பதிந்து விட்டு, தொகை வராதவர்கள் மட்டும் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் நேற்று இங்குள்ள இ - சேவை மையத்தில் இணைய தள சேலை செயல்படாததால், இது போன்ற நிலை ஏற்பட்டது. எனவே, பெண்கள், தங்களது வீட்டின் அருகிலுள்ள இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்யலாம். அந்த இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்ய மறுத்தால், அது தொடர்பாகப் புகார் கொடுத்தால், அந்த இ-சேவை மையத்தின் உரிமம் ரத்துச் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
|
பெயர் பலகைகள், மின் பெட்டிகளில் ஒட்டப்படும் போஸ்டர்கள்: சென்னையில் பொலிவிழக்கும் பொது சொத்துகள் | துரை விஜயராஜ் | சென்னை | 2023-10-03 15:11:00 |
சென்னை: பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ‘போஸ்டர்’ அடித்து விளம்பரப்படுத்தி கொள்ளும் கலாச்சாரம் பெருகி விட்டது. சாலையில், நடந்து செல்லும்போது, திரும்பும் திசையெல்லாம், பிறந்தநாள் விழா, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், கண்ணீர் அஞ்சலி, அரசியல், சினிமா விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மையப்படுத்தி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
அந்த வகையில், சுவரொட்டிகள், பேனர்கள் மூலம் பொது இடங்கள், பொது சொத்துக்களை சிதைப்பதை பலர் வாடிக்கையாக கொண்டிருக்கிருக்கின்றனர். குறிப்பாக, சென்னையில் சுவர்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவது போல, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருக்கும் சாலை மற்றும் தெரு பெயர் பலகைகளில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இதனால், பெயர் பலகையில் உள்ள சாலை அல்லது தெருக்களின் பெயர்கள் முழுவதுமாக மறைக்கப்படுகிறது. சென்னைக்கு புதிதாக வருபவர்களுக்கு முகவரியை கண்டுப்பிடிப்பதில் இதனால் சிரமமும் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி சாலை பெயர் பலகையில் அதிகளவில் கண்ணீர் அஞ்சலி, நினைவு அஞ்சலி போஸ்டர்கள் ஓட்டப்படுகின்றன.
கூகுள் மேப் மூலம் பார்த்து வந்தாலும் பெயர் பலகையை பார்த்துதான் முகவரியை உறுதி செய்ய முடிகிறது. இதனால் மீண்டும் மீண்டும் அதே பகுதியில் சாலை அல்லது தெருக்கள்பெயரை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர். இதுமட்டுமில்லாம், சாலை ஓரமாக இருக்கும் மின்பெட்டிகள் சுவரொட்டிகளின் அடுத்த குறியாக உள்ளது. விளம்பரம் செய்வதற்காக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைபோல பயன்படுத்து கின்றனர்.
இதனால், மின் பெட்டியில் பழுது நீக்க வரும் மின் ஊழியர்கள், அந்த மின் பெட்டிகளின் கதவை திறப்பதற்கு முன்பாக, அதில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை முதலில் அகற்றுவதற்குள் போதும் போதுமென ஆகிவிடுகிறார்கள். இதுபோன்ற பொது சொத்துகள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதால், அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. சென்னையில் எந்த பகுதிக்கு போனாலும் இதேபோன்ற நிலையை பார்க்க முடிகிறது.
சென்னையை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கும் நகரின் அழகை மேம்படுத்துவதற்கும் இதுபோன்ற போஸ்டர் கலாச்சாரம் பெரும்இடையூறாக உள்ளன. இதற்கு ஒரு நிரந்தரதீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து மடிப்பாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வரதன் அனந்தப்பன் கூறியதாவது: அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்ற வரையறை உள்ளது. அதையும் மீறி பலர் சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். போஸ்டர்கள், விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதாக இருந்தால், தனியாருக்கு சொந்தமான இடங்களில், அவர்களின் அனுமதி பெற்று ஒட்டிக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பொது சொத்துக்களை சேதப்படுத்துவது நியாயமற்றது.
சுவரொட்டிகளை ஒட்டி அரசு சொத்துகளை சேதப்படுத்துவதால், அதனை சரி செய்வது, அரசுக்கு கூடுதல் பணிச்சுமையாகி விடுகிறது. ஒட்டப்படும் சுவரொட்டிகளிலே அவர்கள் தொடர்பான முழு விவரங்களும் அடங்கியிருக்கும். எனவே, மாநகராட்சியும், அரசும், அந்த விவரங்களை வைத்தே சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதை தீவிரமாக்கினாலே இதுபோன்ற செயல்களை குறைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு கூறினார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னை மாநகராட்சியில் தூய்மையை பராமரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். ஆனாலும், மாநகராட்சி கட்டிடங்கள், பாலங்கள், பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும், பொதுமக்கள் சாலை, தெருக்கள் பெயரை தெரிந்து கொள்ள, வார்டு எண், பகுதி எண், மண்டலம் எண், அஞ்சல் குறியீட்டுடன் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அதில் சுவரொட்டிகளை சிலர் ஒட்டுகின்றனர். தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959-ன் படி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலை பெயர் பலகையில், துண்டுபிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் பொதுஇடங்களில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது.அந்தவகையில், சாலை பெயர் பலகைகள் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடங்களில்சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று சுவரொட்டிகள் ஒட்டுபவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த மாநகராட்சி சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.
செல்போனில் கூகுள் மேப் மூலம் பார்த்து வந்தாலும் தெரு பெயர் பலகையை பார்த்தால்தான் தேடி வந்த முகவரியை உறுதி செய்ய முடியும்.
|
எம்.எஸ்.சுவாமிநாதன் படித்த கும்பகோணம் பள்ளியில் முன்னாள் மாணவர்களான எம்.பி, எம்எல்ஏ மலரஞ்சலி | சி.எஸ். ஆறுமுகம் | கும்பகோணம் | 2023-10-03 14:57:00 |
கும்பகோணம்: கும்பகோணத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் படித்த சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களான எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டவர் வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் (98). இவர் 1938-ம் ஆண்டு முதல் 1940-ம் ஆண்டு வரை 9-ம் மற்றும் 10-ம் வகுப்பைச் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியிலும், பின்னர் கல்லூரிப் படிப்பை அரசு ஆடவர் கல்லூரியில் படித்துள்ளார். இவர் வேளாண்மைத் துறையில் பல்வேறு சாதனைகள் செய்தவர். பட்டினி இல்லாத இந்தியா தான் என் கனவு என கூறிய இவர் கடந்த மாதம் 28-ம் தேதி காலமானார்.
இந்த நிலையில், அவர் படித்த பள்ளியான சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு இந்தப் பள்ளி முன்னாள் மாணவர்களான எம்.பி. செ.ராமலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ சாக்கோட்டை, க.அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்து, மலர் தூவி அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிராத்தனை மேற்கொண்டனர். இதில் பள்ளி தாளாளர் ஏ.அபூர்வசாமி, தலைமையாசிரியர் ஜி.ஆரோக்கிய ராஜ், உதவித் தலைமையாசிரியர் எச்.ஆண்ட்ரூஸ், பழைய மாணவர் சங்கத் தலைவர் பி.செந்தில், துணைத் தலைவர் யூ.ரோசா ரியோ மற்றும் அனைத்து மாணவர்கள் பங்கேற்றனர்.
|
சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது - டிடிவி தினகரன் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 14:17:00 |
சென்னை: "அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்தவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவினருக்கும் போதிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும் என்பது பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 57வது வாக்குறுதியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எடுத்திட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என குறிப்பிட்டிருக்கும் நிலையில் அது தொடர்பாக எவ்வித முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு உரிய கால அவகாசத்தை, அடுத்து வந்த திமுக அரசு நீட்டிக்காத காரணத்தினால் அந்த ஆணையமும் செயலிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்துவதற்காகவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்காகவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது.
எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது என்பதை உணர்ந்து, பிஹார் மாநிலத்தைப் போலவே தமிழகத்திலும் போதுமான நிதியை ஒதுக்கி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என தமிழக அரசை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
|
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்லும் - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கருத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 13:54:00 |
சென்னை: "சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்தியாவில் உள்ள மக்களை சாதி ரீதியாக பார்த்துதான், அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறுவது, இந்தியாவை அரசியல்வாதிகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே கருத வேண்டியுள்ளது" என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் முடிந்து 77வது ஆண்டில் இருந்து வருகிறோம். இன்னும் இந்தியாவில் உள்ள மக்களை சாதி ரீதியாக பார்த்துதான், அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறுவது, இந்தியாவை அரசியல்வாதிகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே கருத வேண்டியுள்ளது.
மக்களைத் தொடர்ந்து சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக பிரிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது கிடையாது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவமும், சம உரிமையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சியில் இருந்து மத்திய அரசு வரைக்கும் உண்டு. எனவே, மக்களுக்கானத் தேவைகளை உள்ளாட்சி அமைப்புகளும், மத்திய மாநில அரசுகளும் செய்ய தவறிவிட்டு, சாதி ரீதியாக கணக்கெடுப்பதன் மூலம் என்ன சொல்ல வருகின்றனர்? இதன்மூலம் பொதுமக்களுக்கு என்ன சொல்ல வருகின்றனர்?
ஆட்சியாளர்கள், ஆட்சியதிகாரத்தில் இருந்துகொண்டு அவர்கள் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறிவிட்டு சாதிவாரி கணக்கை வெளியிடுவதன் மூலம் யாருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்தியாவை துண்டாடக்கூடியது. மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பிளவு எண்ணங்களை உருவாக்கக்கூடியது. இது ஒரு தவறான நடைமுறை" என்றார்.
அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அகில இந்திய அளவில் பாஜக தலைமையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியில் இருந்தோம்.
இந்நிலையில், தமிழகத்தில் கூட்டணிக்குத் தலைமை தாங்கியவர்களே, கூட்டணியில் தாங்கள் இல்லை என்று சொல்லிவிட்டப்பிறகு, கூட்டணியை பழைய நிலையில் பார்க்கமுடியாது.புதிதாகத்தான் பார்க்க முடியும். அதிமுகவின் முடிவு அதுவாக இருந்தால், அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி இன்று இல்லை என்பது பொருளாகிறது" என்று அவர் கூறினார்.
|
கரூரில் கவனிப்பாரின்றி காந்தி சிலை: சமூக ஆர்வலர்கள் வேதனை | க.ராதாகிருஷ்ணன் | கரூர் | 2023-10-03 13:42:00 |
கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி அன்றும் கவனிப்பாரின்றி இருந்த காந்தி சிலையை கண்டு காந்தியவாதிகள், சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.
கரூர் லைட்ஹவுஸ் முனை ரவுண்டானாவில் பீடத்துடன் கூடிய காந்தியின் மார்பளவு சிலை நிறுவப்பட்டிருந்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இச்சிலை அகற்றப்பட்டு, அங்கு காந்தியின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து, மார்பளவு காந்தி சிலை கரூர் மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் பீடத்துடன் வைக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த 3 ஆண்டு களாக பராமரிப்பு இல்லாத நிலையில் பீடத்துடன் கூடிய காந்தி சிலை தனியாகவும், சிலையின் மேற்கூரை கூம்புப் பகுதி தனியாகவும், இரும்புக்கூண்டு தனியாகவும் கிடக்கின்றன.
காந்தி பிறந்த நாளையொட்டி, கரூர் லைட்ஹவுஸ் முனை, ஆசாத் பூங்கா, தாந்தோணிமலை ஆகிய இடங்களில் உள்ள காந்தி சிலைகளுக்கு காங்கிரஸார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆனால், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலையை காந்தி பிறந்த நாளன்று கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. சிலைக்கு மாலை அணிவிக்கக்கூட முடியாத நிலையில் காந்தி சிலை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் கவனிப்பாரின்றி இருப்பது குறித்து வேதனையும், வருத்தமும் தெரிவித்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், காந்தியவாதிகள், சமூக ஆர்வலர்கள், இங்குள்ள காந்தி சிலையை மீட்டு, சீரமைத்து அதை மாற்று இடத்தில் நிறுவ வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கரூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன்பாபுவிடம் கேட்டபோது, “லைட்ஹவுஸ் காந்தி சிலை அனுமதியின்றி, நோட்டீஸ் கூட வழங்கப்படாமல் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அகற்றப்பட்ட காந்தி சிலை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது” என்றார்.
|
அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த இடமளித்துவிடக் கூடாது: ஆட்சியர்கள், காவல் துறை மாநாட்டில் முதல்வர் பேச்சு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 13:04:00 |
சென்னை: "அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.3) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க உரையாக முதல்வர் பேசியது: "தமிழகத்தில் நமது அரசு பொறுப்பேற்று நடைபெறக்கூடிய இந்த இரண்டாவது மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநாட்டில், உங்கள் அனைவரையும் ஒருசேர சந்திப்பதில் மகிழ்ச்சி. முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 10 அன்று மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடந்தது.'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட போதும், மாவட்ட ஆட்சியர்களை, காவல்துறை கண்காணிப்பாளர்களை சந்தித்து இருக்கிறேன். தொடர்ச்சியாக உங்களை சந்தித்து வருகிறேன்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், நாம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம். இங்கே கூடியுள்ள நீங்கள் அனைவரும் அரசுக்கு உங்களது ஆலோசனைகளை, எந்தவித தயக்கமுமின்றி, மக்கள் நலன் ஒன்றையே மையமாகக் கொண்டு வழங்கிட வேண்டும். இன்று காலையில் நடைபெறும் இந்த அமர்வில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து நாம் விவாதிக்க இருக்கிறோம்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது முதலாவது இலக்கு. இரண்டாவது, பொது அமைதியைக் கெடுக்க நினைப்பவர்களை முழுமையாகத் தடுப்பது. அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். இது நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கிறது. இது சம்பந்தமான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும். சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசல். அதனைக் குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதில் மும்முரம் காட்ட வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அம்மக்கள் மாவட்ட அலுவலர்களுக்கு அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து அவர்களுக்கு உதவிட வேண்டும்.சமீப காலத்தில், தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மற்றும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோரின் கொலை வழக்குகளில் காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது பாராட்டத்தக்கது.
தற்போதைய காலகட்டத்தில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூகஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கண்காணித்து, பொய்ச் செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, அதற்குரிய உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.
முன்னுரையாக சில கருத்துகளை நான் கூறினேன். நான் குறிப்பிட்ட ஆலோசனைகள் பற்றியும், இதனைத் தாண்டியும் பல்வேறு நடப்புகள் குறித்தும், அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்று சேரவும் உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளையும் செயல்திட்டங்களையும் இங்கு வழங்குங்கள்.
கருத்துகளைச் சொல்ல இருப்பவர்கள் சுருக்கமாகவும், அதே நேரத்தில், தெளிவாகவும் சொல்ல வேண்டும். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டமைப்புக்கு வேண்டிய வசதிகள் குறித்து, இக்கூட்டம் முடிந்த பிறகு, துறைத் தலைவர்களிடம் நீங்கள் முறையிட்டு தீர்வு காணலாம். எனவே, மாவட்ட நிர்வாகம், சட்டம் -ஒழுங்கு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து மட்டும் இங்கே கருத்துகளைப் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.உங்களது கருத்துகளுக்கும் - ஆலோசனைகளுக்கும் மாநாட்டின் இறுதியில் நான் விளக்கங்களை அளிக்கிறேன்" என்று முதல்வர் பேசினார்.
இம்மாநாட்டில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசுத் துறைச் செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் - பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 12:24:00 |
சென்னை: "அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது" என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.
சென்னையில், கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்தச் சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லி சென்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்கள், அதிமுக உடனான கூட்டணி முறிவு மற்றும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், இன்று (அக்.3), அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெற இருந்த இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால், அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலேசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி மற்றும் கரு.நாகராஜன், வினோஜ் செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக பாஜக கூட்டணி நீடிக்குமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது" என்று கூறினார்.
|
சமூகநீதியை செயலில் காட்ட சிறந்த வழி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: அன்புமணி ராமதாஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 11:42:00 |
சென்னை: "தமிழகத்தை ஆளும் திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். அதற்கான சிறந்தவழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான். வரும் 9-ம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவையின் துணை நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது பிஹார் மாநில அரசு. இதன்மூலம் சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை பிஹார் அரசு வென்றெடுத்திருக்கிறது. இதற்குக் காரணமான பிஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கும் பாமக சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகநீதியைக் காக்கும் விஷயத்தில் தமிழகத்துக்கும், பிஹாருக்கும் இடையே எப்போதும் மறைமுகமான போட்டி நடந்து கொண்டே தான் இருக்கிறது. மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை, 1951-ம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் மூலம் சாத்தியமாக்கியது தமிழகம் என்றால், தேசிய அளவில் ஓபிசி இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கான மண்டல் ஆணையம் அமைக்கப்படுவதை 1978-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் பிஹார் மாநிலத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி சாத்தியமாக்கியது பிஹார் மாநிலம் தான். சமூகநீதியைக் காப்பதில் தமிழகம் தடுமாறிக் கொண்டிக்கும் நிலையில், சமூகநீதியைக் காப்பதில் பிஹார் மாநிலம் மீண்டும் சாதித்திருக்கிறது.
பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அம்மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%, பட்டியலினத்தவர் 19.7%, பழங்குடியினர் 1.70%, இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினர் 15.50% இருப்பதும், சாதிகளைப் பொருத்தவரை யாதவர் சமுதாயம் 14.26% மக்கள்தொகையுடன் தனிப்பெரும் சாதியாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க இருக்கும் பிஹார் மாநில அரசு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பது குறித்தும் தீர்மானித்து செயல்படுத்தவுள்ளது. பிஹார் அரசின் இந்த முயற்சியும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிஹாருக்கு முன்பே கர்நாடகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மாறாக, பிஹார் அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளையும் வெளியிட்டிருக்கிறது. அதன் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பல்வேறு மாயைகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டு வந்தது; மத்திய அரசும் அதே நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், மாநில அரசுக்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உண்டு என்பதை பிஹார் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன்மூலம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். இதை பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
உண்மையில் கர்நாடகமும், பிஹாரும் நடத்துவதற்கு முன்பாகவே தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான தேவையும், கோரிக்கைகளும் தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கின்றன. 44 ஆண்டுகளுக்கு முன்பு 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது, அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான். ஆனால், அப்போதும், அதற்குப் பிறகும் வந்த தமிழக அரசுகள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
வன்னியர் சங்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.வி.வெங்கடகிருட்டினன் தலைமையில் ஆணையம் அமைத்து ஆளுநர் அலெக்சாண்டர் ஆட்சியின் போது 1988-ம் ஆண்டு திசம்பர் 12-ம் நாள் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 1989-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்த ஆண்டின் பிப்ரவரி மாதமே அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. அதுவே சமூகநீதிக்கு செய்யப்பட்ட பெருந்துரோகம். அதை இப்போதாவது திமுக தலைமையிலான அரசு சரி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘69% இடஓதுக்கீடு செல்லும்; ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும்’’ என்று ஆணையிட்டது. அப்போதே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு இயக்கத் தலைவர்களுடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69% இடஓதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப் பட்டுள்ளது. 69% இட ஒதுக்கீட்டை காக்க வேண்டும் என்றால் அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.
தமிழகத்தை ஆளும் திமுக, சமூகநீதி தான் தனது தலையாயக் கொள்கை என்று கூறிவருகிறது. அதற்காக தேசிய அளவிலான அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறது. அத்தகைய அமைப்புக்கு சமூகநீதியை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டப்படியாக மட்டுமின்றி, தார்மீக ரீதியிலும் உண்டு. சமூகநீதி மீதான தனது பிடிப்பை மெய்ப்பிக்க வேண்டுமானால், தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டிய நெருக்கடி திமுக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றும் அல்ல. பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக ஒட்டுமொத்தமாக 45 நாட்கள் மட்டும் தான் செலவிடப் பட்டுள்ளன. அதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்புப் பணியில் 2.64 லட்சம் பிஹார் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
13 கோடி மக்கள்தொகை கொண்ட பிஹாரில் ரூ. 500 கோடிக்கும் குறைவான செலவில் 45 நாட்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிகிறது என்றால், 7.64 கோடி மட்டுமே மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் இன்னும் குறைவான செலவில், குறைவான நாட்களில் இன்னும் சிறப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என்பது உறுதி.
தமிழகத்தை ஆளும் திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். அதற்கான சிறந்தவழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான்.எனவே, இனியும் தயங்காமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை வரும் 9-ம் தேதி தொடங்க விருக்கும் சட்டப்பேரவையின் துணை நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
|
தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 07:02:00 |
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 3) ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமானமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: அக். 2-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம நாலுமுக்குவில் 11 செ.மீ., ஊத்து பகுதியில் 10 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், களியல், தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, திருநெல்வேலி மாவட்டம் காக்கச்சி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள்மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 4 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 06:45:00 |
சென்னை: இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மாதவரம் பால் பண்ணை- மாதவரம் நெடுஞ்சாலை வழித்தடத்தில் 1,380 மீட்டர் தொலைவுக்குசுரங்கப்பாதை அமைக்கப்பட்டுஉள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவதுமாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை(45.4 கி.மீ.) 3-வது வழித்தடம்,கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம்,மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை(44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், 43 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைத்து, 48 ரயில்நிலையங்கள் அமைக்கப்படஉள்ளன. அதிகபட்சமாக மாதவரம் – சிப்காட் வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைகிறது. மாதவரத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
3-வது வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் சுரங்கப்பாதை பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. கலங்கரை-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி கடந்தமாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 4 கி.மீ. வரை சுரங்கப்பாதை பணி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட திட்டத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, தற்போது 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரையில் 4,333 மீட்டர் அதாவது,4 கி.மீ. தொலைவைக் கடந்துள்ளது. ஒவ்வொரு சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரமும், தினமும்10 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதையை அமைக்கின்றன. அந்தவகையில், மாதவரம் பால்பண்ணை-மாதவரம் நெடுஞ்சாலை வழித்தடத்தில் அதிகபட்சமாக 1,380 மீட்டர் தொலைவுக்குசுரங்கப்பாதை அமைக்கப்பட்டுஉள்ளது.
மாதவரம் பால் பண்ணை-வேணுகோபால் நகர், பசுமை வழிச்சாலை –அடையாறு சந்திப்பு, கலங்கரை விளக்கம்–திருமயிலை, சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோரயிலுக்கான சுரங்கம் தோண்டும்பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்துக்கு மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போது வரை 17 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தத் தயாராக உள்ளன. சுரங்கம் தோண்டும் பணிகள் அனைத்துமுடிந்து, வரும் 2028-ம் ஆண்டில் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை உதைத்த ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் | செய்திப்பிரிவு | ஸ்ரீவில்லிபுத்தூர் | 2023-10-03 06:41:00 |
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ, பிடிஓ முன்னிலையில் கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காந்தி ஜெயந்தியையொட்டிவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் உள்ள கங்காகுளம் பாப்பாத்தி அம்மன் கோயில் வளாகத்தில் கிராம சபைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் (அதிமுக)தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், வேப்பங்குளம் விவசாயி அம்மையப்பன் பேசும்போது, "கிராமங்களில் சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டுமென உள்ளாட்சித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த முறை தண்ணீர் தினத்தில் கிராம சபைக் கூட்டம் இங்குதான் நடந்தது. தற்போதும் இதே கிராமத்தில்தான் நடக்கிறது. இதுகுறித்து முன்கூட்டியே வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆக. 17-ம் தேதி ஆட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கு பிள்ளையார்குளம் பகுதி மக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக நலன் கருதி ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’" என்றுகேள்வி எழுப்பினார்.
அப்போது ஊராட்சி செயலர்தங்கபாண்டியன், "அதுகுறித்து நீ ஏன் பேசுகிறாய்?" என்று கேட்டபடி,தரையில் அமர்ந்திருந்த அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார்.அவரது ஆதரவாளர்களும் அம்மையப்பனைத் தாக்கினர்.
மேலும், "நான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று, பணியில் தொடர்கிறேன். என்னைப் பற்றிஎப்படிப் பேசலாம்?" என்று கூறிய தங்கபாண்டியன், அம்மையப்பனை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அப்போது அம்மையப்பனுக்கு ஆதரவாக, அங்கிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோருடன் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பையும் எம்எல்ஏ மான்ராஜ், பிடிஓ மீனாட்சி ஆகியோர் சமாதானம் செய்தனர். மக்கள் எதிர்ப்பு காரணமாக கிராம சபைக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில்,ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, வன்னியம்பட்டிபோலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவுறுத்தலின் பேரில், தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டுள்ளார்.
|
பெண்களின் மீதான அடக்குமுறைக்கு எதிராக டெல்லியில் டிச.4-ல் அகில இந்திய பேரணி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 06:35:00 |
சென்னை: பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக டெல்லியில் டிச. 4-ம் தேதி அகில இந்திய பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இயக்கத்தின் மாநில தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வாச்சாத்தி வழக்கின் தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இதுபோன்ற மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வழக்குகளையும் விரைவில் விசாரித்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவுகிற சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் போராட முன்வரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பெண்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக டெல்லியில் வரும் டிச.4-ம் தேதி அகில இந்திய பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நிகழ்வில் இரா.முத்தரசன் பேசியதாவது: இந்தியா ஜனநாயக நாடு. அதை மாற்ற பாஜக முயற்சிக்கிறது. பாஜக என்பது தனித்த கட்சி அல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக. ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் வகையில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர திட்டமிடுகின்றனர். மீண்டும் பாஜக ஆட்சிக்குவந்தால், ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படும்.
மதச்சார்பின்மை கொள்கை பிளவுபடும். இதனால் நாடு பல துண்டுகளாக உடையும். சமூக வளர்ச்சி பின்னோக்கி செல்லும். எனவே மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சி, அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதே நமது இலக்காகும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடுஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன், அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கத்தின் தலைவர் புதுவை ராமமூர்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|
தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு கடின உழைப்பை செலுத்தினால் வெற்றி நிச்சயம்: விஞ்ஞானி வீரமுத்துவேல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 06:27:00 |
சென்னை: தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, கடின உழைப்பை செலுத்தினால், வெற்றி நம்மைவிட்டு எங்கும் போகாது என்று சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டுநூலக அரங்கில், தமிழக உயர்கல்வித் துறை சார்பில், ‘ஒளிரும்தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’என்ற தலைப்பில், தமிழகத்தைசேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில், பாராட்டு சான்றிதழ் பெற்ற விஞ்ஞானிகள் பேசியதாவது:
திருவனந்தபுரம் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநர் வி.நாராயணன்: கடந்த 1962-ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரோஇன்று ஆலமரமாக வளர்ந்து மக்களுக்கு பல்வேறு பயன்களை அளிக்கிறது. சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.
லேண்டரில் இருந்து ரோவரை வெளியேகொண்டு வந்து 100 மீட்டர் பயணிக்க செய்தோம். தரையிறங்கிய லேண்டரை கடந்த செப்.3-ம் தேதி 80 மீட்டர் தூரம் உயர்த்தி 40 மீட்டர் தூரம் நகர்த்தி மீண்டும்தரையிறக்கி சாதனை செய்தோம்.வரும், 2047-ல் 100-வது சுதந்திர தினம் கொண்டாடும்போது, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு சந்திரயான்-3 பேருதவியாக இருக்கும்.
இஸ்ரோ கடந்த 60 ஆண்டுகளில் 3,528 சவுண்டிங் ராக்கெட்களை விண்ணில் ஏவியுள்ளது. இதுவரை 125 செயற்கைக் கோள்கள் உள்நாட்டிலேயே வடிவமைத்து விண்ணில் ஏவப்பட்டுள்ளன. 34 நாடுகளுக்காக 431 செயற்கைக் கோள்கள் நம் இந்திய ராக்கெட் மூலம்விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. செவ்வாய் கிரகத்துக்கு மார்ஸ் ஆர்பிட்டர் மூலம் 68 கோடிகி.மீ. சென்று முதல் முயற்சியிலேயே ஆய்வு செய்த முதல் நாடு இந்தியாதான். வேறு எந்த வல்லரசு நாடுகளும் இதை சாதிக்கவில்லை.
அதில் ஒரு கி.மீ.தூரம் பயணிக்க ஆன செலவு, ஒரு கி.மீ. ஆட்டோ செலவைவிட குறைவு.. வருங்காலத்தில் மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்குஅனுப்பி, அழைத்து வரும் திட்டங்கள் இருக்கின்றன. ராக்கெட்டின் அதிகபட்ச எடையான 9 ஆயிரம்கிலோவை, 19 ஆயிரம் கிலோவாகஉயர்த்தி தயாரிக்க உள்ளோம்.
சந்திரயான்-2 திட்ட இயக்குநர் மு.வனிதா: கடந்த 36 ஆண்டுகளாக இஸ்ரோவில் பணியாற்றி வருகிறேன். மாணவர்கள் தங்களுக்கு விருப்பம் இருக்கும் துறையை தேர்வு செய்து, அதில் நன்கு படித்துநல்ல இடத்துக்கு வரவேண்டும். அதற்கு, அரசு தரும் அனைத்து உதவிகளையும் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி: ஆதித்யா, சந்திரயான் ஆகிய திட்டங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிக்கு பெரிய சாட்சி. ஆதித்யா-எல்1 திட்டஇயக்குநராக பணியாற்ற எனக்குவாய்ப்பு கிடைத்தது பெருமையானது. ஆதித்யா-எல்1 தற்போது எல்1மையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. முயற்சி திருவினையாக்கும் என்பதை மனதில் கொண்டு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்: நான் படித்தது அரசுப் பள்ளிதான். எந்த பள்ளியில்படிக்கிறோம் என்பதைவிட, புரிந்துபடிப்பது முக்கியம். படிக்கும்போதேசின்ன சின்ன புராஜெக்ட்களை செய்து பாருங்கள். செய்முறைஅறிவை வளர்த்துக்கொள்வதுடன், புது, புது தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளுங்கள். சந்திரயான்-2 திட்டத்தில், தோல்வியை பார்த்து பயப்படக் கூடாது என்பதை நாங்கள் கற்றுக் கொண்டோம். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, கடின உழைப்பை செலுத்தினால், வெற்றி நம்மைவிட்டு எங்கும் போகாது.
சந்திரயான்-3 லேண்டரையும், ரோவரையும் நிலவில் தரையிறக்குவது என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்றினோம். இதற்கு நிறையசோதனைகளை செய்தோம். நிலவுபோன்ற சூழலை பூமியில் உருவாக்கி நிறைய சோதனைகளைசெய்தோம். அதுதான் வெற்றிக்குகாரணம். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் முயற்சி இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
எந்த வேலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். எந்த துறையில் இருந்தாலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
இந்த விழாவை நேரலையில் காண 58 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் லிங்க்அனுப்பப்பட்டிருந்தது. அதன்மூலம் ஏராளமான மாணவர்கள் நிகழ்ச்சியை நேரலையில் பார்த்தனர். அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இந்த நிகழ்ச்சி வரும் 6-ம் தேதி மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
|
வண்டலூர் பூங்காவில் வன உயிரின வார விழாவை ஒட்டி சிங்கம், மான் உலாவிடங்களுக்கு செல்லும் சேவை தொடக்கம்: அமைச்சர் ம.மதிவேந்தன் தொடங்கிவைத்தார் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 06:25:00 |
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று நடைபெற்ற வன உயிரின வார விழா தொடக்க விழாவில், பூங்காவின் சிங்கம் மற்றும் மான் உலாவிடங்களுக்கு பார்வையாளர்கள் செல்லும் சேவை தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று வன உயிரின வார விழா தொடக்கப்பட்டது. வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று விழாவைத் தொடங்கிவைத்தார். பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் உலாவிட பகுதிகளுக்குப் பார்வையாளர்கள் செல்வதற்கான ஏசி பேருந்து வசதி, கியூஆர் குறியீடு மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி ஆகியவற்றை தொடங்கிவைத்தார். பின்னர், பூங்காவின் வனவிலங்கு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்கைத் திறந்துவைத்தார்.
பின்னர், முதுமலை புலிகள் காப்பகத்துக்கான புதிய இணையதளத்தையும் அமைச்சர் திறந்துவைத்தார். இந்த இணையதளம், காப்பகங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதுடன், ஓய்வு இல்லங்கள் மற்றும் வனச்சுற்று போன்ற வசதிகளை ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் நினைவுப் பொருட்களை ஆன்லைனில் வாங்கும் வகையில் புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கிவைத்தார். விழாவில், ‘கழுவேலி மற்றும் உசுடு பறவைகள் சரணாலயங்கள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
வண்டலூர் பூங்காவில் சிங்கம் மற்றும் மான் உலாவிடம் 147 ஏக்கர் பரப்பளவில் புதர் காடுகளுடன் அமைந்துள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சிங்கம் மற்றும் மான் உலாவிடம் மூடப்பட்டது. இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த உலாவிடத்தில் 3 ஆண், 4 பெண் என 7 சிங்கங்கள் உள்ளன. பன்னர்கட்டா மற்றும் லக்னோ உயிரியல் பூங்காவிலிருந்து 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மான் உலாவிடப் பகுதியில் ஏராளமான கடமான், புள்ளி மான் மற்றும் கேளையாடு மான்கள் உள்ளன.
இவ்விழாவில் காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, வனத் துறை தலைவர் சுப்ரத் மஹாபத்ரா, தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி, உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குநர் ஏ.உதயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|
மதுரை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து கர்ப்பிணிகள் உயிரிழப்பு: மருத்துவர்கள்-மாநகராட்சி மோதலால் வெளியான அதிர்ச்சி தகவல் | செய்திப்பிரிவு | மதுரை | 2023-10-03 06:23:00 |
மதுரை: மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பிரசவத்துக்காக பரிந்துரைத்த கர்ப்பிணிகள், அரசு மருத்துவமனையில் அடிக்கடி உயிரிழப்பதாக சர்ச்சை எழுந்தது. மேலும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் முறையான சிகிச்சை வழங்காமல், அவசரகதியில் பரிந்துரைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத்துக்கு அனுப்பிய புகாரில், “இறந்த கர்ப்பிணிகளின் வழக்கு விவரக் குறிப்புகளில் (Case sheet) அரசு மருத்துவர்கள் அடித்தல், திருத்தல் செய்துள்ளனர். உயர் சிகிச்சைக்குப் பரிந்துரைத்த கர்ப்பிணிகளுக்கு, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால்தான் அடுத்தடுத்து உயிரிழக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
செப். 29-ல் மஸ்தான்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழக்கவே, மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு டெங்கு எனக் குறிப்பிட்டு, அதற்கான மருத்துவ அறிக்கையை தயார் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நகர்நல அலுவலர் வினோத் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டுக்கு சென்று, இறந்த கர்ப்பிணிக்கு அளித்த சிகிச்சை விவரங்களை விசாரித்தார். ரத்த மாதிரி முடிவில், அவருக்கு டெங்கு பாதிப்புக்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் அதிருப்தியடைந்த நகர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் முறையிட்டார். இதை ஓர் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவே, அவரது உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட கர்ப்பிணி மரணத்தை ஆட்சியர் சிறப்புத் தணிக்கை செய்தார். அப்போது, ஏற்கெனவே இரு கர்ப்பிணி மரணங்களிலும், வழக்கு விவரக் குறிப்பில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திருத்தம் செய்தது ஆட்சியருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து, ஆட்சியர் சங்கீதா, மருத்துவமனை டீன் ரத்தினவேலுவை அணுகி, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், விசாரணை மட்டும் நடத்திய டீன், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆட்சியர் சங்கீதா, சுகாதாரத் துறைச் செயலர் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றார்.
சுகாதாரத் துறைச் செயலர் அறிவுறுத்தலில், கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தாராம், சுகாதாரத் துறை அதிகாரிகள் நிர்மல்சன், பழனிக்குமார் நேற்று மதுரைக்கு வந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனை மகப்பேறுப் பிரிவு மருத்துவர்கள், ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி நகர் அலுவல அலுவலர் வினோத், டீன் ரத்தினவேலு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இன்று முதல் போராட்டம்: அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் கூறும்போது, “மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத், சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவரைப் பணிநீக்கம் செய்யவேண்டும். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, நோயாளிகள் பாதிக்காதவாறு இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’’ என்றார்.
|
தமிழகத்தில் ஓராண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் | செய்திப்பிரிவு | சேலம் | 2023-10-03 06:20:00 |
சேலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பியுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து கடலுக்கு நீர் சென்று கொண்டிருக்கிறது. எனவே, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வழியில்லை. அதேபோல, கோவையில் 168 எம்எல்டி குடிநீரைப் பெறும் வகையில் பில்லூர் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, கன்னியாகுமரி மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் பழுதுகளை அலுவலர்கள் உடனுக்குடன் சீரமைத்து வருகின்றனர்.
தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மட்டுமே மழை குறைவாக இருந்தது. பிற இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
காவிரி குடிநீர் பகுதிகளுக்கான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மேட்டூர் அணையில் தேவையான அளவு குடிநீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் மழை குறைந்த காரணத்தால் ஒரு நாள் மட்டும் வறண்ட நிலை ஏற்பட்டது. ஆனாலும், மறுநாளே மழை பெய்ததால், தாமிரபரணி மூலம்போதிய அளவு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் 15-ம் தேதி முதல் வட கிழக்குப் பருவமழை பெய்யும்என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர், டிசம்பரில் முழுமையாக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர். மழை பெய்யாமல் இருந்தாலும், இன்னும் ஓராண்டு காலத்துக்கு தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு எந்த இடத்திலும் இருக்காது.
தமிழக முதல்வர், நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோர், காவிரிநீரைப் பெறுவது தொடர்பாக முழு முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, குடிநீர் தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
|
சென்னை | மெட்ரோ ரயில்களில் செப்டம்பரில் 84 லட்சம் பேர் பயணம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 06:19:00 |
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயில்களில் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஜூலை மாதத்தில் 82 லட்சத்து 53 ஆயிரத்து 692 பயணிகளும், ஆகஸ்டில் 85 லட்சத்து 89 ஆயிரத்து 977 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தனர்.
செப்டம்பரில் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக, கடந்த 15-ம் தேதி ஒரே நாளில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 586 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 2-வது நாளாக ரயில்கள் ரத்து: சிரமத்துக்குள்ளான பயணிகள் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 06:15:00 |
சென்னை: சென்னை நகரத்தை புறநகர் பகுதிகளுடன் இணைக்கும் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் மின்சார ரயில் சேவையில், ஏதாவதுமாற்றம் இருந்தால், ரயில்வே நிர்வாகம் முன்னதாக அறிவிப்பு வெளியிடும். அதன் அடிப்படையில், பொதுமக்கள் மாற்று போக்குவரத்தை தேர்ந்தெடுப்பர்.
ஆனால், எந்தவித முன்அறிவிப்பின்றி, சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை 22 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். ரயில் சேவை ரத்து செய்யப்பட்டால், முன் அறிவிப்பு செய்யரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், இதே வழித்தடத்தில் நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை41 மின்சார ரயில்கள் 2-வது நாளாகநேற்றும் நேற்று ரத்து செய்யப்பட்டன. ரயில்வே தரப்பில் நேற்று முன்தினம் முன்அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும், தாம்பரம், மாம்பலம், கிண்டி, எழும்பூர் உள்பட பல்வேறு ரயில் நிலையங்களுக்கு பயணிகள்வந்து, திரும்பிச் சென்றனர். தொடர்ந்து, மெட்ரோ ரயில்,பேருந்து என மாற்று போக்குவரத்துக்காக, சில கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதுபோன்ற காலகட்டங்களில் ரயில் நிலையங்களில் இருந்து பேருந்து வசதி ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை-தாம்பரம் உள்பட முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்படும்போது, அதற்கு மாற்றாக பேருந்து சேவை அதிகரிக்கவும், ரயில்நிலையங்களில் இருந்து இயக்கவும் வேண்டும்.
இதன்மூலமாக, பயணிகள் விரைவாக செல்லமுடியும். காலவிரயம் தவிர்க்கப்படும். இதற்காக, போக்குவரத்து கழகத்துடன் ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல்பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு: பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டவட்டம் | செய்திப்பிரிவு | சேலம் | 2023-10-03 06:14:00 |
சேலம்: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியை விட்டுச் சென்றபோது, ரூ 2.23 லட்சம் கோடி கடன் இருந்தது. அதற்கு வட்டியாக ரூ.1 லட்சம் கோடி செலுத்தினோம். ஆனால், கரோனா, ஜிஎஸ்டி பாதிப்புகளுக்கு இடையில் அதிமுக ஆட்சியில் விட்டுச் சென்றது ரூ.81 ஆயிரம் கோடி கடன் மட்டும்தான். திமுக ஆட்சியில் எல்லாவற்றிலும் ஊழல் நிலவுகிறது. இதனால்தான், இந்த ஆட்சி எப்போது அகற்றப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் குறித்து, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. கூட்டணி முடிவு குறித்து பொதுச் செயலாளர் கருத்து சொல்லவில்லை என்று ஊடகங்கள் பேசுகின்றன. நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், இறுதி முடிவு. அனைவரின் சம்மதத்துடன் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தேசிய அளவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளிலும், அதை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் யார் என்று கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிரதமரை முன்னிறுத்தியா தேர்தலை சந்தித்தனர்? தமிழக நலன்தான் நமக்கு முக்கியம். மாநில நலனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம்.
தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதே எங்கள் பிரதான நோக்கம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதிமுக தேசியக் கட்சி அல்ல, மாநிலக் கட்சி. எனவே, தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம்.
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, அஸ்தம்பட்டி பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பழனிசாமி பேசியது: சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பொய் பேசுகிறார்.
திராவிட மாடல் என்று கூறிக் கொண்டு, மக்களை ஏமாற்றிவரும் திமுக அரசின் தவறுகளை, புள்ளி விவரத்துடன் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். திமுகவின் இரண்டரை ஆண்டுகால ஆட்சியில், சேலம் மாவட்டத்துக்கு ஒரு திட்டம்கூட தரவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டத்தைதான் திறந்து வைக்கின்றனர்
மேட்டூர் அணையில் தற்போது 36 அடி நீர்மட்டமே உள்ளது. இன்னும் 6 அடி குறைந்தால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். அடுத்து 7 மாதங்களுக்குப் பிறகுதான் மேட்டூர் அணைக்கு பருவமழையால் தண்ணீர் கிடைக்கும். தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்கள், மேட்டூர் அணை மற்றும் காவிரிநீரை குடிநீருக்காக நம்பியுள்ளன.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும். ஆனால்,தமிழக முதல்வர் எதைப் பற்றியும் கவலையின்றி இருக்கிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.அதிமுகவைப் பொறுத்தவரை மக்கள்தான் எஜமானர்கள். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
|
அரசு நிலங்களை மீட்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 06:13:00 |
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை மாவட்டத்தில் ரூ.230 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் படைத்த சிலர்அபகரித்து, அதில் கட்டிடம்எழுப்பியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல தமிழகம் முழுவதும் அரசியல் மற்றும் பணபலம் படைத்தவர்கள், அரசு நிலங்களை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து ஏராளமாக பணம் சம்பாதிப்பதையும், அரசு அதிகாரிகள் துணையோடு பட்டா மாற்றம் செய்வதையும் நீதிமன்றம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.
எனவே, கோவை நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதும், உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தமிழகம் முழுவதும் அபகரிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.
|
பள்ளிக் கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - உண்ணாவிரதம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 06:10:00 |
சென்னை: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், பள்ளிக் கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதை தொடர்ந்து, உண்ணாவிரதம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் (எஸ்எஸ்டிஏ) கடந்த செப்.28-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த உண்ணாவிரதம் 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. போராட்டம் நடைபெறும் இடத்தில் ஆசிரியர்கள் பந்தல்களை அமைத்து, இரவு பகலாக குழந்தைகளுடன் தங்கியுள்ளனர்.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதேவேளையில் 22 ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உண்ணாவிரதம் குறித்து ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இடையே இருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், 3-ம் கட்டமாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு விடுத்தார். இதில் எஸ்எஸ்டிஏ சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக கட்டாயம் முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும், கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தாக ஜெ.ராபர்ட் கூறினார். அதேசமயம், ‘ஏற்கெனவே பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தமுறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை. தமிழக அரசு சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவோம்,’ என்று ராபர்ட் தெரிவித்தார்.
தொடர்ந்து நேற்று இரவு ஆசிரியர்கள் அகிம்சை தீபம் ஏற்றி மகாத்மா காந்திக்கு மரியாதை செய்தனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கவுதமன் உள்ளிட்டோர் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
|
நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 4 பேர் மீது நடவடிக்கை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 06:05:00 |
சென்னை: நீதிமன்றத்துக்கு தவறான தகவல்அளித்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 4 பேர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் உரிய மதிப்பெண்கள் பெற்றும் தன்னை தேர்வு செய்யவில்லை எனக்கூறி திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மனுதாரருக்கு உரிய பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த அரசுப் பணியாளர் தேர்வாணைய இணைச் செயலாளர் பிரான்சிஸ் மரிய புவி, துணைச் செயலாளர் ஏ.வி.ஞானமூர்த்தி, சார்பு செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கரபாண்டியன் ஆகியோருக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் ஏற்பட்டகுளறுபடிகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மனுதாரருக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உரிய பணி வழங்குவது குறித்து பரிசீலி்க்கப்படும்” என்றார். அதையடுத்து நீதிபதிகள், இந்தவழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.
|
காந்தி ஜெயந்தி, தீபாவளியை முன்னிட்டு காதி தள்ளுபடி விற்பனையை ஆளுநர் தொடங்கி வைத்தார் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 06:03:00 |
சென்னை: காந்தி ஜெயந்தி, தீபாவளியை முன்னிட்டு, சென்னை காதி பவனில் தள்ளுபடி விற்பனையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து, ரூ.6 ஆயிரத்துக்கு பொருட்களை வாங்கினார்.
காந்தி ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விற்பனையை தொடங்கி வைத்தார். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டார்.
`காந்திய சிந்தனை' என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை ஆளுநர் வழங்கினார். பின்னர், எஸ்ஆர்எஸ் சர்வோதயா விடுதிமாணவிகளுக்கு இலவச ஆடைகளை வழங்கினார். திருவையாறு பகுதியை சேர்ந்த சுரேஷ் பிரகாஷ் என்பவர் முதல் நபராக தள்ளுபடி விலையில் ரூ.1.75 லட்சம் மதிப்பில் பொருட்களை வாங்கினார். ஆளுநரும், சோப் வகைகள் உட்பட ரூ.6 ஆயிரம் மதிப்பில் பொருட்களை வாங்கினார்.
ரூ.26 கோடி விற்பனை இலக்கு: தமிழக கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மாநில இயக்குநர் பி.என்.சுரேஷ், காதி கிராமோத்யோக் பவன் தலைவர் ச.சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காதி கிராமோத்யோக் பவன் செயலாளர் இளங்கோவன் கூறும்போது, “கடந்த 2021-22-ல் ரூ.19.09 கோடியாக இருந்த விற்பனை 2022-23-ல் ரூ.23.67 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ரூ.26 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
|
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்றும் நாளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 05:58:00 |
சென்னை: சென்னையில் இன்றும் நாளையும், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும்.
முதலில் தனித்தனியாகவும், அதன்பின் 2 தரப்பினரையும் இணைத்து நடத்தப்படும் இம்மாநாட்டின் இறுதியில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாடு இன்றும், நாளையும் சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை உள்ளிட்டவை குறித்து முதல்வர் விரிவான ஆய்வு மேற்கொள்கிறார்.
|
ஆளுநரின் செயலராக கிர்லோஷ்குமார் நியமனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 05:55:00 |
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலராக ஆர்.கிர்லோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட நிலையில், ஆளுநரின் செயலராக ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல் தொடர்ந்தார். இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக தலைமைசெயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பில்,” சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குநராக உள்ள ஆர்.கிர்லோஷ்குமார், ஆளுநரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநர் டி.ஜி.வினய், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
பயிர் இழப்பீட்டு அறிவிப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 05:51:00 |
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: கடந்த சம்பா தாளடி பருவத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அறுவடை நேரத்தில் பருவம் தவறி பொழிந்த மழையால் ஏக்கர் கணக்கில் நெற்கதிர்கள் மூழ்கின. பல பகுதிகளில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.5,400 மட்டும் அரசு நிவாரணமாக வழங்கியது.
ஒரு ஏக்கர் நெல் சாகுபடியின் மூலம் ரூ.40 ஆயிரம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நிலையில், மீதமுள்ள இழப்பீடு தொகை காப்பீடு திட்டத்தின் மூலம் பின்னால் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்.21-ம் தேதி, பயிர் இழப்புக்குள்ளான 7 லட்சம் ஏக்கருக்கு மட்டும் ரூ.560 கோடி காப்பீடு திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பருவத்துக்கான காப்பீடு திட்டத்தில் விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும், மத்திய அரசின் பங்காக ரூ.874 கோடியும், தமிழக அரசின் பங்காக ரூ.1,325 கோடியும் என கூடுதலாக ரூ.2,319 கோடி காப்பீடு நிறுவனங்கள் காப்பு தொகையாக பெற்றுள்ளன. அப்படியிருக்க விவசாயிகளுக்கு ரூ.560 கோடி மட்டுமே வழங்கப்படுமானால் மீதமுள்ள ரூ.1,739 கோடியை இந்த நிறுவனங்களே எடுத்துக் கொள்ளும். பெரும்பாலும் இப்படித்தான் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். விவசாயிகளின் பயிர்இழப்பு பாதுகாப்புக்காக அமல்படுத்திய காப்பீடு திட்டம் தற்போது காப்பீடு நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக மாறிவிட்டது.
எனவே தமிழக அரசு, சில மாநிலங்களைப் போல் மத்திய அரசின் பங்கு தொகையுடன் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். தற்போது அறிவித்துள்ள காப்பீடு திட்ட இழப்பீடு அறிவிப்பை மறுஆய்வு செய்திட வேண்டும். அதேபோல டெல்டா மாவட்டங்களில் மண் மற்றும் நீரை பொறுத்து குறையும் மகசூலுக்குரிய இழப்பீடையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
|
காவிரி விவகாரத்தை பிரச்சினையாக்கும் பாஜக முயற்சி வெற்றிபெறாது: கே.எஸ்.அழகிரி கருத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 05:48:00 |
சென்னை: காவிரி நீர் விவகாரத்தை பிரச்சினையாக்க பாஜக முயற்சிக்கிறது. அதன் முயற்சி பெற்றிபெறாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி பிரச்சினையில் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜக மட்டும் நாடகமாடி வருகிறது. நமக்கு எவ்வளவு காவிரி நீர் வரவேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமும், காவிரி ஆணையமும் தெளிவாக கூறியிருக்கிறது. அவை கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மற்றவர் கூறுவதை பற்றி நமக்கு கவலை இல்லை.
முதல்வர் ஸ்டாலின் ராஜதந்திரத்தோடு தெளிவாக காவிரி விவகாரத்தை கையாண்டு வருகிறார். முதலில் 15 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்னர் 5 ஆயிரம், இப்போது 4 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. முதல்வர் நடவடிக்கை எடுத்தால் தண்ணீர் கொண்டு வரலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். முதல்வர் நடவடிக்கையால்தான் 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.
ஆனால் கர்நாடக பாஜகவின் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் கலவரத்தை உருவாக்கினர். அதை அண்ணாமலை எதிர்க்கவில்லை. தண்ணீர் திறந்துவிடும் போதெல்லாம் பிரச்சினை செய்வது பாஜக தான். ஆனால் அந்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை. தமிழகத்துக்கு வேண்டிய நீரை தமிழக அரசு பெறும். கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அரசும் உரிய நீரை வழங்கும். இதை பிரச்சினையாக்க பாஜக முயற்சிக்கிறது. அவர்களின் முயற்சி வெற்றிபெறாது.
எல்லா இடங்களிலும் இனப் பிரச்சினையை எழுப்பி ரத்தம் சிந்த வைப்பதுதான் சீமானின் கொள்கை. அதை வன்மையாக கண்டிக்கிறோம்.
|
48-வது நினைவு நாள்: காமராஜர் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் அஞ்சலி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 05:45:00 |
சென்னை: காமராஜரின் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 48-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காமராஜரின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில்அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, மக்கள்தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழககாங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், சமத்துவ மக்கள்கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன், அமமுக சார்பில் ஜி.செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, விசிக சார்பில் இளஞ்சேகுவேரா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காமராஜரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், ‘விடுதலைஇந்தியாவில் தொடக்கக் கல்விக்கான மிக வலிமையான அடித்தளத்தை தமிழகத்தில் அமைத்த முன்னோடி முதல்வரும், மிகச் சிறந்த காந்திய பற்றாளருமான பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளில், விடுதலைப் போராட்ட வீரராகவும், அரசியல் தலைவருமாக அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘கல்வி, விவசாயம்,சமூக மேம்பாடு என அனைத்து துறைகளிலும் தொலைநோக்கு திட்டங்களை தீட்டி புதிய தமிழகத்தை உருவாக்கிய சிற்பி காமராஜர். அவர் கட்டிய அணைகள்தான் இன்றும் தமிழகத்தில் விவசாயத்துக்கு உயிர்நாடி. அவரதுபுகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.
‘தொண்டு என்பதற்காக ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய ஏழைபங்காளர் காமராஜரின் அர்ப்பணிப்பை என்றென்றும் நினைவு கூர்வோம்’ என முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செல்வமும், ‘எளிமையான குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பாலும், தன்னலமற்ற நாட்டுப்பற்றாலும் நாடு போற்றும் நல்ல தலைவராக விளங்கிய காமராஜர் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
|
மகாத்மா காந்தி 155-வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மரியாதை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 05:44:00 |
சென்னை: மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் விழா, ‘காந்தி ஜெயந்தி’ விழாவாக நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் காந்தியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் அமைச்சர்கள், துரை முருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, கிரிராஜன் எம்.பி., தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, செய்தி துறை செயலாளர் இரா.செல்வராஜ், இயக்குநர் த.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர்களின் கண்காட்சியை திறந்து வைத்தார். தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் காந்தியின் படத்துக்கு கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கட்சி தலைமையகமான பாலன் இல்லத்தில் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பாஜக சார்பில் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அடையாறு காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுகரசர், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தெற்கு ரயில்வே சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் தூய்மை பிரசாரம் விழா சென்னை சென்ட்ரலில் நடைபெற்றது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மேலும் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர், மற்றும் தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அரையாடை அணிந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராளி. வெறுப்புணர்வுக்கு எதிராக ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர். அவரது வாழ்வின் பொருளை உணர்த்தவே, இந்த நாட்டுக்கே ‘காந்தி தேசம்’ எனப் பெயரிட வேண்டும் எனத் தந்தை பெரியார் வலியுறுத்தினார். அவர் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது லட்சியப் பாதையில் வெறுப்புணர்வை ஒழித்து, எல்லார்க்கும் எல்லாம் என்ற இந்தியாவைக் கட்டமைப்போம்.
இதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மகாத்மா காந்தி பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
|
அனைத்து வசதிகளும் கொண்ட தன்னிறைவு கிராமங்களை உருவாக்க அரசு உழைக்கும்: கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 05:39:00 |
சென்னை: நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களும் வளர வேண்டும். தற்சார்புள்ள, தன்னிறைவு பெற்ற, எல்லா வசதிகளும் கொண்ட, சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்களை உருவாக்க அரசு எந்நாளும் உழைக்கும் என்று கிராமசபை கூட்டத்தில் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள 12,525 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், காணொலி மூலமாக பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான்.
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர்தான் ஜனநாயக தேர்தல் அமைப்பு முறை பிறந்த இடமாக உத்திரமேரூர் கல்வெட்டு கூறுகிறது. தேர்தலில் போட்டியிடும் அனைவரது பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதி குடத்தில் போட்டு குலுக்கி ஒரு ஓலையை எடுப்பார்கள். அதில் யாருடைய பெயர் இருக்கிறதோ, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இந்த ‘குடவோலை’ முறையில்தான் தமிழகத்தில் மக்களாட்சி அமைப்பு மலர்ந்தது. தமிழகத்தில் சோழர் காலம் முதலே கிராமசபை என்ற அமைப்பு இருந்து வருகிறது.
கிராமசபையில் மக்களே நேரடியாக விவாதித்து, தங்கள் தேவைகள், பயனாளிகளை தேர்வு செய்வதுடன், வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலும் பங்காற்றுகின்றனர். நாடாளுமன்றம், சட்டப்பேரவைபோல, கிராமசபையும் மக்கள் குரலை எதிரொலிக்கும் மன்றமாக உள்ளது.
கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை அங்கீகரித்தல், ஊராட்சிகளின் பணி முன்னேற்றத்தை கண்காணித்தல், வரவு செலவு ஆய்வு, பயனாளிகள் தேர்வு, திட்ட கண்காணிப்பு ஆகிய அதிகாரங்கள் கிராமசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சியில்தான் கிராமசபை கூட்டங்கள் முறையாக, தடங்கலின்றி நடத்தப்படுகின்றன.
கிராமசபைகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோர், குழந்தைகள் நலன் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். கல்விக்கான அரசின் முயற்சிகளில் கிராமசபைகள் முக்கிய பாலமாக இருக்க வேண்டும். காலை உணவு, எண்ணும் எழுத்தும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற திட்டங்களை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும். அதேநேரம், ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு தேவையானதை மட்டுமே கிராமசபையில் விவாதிக்க வேண்டும்.
கிராமசபையில் ஆர்வம் இல்லாத மக்களிடம், அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, அதில் பங்கேற்க செய்ய வேண்டும். மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். கிராமசபையில் அவர்களது கருத்துக்கு உரிய முக்கியத்துவமும் தரவேண்டும். தேர்வு செய்யப்படும் பணிகள் பொதுவானதாகவும், எல்லோருக்கும் பயன் தரும் வகையிலும் இருக்க வேண்டும். கிராமசபையில் அனைவரது கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.
நீர்ஆதாரங்களை வளப்படுத்துதல், நீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர்நிலை பாதுகாப்பு போன்ற ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம், முறையான திட, திரவக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள உறுதி எடுக்க வேண்டும். அதற்கேற்ப ஊராட்சி மன்ற தலைவர்கள் பணியாற்ற வேண்டும்.
மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் 1.06 கோடி பெண்கள் பயன்பெறுகின்றனர். விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கிராமப்புற பெண்கள்தான் அதிகம் பயனடைகின்றனர். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதி, மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு புத்துயிர் அளித்து விரிவுபடுத்தி வருகிறோம். இப்படி, கிராமங்கள், கிராம மக்களின் முன்னேற்றத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களும் வளர வேண்டும். பொருளாதாரம், தொழில் மட்டுமின்றி, சமுதாயமும் வளர்ச்சி பெற வேண்டும். அதுவே உண்மையான மாநில வளர்ச்சி. அதற்கு கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும். இதை மனதில் வைத்துதான் திட்டங்களை செயல்படுத்துகிறோம். தற்சார்புள்ள, தன்னிறைவு பெற்ற, எல்லா வசதிகளும் கொண்ட, சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்களை உருவாக்க அரசு எந்நாளும் உழைக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
|
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 04:47:00 |
சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவுப்படி 50 சதவீதத்துக்கும் அதிகமாக சிறுபான்மை மாணவர்களை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறியதாக, சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவு மற்றும் 1998-ம்ஆண்டின் அரசாணையை எதிர்த்தும், தங்களது கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து வழங்ககோரியும் அந்த கல்லூரி நிர்வாகம்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டத்தின்படி, இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அந்த ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இதில் மாநில அரசுக்கு அதிகாரமில்லை’’ என கூறி தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டுகொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என தீர்ப்பளித்த நீதிபதிகள், 50 சதவீத இடங்களுக்கும் மேலாக உள்ள எஞ்சிய இடங்களுக்கும் தகுதியின் அடிப்படையில் சிறுபான்மையின மாணவர்கள் போட்டியிடலாம் என்றும், அப்படி சேர்க்கை வழங்கும்பட்சத்தில் அது நிபந்தனையை மீறியதாக கருத முடியாது என்றும் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
|
ஆசியப் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 04:44:00 |
சென்னை: ஆசியப் போட்டியில் பதக்கம் வென்றுள்ள ப்ரித்விராஜ் தொண்டைமான், ராம்குமார், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் (ஆடவர் ட்ராப்) பிரிவில் தங்க பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ள நம் தமிழகத்தைச் சேர்ந்த ப்ரித்விராஜ் தொண்டைமானுக்கு எனது பாராட்டுகள். மேலும், ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன்,
ஸ்குவாஷ் விளையாட்டில் மகளிர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
தமிழைவிட சிறந்த இறை மொழி இந்த உலகில் இல்லை: உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பெருமிதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 04:41:00 |
சென்னை: சென்னையில் நடைபெற்ற 56-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி விழாவில் தமிழைவிட சிறந்த இறை மொழி இந்த உலகில் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
ராமலிங்கர் பணிமன்றம், ஏவிஎம்அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய 56-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க விழாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ராமலிங்கர் பணிமன்ற தலைவர் டாக்டர் ம.மாணிக்கம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் இயக்குநர் சிற்பி பாலசுப்பிரமணியம், திருப்பூர் கிருஷ்ணன், சிவசக்தி வடிவேல், பா.சற்குருநாத ஓதுவார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், ஓம்சக்தி இதழ் நடத்திய மாரியம்மன் மகாலிங்கம் நினைவு குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை ராமலிங்கர் பணிமன்ற தலைவர் ம.மாணிக்கம் முன்னிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கினார்.
விழாவில் நீதிபதி பேசியதாவது: வள்ளலார் சைவ நெறியை விட்டுவிட்டு தனியாக ஒரு நெறியை உருவாக்கவில்லை. சைவ நெறி குறிப்பிட்ட மனிதர்களுக்கானது அல்ல. உலக மாந்தர்கள் அனைவருக்கும் பொதுவானது. இறைவன் யார் என்ற கேள்வியில்தான் நமக்குள் சர்ச்சை பிறக்கிறதே தவிர, இறைவன் ஒருவன் உண்டு என்பதில் யாருக்கும் சர்ச்சை கிடையாது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருவள்ளுவரின் கொள்கையை, சிவ நெறியோடு இணைத்து வள்ளலார் பின்பற்றினார். வள்ளலாரின் கொள்கையைதான் மகாத்மா காந்தி பின்பற்றி, மக்களையும் அதனை பின்பற்ற அறிவுறுத்தினார். இவர்கள் மூன்று பேருக்கும் முக்கோண ஒற்றுமை உள்ளது.
வள்ளலார்-மகாத்மா காந்தி விழாவாக நடைபெறும் இந்த விழாவில், திருவள்ளுவருக்கும் விழா நடத்த வேண்டும். தமிழ் என்பது இறை மொழி. சைவ திருமுறைகள், திருவருட்பா, ராமாயணம், திவ்ய பிரபந்தம், கந்த புராணம், சிவ புராணம் உள்பட சுமார் 52 ஆயிரம் பாடல்கள் இறை இலக்கியம் என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது.
தமிழைவிட ஒரு சிறந்த இறைமொழி இந்த உலகில் இல்லை. அப்படிப்பட்ட தமிழ் மொழியை, இறைமொழியை பாதுகாக்க வள்ளலாரின் திருவருட்பா பயன்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
2-வது நாளாக நேற்று நடைபெற்ற விழாவில், ‘மகாத்மா காந்தி திருநாள் - நூற்றாண்டு நாயகர் அருட்செல்வர்’ தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள், மரபின் மைந்தன்முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலையில், ‘அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது’ வழங்கும் விழாவும், ‘ஹரிஜன்’ தொகுப்பு நூல்வெளியிடும் நிகழ்வும் நடந்தது. இதைத்தொடர்ந்து, அக்.3-ம் தேதி அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய நூல் வெளியீடு நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமைஉரையாற்றுகிறார். 4-ம் தேதி வரமாய்த் தமிழுக்கு வாய்த்த சான்றோர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் பங்கேற்று பேசுகிறார். நிறைவு நாளானஅக்.5-ம் தேதி திருஅருட்பா செம்பதிப்பு நூல் வெளியீடு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் விஐடி நிறுவனர் கோ.விசுவநாதன் தலைமை உரையாற்றுகிறார்.
|
காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 04:31:00 |
சென்னை: தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தவீடு, வீடாக சென்று கண்காணிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார துணை இயக்குநர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் தினமும் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் நோய்தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி குடியிருப்பு பகுதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,183 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் 1 லட்சத்து 42,978 பேருக்குபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 1,434 பேருக்கு காய்ச்சலும், 1,340 பேருக்கு இருமல் மற்றும் சளி பிரச்சினை இருப்பதும் தெரியவந்தது. பாதிப்பு சற்றுஅதிகமாக இருந்ததால் 18 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், காய்ச்சல் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில், வீடு, வீடாக சென்று கண்காணிக்கும்படி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார துணை இயக்குநர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தி இருக்கிறோம். ஒரு கிராமத்தில் மூன்றுபேருக்கு மேல் காய்ச்சல்இருந்தால் அங்கு, மருத்துவமுகாம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு, வீடாக சென்று காய்ச்சலை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள்விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதனால், மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்” என்றார்.
|
தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதா? - திமுகவினருக்கு விஜயபாஸ்கர் கேள்வி | செய்திப்பிரிவு | புதுக்கோட்டை | 2023-10-03 04:16:00 |
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் எந்தப் பணியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ள நிலையில், டெங்கு தடுப்புப் பணிக்கு 30 பேரை மட்டும் நியமிக்கிறார்கள். அவர்கள் எப்படி 42 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு பணியை சரிவர செய்ய முடியும்?.
அதிமுக ஆட்சி காலத்தில் அரசு மகளிர் கல்லூரி முன்பு ரூ.9 கோடியில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. அதேபோன்று, அரசு பல் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. ஆனால் அவற்றை இதுவரை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் இல்லை.
இதையெல்லாம் மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் பேசி வருகிறேன். ஆனால், ஆளும் கட்சியான திமுகவினர் விராலிமலை தொகுதியில் பொதுக் கூட்டம் நடத்தி, என்னைப் பற்றி தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். நான் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இவ்வாறு செய்வது சரியா? என்றார்.
|
தமிழகத்தை சேர்ந்த 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-03 04:10:00 |
சென்னை: விண்வெளி துறையில் முத்திரை பதித்த தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேரையும் கவுரவித்து, அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். முதுநிலை பொறியியல் படிக்கும் 9 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானிகளின் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க ரூ.10 கோடி தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ளஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழக உயர்கல்வித் துறை சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில், சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இதில், இந்திய விண்வெளி ஆய்வுநிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள்தலைவர் கே.சிவன், திட்ட இயக்குநர்கள் மயில்சாமி அண்ணாதுரை (சந்திரயான்-1), மு.வனிதா (சந்திரயான்-2), ப.வீரமுத்துவேல் (சந்திரயான்-3), நிகார் ஷாஜி (ஆதித்யா-எல்1), திருவனந்தபுரம் திரவ உந்து அமைப்புமையத்தின் இயக்குநர் வி.நாராயணன், ஹரிகோட்டா சதீஷ் தவான்ஆய்வு மையத்தின் இயக்குநர் ஏ.ராஜராஜன், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநர் எம்.சங்கரன், மகேந்திரகிரி உந்துவிசை வளாக இயக்குநர் ஜெ.ஆசிர் பாக்கியராஜ் ஆகியோரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது: நிலவை தொட்ட 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பாக, இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவத்தை சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியுள்ளது. அதன் திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் பணியாற்றியது நமக்கு பெருமை.
விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அறிவுதான் தமிழகத்தில் இருந்தது. அதுதான் பல அறிவியல் மேதைகளை உருவாக்கியுள்ளது. இங்குகவுரவிக்கப்பட்டுள்ள 9 விஞ்ஞானிகளில் 6 பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள். குறிப்பாக 2 பேர்பெண்கள் என்பது பெருமைக்குரியது.
சந்திரயான்-1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். கடந்த 2008 அக்.28-ம் தேதி அது நிலவை சுற்றியதும், நிலவில் நீர்க்கூறுகள் இருப்பதை கண்டறிந்து சொன்னது. சந்திரயான்-2 கடந்த 2019 ஜூலை 15-ம் தேதி ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். இஸ்ரோ தலைவராக சிவன் இருந்தார். தற்போது ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இவர்களால் தமிழகத்துக்கே பெருமை.
இதை போற்றும் விதமாக, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்த, இனியும் தேடித் தரப்போகிற அறிவியல் மேதைகளான 9 பேருக்கும், தமிழக அரசுசார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். உங்கள் அறிவாற்றலுக்கு அளவுகோல் இல்லை. உங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்தின் அடையாளமாக தமிழக அரசு இதைவழங்குகிறது. இதை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்கு மேலும் மேலும் நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில், அரசின் கல்வி உதவித் தொகை பெற்று இளநிலை பொறியியல் முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடரும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகளின் பெயரில் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்க உள்ளோம். இதன்மூலம் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் அவர்களுக்கு வழங்கப்படும். விஞ்ஞானிகள் தலைமையில் அமைக்கப்படும் குழுக்களால், தகுதிவாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக ரூ.10 கோடியில் தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும்.
தற்போது நடந்து வரும் இந்த நிகழ்வை 58 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்க்க அரசுஏற்பாடு செய்துள்ளது. இதை பார்க்கும் மாணவர்கள் தங்கள் அறிவியல் ஆர்வத்தையும், ஆளுமைத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேடையில் உள்ள ஆளுமைகளை போன்ற அறிவியல் மேதைகள் இன்னும் பலர் உருவாகவேண்டும். அதுதான் இந்த அரசின் நோக்கம்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகள். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், சாய்ராம் கல்வி குழுமம் சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கும், தங்கள் கல்லூரியில் படித்த சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. விஞ்ஞானிகள் சார்பில்முதல்வருக்கு நினைவு பரிசை நாராயணன் வழங்கினார். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
கைகலப்பு, தற்கொலை முயற்சியுடன் நிறைவடைந்த கிராம சபை கூட்டங்கள் - திருப்பத்தூர் அருகே சலசலப்பு | செய்திப்பிரிவு | திருப்பத்தூர் | 2023-10-03 04:08:00 |
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 இடங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கைகலப்பு, தற்கொலை முயற்சியுடன் நிறைவடைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கந்திலி அடுத்த சுந்தரம்பள்ளி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில், 5 மற்றும் 7-வது வார்டில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் அடுக் கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மற்றும் மதன் ஆகியோருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு கட்டிப்புரண்டு அதிகாரிகள் மற்றும் பார்வையாளர் முன்னிலையில் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் பொதுமக்களை மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர் அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை விலக்கி விட்டு சமாதானம் செய்தனர். பிறகு, இருவரையும் தனித் தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தி தகராறை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
அதன் பிறகு, கிராம சபை கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்று அனைத்து தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாட்றாம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக் கோடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், காளியப்பன், கோபி ஆகியோர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இந்த பன்றிகளால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக கூறி பன்றிகளை வேறு இடத்துக்கு கொண்டு சென்று வளர்க்க வேண்டும் என அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், பன்றி வளர்ப்பவர்கள் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து, அதே பகுதியில் பன்றிகளை வளர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் கிராம சபை கூட்டத்தில் பன்றிகளை ஆட்கள் இல்லாத இடங்களில் கொண்டு சென்று வளர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த நேரத்தில் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் பன்றி வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து, தான் மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து தனக்குத் தானே ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் இருந்த டீசல் கேனை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பிறகு, அங்கு கூடியிருந்த அரசு அலுவலர்கள் பன்றி வளர்ப்பவர்களை அழைத்து ஒரு நாள் கால அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள்ளாக பன்றிகளை ஏரிக்கோடி பகுதியில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாரியப் பனிடம் நாட்றாம்பள்ளி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் | செய்திப்பிரிவு | அரூர் | 2023-10-03 04:04:00 |
அரூர்: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காந்தி ஜெயந்தியையொட்டி தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பே.தாதம்பட்டி ஊராட்சி சார்பில் கூக்கடப்பட்டியில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சித் தலைவர் பாரதி ராஜா தலைமை வகித்தார்.
பே.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு, அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை விரைந்து வழங்க வேண்டும் என்றும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிற குடும்பத்தினர் குறித்தும் ஆய்வு செய்து அவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அரசுத் திட்டங்களில் வாச்சாத்தி கிராமத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி செயலர் ரங்க நாதன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
|
செம்மிபாளையம் ஊராட்சி சாமிக்கவுண்டன்புதூர் கிராம சபை கூட்டத்தில் கடும் இடநெருக்கடியால் அவதி | செய்திப்பிரிவு | திருப்பூர் | 2023-10-03 04:02:00 |
திருப்பூர்: செம்மிபாளையம் ஊராட்சி சாமிக் கவுண்டன்புதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டதால், கால்கடுக்க நின்ற பொதுமக்கள், அதிகாரிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாளையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. செம்மிபாளையம் ஊராட்சி சாமிக்கவுண்டன்புதூர் பழைய இ.பி.ஆபிஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் பங்கேற்றார்.
செம்மிபாளையம் ஊராட்சி தலைவர் ஷீலா புண்ணிய மூர்த்தி தலைமை வகித்தார். அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றதால், போதிய இட வசதி இல்லாமல் அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் நிகழ்வு முடியும் வரை கால்கடுக்க நிற்கும் சூழல் எழுந்தது. இதனால் பலரும் அவதிக்குள்ளாகினர்.
ஆண்டுக்கு 6 கிராமசபைக் கூட்டங்களை அரசு நடத்தி வருகிறது. இதில் போதிய விரிவான ஏற்பாடுகள் செய்துதர வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதிகாரிகள் பேசும்போது, "வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதன் மூலமாக டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கலாம். வீடுகளில் தண்ணீர் பிடித்துவைத்தால், அதனை துணி கொண்டு மூடி வைத்து அதன் பின்னர் மூடி போட்டு வைத்தால் கொசுப் புழுக்கள் குடிநீரில் உண்டாகாது. சுற்றுவட்டாரத்தில் இடைநிற்றல் இல்லாத வகையில் குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டும்" என்றனர்.
கூட்டத்தில் பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்கும் 1098 உள்ளிட்டவை தொடர்பாகவும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் கண்ணீர்: அவிநாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி சார்பில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில், பிரபு என்பவர் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிக்கான பணம் செலுத்தி ரசீது பெற்றுச் சென்றதாகவும், பிறகு வேண்டுமென்ற பணம் செலுத்தாமல் ரசீது பெற்றுச் சென்றுள்ளார் என ஊராட்சி நிர்வாகத்தினர் பதாகையில் ஒட்டியிருந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பதில் அளித்துவிட்டு கிராம சபையை தொடங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட நபர் தெரிவித்தார். இதனால், பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொய்யாக அவதூறு பரப்பியதற்காக பதவி விலக வேண்டும், பணம் பெற்று ரசீது கொடுத்த ஊராட்சி செயலாளரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென பிரபு தரப்பினர் கூறினர்.
இதில் மன வேதனையடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகேஷ்வரி, கிராம சபைக் கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார். சம்பவ இடத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
கருவலூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், எலச்சிபாளையம் பகுதியில் மின்விளக்குகள், மேல்நிலை குடிநீர் தொட்டி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி, இளைஞர்கள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து போராட்டம் கை விடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 ஊராட்சிகளில் 264 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. குண்டடம் அருகே சிறு கிணறு ஊராட்சியில் மட்டும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 493 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
|
12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? | ஆ.நல்லசிவன் | திண்டுக்கல் | 2023-10-03 03:43:00 |
திண்டுக்கல்: தமிழக வனத்துறையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் வன காப்பாளர்களுக்கு, வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக வனத்துறையில் வனவர், வனச்சரகர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். வனப்பகுதியில் விலங்குகளை கண்காணிப்து, மரம் விழுந்தால் சீரமைப்பது, மீட்பு பணி உட்பட அனைத்து பணிகளையும் வனக்காப்பாளர்கள் மேற்கொள்கின்றனர். இவர்கள் 8 ஆண்டுகள் வனக்காப்பாளர்களாக தங்கள் பணியை நிறைவு செய்ததும், வனவராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட வனக்காப்பாளர்கள், பதவி உயர்வுக்காக காத்திருந்த போது கடந்த 2022-ல் 150 வனக்காப்பாளர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை. அதில் பெரும்பாலானோர் 50 வயதை கடந்தவர்கள். சிலர் ஓய்வு பெறும் வயதை எட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பணிக்காலத்தில் கிடைக்கும் ஒரே ஒரு பதவி உயர்வும் தற்போது கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த வனக்காப்பாளர்களுக்கு, வனவர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பதவி உயர்வு எதிர்பார்ப்பு: இது குறித்து வனக்காப்பாளர்கள் கூறியதாவது: வனத்துறை விதிகளின் படி, 8 ஆண்டுகள் வனக்காப்பாளர்களாக பணி மற்றும் வனவியல் கல்லூரியில் 6 மாதம் பயிற்சி முடித்ததும், குற்றத்தாள்கள் ஏதும் இல்லாதபட்சத்தில் வனவராக பதவி உயர்வு வழங்கலாம். கடந்த 2020, 2021-ல் கரோனா காலத்தில் வனக்காப்பாளர்களுக்கு, வனவராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 2022-ல் பாதி பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக வனக்காப்பாளராக பணியாற்றியவர்களுக்கு உடனே வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும். வனப்பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவதன் மூலமாக தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த முடியும் என்று கூறினர்.
|
தாயாரின் ஓய்வூதிய பணப்பலன் கேட்டு மகன் வழக்கு தாக்கல் செய்ய முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு | கி.மகாராஜன் | மதுரை | 2023-10-03 00:16:00 |
மதுரை: தாயாரின் ஓய்வூதிய பணப்பலன்களை கேட்டு மகன் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த ராஜேஷ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: காஞ்சிரங்கோடு அரசுப் பள்ளியில் என் தாயார் 1990-ல் துப்புரவு பணியாளராக சேர்ந்தார். அவரை பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் என் தாயாரை 2000ம் ஆண்டிலிருந்து 2010 வரை எனது தாயாரை பணியை வரன்முறைப்படுத்தி உரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுக்கள் தள்ளுபடியானது.
தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் என் தாயார் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக உள்ளார். எனவே என் தாயாரின் பணியை 1990 முதல் வரன்முறைப்படுத்தி அவருக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எல்.விக்டோரியாகவுரி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தனது தாயாருக்காக அவர் வழக்கு தாக்கல் செய்து, அவரே நேரில் ஆஜராகி வாதிட முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதுபோன்ற மனுக்களை ஆரம்ப நிலையிலேயே திரும்ப அனுப்ப வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
|
"பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை" - பாஜக கூட்டணி முறிவு குறித்து முதல்முறையாக பேசிய இபிஎஸ் | செய்திப்பிரிவு | சேலம் | 2023-10-03 00:10:00 |
சேலம்: பாஜக கூட்டணி முறிவு என்பது பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக நீடித்துவந்த அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுக தலைவர்கள் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே இரண்டரை ஆண்டுகளாக நீடித்த உரசல்கள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது அதிமுக. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவின் இந்த விலகல் உறுதியானதா என்னும் கேள்வி எழுந்திருந்தது.
ஏனென்றால் பாஜக தேசியத் தலைமையும், அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமியும் எந்தவித விளக்கங்களும் இதுதொடர்பாக தரவில்லை. இதனால் விவாதங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சேலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து முதல்முறையாக பேசினார்.
அதில், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு. இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
தொண்டர்களின் உணர்வுகளின் அடிப்படையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்வது என முடிவெடுக்கப்பட்டது, இது பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு.
கூட்டணி முறிவு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தையும் கூறவில்லை என கூறுகிறார்கள். ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகிறது என்றால் அது அனைவரின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என்பதே எண்ணிக்கொள்ள வேண்டும்" என்று பேசியுள்ளார்.
|
நாடாளுமன்ற தேர்தல் பணி | தென்மாநில முழு நேர ஊழியர்கள் தேர்வில் பாஜக தீவிரம் | கி.மகாராஜன் | மதுரை | 2023-10-02 23:19:00 |
மதுரை: நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் பாஜக முழு நேர ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு தொகுதியில் வெற்றிப்பெற திட்டமிட்டுள்ள அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிவிட்டதால், பாஜக தலைமையில் புதிய அணி உருவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் தென் மாநிலங்களில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை பூத் அளவில் நிர்வாகிகளை நியமித்து வீடு வீடாக செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. இது தவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் முக்கிய நபர்களை சந்தித்து அவர்களிடம் கட்சியின் கொள்கையை சொல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியுடன் கட்சியை பலப்படுத்தும் பணிக்காகவும் முழு நேர ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பகுதிகளிலும் பாஜக முழு நேர ஊழியர்களை தேர்வு செய்யவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்புக்கு தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசனை இன்று நியமனம் செய்து பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இவர் விரைவில் தென் மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பாஜக முழு நேர ஊழியர்களை தேர்வு செய்யவுள்ளார்.
|
‘ஒரு நூலகம் பல சிறைக் கதவுகளை மூடும்’ - மதுரை மத்திய சிறையில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேச்சு | என். சன்னாசி | மதுரை | 2023-10-02 22:33:00 |
மதுரை: ‘ஒரு நூலகம் பல சிறைக்கதவுகளை மூடும் ’ என, மதுரை மத்திய சிறையில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேசினார்.
மதுரை மத்திய சிறையில் காந்தி ஜெயந்தியையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் சிறைத்துறை டிஐஜி பழனி தலைமை வகித்தார். சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர், நடிகருமான கு.ஞானசம்பந்தன் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார். மேலும், கைதிகள் தயாரிக்கும் அங்காடி மற்றும் கைதிகள் மூலம் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து கூண்டுக்குள் வானம் என்ற நூலகத் திட்டத்திற்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார்.
விழாவில் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். புத்தங்கள் படிப்பதன் மூலம் நமது சிந்தனை, செயலை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை எடுத்துக்கூறினேன். இதைக்கேட்ட ஒருவர் விடுதலையாகி அவர் வீட்டின் ஒரு பகுதியை நுாலகமாக மாற்றியுள்ளார். ஒரு நுாலகம் பல சிறைக் கதவுகளை மூடும். சிறையில் இருந்த ஒருவர் நுாலகம் திறந்து பலரது வாழ்வை மாற்றியுள்ளார். கைதிகள் மன அழுத்தத்தை வரவழைக்ககூடாது என்பதற்காகதான் சிறையில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று இங்கே பலர் மனம் விட்டு சிரித்துள்ளனர். சிறைச்சாலைக்குள் சென்று வந்ததுபோல் இன்றி தொழிற்சாலைக்கு வந்துவிட்டு சென்றது போல் இருக்கிறது. கைதிகள் பலர் திறமையால் பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றனர். இவற்றை மக்களுக்கு விற்பதும் வியப்பாகவே உள்ளது" என்றார்.
|
ஶ்ரீவில்லிபுத்தூர் | கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை காலால் உதைத்த ஊராட்சி செயலர் | அ.கோபால கிருஷ்ணன் | ஸ்ரீவில்லிபுத்தூர் | 2023-10-02 19:06:00 |
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ, பிடிஓ முன்னிலையில் கேள்வி கேட்டவரை ஊராட்சி செயலர் காலால் உதைத்து, தனது ஆதரவாளர்களைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கங்கா குளம் கிராமத்தில் உள்ள கோயிலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சி தலைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேப்பங்குளத்தை சேர்ந்த அம்மையப்பன் என்பவர், "ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சுழற்சி முறையில் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என உள்ளாட்சித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கடந்த முறை நடந்த அதே இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்ற போது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது அதே இடத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதனால் பிற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர்" என்றார்.
அதற்கு, ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், கடந்த கூட்டத்துக்கு நீ ஏன் வரவில்லை என்றார். அப்போது அம்மையப்பன், "ஆகஸ்ட் 17-ம் தேதி ஊராட்சி தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகம் தகுதி ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன" என்றார்.
இதனால் கோபமடைந்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், தரையில் அமர்ந்திருந்த அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். அவரது ஆதரவாளர்கள் அம்மையப்பனை கடுமையாக தாக்கினர். தான் நீதிமன்ற உத்தரவு பெற்று பணியில் தொடர்வதாகவும் தன்னை பற்றி எப்படி பேசலாம் என்றும் அம்மையப்பனை தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது புகார் அளித்தவரை எப்படி தாக்கலாம் என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகாத வார்த்தைகளால் பேசிய ஊராட்சி செயலரை பிடிஓ மீனாட்சி சமாதானம் செய்தார். கடும் அமளி காரணமாக கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. எம்எல்ஏ, பிடிஓ, ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கேள்வி கேட்டவரை ஊராட்சி செயலர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊராட்சி செயலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் காயமடைந்த அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அம்மையப்பன் கூறுகையில், "பிள்ளையார் குளம் ஊராட்சியில் உள்ளாட்சி விதிகளை மீறி வழிபாட்டு தளத்தில் கிராம சபை நடத்தியது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தேன். அந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க பிடிஓ விற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, என்னையும், ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன், ஊராட்சி தலைவர் பூங்கொடி ஆகியோரையும் நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது மழை பெய்ததால் கோயில் முன் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இனி அது போன்று வழிபாட்டு தலங்களில் கூட்டம் நடத்தப்படாது என ஊராட்சி தலைவர் தெரிவித்தார். ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம், பிடிஓ மீனாட்சி ஆகியோர் என்னிடம் பேசி வற்புறுத்தி புகார் மனுவை வாபஸ் பெரும் கடிதத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர். நான் அளித்த புகார் மீது அன்றே நடவடிக்கை எடுத்து இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. சம்பந்தபட்டவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்நிலையில் அம்மையப்பன் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வன்னியம்பட்டி போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
|
காவிரி விவகாரம் | வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 17:48:00 |
சென்னை: உரிய காலத்தில் கர்நாடக அரசிடம் காவிரி நீரை பெற முயற்சி மேற்கொள்ளாத திமுக அரசைக் கண்டித்து, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிமுக சார்பில் வரும் 6ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு’’ என்றார் அண்ணா. அவரது வழியில், காவல் தெய்வங்களாக நின்று கழகத்தையும், நம்மையும் கட்டிக் காத்து வரும் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், மக்களுக்குத் தொண்டு செய்திட வேண்டும்; எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, விவசாயிகளின் நண்பனாக, அவர்களது நலம் விரும்பியாக அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது, மூன்று முறை விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் புயல் வெள்ளத்தின்போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு மற்றும் அரசு நிவாரணம் என்றும், வறட்சிக் காலங்களில் குறுவை தொகுப்பு மற்றும் சம்பா தொகுப்பு வழங்கப்பட்டு, வேளாண் பெருமக்களுடைய நிலங்களில் பயிர் செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக அரசு. இதுமட்டுமல்ல, தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும் என்பதற்கு பழந்தமிழனின் ‘குடி மராமத்து - தூர் வாருதல்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் தூர் வாரப்பட்டன. அவ்வாறு வாரப்பட்ட வண்டல் மண் அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமாக இலவசமாக வழங்கப்பட்டது. மேட்டூர் அணை முதன் முதலாக தூர் வாரப்பட்டது. இப்படி, விவசாய நடவடிக்கைகளுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருந்ததன் காரணமாக, 5 முறை மத்திய அரசின் ‘க்ருஷி கர்மான்’ விருதினைப் பெற்றது.
ஆனால், நானும் ‘டெல்டாகாரன்’ என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றபின் விவசாயிகளுக்கு குறிப்பாக, டெல்டா விவசாயிகளுக்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. மேட்டூர் அணையின் நீர்மட்டம்; வானிலை ஆராய்ச்சி மையத்தின் எதிர்வரும் பருவமழை பெய்தல் பற்றிய ஆலோசனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு 100 அடிக்குமேல் தண்ணீர் உள்ளது என்ற ஒரே காரணத்தால், பொம்மை முதல்வர் ஸ்டாலின், ஜூன் மாதம் 12-ம் தேதியே முன்யோசனையின்றி தண்ணீரைத் திறந்துவிட்டார். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது என்றவுடன் சுமார் 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் டெல்டா விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினர்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத் தீர்ப்பின்படி, மேட்டூர் அணையில் தண்ணீர் குறைய ஆரம்பித்தவுடன், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நமது பங்கு நீரை சட்டப்படியும், அரசியல் அழுத்தத்தோடும் அந்தந்த மாதங்களிலேயே பெற்றிருக்க வேண்டும். கடந்த மே மாதத்தில் நடைபெற்ற, கர்நாடக காங்கிரஸ் அரசின் முதல்வர் பதவியேற்பு விழாவில், திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டபோது, மே மற்றும் ஜூன் மாதங்களில் கர்நாடகா தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல், இண்டியா (I.N.D.I.A.) கூட்டணிக் கூட்டம் பாட்னாவில் கூடியபோது, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, தன் மாநில மக்கள் நலனில் அக்கறைகொண்டு, எவ்வாறு நிபந்தனை அடிப்படையில் கூட்டணியில் அங்கம் வகிக்க சம்மதித்ததோ, அதேபோன்று, காவிரியில் காங்கிரஸ் அரசு தண்ணீரைத் திறந்துவிட்டால்தான் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்ற நிபந்தனையை விதித்திருக்கலாம். என் மாநில மக்கள் நலனே முக்கியம் எனவும், “நானும் ஒரு டெல்டாகாரன்தான்” எனவும் தெரிவித்து, ஸ்டாலின், பெங்களூருவில் நடைபெற்ற இண்டியா (I.N.D.I.A.) கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொண்டதைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால், இதையெல்லாம் செய்யாமல், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த திமுக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடுகூட செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யவில்லை. கடந்த செப்டம்பர் மாதம், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியில், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்த முன்னோடி விவசாயி எம்.கே. ராஜ்குமார் என்பவர், போதிய தண்ணீர் இல்லாததால் நீரின்றி காய்ந்து கருகிய குறுவை நெற்பயிர்களை `தான் பெற்ற பிள்ளையை தானே அழிப்பது போல்’, விவசாயி ராஜ்குமார் டிராக்டர் மூலம் அழிக்கும்போது ஏற்பட்ட மனவேதனையில், தன்னுடைய நிலத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
குறுவை பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகிய பிறகு, ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதுபோல், நாங்கள் பலமுறை எச்சரித்த பிறகும், காலம் கடந்து பெயரளவுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது; மத்திய அமைச்சரை நேரில் பார்ப்பது; காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு செய்வது மற்றும் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வது என்று அனைத்து நடவடிக்கைகளையும் காலதாமதமாக மேற்கொண்டது இந்த திமுக அரசு. டெல்டா மாவட்டங்களில் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் பேச்சை நம்பி, சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்ட நிலையில், தண்ணீர் இல்லாமல் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகின.
எனவே,உரிய காலத்தில் கர்நாடக அரசிடம் தண்ணீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாத திமுக அரசைக் கண்டித்தும்; குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமல் துரோகம் செய்த திமுக அரசைக் கண்டித்தும்; உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும்; கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35,000- ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்கிட திமுக அரசை வலியுறுத்தியும், அதிமுக சார்பில், 6.10.2023 - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், திருவாரூர் மாவட்டத்தில் ஆர்.காமராஜ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓ.எஸ்.மணியன், தஞ்சாவூர் மாவட்டத்தில் சி.விஜயபாஸ்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடலூர் மாவட்டத்தில் செம்மலை ஆகியோரது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்சிப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா விவசாயிகள், தஞ்சையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிமுக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும் மற்றும் பொதுமக்களும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
|
நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு? | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 16:46:00 |
சென்னை: சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை (அக்.3) நடைபெற இருந்த அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில், கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று டெல்லி சென்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்கள், அதிமுக உடனான கூட்டணி முறிவு மற்றும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை (அக்.3), சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருந்தது. அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெற இருந்த இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது, அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
|
உத்தமர் காந்தி விருது: மதுரை மண்டல மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ பாண்டியன் தேர்வு | என்.சன்னாசி | சிவகங்கை | 2023-10-02 16:33:00 |
சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த எஸ்.ஐ பாண்டியன் என்பவருக்கு சிறந்த பணிக்கான உயரிய விருதான "காந்தியடிகள் காவல் விருது" (உத்தமர் காந்தி) கிடைத்துள்ளது. ஜனவரி 26ம் தேதி சென்னையில் இவ்விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அரிராமன் - நாகராணி தம்பதியரின் மகனான பாண்டியன், தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2016ல் நேரடியாக எஸ்.ஐ-யாக தேர்வாகி, பணியில் அமர்த்தப்பட்டார். மதுரை மண்டலத்தில் மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவில் எஸ்.ஐ-யாக நேர்மையாகவும், சிறப்பாகவும் பணி புரிந்ததற்காக காந்தியடிகள் காவலர் விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நுண்ணறிவு பிரிவில் கடந்த இரண்டரை ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு சிவகங்கை மாவட்டம், ஆராவயல் காவல் நிலையத்திற்கு பாண்டியன் மாற்றப்பட்டார்.
இவ்விருது ஜனவரி 26ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். தமிழக அளவில் 5 பேர் இவ்விருதுக்கு தேர்வான போதிலும், தென்மாவட்டத்தில் மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவில் முதன்முறையாக இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பாண்டியன், "மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி போது, கஞ்சா, போலி மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க தீவிரமாக பணி செய்ததாலும், நேர்மையாக உழைத்ததாலும் இவ்விருது கிடைத்துள்ளது என்றே கருதுகிறேன். காவல் துறையின் உயர் பொறுப்பில் நான் பணியாற்ற வேண்டும் என எனது தாயார் ஆசைப்பட்டார். நேரடியாக நான் எஸ்ஐயாக தேர்வானபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தற்போது, இத்துறையில் விருது பெறும்போது, அவர் உயிருடன் இல்லை. அவர் இருந்திருந்தால் இன்னும் பெருமை கிடைத்திருக்கும். இருப்பினும், இவ்விருது என்னை மேலும் ஊக்கப்படுத்தும். காவல்துறையில் இன்னும் பல விருதுகளை பெற உந்துதலாக இருக்கும். இவ்விருதை எனது தாயாருக்கு சமர்பிக்கவே விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
|
''இரண்டு மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் பாஜகவால் வெற்றி பெற முடியாது'': நாராயணசாமி | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2023-10-02 16:12:00 |
புதுச்சேரி: இரண்டு மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி, லால் பகதுார் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர் நினைவுநாள் முப்பெரும் நிகழ்வாக பாரதிதாசன் கல்லுாரி எதிரே இன்று நடந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேச தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் எம்பி வைத்திலிங்கம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அவர், "காந்தி நமக்கு பெற்றுத்தந்த சுதந்திரம் மோடி ஆட்சியில் காணாமல் போய்விட்டது. புதிய கல்விக் கொள்கையில் மொழியை திணிக்கின்றனர். இந்தி படிக்கும்படி கூறுகின்றனர். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். அப்போது தான் சுதந்திரமான இந்தியா செயல்படும். அனைவரும் இதற்காக நாராளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "மோடி ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தேவையற்ற, அவசியமற்ற திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு செலவு செய்கிறது. பணத்தை சுய விளம்பரத்துக்காக மோடி செலவு செய்து ஆட்சி செய்கிறார். தற்போதைய அரசியல் சூழலில் உத்திர பிரதேசம், குஜராத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது. தொகுதிகளை விட்டுக் கொடுத்து இண்டியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். யார் வேண்டுமானாலும் பிரதமராக இருக்கலாம். காங்கிரஸ் கட்சிதான் முதன்மையான கட்சியாக இருக்கும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். புதுச்சேரியில் ஊழல் மலிந்த ஆட்சி நடந்து வருகிறது. நாற்காலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு பொம்மை முதல்வராக ரங்கசாமி செயல்படுகிறார். முதல்வர் இல்லாமல் விழாக்களுக்கு ஆளுநர்தான் வருகிறார். யார் முதல்வர் என தெரியாத நிலை உள்ளது. வெளி நாடுகளில் முதலீடு செய்ய அமைச்சர்கள் சென்றுள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. முக்கியமாக ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியுள்ளது. அதிமுக வெளியேறியதை பற்றி கேட்டால், கூட்டணி பலமாக உள்ளதாக ரங்கசாமி சொல்கிறார். இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு (காங்கிரஸ்) சாதகமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
|
பஸ்கள் வரலாம்... ஆனா, பயணிகள் வராதீங்க - புதுக்கோட்டை நகராட்சியின் பகீர் பேனரால் குழம்பும் மக்கள் | கே.சுரேஷ் | புதுக்கோட்டை | 2023-10-02 16:03:00 |
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கட்டிடங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாலும், இடிக்கும் பணி நடைபெற்று வருவதாலும் பயணிகள் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என நகராட்சி சார்பில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேசமயம் பேருந்துகள் இன்னும் அங்கிருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், உள்ளே செல்லாமல் பேருந்தில் ஏறி பயணம் செய்வது எப்படி என பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுக்கோட்டையில் சுமார் 5 ஏக்கரில் 42 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 52 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 3 இடங்களில் பயணிகள் காத்திருப்பு பகுதி, 2 கட்டணக் கழிப்பறைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், புறக்காவல் நிலையம் மற்றும் 60 கடைகள் உள்ளன. தவிர, முறையான அனுமதியின்றி ஏராளமான கடைகளும் உள்ளன.
இந்நிலையில், இப்பேருந்து நிலையக் கட்டிடம் பலவீனமானதால் கட்டிடத்தின் மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுவதும், அதை நகராட்சி நிர்வாகம் தற்காலிக சீரமைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுந்து பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் இப்பேருந்து நிலையத்தில் அறந்தாங்கி பேருந்துகள் நிறுத்தக் கூடிய பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய், மகன் காயம் அடைந்தனர். இதையடுத்து, இடிந்த பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த மேற்கூரையை அவசர அவசரமாக இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிக்குள் யாரும் வராமல் இருக்கும் வகையில் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பேருந்து நிலையத்துக்குள் யாரும் செல்ல வேண்டாம் என பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘பேருந்து நிலைய கட்டிடம் சேதமடைந்துள்ளதாலும், அபாயகரமாக உள்ளதாலும், மேற்படி கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் யாரும் பேருந்து நிலையத்துக்குள் செல்ல வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதேசமயம் பேருந்து நிலையத்தில் இருந்தே தொடர்ந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஆபத்தான நிலையில் உள்ள பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளை மட்டும் அனுமதித்துவிட்டு, பயணிகள் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என கூறுவது வியப்பாக உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து பயணிகள் கூறியது: ஆபத்தான நிலையில் கட்டிடங்கள் இருப்பதாக கூறிவிட்டு, பேருந்து நிலையத்தை பயன்பாட்டில் வைத்துக்கொண்டே பொதுமக்களை பயன்படுத்தக்கூடாது என்றால் அவர்கள் எங்கே செல்வார்கள்?. எனவே, மக்களின் உயிருடன் விளையாடாமல் பேருந்து நிலையத்தை காலி செய்துவிட்டு, தற்காலிக பேருந்து நிலையத்தை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றனர்.
இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, “தற்காலிக பேருந்து நிலையம் தயாராகி வருகிறது. அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்ட பிறகு தற்காலிக பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும். பேருந்து நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.18.9 கோடி அரசு அனுமதி அளித்துள்ளதால் அந்தப் பணியும் விரைவில் தொடங்கும்’’ என்றனர்.
|
சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 14:46:00 |
சென்னை: இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான ஒன்பது விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக அரசு சார்பில், "ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்" சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய விண்வெளி துறையில் சாதனை படைத்த விஞ்ஞானிகளான, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் முனைவர் கே.சிவன், முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, திருவனந்தபுரம் - திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநர் முனைவர் வீ.நாராயணன், ஸ்ரீஹரிகோட்டா - சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஏ.ராஜராஜன், பெங்களூரு - யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் எம்.சங்கரன், மகேந்திரகிரி - உந்துவிசை வளாக இயக்குநர் ஜெ .ஆசீர் பாக்கியராஜ், சந்திரயான் - 2 திட்ட இயக்குநர் மு.வனிதா, ஆதித்யா l1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி, சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேல் ஆகியோரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவத்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "ஆகஸ்ட் 23-ம் நாள் இந்தியாவுக்கு மட்டும் இல்லை, உலகத்துக்கே முக்கியமான நாள். நிலாவில் இந்தியா இறங்கிய நாள். சந்திரயான் விண்கலத்துடன் லேண்டரானது வெற்றிகரமாக நிலவில் இறங்கிய நாள். 1959-ம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964-ம் ஆண்டு அமெரிக்காவும், 2013-ம் ஆண்டு சீனாவும்தான் இந்தச் சாதனையை செய்திருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு நிலவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கியது. 2023-ம் ஆண்டில் அந்த சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது. அதாவது நிலவை தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பையும் இந்தியா அடைந்திருக்கிறது. இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவப் பகுதியை சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியிருக்கிறது. அந்த சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்த, அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் செயல்படுத்திக் காட்டியது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை.
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள் என்ற செய்தி அதிகமாக பரவியது. இப்படிப்பட்ட பெருமையை தமிழகத்துக்குத் தேடித்தந்த அறிவியல் மேதைகளான உங்கள் எல்லோரையும் தமிழக முதல்வராக கோடிக்கணக்கான தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன். உங்கள் எல்லோரையும் வணங்குகிறேன்.
நம்ம தமிழ் அறிவு என்பதே அறிவியல் அறிவுதான். எதையும் பகுத்துப் பார்க்கும் பகுத்தறிவுதான் தமிழறிவு. விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அறிவுதான் தமிழகத்தின் அறிவாக இருந்தது. அதுதான் இந்த அறிவியல் மேதைகளை உருவாக்கி இருக்கிறது. இன்னும் சொன்னால், இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அதுதான் மிகமிகப் பெருமைக்குரியது. மிகமிகச் சாதாரண ஊர்களில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படித்து முன்னேறியவர்கள். முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக இருந்து விஞ்ஞானிகளாக உயர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக ரெண்டு பேர் பெண்கள்.
என்னைப் பொறுத்தவரை தமிழக இளைய சமுதாயத்தினர் இவர்களைத்தான் தங்களுடைய வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதில் தமிழ் இனத்துக்கும் தமிழகத்துக்கும் என்ன பெருமை என்றால் சந்திரயான் – 1 திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. 2008 அக்டோபர் 28-ம் நாள் அது நிலவை சுற்றத் தொடங்கியது. நிலவில் நீர்க்கூறுகள் இருப்பதை அதுதான் கண்டறிந்து சொன்னது. சந்திரயான்- 2, 2019 ஜூலை 15-ம் நாள் ஏவப்பட்டது. இதனுடைய திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இஸ்ரோ தலைவராக டாக்டர் சிவன் இருந்தார். இப்போது ஏவப்பட்டது சந்திரயான் - 3. இதனுடைய திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இதுதான் தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
இந்த பெருமையை தமிழக அரசு போற்றும் விதமாக, இரண்டு அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். முதல் அறிவிப்பு இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான இந்த ஒன்பது பேருக்கும் தமிழக அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அறிவுக்கான அளவுகோல் எதுவுமில்லை. உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தின் அடையாளமாகதான் தமிழக அரசு இந்தத் தொகையை வழங்கியிருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு, மேலும், மேலும் இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
இரண்டாவது அறிவிப்பு என்னோட கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை பற்றி உங்களுக்குத் தெரியும். தமிழக மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் மட்டும் போதும் என்று நினைக்காமல் கல்வியில், அறிவாற்றலில், சிந்திக்கின்ற திறனில், பன்முகத் திறமையில் சிறந்தவர்களாக அப்படி உருவாக்கத்தான் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி நடத்திக்கொண்டு வருகிறோம். சென்ற ஆண்டு மட்டும் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கி இருக்கிறோம். 10 லட்சம் என்று இலக்கு வைத்திருந்தோம். ஆனால் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறோம். நம்முடைய மாணவர்களை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்த்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்துக்கு தொழில் தொடங்க வருகிறார்கள். அதற்குத் தகுதியானவர்களாக தமிழக இளைஞர்களை உருவாக்கி வருகிறோம். அதேபோல அறிவியல் திறனுள்ள மாணவர்களையும் உருவாக்க நினைக்கிறோம். அதற்கான அறிவிப்பை இந்த மேடையில் வெளியிடுவது மிகமிக பொருத்தமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.
பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க இந்த திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அந்த மாணவர்கள், அறிவியலாளர்களின் தலைமையில் அமைக்கப்படுகின்ற குழுக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தக் கல்வி உதவித்தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியை 58 லட்சம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் காண்பதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்திருக்கிறது. இதனை பார்த்துக் கொண்டிருக்கும் மாணவ கண்மணிகளே, உங்களை நான் கேட்டு கொள்வது, அறிவியல் ஆர்வத்தையும், ஆளுமைத் திறனையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். இன்றைய மாணவர் சமுதாயத்திலிருந்து, இந்த மேடையில் இருக்கின்ற ஆளுமைகளைப் போன்ற அறிவியல் மேதைகள் உருவாகவேண்டும். அதுதான் இந்த திராவிட மாடல் அரசின் இலக்கு. அந்த வகையில், இங்கே அமர்ந்திருப்பவர்கள் அறிவியலாளர்களாக மட்டும் இல்லை, அறிவியல் வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்த்து, பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகள், அறிவியல் ஆளுமைகள், திறமைசாலிகளின் கூட்டு முயற்சியால் தான் இவை அனைத்தும் நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இன்றைய இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அனைத்து அறிவியலாளர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் அறிவியல் துறையில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. நம்மை விட அதிகமான தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்ற நாடுகளில் இருக்கலாம். ஆனால், அதிகமான தொழில்நுட்ப அறிவுக் கூர்மை கொண்டவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். பூமிக்கு அப்பால் உள்ள அனைத்து ஆராய்ச்சிகளும் தொய்வின்றித் தொடரட்டும். சூரியன் பற்றியும், நிலாவை பற்றியும் எல்லா ஆய்வுகளும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். மனிதரை விண்வெளிக்கு அனுப்புகின்ற வரை அனைத்து அறிவியல் முயற்சிகளும் வெற்றிகரமாக நடைபெறட்டும். இந்திய நாட்டைக் காப்போம். நாட்டுக்கு அப்பால் உள்ள உலகத்தையும் கற்போம்" என்று முதல்வர் பேசினார்.
|
''பிரதமர் வேட்பாளர் இல்லாதது இண்டியா கூட்டணிக்கு பிரச்சினை இல்லை'': சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2023-10-02 14:32:00 |
புதுச்சேரி: பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது இண்டியா கூட்டணிக்கு பிரச்சினையாக இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தேர்தலை நாடு எதிர்கொள்ள உள்ள நிலையில் இண்டியா என்ற கூட்டணி அமைக்கப்பட்டு, அதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மாற்று அரசு வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதனால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அச்சமடைந்து உள்ளன. அதனால்தான் அவர்கள் நிதானம் இழந்து பேசி வருகின்றனர்.
இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பாஜக அரசு அகற்றப்பட வேண்டும். இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டணியில உள்ள அந்தந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை விரைந்து தொடங்க வேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் பிரச்சினைகள் வரும். யதார்த்தப் பூர்வமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு கட்சியும் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவர். இன்றைய சூழலில் பாஜகவை வீழ்த்த எதிர் வாக்குகளை ஒன்று திரட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும்.
கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி தற்போது எம்பியாக உள்ளார். அதே நேரத்தில் அங்கு இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. காங்கிரஸும் தொகுதிகளில் யாரை நிறுத்துவார்கள் என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வயநாட்டில் ராகுல் போட்டியிடக் கூடாது என்பதல்ல எங்கள் நிலைப்பாடு. எங்கு யார் போட்டியிடுவார் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். இன்றைய அரசியல் சூழலை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. கோவை தொகுதி ஒதுக்கீடு குறித்த செய்த உண்மையல்ல.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு மாநிலத் தலைமை பதில் சொல்வார்கள். அண்ணாமலை, வெங்காயம் குறித்து பேசியதற்கு பதிலளிக்க ஒன்றுமில்லை. பெரியாரை குறித்து கேட்டால் நிறைய கூறுவேன். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவேன் என்று பேசி வருகிறார். அவர் பேசட்டும். ஆனால், கள நிலவரம் அவருக்கு சாதமாக இல்லை. அதனால் எதிர்கட்சிகளை கடுமையாக பாஜக தரப்பு வசைபாடுகிறது. மும்பை கூட்டத்தில் 27 கட்சிகள் வரை வந்துள்ளனர். மேலும் ஓரிரு கட்சிகள் வருவார்கள். இண்டியா கூட்டணி வெற்றி பெற்று பாஜக வீழ்ச்சியடையும் போது பிரதமரை தேர்ந்தெடுப்போம். அது கூட்டான முடிவாக இருக்கும். எந்த குழப்பமும் இண்டியா கூட்டணியில் வராது. பிரதமர் முகம் இண்டியா கூட்டணியில் பிரச்சினை இல்லை." என்று ராஜா கூறினார். பேட்டியின் போது மாநில செயலர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், கட்சியின் துணைச் செயலர் சேது செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
|
''தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா சட்டப்படி கொடுக்கும்'': கே.எஸ்.அழகிரி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 14:07:00 |
சென்னை: "காவிரி நீரை கர்நாடகா வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் தர மறுத்தபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மையின் கருத்துக்கு எதிராக அண்ணாமலை ஏன் எதுவும் பேசவில்லை" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கர்நாடகத்தில் காவிரி விவகாரத்தில் பாஜகவினர்தான் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். கர்நாடக மக்கள் பிரச்சினையை உருவாக்கவில்லை. அங்குள்ள மற்ற அரசியல் கட்சிகள் பிரச்சினையை உருவாக்கவில்லை. அரசியல் காரணமாக அங்கிருக்கும் பாஜகதான் இதை செய்கிறது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காவிரியில் தண்ணீர் திறக்க அம்மாநில துணை முதல்வர் சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்தபோது, தமிழக காங்கிரஸ் சார்பில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
தமிழக அரசின் பக்கம் நாங்கள் நின்றோம். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். சிவக்குமாரின் கருத்துக்கு மாறான கருத்தை தெரிவித்தோம். அண்ணாமலை ஏன் எடியூரப்பாவின் கருத்துக்கும், பசவராஜ் பொம்மையின் கருத்துத்துக்கும் எதிராக எதுவும் சொல்லவில்லை. அது பாஜகவின் கடமை இல்லையா? கர்நாடகத்தைப் பொறுத்தவரை, தண்ணீர் பிரச்சினை என்பது, கர்நாடக அரசு தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரை சட்டப்படி கொடுப்பார்கள். கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். தமிழக அரசும் கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரைக் கேட்டுப் பெறும். காவிரி நீரை கர்நாடகா வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது" என்று அவர் கூறினார்.
|
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கத் துடிக்கிறது திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 13:59:00 |
சென்னை: "அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கத் துடிக்கும் திமுக அரசு, உடனடியாக 30.9.2023 அன்று வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும். பதிவு செய்துள்ள சுமார் 1,087 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உணவு, உடை, இருப்பிடம் அதற்குப் பிறகு நான்காவதாக பயணம் என்பது அனைத்து மக்களின் வாழ்விலும் இன்றியமையாததாகும். தமிழகம் முழுவதும் தினசரி தங்களது வேலைக்காக செல்லும் கோடிக்கணக்கான மக்களுக்காக இயங்கி வரும் போக்குவரத்துக் கழகங்கள் ஒரு சேவைத் துறை என்ற கொள்கை முடிவோடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், குறைந்த கட்டணத்தில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்களின் பெருமளவு இழப்பை, அரசு நிதி கொண்டு ஈடு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடுவதை அதிமுக அரசு, தங்களது 30 ஆண்டு கால ஆட்சியிலும் உறுதி செய்தது. மேலும், தேவைக்கேற்ப அவ்வப்போது புதிய பேருந்துகள் எங்களது ஆட்சியில் வாங்கப்பட்டன. ஆனால், தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி பொறுப்பேற்று 28 மாதங்கள் ஆன நிலையிலும் இதுவரை ஒரு புதிய பேருந்தைக்கூட வாங்கவில்லை.
குறிப்பாக, எங்கள் ஆட்சியின் இறுதியில் அதாவது பிப்ரவரி 2021-ல், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 3,324. திமுக ஆட்சியில் 30.9.2023 அன்றைய நிலவரப்படி இயக்கப்படும் பேருந்துகள் சுமார் 2,600 மட்டுமே. குறைந்த அளவு பேருந்துகளே இயங்கும் நிலையில் உள்ளதால், பல பேருந்து சேவைகளை நிர்வாகத் திறனற்ற திமுக அரசு நிறுத்தியுள்ளது. மகளிருக்கு கட்டணம் இல்லா பயணம் என்று அறிவிக்கப்பட்டு, குறைந்த அளவு பழைய, பழுதடையக்கூடிய நிலையில் உள்ள பேருந்துகளையே இயக்குவதால் நகரப் பகுதிகளில் மகளிர் தங்களது தினசரி வேலைக்குச் செல்லும் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே துவங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
30.9.2023 அன்றைய தேதி வரை, கருணை அடிப்படையில் பணி கோரி பதிவு செய்துள்ள வாரிசுகளின் எண்ணிக்கை சுமார் 1,087. மேலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதன்மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்காமல், தற்போது தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்க முயலும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கெனவே, கடந்த ஜூலை மாதம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் ஊழியர்களை அமர்த்த முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அனைத்து போக்குவரத்து சங்கங்களும் ஆர்ப்பாட்டம் செய்தன. நானும், இந்த திமுக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, நேரடியாகத் தொழிலாளர்களை நியமிக்க வலியுறுத்தினேன். ஆனால், தொழிலாளர் துரோக திமுக அரசு, அனைவரது எதிர்ப்பையும் மீறி சுமார் 538 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. இந்த விஷயத்தில், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வாய்மூடி மவுனம் காக்கின்றன.
ஏற்கெனவே, கடந்த ஜூலையில் 538 தொழிலாளர்களை ஒப்பந்த அடைப்படையில் நியமித்துவிட்டோம். எனவே, தைரியமாக இனி அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கலாம் என்று இரண்டாம் கட்டமாக 30.9.2023 அன்று 117 ஓட்டுநர்களையும், 117 நடத்துனர்களையும் தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்க ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது இந்தத் தொழிலாளர் விரோத திமுக அரசு.
இதன்படி, போக்குவரத்துத் துறைக்கு தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டால், எதற்கெடுத்தாலும் சமூக நீதி, சமூக நீதி என்று பொய் முகமூடி அணிந்து நடமாடும் ஸ்டாலினின் திமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துத் துறையில் இனி Rule of Reservation-ஐ கடைபிடிக்க முடியாது. போக்குவரத்துத் தொழிலாளர் நலன் இனி பேணி காக்கப்படாது. போக்குவரத்துத் துறையில் 8 மணி நேர வேலை கடைபிடிக்க முடியாது. தொழிலாளர்களுக்கு பண்டிகை விடுமுறை, வார ஓய்வு கிடைக்காது. இனி தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியும், வருடாந்திர ஊதிய உயர்வும் கிடைக்கா நிலை ஏற்படும். அரசு போக்குவரத்துத் துறையில் இனி தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் நலன் என்பதே பெயரளவில் மட்டுமே இருக்கும். தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பல பலன்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.
ஏற்கெனவே, உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு, இருமுறை மின் கட்டண உயர்வு, பலமுறை பால் பொருட்கள் விலை உயர்வு, அரசு கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என்று தமிழக மக்கள் கடின வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இத்துடன், தற்போது தண்ணீருக்காகப் போராடும் விவசாயிகள்; மின் கட்டணத்தைக் குறைக்கப் போராடும் சிறு, குறு தொழில் முனைவோர்கள்; உரிமைக்காகவும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் போராடும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் என்று தமிழகத்தில் தினமும் போராட்டங்கள் நடைபெறுவதை பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன.
மக்களின் போராட்டங்களை எல்லாம் இனியும் திராவிடம் என்றும், சனாதனம் என்றும், சமூக நீதி என்றும் பேசி, தமிழக மக்களை மடைமாற்றம் செய்துவிடலாம் என்று பொம்மை முதல்வர் ஸ்டாலினோ; திமுக அரசோ நினைத்தால், இனி அது தமிழகத்தில் எடுபடாது. ஏனெனில், இன்று தமிழக மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர். தீய சக்தி திமுகவின் பசப்பு வார்த்தைகளில் தமிழக மக்கள் இனியும் மயங்க மாட்டார்கள்.
எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கத் துடிக்கும் திமுக அரசு, உடனடியாக 30.9.2023 அன்று வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும். பதிவு செய்துள்ள சுமார் 1,087 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து, 18.9.2023 அன்று வரை ஆன் லைன் மூலம் பதிவு செய்துள்ள சுமார் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்மையான முறையில் தமிழகத்தில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
|
''தற்சார்பு கிராமங்களை உருவாக்க திராவிட மாடல் அரசு உழைக்கும்'' - கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 12:40:00 |
சென்னை: கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும், என கிராம சபைக்கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் இன்று (அக்.2) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: "திராவிட மாடல் ஆட்சி அமைந்ததற்குப் பிறகுதான், கிராம சபை கூட்டங்களை முறையாக, தடங்கல் இல்லாமல் நடத்தி கொண்டு வருகிறோம். கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் எந்தச் சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோல கிராம சபைக் கூட்டங்களை தடையில்லாமல் நடத்துகிறோம்.
மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் பக்கம் இருக்கிற உத்தரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு இதை சொல்கிறது. யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்களோ அவர்கள் எல்லோருடைய பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதிக் குடத்தில் போடுவார்கள். அந்தக் குடத்தை குலுக்கி ஒரு ஓலையை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட பெயரில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை. இப்படித்தான் தமிழகத்தில் மக்களாட்சி என்ற அமைப்பே மலர்ந்தது.
அந்த வகையில் பார்த்தால் கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘கிராம சபை’ என்ற அமைப்பு தமிழகத்தைப் பொறுத்தவரையில், சோழர் காலந்தொட்டே பழக்கத்தில் இருந்து வருகிறது. சோழப் பேரரசில் ‘ஊர் மற்றும் மகாசபை’ என்கிற இரு வேறு அவைகள் இருந்தன. இதில் மகாசபையை போன்றதுதான் தற்போதைய கிராமசபை என்று அறியமுடிகிறது. மக்களாட்சியின் ஆணிவேராக இருக்கிற கிராம சபைக் கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து, தங்களுடைய தேவைகளையும், பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். இது இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில் சட்டமன்றம் இருப்பதைப் போல, கிராம அளவில் கிராம சபையானது மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக அமைந்திருக்கிறது.
கிராம சபைகள் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - 1994 குறிப்பிட்டிருந்தாலும், அதை ஆண்டுக்கு நான்கு முறை என்று தலைவர் கருணாநிதி மாற்றி அமைத்தார். தற்போதைய திராவிட மாடல் அரசானது, இதை ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்று அதிகரித்திருக்கிறோம்.அதன்படி, ஆண்டொன்றுக்கு முறையே குடியரசு நாள், உலக தண்ணீர் நாள், தொழிலாளர் நாள், விடுதலை நாள், காந்தியடிகள் பிறந்தநாள், உள்ளாட்சிகள் நாள் ஆகிய 6 நாட்களில் கிராமசபை நடைபெற்று வருகின்றன. ஒரு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். நிதி ஆதாரங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை அங்கீகரித்தல், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல், ஊராட்சிகளின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்தல், பயனாளிகளைத் தேர்வு செய்தல், திட்டக் கண்காணிப்பு செய்தல் ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கிராம சபைகள் பல சிறப்பு செய்கைகளைச் செய்கிற வகையில், நலிந்தோர்க்கும், வறியோர்க்கும் உதவி செய்ய மாற்றுத் திறனாளிகள் நலன், முதியோர் நலன், குழந்தைகள் நலன் போன்றவற்றில் அதீத ஈடுபாடு காட்டிட வேண்டும். கல்விக்காக நம்முடைய அரசு எடுக்கிற முயற்சிகள் எல்லாவற்றிலும் கிராம சபைகள் முக்கியப் பாலமாக இருக்க வேண்டும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைத்திருக்கிறேன். உங்கள் குழந்தைகள் இப்போது பள்ளிக்கு சென்று, சாப்பிடுகிறார்களா?தமிழகம் முழுக்க 16 லட்சம் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளி உட்கட்டமைப்புத் திட்டங்கள், இதுமாதிரியான திட்டங்களை நீங்கள் மேம்படுத்த உதவி செய்து செயல்படுத்த வேண்டும். இன்றைக்கு கிராம சபையில் பங்கெடுத்த நீங்கள், பங்கேற்காத உங்கள் ஊர் மக்களிடம் போய் சொல்லுங்கள், கிராம சபையை ஒரு ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றக் களமாக கருதி கலந்து கொள்ள வேண்டும் என்று. கிராம சபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும். ஊராட்சியினுடைய எல்லாப் பகுதிகளும் முழுமையான வளர்ச்சியை அடைய, அங்கே கூடியிருக்கக்கூடிய அலுவலர்களிடத்தில், அவர்கள் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
மகளிர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் கலந்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கிராமசபையில் அவர்கள் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படுகிற பணிகள் பொதுவானதாகவும் எல்லோரும் பயன்பெறும் வகையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கிராம சபை நடைபெற்ற விவரங்களை குறிக்க, பதிவேடு பராமரித்து, எல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.
நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்தல், சுகாதாரம் பேணுதல், முறையான திட, திரவக் கழிவு மேலாண்மை செய்தல் - போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நிலைநிறுத்துகிற வகையில், எல்லா ஊராட்சி மன்ற தலைவர்களும் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருகிறார்கள். விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்கள்தான் அதிகமாக பயனடைகிறார்கள். 1000 ரூபாய் என்பது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. இன்னும் சொன்னால், ஊரகப் பகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இந்தத் திட்டம் வழிவகை செய்திருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் என்கிற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம். இதுவும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள், உயர்கல்விக்காகக் கல்லூரியில் சேர்ந்தால், அவர்களுக்குப் புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம்.
வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இருப்பதும் திமுக அரசுதான். இதன் மூலமாக, பாசனப் பரப்பும் அதிகமாகி, வேளாண் உற்பத்தியும் உயர்ந்துள்ளது. அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு புத்துயிர் வழங்கி, விரிவுபடுத்தி கொண்டு வருகிறோம். இப்படியாக, கிராமங்களுடைய, கிராம மக்களுடைய ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் சிறப்பு கவனத்தை திமுக அரசு செயல்படுத்தி கொண்டு வருகிறது. அனைத்துத் துறையும் வளர வேண்டும். அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறோம். நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது – கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும்.
“ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக, தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. சமுதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நான் அடிக்கடி சொல்லி கொண்டு வருகிறேன். அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றால், கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தாகவேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறோம். இன்று அக்டோபர் 2, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். “இந்தியா- கிராமங்களில் வாழ்கிறது” என்று சொல்லி, ‘கிராம சுயராஜ்ஜியம்’ எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார். தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும்" என்று முதல்வர் பேசினார்.
|
''ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும்'' - தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 12:28:00 |
சென்னை: தமிழகத்துல் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகத்துல் காந்தியடிகள் பிறந்த நாள், பூசை விடுமுறை, தீப ஒளி திருநாள் விடுமுறை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றன. விடுமுறைக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பும் நடுத்தர மக்களை கசக்கிப் பிழியும் ஆம்னி பேருந்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சனி, ஞாயிறு, காந்தியடிகள் பிறந்தநாள் என 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றவர்கள் இன்று மீண்டும் சென்னைக்கு திரும்ப வேண்டும். ஏராளமான மக்கள் வெளியூர்களுக்கு சென்றிருப்பதையும், அவர்கள் அனைவரும் சென்னைக்கு திரும்புவதற்கு தேவையான அளவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததையும் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகங்கள், அவற்றின் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன. அக்டோபர் 2ம் நாளான இன்று இரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு திரும்ப அதிக அளவாக ரூ.4,460 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நெல்லையை விட குறைந்த தொலைவு கொண்ட மதுரையில் இருந்து சென்னைக்கு, அதை விட அதிகமாக ரூ.4499 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.4970, திருச்சியிலிருந்து சென்னைக்கு ரூ.4410 கட்டணம் பெறப்படுகிறது. பூசை விடுமுறை நாட்களுக்காக வரும் 20-ஆம் நாள் சென்னையிலிருந்து மதுரை செல்லவும், விடுமுறை முடிந்து 24ம் நாள் சென்னைக்கு திரும்பவும் அதிக அளவாக ரூ.4440 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நாட்களில் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூ.4560, அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.4620 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல ரூ.3700, சென்னைக்கு திரும்ப ரூ.3753 என்ற அளவிலும், சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.4500, அங்கிருந்து சென்னைக்கு ரூ.4440 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நாட்களில் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லவும், அங்கிருந்து சென்னை திரும்பவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இருக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளில் ரூ.459, படுக்கை வசதி பேருந்துகளில் ரூ.920 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை விட தனியார் பேருந்துகளில் 10 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே காலத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல ரூ.3,419 மட்டும் தான் கட்டணம். விமானத்தை விட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான காரணமும் நமக்கு விளங்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வருகிறது.
ஆனால், அரசோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பெயரளவில் சில பேருந்துகளுக்கு மட்டும் சில ஆயிரங்களை தண்டமாக விதித்து விட்டு கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக கூறி விடுகிறது. சில நேரங்களில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர், தாம் யார் என்பதையே மறந்து விட்டு, "ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சேவை செய்யவில்லை. அரசு பேருந்து கட்டணத்தை, தனியார் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிடுவது தவறு. தனியார் பேருந்து கட்டணம் அதிகம் என்று தெரிந்துதான் மக்கள் பயணம் செய்கிறார்கள். அவர்கள் புகாரும் செய்யவில்லை. தனியார் பேருந்துகளின் கட்டணம் ஏழை மக்களை பாதிக்கவில்லை" என்று விளக்கம் அளிக்கிறார். இது தான் தனியார் ஆம்னி பேருந்துகள் அவற்றின் விருப்பம் போல கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதற்கான துணிச்சலை அளிக்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை காலம் காலமாகவே தொடர்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டிருக்கிறது.
"ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அவற்றின் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பது சட்ட விரோதமானது. மோட்டார் வாகன சட்டத்தின் 67வது பிரிவின் படி ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு தான் நிர்ணயிக்க வேண்டும். கட்டணத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் குழுவை அமைக்க வேண்டும்" என்று 2016ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அந்தத் தீர்ப்பின் மீது 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு அமைக்க வேண்டும். ஆணையம் நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக் கணக்கில் தண்டம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
|
காந்தி ஜெயந்தி | தமிழக ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 11:51:00 |
சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செவுத்தினர்.
நாடு முழுவதும் உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ராஜ கண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மகாத்மா காந்தியின் புகழைப் போற்றும் வகையில், அமைந்த பஜனைப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து கேட்டனர்.
காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில், அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதியான இன்று, கிராம சபைக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.
|
அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 11:47:00 |
சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக அயல்பணி பேராசிரியர்கள் அனைவரையும் அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி அயல்பணி முறையில் அரசு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அவர்களின் பணிக்கான எந்தவித ஏற்பளிப்பும் வழங்கப்படாமல் பணியாற்றி வருகின்றனர். துறைத் தலைவர், ஆராய்ச்சி வழிகாட்டி போன்ற உயர் பதவிகளுக்கு தகுதி இருந்தும், அவர்கள் தற்காலிக ஆசிரியர்களைப் போல நடத்தப்படுவது அநீதி.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012ம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து தேவைக்கும் அதிகமாக இருப்பதாக கணக்கிடப் பட்டவர்களில் 369 பேராசிரியர்கள் முதல் கட்டமாக அயல்பணி முறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அதன் பிறகும் படிப்படியாக அனுப்பப்பட்டவர்களையும் சேர்த்து இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளில் அயல்பணியில் பணியாற்று கின்றனர். அயல்பணியில் அனுப்பப்பட்ட பேராசிரியர்கள் அனைவரும் அடுத்த 3 ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
2016ம் ஆண்டில் அயல்பணி முறையில் அரசு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட பேராசிரியர்கள், 7 ஆண்டுகளாக அயல்பணி முறையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணியமர்த்தியது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பதாலும், அவர்கள் அனைவரும் அயல்பணி முறையில் மட்டுமே பணி செய்து வருவதாலும் அவர்களுக்கு அரசு கல்லூரியில் எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படுவதில்லை. அயல்பணி பேராசிரியர்கள் அதிக பணி அனுபவம் கொண்டவர்கள் என்றாலும் கூட அவர்களை விட குறைவாக பணி அனுபவமும், வயதும் கொண்ட அரசு கலை கல்லூரிகளின் பேராசிரியர்கள் தலைமையின் கீழ் தான் செயல்பட வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, அரசு கல்லூரிகளில் முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி வழிகாட்டிகளாக இருக்கவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மதிப்புடனும், பொறுப்புடனும் பணியாற்றி வந்த பேராசிரியர்கள், இப்போது அரசு கல்லூரிகளில் எந்த பொறுப்புகளும் இல்லாமல், கிட்டத் தட்ட கவுரவ விரிவுரையாளர்கள் போன்று பணியாற்றி வருகின்றனர்.
அதற்கு காரணம், அவர்களுக்கான பணியிடங்கள் எதுவும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏற்படுத்தப்படாதது தான். இது மிகப் பெரிய சமூக அநீதியாகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு அதன் பேராசிரியர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. ஆனாலும், அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், அரசின் ஆணையை மதித்து அவர்கள் அனைவரும் அரசு கல்லூரிகளில் பணிக்கு சேர்ந்தனர். அரசு அளித்த வாக்குறுதிப்படி 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கே அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், அண்ணாமலை பல்கலைக்கழகச் சீரமைப்பு குறித்து இப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், அப்போதைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியுமான சிவதாஸ் மீனா அளித்த பரிந்துரைப்படி அயல்பணி பேராசிரியர்களை அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாகவே அறிவிக்க முடியும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் அனைத்து சிக்கல்களும் தீரும். இது குறித்த கோரிக்கையை அயல்பணி பேராசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் பேராசிரியர்களாக அறிவிப்பதால் அரசுக்கு எந்த வகையிலும் நிதிச்சுமை ஏற்படாது. அதே நேரத்தில் அயல்பணி பேராசிரியர்களின் உழைப்பை அரசு கல்லூரிகளால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். பேராசிரியர்களும் கண்ணியத்துடன் பணி செய்ய முடியும். இதை உணர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக அயல்பணி பேராசிரியர்கள் அனைவரையும் அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
|
திருநங்கைகளுக்கு உரிமை தொகை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் கீதாஜீவன் தகவல் | செய்திப்பிரிவு | திருப்புவனம் | 2023-10-02 10:18:00 |
திருப்புவனம்: திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார். அதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது என்று பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்சோ சட்டத்தை தமிழக அரசு கடுமையாக அமல்படுத்தி வருகிறது. விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படுகிறது. இதை முதல்வரும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காதல் வயப்படும் சந்தர்ப்பங்களில் போக்சோ சட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சினை இருக்கிறது.
எனினும், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் அக்.18-ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம். முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் இதுவரை 90,000 பேருக்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
முதலீட்டுக்கான வருவாய் உத்தரவாதத்துடன் காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் கிளை அமைக்க வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 08:23:00 |
சென்னை: எஸ்.எம்.சில்க்ஸ் காஞ்சிபுரம், சென்னை, கோவை, திருவள்ளூர், நாமக்கல் மற்றும் பெங்களூரு பகுதிகளில் 15 விற்பனையகங்களை நிறுவி பட்டு மட்டுமே விற்பனை செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாகும். காஞ்சிபுரம் பட்டு என்றாலே எஸ்.எம்.சில்க்ஸ் என்று பெயர் பெற்றுள்ளது.
பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையை மாற்றி நடுத்தர மக்களும் பட்டு வாங்க முடியும் வகையில், உற்பத்தி விலையில் தரமான பட்டை அறிமுகம் செய்து தமிழகமெங்கும் பட்டு கண்காட்சி மூலம் விற்பனை செய்து வருகிறது. பட்டு விற்பனை, டிசைன், வண்ணங்களில் என அனைத்திலும் புதுமை படைத்து வருகிறது.
காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் புதிதாகத் தொழில்முனைவோர் ஃபிராஞ்சைஸ் மூலம் முதலீட்டுக்கு ஏற்ற வருவாய் உத்தரவாதத்துடன் நாடெங்கும் கிளைகளை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு ஊர்களில் காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் கிளைகளை நிறுவ விரும்புவோர் 9500000889 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனர் எம்.எஸ்.மனோகரன் பொதுநல தொண்டிலும் ஆர்வம் கொண்டவர். சுலபத் தவணையில் வீட்டு மனைகளை விற்பனை செய்தவர். பொருளாதாரத்தில் எளிய மக்களும் குறைந்த விலையில் பட்டை வாங்க பட்டுச்சேலை சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆன்மிகத்திலும் மிகுந்த நாட்டம் உடையவரான இவர் கோயில் கும்பாபிஷேகங்களையும் நடத்தியுள்ளார். இலவச உணவுக் கூடம் அமைத்து ஏழை எளிய மக்களுக்குத் திருமண விழா, காதணி விழா, அன்னதானங்களை வழங்கி வருகிறார். காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழக அரசிடம் கொடுக்க தெற்கு ரயில்வே முடிவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 08:20:00 |
சென்னை: சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை (எம்ஆர்டிஎஸ்) தமிழக அரசிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயில் மாபெரும் தூய்மைப் பணி மற்றும் பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. "குப்பை இல்லாத இந்தியா" என்ற கருப்பொருள் அடிப்படையில் நேற்று தூய்மை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
தெற்கு ரயில்வேயில் 360 ரயில் நிலையங்கள், 43 ரயில்வே குடியிருப்புகள், 47 ரயில் பராமரிப்பு மையம் மற்றும் பணிமனைகள், 30 மருத்துவ மையங்கள், ரயில் ஓட்டுநர் அறைகள் உட்பட 1,200 இடங்களில் தூய்மை பிரச்சாரம் நடைபெற்றது. 12,000 தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
சென்னை எழும்பூரில் தூய்மைப் பணி மற்றும் பிரச்சாரத்தை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தெற்கு ரயில்வே முழுவதும் தூய்மை பணி மற்றும் பிரச்சாரம் நடைபெறுகிறது. சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை (எம்ஆர்டிஎஸ்) தமிழக அரசிடம்கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது வணிகதிட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. எப்போது வேண்டும் என்று தமிழக அரசு கேட்கிறார்களோ அப்போது எம்.ஆர்.டி.எஸ் வழித்தடம் முழுவதுமாக அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
வைகை விரைவு ரயில் நேரம் மாற்றம் குறித்து பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும். பொதுவாக, தெற்கு ரயில்வேயில் குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, கூடுதலாக சிலரயில்களின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத்ரயில் சேவை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தூய்மைப்பணி மற்றும் பிரச்சாரத்தில் கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
பனை விதை நடும் பணிகளில் மாணவர்கள் ஈடுபட அறிவுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 08:14:00 |
சென்னை: கல்லூரி கல்வி இயக்குநர் கோ.கீதா அனைத்து மண்டல இணை இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றிக்கை:
திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையான கடற்கரை பகுதிகளில் 1,076 கி.மீ.க்கு ஒரு கோடி பனை விதைகளை விதைக்க இயக்கம் முடிவு செய்துள்ளது பனை விதைகளை சேகரித்தல், நடவு செய்தல் ஆகிய இரு சேவைகளில் மாணவர்கள் ஈடுபடலாம்.
இதற்காக ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உடன் செல்ல அனுமதி வழங்க வேண்டும். இந்த பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் பெற்றோர் அனுமதி கடிதத்தை அவசியம் பெற்றாக வேண்டும். இதுபற்றி தேவையான அறிவுறுத்தல்களை அனைத்து கல்லூரிகளுக்கும் மண்டல இயக்குநர்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ராயபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் 5-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 08:01:00 |
சென்னை: பிரதான குடிநீர் உந்து குழாய் இணைப்பு பணி காரணமாக ராயபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் சில பகுதிகளில் 5-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்புப் பணிகள், புரசைவாக்கம் நெடுஞ்சாலை பகுதியில் 4-ம் தேதி காலை 10 முதல் அடுத்த நாள் காலை 10 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக 5-ம் தேதி காலை 10 மணி வரை 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
நிறுத்தப்படும் இடங்கள்: குறிப்பாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் பெரம்பூர், எருக்கஞ்சேரி, பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம் மண்டலத்தில் ஜார்ஜ் டவுன், ஏழுகிணறு ரோடு, முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் ரோடு, எழும்பூர், பூங்கா நகர், தம்புசெட்டி தெரு, கெங்கு ரெட்டி ரோடு, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, திருவிக நகர் மண்டலத்தில் புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, அண்ணாநகர் மண்டலத்தில் ஈ.வி.ஆர் சாலை, பிரான்சன் கார்டன், கெல்லீஸ், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள், தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
|
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 2,183 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 07:53:00 |
சென்னை: தமிழகம் முழுவதும் 2,183 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் 1.43 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கொசுக்கள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மூலம் பரவும் பல்வேறு தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் தினமும் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,183 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களில் 1 லட்சத்து 42,978 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 1,434 பேருக்கு காய்ச்சலும், 1,340 பேருக்கு இருமல் மற்றும் சளி பிரச்சினை இருப்பதும் தெரியவந்தது. பாதிப்பு சற்று அதிகமாக இருந்ததால் 18 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சி சின்னவேடம்பட்டியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாச புரத்தில் நடந்த மருத்துவ முகாமை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டார். துணை மேயர் மு.மகேஷ் குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் தி. சி.செல்வவிநாயகம், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேயர் பிரியா கூறும்போது, ‘‘சென்னையில் 15 மண்டலங்களில் மண்டலத்துக்கு தலா 3 இடங்கள் வீதம் 45 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. கடந்த ஜூன் முதல் இதுவரை 3,962 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 1,33,589 பேர் பயனடைந்துள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பற்றியும், ஏடிஸ் கொசு உற்பத்தி பற்றியும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், துண்டுபிரசுரங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.
|
ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை நியமிக்க எதிர்ப்பு: சிஐடியு இன்று ஆலோசனை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 07:29:00 |
சென்னை: ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை நியமிப்பதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சிஐடியு நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
இதுதொடர்பாக சிஐடியு நிர்வாகிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகம் உட்பட அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் போதிய ஓட்டுநர், நடத்துநர் இல்லாமல் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலிலும் மாநகர போக்குவரத்துக் கழகம் தவிர்த்து இதர போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நிரந்தர தன்மையுடன் கூடிய ஓட்டுநர், நடத்துநர்பணிகளில் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஊழியர்களை நியமிப்பதற்கான டெண்டரை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. சென்னை போன்ற பெருநகரில் பல ஆண்டு காலம் பணியாற்றிய எங்களுக்கே, பேருந்து இயக்கத்தில் பல்வேறுசிக்கல்கள் உள்ளன. இதுபோன்ற பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் வழங்குவது பொதுமக்களின் உயிரோடு விளையாடும் ஏற்பாடு. அதேநேரம், தனியார் மயத்தை நோக்கிச் செல்லும் நடவடிக்கை.
மேலும், தொழிலாளர் துறையிடம் நாங்கள் அளித்த வேலைநிறுத்த நோட்டீஸ் நிலுவையில் உள்ள நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் இதுபோன்ற நடவடிக்கை ஏற்புடையது அல்ல. இதுகுறித்து இன்று ஆலோசனை நடத்தவுள்ளோம். போராட்டம் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும் என்றனர்.
|
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் முன் அறிவிப்பின்றி மின்சார ரயில் சேவை நிறுத்தம்: பயணிகள் அவதி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 07:24:00 |
சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் நேற்று காலை முன் அறிவிப்பின்றி, மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை பல்வேறு ரயில் நிலையங்களில் மின்சார ரயிலில் செல்லவந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணிக்கின்றனர். இதன் காரணமாக, இந்தவழித்தடம் காலை முதல் இரவு 11 மணி வரை பரபரப்பாக இருக்கும்.
இந்நிலையில், கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் நேற்று காலை 10 மணி முதல் 3 மணி வரை எவ்வித முன் அறிவிப்பின்றி, திடீரென மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் தாம்பரம், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை, மாம்பலம், எழும்பூர், பூங்கா, கடற்கரை உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து மின்சார ரயில்களில் செல்ல பயணிகள் வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் ரயில்கள் வராததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதையடுத்து, பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் படையெடுத்தனர். இதுபோல, மெட்ரோரெயில் நிலையங்களில் நேற்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.
சில ரயில் நிலையங்களின் வெளியே ஒரு அறிவிப்பு பலகைவைக்கப்பட்டது. அதில், பராமரிப்புபணி காரணமாக, தாம்பரம், சென்னை கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் மதியம் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் செல்ல வந்த பயணிகள் சிலர் கூறியதாவது: ரயில் சேவை நிறுத்தம் தொடர்பாக, எந்தவித முன் அறிவிப்பும் செய்யவில்லை. இதனால், எங்களுக்கு காலவிரயமும், அலைச்சலும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஞாயிற்றுக்கிழமை சேவை குறைவுதான். இப்போது, முழுமையாக நிறுத்தி உள்ளனர். ரயில் சேவை நிறுத்துவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் முறையாக முன் அறிவிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ”கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில் சேவை காலை 10 மணி முதல் 3 மணி திடீரென நிறுத்தப்பட்டது. மொத்தம் 22 ரயில்கள் நிறுத்தப்பட்டன. பிற்பகல் 3 மணிக்கு பிறகு, ரயில் சேவை சீரானது" என்றனர்.
இன்றும் 41 மின்சார ரயில்கள் ரத்து: கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி காரணமாக, இன்று (அக்.2) காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை 41 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை வழித்தடங்களில் இன்று (அக்.2) காலை 11 மணி முதல் 3.15 மணி வரையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.
அதன்படி, மொத்தம் 41 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட உள்ளன. அதேநேரத்தில், பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே முற்பகல் 11.55, நண்பகல் 12.45, மதியம் 1.25, 1.45, 1.55, பிற்பகல் 2.40, 3.10 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும்.
மறுமார்க்கமாக காலை 9.30, 10.55, முற்பகல் 11.30, நண்பகல் 12 மணி, மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்தது.
|
பரந்தூரில் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் | செய்திப்பிரிவு | காஞ்சிபுரம் | 2023-10-02 06:28:00 |
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நீர்நிலைகளைப் பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொண்டு, 3 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உள்ளதாக, ஆய்வுக்குழு தலைவர் மச்சேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 433 நாட்களாக விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பு குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், நீர்நிலைகள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில். இதை ஆராய, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு 2-வது முறையாக இப்பகுதிகளை ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 130-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவினர் பரந்தூர், வளத்தூர், அக்கமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்தனர்.
பின்னர், மச்சேந்திரநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீர்நிலைகள் பாதிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது, 2-வது முறையாக இதை ஆய்வு செய்ய வந்துள்ளோம். நீர்நிலைகளைப் பாதிக்காத வகையில், திட்டத்தைச் செயல்படுத்த இயலுமா என்பது முக்கிய நோக்கமாக உள்ளது. பாதிப்பு இருந்தால் அதை நிவர்த்தி செய்வது குறித்து, வல்லுநர் குழுக்கள் ஆய்வு செய்ய உள்ளன.
மேலும், இதற்கான ஆய்வு அறிக்கை இன்னும்3 அல்லது 4 வாரங்களுக்குள் அரசுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க எங்கள் குழுவையோ மாவட்ட நிர்வாகத்தையோ எளிதில் அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய்அலுவலர் வெங்கடேஷ், பயிற்சி ஆட்சியர் சங்கீதா,ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
|
மின்சார ரயிலில் புகை கிளம்பியதால் பரபரப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 06:20:00 |
சென்னை: தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி பிற்பகல் 3.30 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் கிண்டி ரயில் நிலையம் அருகே வந்தபோது, மகளிர் பெட்டியில் திடீரென கரும்புகை ஏற்பட்டது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார். ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் பதறி ஓடினர்.
ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் அந்த பெட்டியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மின்சார ரயிலின் பிரேக் பாயிண்ட்டில் ஏற்பட்ட பழுதுகாரணமாக, கரும் புகை வந்தது தெரியவந்தது. அவை சரி செய்யப்பட்ட பிறகு 15 நிமிடங்களுக்கு பின்னர் ரயில் புறப்பட்டது. இந்த சம்பவத்தால், கிண்டி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
|
அனைத்து மதங்களையும் நேசிக்கும் கட்சி காங்கிரஸ்: கே.எஸ். அழகிரி கருத்து | செய்திப்பிரிவு | திருவள்ளூர் | 2023-10-02 06:19:00 |
திருவள்ளூர்: ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் வட்டார, நகர வாக்குச் சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நேற்று வானகரத்தில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பிக்களான உத்தம்குமார் ரெட்டி, ஜெயக்குமார், எம்எல்ஏக்களான அசன் மவுலானா, ராதாகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பொன்னேரி எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகர், திருவள்ளூர் வடக்கு மற்றும் ஆவடி மாநகர மாவட்ட தலைவர்களான தாஸ், யுவராஜ், முன்னாள் எம்எல்ஏ பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், வாக்காளர்கள் மத்தியில் எவ்வாறு பரப்புரை செய்யவேண்டும் உள்ளிட்டவை குறித்து, வாக்குச் சாவடி நிர்வாகிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில், கே.எஸ். அழகிரி பேசியதாவது: சனாதனத்துக்கு எதிராகப் பேசுவதை, இந்து மதத்துக்கு எதிராகப் பேசுவதாக சொல்கிறார்கள். அது தவறு. காங்கிரஸ், கடவுள் மற்றும் மத நம்பிக்கை உடைய அரசியல்கட்சி. அதற்காக மதம், சாதி, மொழியின் பெயரால் அரசியல் செய்யாது. காங்கிரஸ் எல்லா மதத்தையும் நேசிக்கிறது. இது இந்து மதத்துக்கு விரோதமான அரசியல் கட்சி அல்ல. நாங்கள் எல்லாம் இந்துக்கள். காங்கிரஸ் சீர்திருத்தமான இந்து மதத்தை முன்னிறுத்துகிறது; மக்கள் விரும்புகிற இந்து மதத்தை முன் நிறுத்துகிறது.
வாக்குச் சாவடி நிர்வாகிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில்தான், 2024-ல் ராகுல்காந்தி பிரதமர் நாற்காலியில் அமர இருக்கிறார். ராகுல்காந்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் இந்திய ஒற்றுமை பயணத்தால் பிரதமர் மோடி அச்சப்படுகிறார். அதனால்தான் ராகுல்காந்தியை, அவரது இல்லத்திலிருந்து வெளியேறச் செய்தனர். இவ்வாறு அவர் பேசினார்.
|
ஆளுநர் மாளிகை முற்றுகை: 870 பேர் மீது வழக்கு பதிவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 06:18:00 |
சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக சைதாப்பேட்டையில் தொடங்கிய பேரணிக்கு அக்கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் அனைவரையும் கிண்டி போலீஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர்.
மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இந்நிலையில், ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி மற்றும் முற்றுகைபோராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 870 பேர் மீது கிண்டி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
|
அமணம்பாக்கம் ஏரிக்கரை உடைப்பால் வீணாகும் நீர்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை | செய்திப்பிரிவு | படப்பை | 2023-10-02 06:12:00 |
படப்பை: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் அமணம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. ஒரத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து அமணம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்ல இணைப்புக் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மழைக் காலத்தில் இந்த இணைப்பு கால்வாய் மூலம் அமணம்பாக்கம் ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இதனால் ஏரி விரைவாக நிரம்புகிறது.
இந்நிலையில், இந்த ஏரியை ஆக்கிரமித்து 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு வீடுகளைத் தண்ணீர் சூழ்வதால் ஏரிக்கரையை மர்ம நபர்கள் அடிக்கடி உடைத்து சேதப்படுத்தி நீரை வெளியேற்றுகின்றனர்.
கடந்த ஆண்டு உடைக்கப்பட்ட கரையை குன்றத்தூர் ஒன்றிய நிர்வாகத்தினர் மண் மூட்டைகளை அடுக்கி சரிசெய்த நிலையில், தற்போது இந்த இடத்தை மர்ம நபர்கள் மீண்டும் உடைத்து விட்டுள்ளதால், ஏரியில் உள்ள நீர் மற்றும் ஏரிக்கு வரும் நீர் அனைத்தும் உடைப்பு வழியே வெளியேறி அருகே உள்ள அடையாறு கிளை கால்வாயில் சென்று வீணாக வெளியேறுகிறது.
அமணம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த ஏரியை தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தினால், அதிக அளவு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே உடைக்கப்பட்ட ஏரிக்கரையை சீரமைப்பது யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நீர்வள ஆதாரத் துறையிடம் கேட்கும்போது, “எங்களுக்கு அந்தஏரிக்கும் சம்பந்தம் இல்லை, குன்றத்தூர் ஒன்றிய நிர்வாகம் தான் இதைசீரமைக்க வேண்டும்” என்கிறார்கள். ஆனால், குன்றத்தூர் ஒன்றியநிர்வாகத்தினர், “எங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை, நீர்வளஆதாரத் துறைதான் இதைச் சீரமைக்க வேண்டும்’ என்கிறார்கள்.
பல லட்சம் லிட்டர் மழைநீர் அடையார் ஆறு வழியாக கடலில் வீணாகக் கலப்பதால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடைந்த ஏரிக்கரையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
|
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தாம்பரத்தில் 5-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 06:10:00 |
சென்னை: அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காத தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து செப்.5-ம்தேதி அதிமுகசார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பொது சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
5-வது மண்டலத்தில் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. குடிநீர் இணைப்புகள் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அதிமுக ஆட்சியில் லாரிகள் மூலம்வழங்கப்பட்டு வந்த குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக பெண்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். மாடம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் அறிவித்தும், இன்னும் பணிகள் தொடங்கப்படவே இல்லை. சேலையூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் சரிவர முடிக்கப்படவில்லை.
இந்நிலையில், சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சினை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடை திட்டத்தை முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது, ஏரிகளில் கழிவுநீர் கலப்பது முதலானவற்றை சரிசெய்யத் தவறிய தாம்பரம் மாநகராட்சியை கண்டித்தும், அம்மாஉணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து,இத்திட்டத்துக்கு மூடுவிழா காணத் துடிக்கும் திமுக அரசைகண்டித்தும் செங்கல்பட்டு மேற்குமாவட்ட அதிமுக சார்பில் வரும்அக்.5-ம் தேதி காலை 10 மணிக்கு தாம்பரம் வால்மீகி தெரு - ஏரிக்கரைதெரு சந்திப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கட்சியின் மகளிரணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|
விசிக சார்பில் டிச.23-ல் திருச்சியில் மாநாடு; மல்லிகார்ஜுன கார்கே, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திருமாவளவன் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 06:06:00 |
சென்னை: விசிக சார்பில் திருச்சியில் டிச.23-ம் தேதி நடைபெறும் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பரந்துபட்ட அளவில் விசிக எழுச்சி பெற்றுள்ளது.
இந்தியா கூட்டணியின் ஓர் அங்கமாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வரும் டிச.23-ம் தேதி திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் விசிக பயணிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கட்சியின் 'தேர்தல் அரசியல் வெள்ளி விழாவாகவும்' கட்சி தலைமையின் அகவை அறுபது மணி விழா நிறைவு விழாவாகவும் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. மாநாட்டில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள்: இத்துடன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
தமிழகம் முழுவதும் 8 மாதங்களில் போதைப் பொருள் கடத்திய 9,634 பேர் கைது: மக்கள் தகவல் தர டிஜிபி வேண்டுகோள் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 05:56:00 |
சென்னை: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் கடந்த 8 மாதங்களில் 9,634 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 812 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழகபோலீஸார் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 12 முதல் 28-ம் தேதி வரையிலான 16 நாட்களில் தமிழகம் முழுவதும் 8 பெண்கள் உள்ளிட்ட 223 பேர், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 6,824 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 812 வெளி மாநிலக் குற்றவாளிகள் உட்பட, மொத்தம் 9,634 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 17,330 கிலோ கஞ்சா, 726 கிராம் ஹெராயின், 24,511 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 137 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும், 94984 10581 என்ற எண்ணில் வாட்ஸ்-அப்குறுந்தகவல், புகைப்படம் மூலமாகவும் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். அனைத்துமாவட்டங்களுக்கும் பிரத்யேகவாட்ஸ்அப் எண் தரப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விற்பனை மற்றும் மதுவிலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
|
உத்தண்டி, நயினார் குப்பம் கடற்கரை பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி | செய்திப்பிரிவு | கல்பாக்கம் | 2023-10-02 05:55:00 |
உத்தண்டி/பூந்தமல்லி/காஞ்சி/கல்பாக்கம்: 2014-ம் ஆண்டு அக்.2-ம் தேதிமகாத்மா காந்தி பிறந்த நாளன்று‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் 9-ம் ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிசெங்கல்பட்டு மாவட்டம் உத்தண்டி, நயினார் குப்பம் மீனவ கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து தூய்மைப்பிரச்சார இயக்கத்தில் பங்கெடுத்தார். அப்போது, கடற்கரையில் அவர் அனைவருடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பின்னர் மச்ச நாராயணன் கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் ஆளுநர் ரவி தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதில் அவர்கள் காட்டும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டினார்.
அப்போது உத்தண்டி கிராம மக்கள் சார்பில் துண்டில் வளைவு, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமெனக் கோரி மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
முன்னதாக மக்கும் குப்பை தரம் பிரிப்பது, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பிரச்சினை போன்றவை குறித்து விருகம்பாக்கம், அண்ணாநகர் பகுதியில் இயங்கும் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர். பள்ளி சார்பில் 45 மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். பள்ளி முதல்வர்கள் விஜயலட்சுமி, கவுரிலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.எஸ்.சந்தோஷ்குமார் தலைமையில் ஏராளமான மாணவர்கள் இதில் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு டாக்டர்அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் ஜே.எம்.வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பார்வை குறையுடையோர் பள்ளி: பூந்தமல்லி, கரையான்சாவடியில் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 77-வதுபட்டாலியன் பிரிவு சார்பில், பூந்தமல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மை இயக்கம் நடைபெற்றது. அதே போல், வல்லூர் அனல் மின் நிலைய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் சார்பில், பழவேற்காடு கடற்கரையில் தூய்மை இயக்கம் நடைபெற்றது.
கல்பாக்கம் கடற்கரை: கல்பாக்கம் அணுவாற்றல் நகரிய ஊழியர் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று தூய்மைப் பணிகள் நடைபெற்றன. மேலும், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் வெங்கட்ராமன் ஆலோசனையின் பேரில், பொதுப் பணி நிறுவனத்தின் குழும இயக்குநர் வனஜா நாகராஜூ இப்பணிகளைத் தொடங்கிவைத்தார். 200-க்கும் மேற்பட்டோர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
திருக்காலிமேடு பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளத்தை தூர்வாரி முறையாக பராமரிக்காததால் வளர்ந்துள்ள நாணல் புதர்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று ஈடுபட்டனர்.
|
பதிவுக்கு வரும் ஆவணங்களில் சொத்தின் புகைப்படம் கட்டாயம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் புதிய நடைமுறை அமல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 05:52:00 |
சென்னை: தமிழக பதிவுத் துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கும் நோக்கிலும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் உரிய வகையில் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், பத்திரப்பதிவின்போது, காலியிடம் அல்லது கட்டிடம் ஆகியவற்றுக்கான பதிவுக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பதிவு கட்டணத்தில் சலுகை பெறும் நோக்கில், கட்டிடம் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், கட்டிடங்களை இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவது கண்டறியப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டது.
இதை தவிர்க்கும் நோக்கில், சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆடினேட்ஸ் உடன் எடுக்கப்பட்டு அதை ஆவணமாக இணைக்க வேண்டும். இந்த நடைமுறை அக்.1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி அறிவித்தார்.
ஆனால், தொடர்விடுமுறை காரணமாக இந்த நடைமுறை நாளை முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம், பதிவுக்கு வரும் ஆவணங்களுடன் சொத்துக்கள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆடினேட்ஸ் உடன் எடுக்கப்பட்டு இணைப்பது கட்டாயமாகிறது.
இந்த நடைமுறை, நேரடியாக இணையவழி தாக்கல் செய்யப்பட்டு பதியப்படும் ஆவணங்கள், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் கடன் பெறும்போது பயன்படுத்தப்படும் அடமான ஆவணம், உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம், வங்கிகள், நிதி நிறுவனங்களால் எழுதிக் கொடுக்கப்படும் ரசீது ஆவணம் மற்றும் உயில் ஆகியவற்றுக்கு பொருந்தாது.
|
96-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவாஜி கணேசன் படத்துக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 05:51:00 |
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 96-வதுபிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் மரியாதை செலுத்தினர்.
நடிகர் திலகம் என போற்றப்படும் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, தமிழக வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன், த.வேலு எம்எல்ஏ உள்ளிட்டோரும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம்பிரபு மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் நிழல்கள் ரவி, சந்தானபாரதி, மன்சூர் அலிகான், ரோபோ சங்கர் ஆகியோரும் சிவாஜி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் சிவாஜி படத்துக்கு விஜய் வசந்த் எம்.பி., மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலை இலக்கியபிரிவு சார்பில் கட்சியின் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவும், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கவியரங்கம் மற்றும் வாழ்த்து அரங்கம் நடைபெற்றன.
சிவாஜியின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் விடுத்த வாழ்த்து செய்தி:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களை, அனல் பறக்க தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் சிவாஜி கணேசனின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை நிலைத்திருக்கும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்து, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் ஒருதலைபட்சமான மதசார்பின்மையை புறக்கணித்து, தனது வாழ்வின் இறுதிவரை தேசியத்தின் பக்கம் நின்ற சிம்மக் குரலோன் சிவாஜியின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸின் ஊற்றுக் கண்ணாக இருந்தவர். காமராஜரின் சிறந்த தொண்டனாக விளங்கியவர். இதேபோன்று மநீம தலைவர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
|
காவிரி நீரை பெறுவதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-02 05:46:00 |
சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, காவிரி நீரை பெற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா பாசனத்துக்கு முன்யோசனையின்றி ஜூன் 12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தண்ணீரைத் திறந்துவிட்டார். திமுக அரசின் பேச்சை நம்பி, காவிரி டெல்டா பாசனப் பகுதியில் குறுவை சாகுபடிக்கு சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தங்கள் கையில் இருந்த பணம், நகை, விதை நெல், வங்கி கடன் மற்றும் உடல் உழைப்பையும் மூலதனமாக்கி, 5 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடியை தொடங்கினர். ஆனால், குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீரின்றி 3.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர் கருகியது. மீதமுள்ள 1.5 லட்சம் ஏக்கரில் கிணற்றுப் பாசன உதவியோடு விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதமே கர்நாடக அரசிடம் நட்பாக பேசி காவிரியில் தண்ணீரை திறந்தவிடச் செய்திருக்கலாம். இண்டியா கூட்டணிக் கூட்டம் பாட்னாவில் கூடியபோது, காவிரியில் காங்கிரஸ் அரசு தண்ணீரைத் திறந்து விட்டால்தான் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்ற நிபந்தனையை விதித்திருக்கலாம். பெங்களூருவில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்டதைத் தவிர்த்திருக்கலாம்.
இது எதையும் செய்யாமல் மத்திய அரசை காரணம் காட்டி தமிழக மக்களை வஞ்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. கர்நாடகாவில் தங்கள் குடும்ப நபர்கள் நடத்தும் தொழில்கள் பாதித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருப்பதை தவிர்த்து, திமுக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, தமிழக மக்களின் உரிமையைக் காத்திட, காவிரி நீரை விரைந்து பெற்றிட, ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
|
சென்னை உட்பட 29 இடங்களில் 14 நிமிடத்தில் சுத்தம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் | செய்திப்பிரிவு | புதுடெல்லி | 2023-10-02 05:41:00 |
புதுடெல்லி: நாடு முழுவதும் 29 இடங்களில் அடுத்த பயணத்துக்காக வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்பட்டது.
ஜப்பானில் ‘7 மினிட்ஸ் மிராக்கள்’ என்ற பெயரில் புல்லட் ரயில்களை சுத்தப்படுத்தும் பணி அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பாட்டில் உள்ளது. அதன்படி, கடைசி ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு,வெறும் 7 நிமிடங்கள் சுத்தப்படுத்தப்படும். அதன்பின், அடுத்த பயணத்துக்கு அந்த ரயில் தயாராகிவிடும்.
அதே போன்ற ஒரு திட்டத்தை ரயில்வே துறை நாட்டில் நேற்று அறிமுகப்படுத்தியது. இன்று மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ரயில்களை சுத்தப்படுத்தும் பணி, ‘14 மினிட்ஸ் மிராக்கள்’ என்ற பெயரில் நடத்தப்படும் என்று ரயில்வே அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று டெல்லி, சென்னை, புரி, ஷீரடி உட்பட நாடு முழுவதும்29 ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடங்களில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. டெல்லி கன்னாட் ரயில் நிலையத்தில் வந்தே பாரத்ரயிலை 14 நிமிடங்களில் சுத்தப்படுத்தும் பணியை ரயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வழக்கமாக வந்தே பாரத் ரயில்களை சுத்தப்படுத்த 45 நிமிடங்கள்ஆகும். தற்போது 14 நிமிடங்களில்சுத்தப்படுத்தும் பணி அறிமுகமாகி இருக்கிறது. பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கி விட்டதை உறுதி செய்த பின்னர், சுத்தப்படுத்தும் பணி உடனடியாக தொடங்கும். அதற்காக ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலுக்கும் பிரத்யேகஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில்களை சுத்தப்படுத்தும்பணியை எப்படி செய்ய வேண்டும்என்று வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரயிலின் உள்ளேயும் வெளியேயும் சுத்தப்படுத்தும் பணிகளை செய்வார்கள்.
இந்தத் திட்டம் தொடர்ந்து நடைபெறும். ஒரு மாதத்துக்கு பிறகு இந்த பணிகள் குறித்து கருத்துகள் பெறப்பட்டு அதற்கேற்ப திட்டம் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
அடுத்தடுத்து போராட்டங்களை முன்னெடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்: தமிழக அரசு நிரந்தர தீர்வு காணுமா? | சி.பிரதாப் | சென்னை | 2023-10-02 05:40:00 |
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபகாலமாக தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. பழைய ஒய்வூதியத் திட்டம், ஊதிய சமநிலை, பணப்பலன்கள், எமிஸ் பணிகளை குறைத்தல் உள்ளிட்டவை அவர்களின் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகின்றன. அந்தவகையில் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் தலைமை அலுவலகமான டிபிஐ வளாகமே தற்போது போராட்டக் களமாக மாறியுள்ளது.
ஒருபுறம் சம வேலைக்கு சம ஊதியம் எனும் கோரிக்கையை முன்வைத்து ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்ந்து 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமுற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை சேர்ந்த 3 சங்கங்களும், பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 2013-ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
மேலும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம், புதிய ஒய்வூதியத் திட்ட (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாளப் போராட்டத்தை நடத்தின.
இதுதவிர தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உட்பட பல சங்கங்களும் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களை அறிவிப்புகளை வெளியிட்டு வருவது பள்ளிக்கல்வித் துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், காலாண்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் (அக்டோபர் 3), 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆசிரியர் இயக்கங்களின் இந்த போராட்டங்கள் தொடரும்பட்சத்தில் அது மாணவர்களின் கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டுமென கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் இந்த போராட்டங்களுக்கு மையமாக இருப்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்தான். ஏனெனில், ஆசிரியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் 85 சதவீதத்துக்கும் மேலானவை தேர்தல் வாக்குறுதிகள் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக ஆதரவு தெரிவித்த அம்சங்களாக உள்ளன. இதனால் சாத்தியமற்ற கோரிக்கைகளைகூட ஆசிரியர் சங்கங்கள் முன்வைக்கும்போது கூட மறுக்க முடியாத நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மறுபுறம் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் நடத்தப்பட்ட அனைத்து போராட்டங்களுக்கும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்தார். சில போராட்டங்களுக்கு நேரில் வந்துகூட திமுக ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்ததோடு, தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவித்தார். ஆனால், இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் திமுக சொன்ன பிரதான வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. ஓய்வூதியம் என்ற வார்த்தையை முதல்வர் மறந்தும்கூட சொல்வதில்லை.
இதுசார்ந்து பல போராட்டங்களை நடத்தியபோது உரிய நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை ஒரு அறிவிப்புகூட அமலுக்கு வரவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம். ஜாக்டோ- ஜியோவில் இருக்கும் சிலர் அரசுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். அதனாலேயே ஆசிரியர் அமைப்புகள் தனித்தனியாக போராட்டங்களை அறிவிக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. ஆசிரியர்கள் தாக்கப்பட்டால் கல்வி அமைச்சரிடம் இருந்து அறிக்கைகூட வருவதில்லை. இத்தகைய மனஅழுத்தமே எங்களை போராட்டத்தை நோக்கி நிர்பந்திக்கிறது’’என்றார்.
இதேபோல் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘ஒரே கல்வித்தகுதி, ஒரே வேலை என்ற சூழலில் ஊதியம் மட்டும் வெவ்வேறு என்பதை ஏற்க முடியாது. ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட போராட்டத்தில் தனிக்குழு அமைத்து சரிசெய்வதாக அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை மீது முதல்வர் உறுதியான வாக்குறுதி வழங்கும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வட்டாரங்களில் கேட்டபோது, ‘‘முதல்வரின் வழிகாட்டுதலின்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள ஆசிரியர் சங்கங்களுடன் பேசி வருகிறோம். விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்’’என்றனர்.
|